திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சர்வதேச சட்டங்களுக்கு ஏற்ப அமையவில்லை –

இலங்கை பாராளுமன்றத்தில் பரிசீலனையில் உள்ள திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் ஆகிய இரண்டு சட்டமூலங்கள் தொடர்பில் தமக்கு தீவிரமான கரிசனை இருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் (OHCHR) தெரிவித்துள்ளது.

இந்த சட்டமூலங்கள் சர்வதேச சட்டங்களுக்கு ஏற்ப அமையவில்லை. எனவே, அவை மனித உரிமைகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க முடியும் என்று அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பொறிமுறைகளுக்கு நீண்டகாலமாக கரிசனையை ஏற்படுத்தும் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக, பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் கொண்டுவரப்படுவதாக மனித உரிமைகள் ஆணையாளரின் பேச்சாளர் ரவினா ஷம்தாசனி தெரிவித்துள்ளார்.

மரண தண்டனையை ஒரு சாத்தியமான தண்டனை என்ற விதியை நீக்குவது உட்பட, வரைவில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. எனினும் திருத்தப்பட்ட வரைவில் உள்ள பல விதிகளின் நோக்கம் மற்றும் பாரபட்சமான விளைவுகள் குறித்து இன்னும் பாரிய கரிசனைகள் உள்ளன.

கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான ஒன்றுகூடல் உரிமைகளுக்கான கட்டுப்பாடுகள் ஏற்புடவையல்ல. இந்த நிலையில் குறித்த யோசனை, பயங்கரவாதத்தின் பரந்த வரையறையை உள்ளடக்கியுள்ளது. அத்துடன் போதிய நீதித்துறை மேற்பார்வையின்றி, மக்களைத் தடுத்து நிறுத்தவும், கேள்வி கேட்கவும், தேடவும், கைது செய்யவும், தடுத்துவைக்கவும், காவல்துறைக்கும் – இராணுவத்திற்கும் – பரந்த அதிகாரங்களை வழங்குகின்றது.

ஊரடங்குச் சட்டம், கட்டுப்பாடு உத்தரவுகள் மற்றும் தடை செய்யப்பட்ட இடங்களை குறிப்பிடுதல் ஆகியவற்றில் பிரச்சினைகள் உள்ளன. இவை அனைத்தும் போதுமான சமநிலை இல்லாமல் நிர்வாகத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் நோக்கம் பற்றிய சந்தேகங்களை எழுப்புகின்றன. இணைய வழி பாதுகாப்பு யோசனையை பொறுத்தவரை, இது பொதுமக்கள் உட்பட இணைய தகவல் தொடர்புகளை கடுமையாக பாதிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. சட்டமூலத்தின் பல பிரிவுகள், தன்னிச்சையான மற்றும் குற்றங்களின் தெளிவற்ற விதிமுறை வரையறைகளைக் கொண்டிருக்கின்றன.

இவை, பெரும்பாலும் அனைத்து வகையான சட்டபூர்வமான வெளிப்பாட்டையும் குற்றமாக்கக்கூடும். எனவே இந்த சட்டமூலம், கருத்துச் சுதந்திரத்தின் மீது பாரிய விளைவை ஏற்படுத்தும் சூழலை உருவாக்குகிறது.

இந்தநிலையில் சிவில் சமூகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சுயாதீன நிபுணர்களுடன் மேலும் அர்த்தமுள்ள ஆலோசனைகளை மேற்கொள்ளுமாறும், சர்வதேச மனித உரிமைகள் கடப்பாடுகளுக்கு முழுமையாக இணங்கும் வகையில், சட்ட வரைவுகளில் கணிசமான திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *