கடந்த சில தினங்களாகத் தொடராகப் பெய்துவரும் மழை காரணமாக மவுசாகலை நீர்த்தேக்கம் எந்தவேளையிலும் நிரம்பி வழியக் கூடிய கட்டத்தை அடைந்திருப்ப தாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் கே. டி. ஏக்கநாயக்கா நேற்றுத் தெரிவித்தார்.
இதன் காரணத்தினால் இந்நீர்த்தேக்கத் தின் வான் கதவுகள் எந்த வேளையும் திறந்து விடப்படலாம். அதனால் களனி கங்கைக்கு இரு மருங்கிலும் அமைந்திருக்கும் கித்துல்கல, யட்டியந்தொட்டை, அவிசாவளை, ஹங்வெல்ல போன்ற பிரதேசங்களில் வாழும் மக்கள் பாரிய அசெளகரியங்களுக்கு முகம் கொடுக்க முடியும் எனவும் அவர் குறிப் பிட்டார்.
இந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் எந்த வேளையிலும் திறந்து விடப்படக் கூடிய நிலைமை இருப்பதால் மேற்படி பிரதேசங்களில் வாழும் மக்கள் முன்னெச் சரிக்கையோடு நடந்துகொள்ளுவது அவசி யம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இரத்தினபுரி மாவட்ட இணைப்பாளர் லெப்டினன்ட் கேர்ணல் பிரியந்த அபேரெட்ன கூறுகையில் :-களுகங்கையின் நீர் மட்டம் சுமார் இரண்டரை அடிகள் குறைந்துள்ள போதிலும் வெள்ள அபாயம் முழுமையாக நீங்கவில்லை. அயகம, எலபாத்த, இரத்தி னபுரி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள தாழ்நி லங்கள் நேற்று இரண்டாவது நாளாகவும் நீரில் மூழ்கி இருந்தன.
வேவல்வத்தையில் இரண்டு சிறியளவு பாராங்கற்கள் நேற்று முன்தினம் மாலையில் உருண்டு விழுந்துள்ள போதிலும் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என்றும் கூறினார். அவர் மேலும் கூறுகையில் களுகங்கையின் நீர் மட்டம் நேற்று முன்தினம் 19 அடிகள் 8 அங்குலத்திற்கு உயர்ந்திருந்தது.
அது நேற்று நண்பகலாகும் போது 17 அடிகள் 4 அங்குலம் வரை குறைந்திருந்தது. என்றாலும் இக் கங்கையின் நீர்மட்டம் 15 அடிகளுக்கு மேல் உயருமாயின் வெள்ள அபாயமாகக் கருதப்படுகின்றது.
இதேநேரம் அயகம பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கலத்துர, பகல கலத்துர வீதி சுமார் இருநூறு மீட்டர் நீள த்திற்கு நீரில் மூழ்கியுள்ளது. இந்த வீதியூடாக மூன்றடிகள் உயரத்திற்கு நீர் செல்லுகின்றது- அதனால் இவ்வீதி ஊடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இம் மாவட்டத்தில் மண் சரிவு, வெள்ள அபாயம் குறித்து பிரதேசவாசிகளுக்கு அறிவூட்டல்களும் வழங்கப்படுகின்றன என்றார்.