“தோட்டப் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை உரியமுறையில் மேற்கொள்ளப்படவில்லை’

aedes_aegypti.jpgமத்திய மாகாணத்திலுள்ள தோட்டப் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் இதுவரை உரியவகையில் மேற்கொள்ளப்படவில்லையென ஜனநாயக மக்கள் முன்னணியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் பிரகாஷ் கணேஷன் தெரிவித்துள்ளார். இச் சம்பந்தமாக அவர் மேலும் தெரிவித்ததாவது;

டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களென சுகாதார தரப்பினர் அறிவித்துள்ளனர். இவ்வாறானதொரு நிலையில் மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள், பொதுசுகாதார தரப்புகள், சிவில் பாதுகாப்புக் குழுக்கள் என்பனவற்றின் ஒத்துழைப்புடன் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் நகரங்கள் மற்றும் கிராமப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனினும் தோட்டப் பகுதிகளில் இவ்வாறான நடவடிக்கைகள் மிகவும் மந்த கதியிலேயே இடம்பெற்று வருகின்றன. தோட்டப் பகுதிகளைப் பொறுத்த வரையில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி பொறுப்பு நிறுவனமே பொதுசுகாதார வைத்திய சேவைகளுக்குப் பொறுப்பாக உள்ளது. இவ்வாறானதொரு நிலையில் மத்திய மாகாணத்துக்கு உட்பட்ட தோட்டப்பகுதிகளில் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை இந்த நிறுவனமும் சுகாதர அமைச்சும் உரிய வகையில் முன்னெடுக்கப்படாமை கவலைக்குரிய விடயமாகும். ஏற்கனவே பெருந்தோட்டப் பகுதிகளில் அடிப்படை சுகாதாரம் மற்றும் வைத்திய சேவை உரிய வகையில் ஏற்படுத்தப்படவில்லை. எனவே, இவ்விடயம் குறித்து மத்திய மாகாண சபை சுகாதார அமைச்சு, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி பொறுப்பு நிறுவனம் என்பன உரிய கவனம் செலுத்த வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *