பாட சாலையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த ஆசிரியை ஒருவர் குளவி கொட்டியதால் உயிரிழந்த சம்பவமொன்று நேற்று (17) பூண்டுலோயா பகுதியில் இடம்பெற்றுள்ளது. பூண்டுலோயா – ஃபர்ண்ட்லண்ட் வித்தியாலயத்தைச் சேர்ந்த இராணி அன்ஸார் என்ற 41 வயது ஆசிரியையே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த ஆசிரியை பாடசாலையிலிருந்து தேயிலை மலைக்காடு ஊடாக வீடு சென்றுகொண்டிருந்தபோது ஆலமரத்தில் கட்டியிருந்த குளவிகள் கொட்டியுள்ளன. இதனால் பதறியடித்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம்வரை ஓடிய அவர், தேயிலை மலையில் வீழ்ந்துள்ளார். அப்போது கடமையிலிருந்த தோட்ட உத்தியோகத்தர் ஒருவர் ஆசிரியையை பூண்டுலோயா வைத்தியசாலைக்குக் கொண்டு சேர்த்துள்ளார்.
ஆனால் அங்கு ஆசிரியை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இந்த ஆசிரியையுடன் மேலும் ஐவருக்குக் குளவி கொட்டியபோதும் அவர்கள் ஓடிச்சென்று பாதுகாப்புத் தேடிக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.