பதுளை பிரதான அரசினர் மருத்துவமனையில் “சேலைன்’ தட்டுப்பாடு பெருமளவில் நிலவி வருவதினால் நோயாளர்கள் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர். “சேலைன்’ செலுத்த வேண்டிய நோயாளர்களுக்கு, வெளியில் மருந்தகங்களிலிருந்தே கூடிய விலை கொடுத்து “சேலைன்’ போத்தல்களைப் பெற வேண்டியுள்ளது. இதனால், பதுளை நகர் மருந்தகங்களிலும் “சேலைன்’ தட்டுப்பாடு நிலவுகின்றது.
இதுகுறித்து பதுளை அரசினர் மருத்துவமனை பிரதிப்பணிப்பாளர் மதுபாசினி புல்ளேபெருமவிடம் தொடர்புகொண்டு வினவிய போது; “சேலைன்’ போர்த்தல்களை தனியார் மருந்தகங்களில் பெற்று நோயாளர்களுக்கு வழங்கி வருவதாக மட்டுமே கூறினார். “சேலைன்’ தட்டுப்பாடு குறித்து மருத்துவமனை பிரதிப்பணிப்பாளர் எதுவும் கூற மறுத்துவிட்டார்.
இதையடுத்து, சுகாதார சேவைப்பணிப்பாளர் நாயகம் அஜித் மென்டிஸிடம் தொடர்பு கொண்டு வினவியபோது; “சேலைன்’ வகைகளுக்கு எதுவித தட்டுப்பாடும் இல்லை. பதுளை அரசினர் மருத்துவமனை உத்தியோகத்தர்களின் கவனயீனமே இந்தநிலைக்கு காரணம்.
சுகாதார சேவைக் களஞ்சிய அறையில் போதியளவு “சேலைன்’ போத்தல்கள் உள்ளன. மேலும் இத்தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டது தொடர்பாக விசாரணையொன்றினை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்துள்ளேன் என்றார்.
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்கள் பலர் தனியார் மருந்தகங்களிலிருந்து கூடுதல் விலை கொடுத்து “சேலைன்’ பெற்று வருவதை உறுதிப்படுத்தினர். அதேநேரம், டாக்டர்களின் கடிதத்துடன் தனியார் மருந்தகங்களுக்குச் சென்று சேலைன் வாங்கிக் கொண்டு வரும் நோயாளர்களின் உறவினர்களையும் காணமுடிந்தது.