மலையகம்

மலையகம்

நுவரெலியா கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் மலையக இடதுசாரிகளின் மே தின விழா

may-day.jpgமலையக சோசலிச சக்திகளினதும் இடது சாரி தொழிற்சங்கங்களினதும் அரசியல் அமைப்புகளினதும் மேதின விழா மே முதலாந் திகதி காலை 10 மணிக்கு நுவரெலியா கூட்டுறவு சங்க விருந்தினர் விடுதி மண்டபத்தில் நடை பெறவுள்ளது.

இடதுசாரிகளின் இம் மேதின விழாவிற்கு சிரேஸ்ட சட்டத்தரணி தோழர் ஏ.பி.கணபதிப்பிள்ளை தலைமை வகிப்பார். இவ்விழாவில் செங்கொடி சங்க பொதுச் செயலாளர் ஓ.ஏ.இராமையா, ஐக்கிய தொழிலாளர் சங்க நிர்வாகச் செயலாளர் எஸ்.ஜோதிவேல், ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் ஆ.முத்துலிங்கம், மகளிர் அமைப்புத் தலைவி மேனகா கந்தசாமி சத்தியம், ஆசிரியர் கலாபூஷணம் இல நாகலிங்கம், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் ஜீ.வி.டி.திலகசிரி, ஐக்கிய சேவையாளர் சங்க பிரதேச தலைவர் கே.நவரட்ணம் கலைமணி பசறையூர் க.வேலாயுதம் ஆகியோர் சிறப்புரையாற்றுவர்.

பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக பொய்ப்பிரசாரங்களை பரப்பி அரசியல் இலாபம் தேட சிலர் முயற்சி – ஊவா முதலமைச்சர்

ஊவா மாகாணத்தில் எந்தவொரு பாடசாலையும் மூடப்படவில்லை. ஒரு சிலர் உண்மைக்கு புறம்பான பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு அரசியல் இலாபம் தேட முனைகின்றனர். இவ்வாறு ஊவா மாகாண சபையின் முதலமைச்சர் காமினி விஜிதமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார்.  கடந்த வெள்ளிக்கிழமை முதலமைச்சரின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில்;

ஊவா மாகாண சபையின் முதலமைச்சர் பதவியும் அதேபோல் கல்வியமைச்சராக பதவியேற்ற பொழுது பதுளை, மொனராகலை மாவட்டத்தில் இயங்கிவந்த மூவின பாடசாலைகளில் மலசலகூடம், கட்டிட வசதிகள் என்பன அதிகமாக இருக்கவில்லை. படிப்படியாக மேற்கொண்ட கல்வி மேம்பாட்டுத் திட்டத்தால் சகல வழிகளிலும் பாடசாலைகள் அபிவிருத்தியடைந்து வந்துள்ளதுடன், கல்வியின் வளர்ச்சி வீதம் அதிகரித்துள்ளது.

கடந்த காலங்களில் கிராம தோட்டப்புறங்களைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் தமது பிள்ளைகளை நகர்ப்புற பாடசாலைகளில் சேர்ப்பதிலேயே ஆர்வம் காட்டிவந்தனர். தற்பொழுது அந்த நிலை மாறத் தொடங்கியுள்ளது. காரணம் கிராம தோட்டப்பாடசாலைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை நகரப் பாடசாலைகளுக்கு அனுப்புவதைத் தவிர்த்து கிராம தோட்டப்பாடசாலைகளில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கிராம தோட்டப்பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவிவந்தன. ஆசிரியர்கள் அதிகமாக இருக்கும் பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகக் காணப்பட்டது. அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் இருக்கும் பாடசாலைகளில் ஆசிரியர்கள் இல்லை. இதையெல்லாம் சரிசெய்து மிகவும் சிரமத்திற்கு மத்தியில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளேன். மாகாணசபைக்குட்பட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கையில் ஒரு போதும் அரசியல் இலாபம் தேடமுனையவில்லை. சுதந்திரமாக செயல்படும் அதிகாரத்தை அதிகாரிகளுக்கு வழங்கியிருந்தேன்.

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை ஊவா மாகாண சபையால் 5 ஆயிரத்து 600 தொண்டர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ள போதிலும் இன்னும் ஆசிரியர் பற்றாக்குறை தீரவில்லை. 40 சித்திரப்பாட ஆசிரியர்களும் விளையாட்டு உடற்கல்வி ஆசிரியர்களும் தேவைப்படுகின்றனர். இவ் ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கு விண்ணப்பம் கோரப்பட்டபோதும் வெற்றியளிக்கவில்லை. இருக்கும் ஆசிரியர்களிலிருந்து தெரிவு செய்வதற்கு நடத்தப்பட்ட தேர்வில் ஊவா மாகாணத்திற்கு மூவர் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டனர்.

பட்டதாரிகளுக்கு வெறுமனமே ஆசிரியர் நியமனம் வழங்க முடியாது. அவர்களுக்கு முதலில் பயிற்சியளிக்க வேண்டும். பயிற்சி இல்லாமல் நியமனங்கள் வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளின் சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டே பயிற்சி வழங்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறேன். ஒரு சிலர் கூறுவது போல் ஊவா மாகாணத்தில் எந்தவொரு பாடசாலையும் மூடவில்லை.

வரப்போகும் மாகாணசபைத் தேர்தலில் நானே முதலமைச்சர் இதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் ஏற்றுக்கொண்டுள்ளார். அதைவிட கட்சியின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டவன் என்ற ரீதியில் ஜனநாயக ரீதியான தீர்ப்பை ஏற்றுக்கொள்வேன். ஒரு போதும் நிராகரிக்கமாட்டேன்.

தற்போது மாகாணசபைக்குட்பட்ட பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சுயவிபரக்கோவையை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவங்கள் அனைத்து பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து விபரக்கோவைகளும் கிடைக்கப்பட்ட பின்னர் அதற்கேற்ற வகையில் மறுசீரமைக்கப்படுவதுடன், கல்வியில் பாரிய மாற்றத்தினையும் ஏற்படுத்த முடியுமெனக் கருதுகிறேன் என்றார்.

பெருந்தோட்ட ஆசிரியர் நியமனம்: எஞ்சிய 61 பேருக்கான நியமனம் மீளாய்வு

sri-lanka-upcountry.jpgமத்திய மாகாணத்தில் 61 பேருக்கான ஆசிரியர் நியமனத் தெரிவு மீளாய்வு செய்யப்படவுள்ளது.

கடந்த இரு வருடங்களுக்கு முன் வழங்கப்பட்ட பெருந்தோட்ட ஆசிரிய நியமனத்தின் எஞ்சிய 61 பேருக்கான நியமனத்திற்கான பெயர்ப்பட்டியல் நேர்முகப் பரீட்சையின் பின் கடந்த வருட இறுதியில் வெளியிடப்பட்டது.

இந்நியமனம் வழங்கும் முன் மாகாண சபை கலைக்கப்பட்டதுடன், தற்காலிகமாக நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் பின் தற்போதைய மத்திய மாகாண கல்வி அமைச்சர், பதவியேற்றவுடன் உடனடியாக இந்நியமனங்களை இரத்துச் செய்ததுடன் மீளாய்வு செய்யப்படும் என்றார்.

அமைச்சர் பி. இராதாகிருஷ்ணனின் வேண்டுகோளின் பேரில் மீளாய்வு நடவடிக்கை கெட்டம்பே கல்வி அமைச்சில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றது.

பெயர்ப்பட்டியல் பத்திரிகையில் வெளியிடப்பட்ட பின் நேர்முகப் பரீட்சை இம்மாத இறுதிக்குள் நடாத்தப்படும் என்று கல்வி அமைச்சு சுட்டிக்காட்டுகின்றது.

பெருந்தோட்ட உத்தியோகத்தர்களுக்கு 2750 ரூபா சம்பள உயர்வு. புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து

மலையகப் பெருந்தோட்டங்கள் உள்ளிட்ட அனைத்துத் தோட்டங்களிலும் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு ஏப்ரல் புத்தாண்டு மாதத்திலிருந்து 2750 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படுகின்றது. இலங்கை தோட்ட சேவையாளர் சங்கமும், பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனமும் செய்துகொண்ட புதிய கூட்டு ஒப்பந்தத்தின்படி இந்தச் சம்பள உயர்வு வழங்கப்படுகின்றது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்திலிருந்து இந்தச் சம்பள உயர்வு அமுல்படுத்தப்படுவதுடன், நிலுவைத் தொகையை எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் வழங்குவதெனவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் உள்ள இறப்பர், தேயிலை, தென்னந் தோட்டங்களில் கடமையாற்றும் சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமான உத்தியோகத்தர்கள் நன்மையடைவார்கள் என்று இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் தலைவர் பி. இராமசிவம் தெரிவித்தார். புதிய கூட்டு ஒப்பந்தத்தின்படி, தோட்ட உத்தியோகத்தர்களின் சம்பளத்தை 2750 ரூபாவாக அதிகரித்தல், வீட்டு வாடகைப் பணத்தை 20 சதவீதத்தால் அதிகரித்தல், வருடாந்த சம்பள உயர்வு இரண்டரை மடங்காக அதிகரித்தல், மரண சகாய நிதி 10 ஆயிரம் ரூபாவிலிருந்து 25000 ரூபா அதிகரித்தல், பெருந்தோட்ட உதவி வைத்தியர்களின் இரவு சேவைக்கான விசேட கொடுப்பனவை 25 சத வீதத்தால் அதிகரித்தல், ஒரு தோட்டத்தில் தொழில் புரியும் சேவையாளர் இடமாற்றம் பெற்றாலோ அல்லது சுகயீனமுற்றாலோ அவருக்குப் பதிலாக சேவையாற்றும் சேவையாளருககு தற்பொழுது வழங்கும் 1000/- ரூபாவை 1500/- ரூபாவினால் அதிகரித்தல்.

கடந்த (2008) வருடம் ஒக்டோபர் மாதத்திலிருந்து இவ்வருடம் மார்ச் வரையிலான அதிகரிக்கப்பட்ட 2750/- ரூபா சம்பள உயர்வு நிலுவை பணத்தை எதிர்வரும் ஜூன் மாதத்துக்குள் வழங்குதல் போன்றவற்றுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இக் கூட்டு ஒப்பந்தம் முதலாளிமார் சம்மேளனத்தின் பணிப்பாளர் நாயகம் ரவீ பீரிஸ் தலைமையில் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் தலைவர் லலித் ஒபேசேக்கரவும் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் தலைவர் பி. இராமசிவம், பொதுச் செயலாளர் நாத் அமரசிங்க ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

இது சம்பந்தமாக தோட்ட சேவையாளர் சங்கத்தின் தலைவர் பி. இராமசிவம் கருத்து தெரிவிக்கையில், ‘இச் சங்கம் 89 ஆம் ஆண்டுகள் சேவையாளர்களுக்கு சேவை செய்து வருகிறது. இறுதியாக 2004 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் காலாவதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து புதிய ஒப்பந்தம் தொடர்பான கடந்த ஆறு மாதங்களாக பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.

கடந்த மார்ச் 27 ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தோட்ட சேவையாளர் சங்கத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவித்தது. இதனையடுத்து இம் மாதம் 2 ஆம் திகதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது’ என்றார்.

தீர்மானங்கள் எடுக்கும் போது தொழிலாளர் நலனையும் கவனத்தில் கொள்ள வேண்டும் – உப குழுவின் பரிந்துரைக்கு இ.தொ.கா பதில்

பெருந்தோட்டங்கள் சம்பந்தமான தீர்மானங்களை மேற்கொள்கின்ற போது, அங்கு நிரந்தரமாக வாழும் தோட்டத் தொழிலாள சமூகத்தையும் கருத்திற்கொள்ள வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை உப குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது,

இலங்கையிலுள்ள பெருந்தோட்டங்கள் சம்பந்தமாகவும் பெருந்தோட்ட கம்பனிகள் சம்பந்தமாகவும் பரிசீலிக்க நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் முடிவுகள் அத்தோட்டத்தையே நம்பி வாழும் பல தலைமுறையைச் சேர்ந்த நிரந்தர தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார நிலை, சமூக சேவைகள் மற்றும் நிரந்தர குடியுரிமை எதையுமே கருத்திற்கொள்ளாது வெறுமனே கம்பனிகளின் காணிகளை அளவிட்டு அவற்றை சிறு தேயிலை தோட்டக்காரருக்கு பகிர்ந்தளிக்கலாம் என பரிந்துரை செய்திருப்பது மிகவும் வேதனையும் வருத்தமுமளிப்பதாகவும் உள்ளது.

அமைச்சரவை உப குழுவின் கருத்துகள் முழுமையாக கிராம மக்களின் நலனுக்காகவே அமைகின்றது. 170 ஆண்டு காலமாக தோட்டங்களில் வாழும் தோட்ட தொழிலாளர்களின் நலன் பற்றி அவ்வறிக்கையில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை. எனவே, உப குழுவின் பரிந்துரை எவ்வாறு இருந்தாலும், ஜனாதிபதி தோட்ட மக்களின் நலன்கள் பாதிக்காத வண்ணம் செயற்படுவார் என்ற நம்புக்கை உண்டு.

சிறு தோட்ட விவசாயிகளை ஊக்குவித்தல் என்ற அடிப்படையில் தோட்டக் காணிகளைப் பகிர்ந்தளிக்கும் போது அங்கு நீண்ட தலைமுறையாக வாழும் தோட்டத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தோட்டத் தொழிலாளர்களையும் தோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும். அவர்களின் பொருளாதாரம் முன்னேற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

லிந்துலை தோட்டத்தில் பலத்த காற்று; மழை. மரம் வீழ்ந்து இரு இளைஞர்கள் பலி

தலவாக்கலை – லிந்துலை, தங்கக்கலை தோட்டத்தில் நேற்று (24) முற்பகல் திடீரென வீசிய பலத்த காற்று மழையினால் மரங்கள் சரிந்து வீழ்ந்ததில் இரண்டு இளைஞர்கள் ஸ்லத்திலேயே உயிரிழந்தனர். நேற்று முற்பகல் 11.30 அளவில் தங்கக்கலை ரேப்பன்ரைன்ற் (கருப்பந்தைல) மரக் காட்டுப் பகுதிக்கு விறகு வெட்டச் சென்றபோதே இந்தப் பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திடீரென வீசிய பலத்த காற்று மழையால் இரு இளைஞர்களும் அருகிலிருந்த குடிசையொன்றுக்குள் ஒதுங்கியிருந்துள்ளனர். அப்போது ஐந்தாறு மரங்கள் வேருடன் பிடுங்கப்பட்டு சரிந்து வீழ்ந்துள்ளன. இதில் பாரிய மரமொன்று குடிசை மீது வீழ்ந்ததில் இளைஞர்கள் இருவரும் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்த இருவரில் ஒருவரான தங்கக்கலை, கேம்பிரிட்ஜ் கீழ்ப்பிரிவைச் சேர்ந்த செல்வராஜ் சந்திரமோகன் (17) க. பொ. த. சாதாரணதரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேற்றுக்காகக் காத்திருந்தவரெனத் தெரியவருகிறது. மற்றையவரான அதே தோட்டத்தைச் சேர்ந்த சதாசிவம் ரகுவரன் (18) கடந்த வருடம் சாதாரண தரப் பரீட்சை எழுதியவராவார்.

இருவரது சடலங்களும் லிந்துலை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு மேலதிக பரிசோதனைகளுக்காக நுவரெலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மரங்கள் சரிந்து வீழ்ந்ததால் மறேயா – எல்கின் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், தோட்டத் தொழிலாளர்கள் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மலையக ரயில் பாதைகளும் பாலங்களும்

bridge.jpgமலையக சேவையில் இப்போது ஈடுபடுத்தப்படும் ரயில்களிலும் பார்க்க வலுவும் பாரமும் கூடிய ரயில்களை ஈடுபடுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப்போதுள்ள ரயில் பாதைகளும் பாலங்களும் இதற்கு ஈடுகொடுக்கக் கூடியனவா என்பது பற்றிப் பொறியியலாளர்கள் பரிசீலித்து வருகின்றனர். கொட்டகலை ஆசிரிய பயிற்சிக் கல்லூரிக்கு அருகிலுள்ள பாலம் பரிசீலனைக்கு உட்படுவதைப் படத்தில் காணலாம்.

பெருந்தோட்டப் பகுதி பாடசாலை மாணவர்களுக்கான கல்வி மேம்பாட்டுத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்

sri-lanka-upcountry.jpgநுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த பெருந்தோட்டப்பகுதி பாடசாலை மாணவர்களின் நலன் கருதி கல்வி மேம்பாட்டுத் திட்டத்தினைத் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம். உதயகுமார் தெரிவித்தார்.

பொகவந்தலாவை தெரேசியா, கிலானி மோறார் ஆகிய தோட்டங்களில் இடம்பெற்ற கூட்டங்களில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது;

தொழிலாளர் தேசிய சங்கத்தின் கல்வி மேம்பாட்டுத்திட்டத்தின் மூலம் கடந்த வருடம் நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு உசாத்துணை நூல்களை நாம் வழங்கிய போது பெரும் வரவேற்புக் கிடைத்தது. உயர்தர மாணவர்கள் மேலதிக அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் வழங்கிய இந்நூல்கள் தமக்குப் பெரும் பயனை அளித்ததாக எமக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இத்தகைய கல்வி மேம்பாட்டுத்திட்டங்களை நாம் எவ்வித அரசியல் தொழிற்சங்கப் பேதங்களுமின்றியே மேற்கொண்டு வருகின்றோம். இவ்வாறு நூல்களை வழங்கும் திட்டத்தினை இவ்வருடமும் நாம் மேற்கொள்ளவுள்ளோம். இதற்குப் பாடசாலை அதிபர்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும்.

இன்று வறுமையினால் தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகள் கற்றல் உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதில் கூட மிகுந்த சிரமத்தினை எதிர்நோக்கி வருகின்றனர். இதனால் பாடசாலைகளுக்குச் செல்ல முடியாத மாணவர்களின் எண்ணிக்கை தோட்டப்பகுதிகளில் அதிகரித்து வருகின்றது. இவ்வாறான மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கு உதவுவதற்கு தொழிலாளர் தேசிய சங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதோடு மலையகத்தின் கல்வித்துறையில் மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாறான உதவிகள் மலையக மக்களின் கல்வி மேம்பாட்டிற்கு உதவியாக அமையும்.

மலையக இளைஞர், யுவதிகளின் பிரச்சினைக்கு தீர்வுகாண ஆலோசனை குழு – மத்திய மாகாண அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன்

ratha-kirishnan.jpgமலையக இளைஞர், யுவதிகளின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து தீர்வினைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்று மத்திய மாகாண அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.  இதற்கென ஆலோசனைக் குழுவொன்றை அமைத்து செயற்படுத்தப் போவதாகவும் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இ. தொ. கா உப தலைவரான இராதாகிருஷ்ணனுக்கு மத்திய மாகாண சபையில், கைத்தொழில், விளையாட்டுத்துறை, இளைஞர் மற்றும் மகளிர் விவகாரம், தோட்ட உட்கட்டமைப்பு இந்து கலாசார அலுவல்கள், கிராமிய அபிவிருத்தி தமிழ்க் கல்வி அமைச்சர் ஆகிய அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

கண்டி- பேராதனையிலுள்ள அமைச்சு அலுவலகத்தில் நேற்று முன்தினம் கடமைக ளைப் பொறுப்பேற்றுக் கொண்ட மாகாண அமைச்சர் ராதாகிருஷ்ணனுக்கு கண்டி – ரோயல் ஹோட்டலில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் இ. தொ. கா. தலைவரும், பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம், முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, முன்னாள், இந்நாள் மாகாண சபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள், உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

மத்திய மாகாண சபையில் நான்காவது தடவையாக அமைச்சராகியிருக்கும் இராதாகிருஷ்ணன் இங்கு உரையாற்றுகையில், “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் முதற்தடவையாக அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறேன். இ. தொ. கா. என்ன சொல்கிறதோ அதனைக் கட்டாயம் நிறைவேற்றித் தீருவேன்.

இந்திய உதவி தூதுவரிடம் சென்று உதவிகள் பெறுவதற்கு திட்டமிட்டுள்ளோம். 188 இந்து அறநெறிப் பாடசாலைகளையும் ஒரு கொள்கையின் கீழ் திட்டமிட்டு அபிவிருத்தி செய்வோம். ரம்பொடவிலுள்ள தொண்டமான் கலாசார நிலையத்தினை கவின்கலை நிறுவனமாக மாற்றி, நடனம், சங்கீதம், இசைக் கருவிகளுக்கான பாடநெறிகள் ஆரம்பிப்போம்.

தேசிய பாடசாலை என்பதில் நாம் உடன்பாடில்லை. தேசிய பாடசாலைகளை கொழும்பே நிர்வகிக்கின்றது. மாகாண அமைச்சு நிர்வகிக்க முடியாது. இன்று அதிகார பரவலாக்கலின் கீழ் தேசிய பாடசாலைகள் மாகாண பாடசாலைகளாக்கப்படவுள்ளன என்று தெரிவித்தார்.

தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமைப்புக்கு ரூ.322.5 மில். பெளதீக வளங்களை மேம்படுத்த அரசு ஒதுக்கீடு

இந்த வருடத்தினுள் தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் 322.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளது.

தோட்டப் பாடசாலைகளில் வகுப்பறைகள், கட்டடங்கள், வாசிகசாலைகள், அமைத்தல் சாதாரண தரம் மற்றும் உயர் தரம் வரையுள்ள பாடசாலைகளுக்கு விஞ்ஞான ஆய்வு கூடங்கள் நிர்மாணித்தல் என்பவற்றுக்காக இந்த நிதி செலவிடப்படும் என கல்வி அமைச்சின் தோட்டப் பாடசாலை பிரிவு பணிப்பாளர் திருமதி எம். சபாரஞ்சன் தெரிவித்தார்.

பாடசாலைகளில் மலசல கூடங்கள், கம்பி யூட்டர் அறைகள் அமைத்தல் மற்றும் திருத்தியமைத்தல் ஆகிய நடவடிக்கைகளுக்காகவும் நிதி ஒதுக்கப்படவுள்ளதாக திருமதி சபாரஞ்சன் தெரிவித்தார். தோட்டப் பாடசாலைகள் அதிகமாக உள்ள ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கென இது வரை 265 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளன.

125 மில்லியன் ரூபா ஊவா மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தவிர மேல் மாகாணத்திற்கு 25 மில்லியன் ரூபாவும் வடமேல் மாகாணத்திற்கு 12.5 மில்லியன் ரூபாவும் தென் மாகாணத்திற்கு 20 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த வருடத்தினுள் தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமை ப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதினூடாக தோட்ட மாணவர்களுக்கு தமது கல்வி நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளக்கூடிய சூழல் உருவாகும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.