அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

IIFA: சர்வதேச இந்திய திரைப்பட விழா ஆரம்பம்:

iifa-colombo.jpgசர்வதேச இந்தியத் திரைப்பட விருது விழா கொண்டாட்டங்கள் கொழும்பில் நேற்று கோலாகலமாக ஆரம்பித்தன. சினமன்ட் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற சர்வதேச பத்திரிகையாளர் விழாவுடன் இது ஆரம்பமானது.

இந்தியத் திரைப்படத் துறையைச் சேர்ந்த பல முன்னணி நடிக, நடிகையர்கள் இயக்குனர்கள் உட்பட திரைத் துறையைச்சேர்ந்த ஆயிரக்கணக் கானோர் இலங்கை வந்து சேர்ந்துள்ளனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடிகர் சல்மான் கான் விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்டார். விபாஷாபாஷ¤, சஞ்சய் தத், தியா மிர்ஸா, லாரா தத்தா, அனில்கபூர், ரித்ரிஷ் தேஷ்முக் மற்றும் இன்னும் பல இந்தியத் திரைப்படக் கலைஞர்கள் இலங்கை வந்துசேர்ந்துள்ளனர்.

சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் ஆரம்ப விழா நேற்று சர்வதேச பத்திரிகையாளர் மாநாட்டுடன் கோலாகலமாக ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து ‘லமா’ மற்றும் ‘ஹெல்ப்’ திரைப்படங்கள் தொடர்பான பத்திரிகையாளர் மாநாடுகள் சினமன்ட் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்றன.

உலகைப் பசுமைப்படுத்துவதற்கு சர்வதேச இந்தியத் திரைப்பட அகதமி அதிமுக்கியத்துவம் வழங்கி வருவதால் அதனடிப்படையில் செங்கம்பளத்துக்குப் பதிலாக அது பச்சைக் கம்பளங்களைப் பயன்படுத்துகின்றது.

நேற்று மாலை, ஐபா ரொக்ஸ் எனும் தொனிப் பொருளிலான நவநாகரிக ஆடை அலங்காரக் காட்சி (பஷன் ஷோ) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இலங்கையின் டைமகஸ் காமன்ஸின் ‘அவராத்ரி’ படைப்புகள் இதன்போது அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.

இந்தியத் திரை நட்சத்திரங்களான தியா மிரிஸா மற்றும் விவேக் ஒபரோய் ஆகியோர் இந்த பஷன் ஷோவைத் தொகுத்து வழங்கினர். முன்னதாக சினமன்ட் கிராண்டில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் சர்வதேச திரைப்பட விழாவென்பது ஒரு உலகு ஒரே மக்கள் என்பதை தொடர்ந்தும் நிரூபித்து வருவதாக தியா மிர்ஸா குறிப்பிட்டிருந்தார்.

இன்று காலை சர்வதேச திரைப்பட அகதமியின் சர்வதேச வர்த்தக சங்க மாநாடு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனை ஆரம்பித்து வைக்கின்றார். மதியம் 1 மணிக்கு, இந்தியத் திரை நட்சத்திரங்களுக்கும், இலங்கை கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு மிடையிலான குழந்தைகளுகான கிரிக்கெட் என்ற தொனிப்பொருளிலான கிரிக்கெட் போட்டி எஸ். எஸ். ஸி மைதானத்தில் இடம்பெறவிருக்கிறது.

இன்று மாலை சினமன்ட் கிராண்ட் ஹோட்டலில் மற்றுமொரு பாஷன் ஷோ இடம்பெறவுள்ளது. நாளை மாலை 6.30க்கு சர்வதேச திரைப்பட விழாவின் விருது வழங்கும் விழா ஆரம்பமாகின்றது.

ஆசிய பாதுகாப்பு உச்சி மாநாடு இன்று சிங்கப்பூரில் ஆரம்பம் – ஜீ.எல். தலைமையிலான குழு பங்கேற்பு

gl.jpgஆசிய பாதுகாப்பு உச்சி மாநாடு இன்று 4ஆம் திகதி முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரை சிங்கப்பூரில் நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாடுக்கு செல்லும் இலங்கை தூதுக்குழுவுக்கு வெளியுறவு அலுவல்கள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தலைமைதாங்குகிறார்.

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் விமானப் படை தளபதியுமான எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோரும் இலங்கை தூதுக்குழுவில் இடம் பெறுகின்றனர்.

லண்டனில் உள்ள சர்வதேச தந்திரோபாய கற்கை நிறுவனம் வருடாந்தம் ஆசிய பாதுகாப்பு உச்சி மாநாட்டை நடத்தி வருகிறது. இந்த வரிசையில் சிங்கப்பூரில் இன்று ஆரம்பமாவது 9 ஆவது உச்சி மாநாடாகும். 2002 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் இந்த உச்சி மாநாடு இடம்பெறுகிறது.

ஆசிய பசுபிக் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் இந்த உச்சி மாநாட்டில் ஒன்றுகூடி நம்பிக்கையை கட்டியெழுப்பும் மற்றும் தமக்கிடையிலான பாதுகாப்பு கூட்டுறவு செயற்பாடுகளை வளர்த்துக்கொ ள்ள ஒரு அமைப்பாக இது உரு வாக்கப்பட்டுள்ளது.

இந்த உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் இலங்கைக் குழுவுக்கு தலைமைதாங்கும் வெளியுறவு அலுவல்கள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அங்கு ‘கிளர்ச்சி எதிர்ப்பு மற்றும் ஆளுமையை வலுப்படுத்தல்- புலி பயங்கரவாதிகள் முன்னர் தம்வசம் வைத்திருந்த பிரதேசங்களின் கட்டுப்பாட்டை மீள் உறுதிப்படுத்தும் சவால் மற்றும் ஆளுமைபற்றிய இலங்கை அனுபவம்’ என்ற பொருளில் உரையாற்றுவார்.

உச்ச மாநாட்டின் பின்னர் அமைச்சர் பீரிஸ் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்களை சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலை பற்றி விளக்குவார் என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் சிங்கப்பூரின் கல்வி அமைச்சர், பாதுகாப்புக்கான இரண்டாவது அமைச்சர் மற்றும் சிங்கப்பூரின பதில் சட்டமா அதிபர் ஆகியோரையும் அமைச்சர் பீரிஸ் சந்தித்து பேசவுள்ளார்.

அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், ஜப்பான், லாகோஸ், மலேஷியா, மொஸ்கோலியா, மியன்மார், நியூசிலாந்து, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தென்கொரியா, ரஷ்யா, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, திமோர் லெஸ்ட், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் வியட்னாம் ஆசிய நாடுகளில் இருந்து பாதுகாப்பு துறைக்கு பொறுப்பானவர்கள் ஆசிய பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.

தோட்ட தொழிலாளர் மேலதிக வேலை செய்ய தேவையில்லை பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம்

விடுமுறை தினங்களில் ஒன்றரைநாள் சம்பளம் வழங்குவதால் அதற்காக தோட்டத் தொழிலாளர்கள் மேலதிக வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. அவ்வாறு தோட்ட நிர்வாகம் நிர்பந்திக்குமானால் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென இ.தொ.கா. தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொழிற்சங்கக் கூட்டமைப்பு முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சு நடத்தி தொழிலாளர்களுக்கு நியாயம் கிட்ட வழிவகை செய்யுமெனவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

போயா ஞாயிறு தினங்கள் உட்பட விடுமுறை தினங்களில் தோட்டத் தொழிலாளர்கள் வேலை செய்வார்களேயானால் அவர்களுக்கு ஒன்றரைச் சம்பளம் வழங்க வேண்டுமென்ற நடைமுறை காலங்காலமாக இருந்து வருகிறது. அத்துடன் தொழிற்சங்கக் கூட்டமைப்பு மற்றும் முதலாளிமார் சம்மேளத்துடனான கூட்டு ஒப்பந்தத்திலும் இவ்விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது. தோட்ட நிர்வாகங்கள் இதனை கவனத்திற்கொண்டு செயற்படுவது முக்கியம்.

எவ்வாறாயினும் விடுமுறை நாட்களில் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களை, தாம் கூடிய சம்பளம் வழங்குவதால் மேலதிக வேலை செய்ய வேண்டுமென தோட்ட நிர்வாகங்கள் நிர்பந்தித்து வருகின்றன. இதன் மூலம் சில தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களை ஏமாற்றியும் வருகின்றன.

இது தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்ட போதே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் ஊவா மாகாண சபை உறுப்பினருமான கே. வேலாயுதம் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை ஒருபோதும் அனுமதிக்க முடியாது அது தொடர்பில் முதலாளிமார் சம்மேளத்துடன் பேச்சு நடத்தி தீர்வு காணப்படும். அதேவேளை தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பிலும் பேச் சுவார்த்தை நடத்தத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச இந்திய திரைப்படவிழா இன்று கோலாகல ஆரம்பம் – கொழும்பில் விஷேட பாதுகாப்பு:

iifa-colombo.jpgசர்வதேச இந்தியத் திரைப்பட விழா இன்று ஆரம்பமாகின்றது. இந்தியத் திரைப்படக் கலைஞர்களையும், தொழில் நுட்பக் கலைஞர்களையும் கெளரவிக்கும் முகமாக வருடா வருடம் நடத்தப்படும் இவ்விழாவை நடத்துவதற்கென இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டது. 11 சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவை நடத்துவதற்கு தென்னாபிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அவுஸ்திரேலியா, தென் கொரியா போன்ற நாடுகளுடன் போட்டியிட்டு இலங்கை இந்த வாய்ப்பைப் பெற்றுக்கொண்டது.

இன்று இலங்கையில் ஆரம்பமாகும் சர்வதேச இந்தியத் திரைப்பட விழா நாளை மறுதினம் 5ஆம் திகதி விருது வழங்கும் விழாவுடன் நிறைவடைகின்றது. இன்று மாலை, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நவநாகரிக ஆடை அலங்காரக்காட்சி நடைபெறுகின்றது. இலங்கையின் டைமக்ஸ் கார்மென்ஸின் ‘அவராத்தி’ படைப்புகள் இங்கு அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளன.

iifa-colombo.jpgஏனைய நவநாகரிக ஆடை அலங்காரக்காட்சிக்களில் போலல்லாமல் இந்தியாவின் பிரபல இசை இரட்டையர்களான சலீம் சுலைமான் ஆகியோர் இதற்கு நேரடியாக இசை வழங்குகின்றனர். பிரபல நட்சத்திரங்களான விவேக் ஒபரோய், தியா மிர்ஸா ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர்.

சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் சர்வதேச வர்த்தக சங்க மாநாடு நாளை காலை, கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்மாநாட்டை ஆரம்பித்து வைப்பார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, மத்திய வங்கி ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால், இந்தியத் தூதுவர் அஷோக் கே.காந்த் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் சஷி தரூர் உட்படப் பலர் இதில் உரையாற்றவுள்ளனர்.

சினிமாத் துறையில் ஈடுபாடு கொண்டவர்களுக்காக சினிமா தொடர்பான பயிற்சிப் பட்டறையொன்று நாளை காலை கொழும்பு சிலோன் கொண்டினன்டல் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இந்தியாவின் பிரபல இயக்குனரான ஆர். பல்கி, நடிகர் அனுபம்கீர், நடிகை ஜக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் இதில் பங்குபற்றுவர்.

இந்தியத் திரை நட்சத்திரங்களுக்கும், இலங்கை கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு மிடையிலான சிறுவர்களுக்கான கிரிக்கெட் எனும் தொனிப் பொருளிலான கிரிக்கெட் போட்டி நாளை மதியம் எஸ். எஸ். ஸி. மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந்தியத் திரை நட்சத்திரங்கள் இரு அணிகளாக, ஹிர்திக் ரோஷன் மற்றும் சுனில் ஷெட்டி தலைமையில் மோதவுள்ளன. இதில் சில இந்தியக் கிரிக்கெட் வீரர்களும் அடங்குவர்.

இலங்கை அணிக்கு குமார் சங்கக்கார தலைமை தாங்குவார். இதன் மூலம் கிடைக்கும் நிதி சிறுவர் போராளிகளின் புனர்வாழ்வுக்குப் பயன்படுத்தப்படும்.

சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் விருது வழங்கும் விழா நாளை மறுதினம் சனிக்கிழமை, சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது. ஹிர்திக் ரோஷன், சயிப் அலிகான், கரீனா கபூர், பிபாஷா பாஸ¤, ரிதீஷ் தேஹ்முக், விவேக் ஒபரோய், இலங்கையின் ஜக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோரின் நடன நிகழ்ச்சிகள் அன்றைய தினம் விழாவை அலங்கரிக்கவுள்ளன.

சிறந்த திரைப்படத்துக்கான ‘த்ரீ இடியட்ஸ் வோன்டட்’, ‘டெவ்டி’, ‘காமினி’, ‘பா’ ஆகிய திரைப்படங்கள் பிரேரிக்கப்பட்டுள்ளன. ‘த்ரீ இடியட்ஸ்’ திரைப்படம் இத் திரைப்பட விழாவில் முக்கிய 13 விருதுகளில் 12 விருதுகளுக்குப் பிரேரிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக வழங்கப்படும் 8 விருதுகள் ஏற்கனவே இத்திரைப்படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

இவ்விருது வழங்கும் விழா ஸ்டார் தொலைக்காட்சி சேவையில் எதிர்வரும் ஜுலை மாதம் 11 ஆம் திகதி ஒளிபரப்பப்படவிருக்கின்றது. சுமார், 110 நாடுகளில் 600 மில்லியன் ரசிகர்கள் இத்திரைப்பட விழாவை ஸ்டார் தொலைக்காட்சியினூடாகக் கண்டு களிப்பர். இந்தியாவில் இருந்து மட்டும் 2000 விருந்தினர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட திரை நட்சத்திரங்களும், இந்தியத் திரையுலகைச் சேர்ந்த 600 பேரும் இவ் விழாவில் கலந்து கொள்ள வருகின்றார்கள். இலங்கையில் உள்ள ஹோட்டல்களில் 2650 அறைகள் இவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளன.

சுகததாஸ உள்ளக அரங்கு 400 மில்லியன் ரூபாவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இடம்பெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் மூலம் அந்நாட்டுக்கு 56 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்தது. அதிலும் பார்க்கக் கூடுதல் வருமானம் இம்முறை இலங்கையில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவின் மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முள்ளியவளையில் நாளை 710 பேர் மீள் குடியமர்வு

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த 360 குடும்பங்களைச் சேர்ந்த 930 பேர் நேற்று (2) கனிக்கேணி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மீள் குடியேற்றப்பட்டதாக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக திட்டப் பணிப்பாளர் ஸ்ரீரங்கன் கூறினார்.

இவர்கள் வவுனியா மற்றும் யாழ்ப்பா ணம் ஆகிய பகுதிகளிலுள்ள தமது உறவினர்களின் வீடுகளில் தங்கியிருந்த தாகவும் விசேட பஸ்கள் மூலம் இவர்கள் நேற்று சொந்த இடங் களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்கள், தற்காலிக வீடுகள் அமைப்பதற் கான கூரைத் தகடுகள், உபகரணங்கள் என்பனவும் வழங்கப்பட்டுள்ளன.

இது தவிர முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றம் இடம்பெற்ற போது சமுகமளிக்காத ஒரு தொகுதியினரும் நேற்று தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, முள்ளியவளை, வடக்கு பகுதியில் 245 குடும்பங்களைச் சேர்ந்த 710 பேர் நாளை (4) மீள் குடியேற்றப்பட உள்ளதாகவும் திட்டப் பணிப்பாளர் கூறினார். இவர்கள் வவுனியா மெனிக்பாம் நிவாரணக் கிராமத்தில் இருந்து விசேட பஸ் மூலம் அழைத்துவரப்படவுள்ளனர்.

இதேவேளை, ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள இரு கிராமசேவகர் பிரிவுகளில் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதோடு இங்கும் விரைவில் மீள்குடியேற்றம் இடம்பெற உள்ளது.

உத்தியோகபூர்வ அழைப்பு கிடைத்தால் தமிழ்க் கூட்டமைப்பு அரசுடன் பேச்சு நடத்தும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

surash.jpgஅரசியல் தீர்வு விடயம் சம்பந்தமாகப் பேச்சு நடத்துவதற்கான எவ்வித அழைப்பும் ஜனாதிபதியிடமிருந்தோ அல்லது அரசாங்கத்திடமிருந்தோ இதுவரை கிடைக்கவில்லை. அழைப்பு விடுக்கப்பட்டால் கூட்டமைப்பு அதனை ஏற்று பேச்சுவார்த்தைக்குச் செல்லுமென கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

எனினும், அழைப்பு கிடைத்ததன் பின்னரே பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்படும் விடயங்கள் பற்றி குறிப்பிட முடியுமெனவும் அவர் தெரி வித்தார். ஏற்கனவே, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ¤க்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தனுக்குமிடையில் பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றமை உண்மையே. எனினும், அப்பேச்சுவார்த்தை உத்தியோகப்பற்றற்றதாகவே அமைந்ததுடன் எந்தவித தீர்மானமும் அதன் மூலம் மேற்கொள்ளப் பட்டிருக்கவில்லை யெனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென தெரிவிக்கப்படுகிறதே தவிர அதற்கான அழைப்பை விடுப்பதில் ஏன் இந்தளவு தாமத மேற்படுத்தப்படுகிறதோ எமக்குத் தெரியாதெனவும் அவர் குறிப்பிட்டார்.

அரச ஆஸ்பத்திரிகளில் மருந்துகட்டும் மென்துணிகளுக்கு தட்டுப்பாடு

அரசாங்க ஆஸ்பத்திரிகளில் காயங்களுக்கு மருந்து கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் மென்மையான துணிக்கு நிலவும் தட்டுப்பாட்டைத் துரிதமாக நிவர்த்திப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இத்துணித் தட்டுப்பாட்டை துரிதமாக நிவர்த்திப்பதற்கு தேவையான சகல அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார்.

இதனடிப்படையில் காயங்களுக்கு மருந்து கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் மென்மையான துணியை அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு விநியோகிக்கும் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வருடத்திற்கு ஒரு தடவைப்படி கோட்டாவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது இத்துணி உற்பத்தியாளர்களுக்கு அவற்றை அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு விநியோகிக்கவென மூன்று மாதத்திற்கு ஒரு தடவையே கோட்டா வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

காயங்களுக்கு மருந்துகட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் மென்மையான துணியை அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு விநியோகிக்கும் 262 உள்ளூர் உற்பத்தியாளர்கள் உள்ளனர். இவர்களை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்று அவசரமாக அழைத்து கலந்துரையாடியுள்ளார். இக்கலந்துரையாடலின் போது உற்பத்தியாளர்களின் குறை, நிறைகளையும் அமைச்சர் கேட்டறிந்தார்.

உற்பத்தியாளர்களின் வேண்டுகோளின் படியே கோட்டாவை ஒரு வருடத்திற்கு ஒரு தடவை வழங்குவதாக அமைச்சர் அறிவித்தார். இத்துணி உற்பத்தியையும் அதன் உற்பத்தியாளர்களையும் பாதுகாப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும், ஆஸ்பத்திரிக ளில் இத்துணிக்குத் தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்க வேண்டாம் எனவும் அமைச்சர் இச்சமயம் கேட்டுக்கொண்டார்.

முல்லை, கிளிநொச்சி பகுதிகளுக்கு அமைச்சர் பசில், முத்துசிவலிங்கம் விஜயம். அபிவிருத்தி திட்டங்கள், மீள் குடியேற்றம் பற்றி நேரில் ஆராய்வு

basi.jpgவடக்கில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அமைச்சருடன் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் மற்றும் உயரதிகாரிகள் பலரும் இவ்விஜயத்தில் பங்கேற்றதுடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்களுடனும் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.

நேற்றுக் காலை கொழும்பிலிருந்து விசேட ஹெலிகொப்டர் மூலம் வவுனியாவைச் சென்றடைந்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் வவுனியாவில் வவுனியா மாவட்டச் செயலாளரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். அதனை யடுத்து வவுனியா மாவட்டச் செயலாளர் திருமதி சார்ள்ஸ¤டன் நெடுங்கேணிப் பகுதிக்குச் சென்றுள்ள அமைச்சர் நெடுங்கேணிப் பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் ‘என்ரிப்’ திட்டத்தையும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் பார்வையிட்டுள்ளதுடன் ‘என்ரிப்’ திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப் படவுள்ள கமநல சேவைகள் திணைக்கள அலுவலகத்திற்கான அடிக்கல்லையும் நாட்டிவைத்துள்ளார்.

அதனையடுத்து நெடுங்கேணி பகுதியில் மீள் குடியேற்ற நடவடிக்கைகளைப் பார்வையிட்ட அமைச்சர், ‘ரியாப்’ வேலைத்திட்ட அலுவலகத்திற்குச் சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதுடன் நெடுங்கேணி வைத்தியசாலைக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளையும் நேரில் பார்வையிட்டுள்ளார்.  இதன் போது அங்கு குழுமியிருந்த மக்கள் தமது தேவைகள் குறித்து அமைச்சரின் கவனத்துக்குக்கொண்டு வந்துள்ளனர்.

இதன் பின்னர் முல்லைத்தீவிற்கும் ஒட்டுசுட்டானுக்கும் அமைச்சர் பசில் நேரில் சென்று அங்கு உலக வங்கியின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களைப் பார்வையிட்டார். முல்லைத்தீவு அரச அதிபர் எமல்டா சுகுமாருடன் அம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி மற்றும் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் சம்பந்தமாக அமைச்சர் கலந்துரையாடியுள்ளார். அதன்போது மாவட்டத்திற்கான செயற்திட்ட அறிக்கையொன்றையும் அரச அதிபர் அமைச்சரிடம் கையளித்தார்.

முல்லைத்தீவு கச்சேரியைப் பார்வையிட்ட அமைச்சர் அங்குள்ள அதிகாரிகளுடனும் கலந்துரையாடியுள்ளார். அதனையடுத்து ஒட்டுசுட்டானுக்குச் சென்றுள்ள அமைச்சர் அங்கு இடம்பெறும் மீள் குடியேற்ற நடவடிக்கைகளையும் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களையும் பார்வையிட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள திட்டங்கள் சம்பந்தமாக முல்லைத்தீவு அரசாங்க அதிபருடன் கலந்துரையாடியுள்ளார். அமைச்சருடனான நேற்றைய இவ் வடக்கு விஜயத்தில் பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம், மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிரி, உலக வங்கியின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

முதலமைச்சர்கள் வருடாந்த மாநாடு மாரவிலயில் நாளை ஆரம்பம்

மாகாண முதலமைச்சர்களின் வருடாந்த மாநாடு நாளை 4ம் திகதி வெள்ளிக்கிழமை புத்தளம் மாவட்டத்துக்குட்பட்ட மாரவில நகரில் ஆரம்பமாகின்றது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இம் மாநாட்டுக்கு வடமேல் மாகாண முதலமைச்சர் அதுல விஜேசிங்க தலைமை தாங்குவார். மாகாணங்களின் அபிவிருத்திகள், நட்புறவுகள் சம்பந்தமான முக்கிய விடயங்கள் பலவும் இம்மாநாட்டில் ஆலோசிக்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

IIFA: கொழும்பில் மாற்று வீதிப் போக்குவரத்துகள்

iifa-awards-logo.jpgகொழும்பில் இன்று ஆரம்பமாகவுள்ள சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்ககோன் தெரிவித்தார். இன்று முதல் நடைமுறைக்கு வரும் விசேட பாதுகாப்புத் திட்டம் எதிர்வரும் 5ம் திகதி வரை அமுலில் இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று பிற் பகல் பொலிஸ் தலைமையகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பதில் பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்ககோன் மேலும் குறிப்பிடுகையில் :-

இந்த திரைப்பட விழாவில் கலந்து கொள்ளவுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் வழிகாட் டலில் பெருந்தொகையிலான பொலிஸாரும் அவர்களுக்கு உதவியாக முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

இந்தத் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புக்கோ, விழாவை முன்னிட்ட பாதுகாப்புக்கோ எந்த ஒரு வெளிநாட்டு பொலிஸாரோ, பாதுகாப்பு படையினரே கடமையில் ஈடுபடுத்தப்படவில்லை என்று பதில் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

இந்த விழாவில் கலந்துகொள்ள வருகை தந்துள்ள முக்கிய பிரமுகர்களின் நலனை கருதி சில வீதிகள் அவ்வப்போது மூடப்படும் என்றும், சில வீதிகளுக்கு பதிலாக மாற்று வழிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது என்றும் போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் லக்கி பீரிஸ் தெரிவித்தார்.

மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறே போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். இன்றும் நாளையும் நடைபெறவுள்ள நிகழ்வுகளுக்காக லேக்ஹவுஸ் சுற்றுவட்டம், கொள்ளுப்பிட்டி சந்தி, லிபர்டி சுற்று வட்டம், கிரின்பாத், மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தை, தர்மபால மாவத்தை, எப். ஆர். சேனநாயக்க மாவத்தை, கன்னங்கர மாவத்தை, ஹொட்டன் சுற்றுவட்டம், மெய்ட்லன்ட் கிரசன்ட் பொது நிர்வாக அமைச்சு சந்தி, சீ. ஆர். டி. சந்தி, புலர்ஸ் வீதி ஆகிய வீதிகளின் ஊடாக பிரமுகர்கள் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

5ம் திகதி நடைபெறவுள்ள பிரதான வைபவத்திற்கான காலி முகத்திடல் வீதி, லோடஸ் வீதி, லேக் ஹவுஸ் சுற்றுவட்டம், டி. ஆர். விஜேவர்த்தன மாவத்தை, காமினி சுற்றுவட்டம், மருதானை சந்தி, பஞ்சிகாவத்தை வீதி, சங்கராஜ சுற்று வட்டம், ஆமர் வீதி, சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தை ஊடாக சுகததாச உள்ளக அரங்கிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.