கொழும்பில் இன்று ஆரம்பமாகவுள்ள சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்ககோன் தெரிவித்தார். இன்று முதல் நடைமுறைக்கு வரும் விசேட பாதுகாப்புத் திட்டம் எதிர்வரும் 5ம் திகதி வரை அமுலில் இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று பிற் பகல் பொலிஸ் தலைமையகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பதில் பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்ககோன் மேலும் குறிப்பிடுகையில் :-
இந்த திரைப்பட விழாவில் கலந்து கொள்ளவுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் வழிகாட் டலில் பெருந்தொகையிலான பொலிஸாரும் அவர்களுக்கு உதவியாக முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
இந்தத் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புக்கோ, விழாவை முன்னிட்ட பாதுகாப்புக்கோ எந்த ஒரு வெளிநாட்டு பொலிஸாரோ, பாதுகாப்பு படையினரே கடமையில் ஈடுபடுத்தப்படவில்லை என்று பதில் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.
இந்த விழாவில் கலந்துகொள்ள வருகை தந்துள்ள முக்கிய பிரமுகர்களின் நலனை கருதி சில வீதிகள் அவ்வப்போது மூடப்படும் என்றும், சில வீதிகளுக்கு பதிலாக மாற்று வழிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது என்றும் போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் லக்கி பீரிஸ் தெரிவித்தார்.
மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறே போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். இன்றும் நாளையும் நடைபெறவுள்ள நிகழ்வுகளுக்காக லேக்ஹவுஸ் சுற்றுவட்டம், கொள்ளுப்பிட்டி சந்தி, லிபர்டி சுற்று வட்டம், கிரின்பாத், மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தை, தர்மபால மாவத்தை, எப். ஆர். சேனநாயக்க மாவத்தை, கன்னங்கர மாவத்தை, ஹொட்டன் சுற்றுவட்டம், மெய்ட்லன்ட் கிரசன்ட் பொது நிர்வாக அமைச்சு சந்தி, சீ. ஆர். டி. சந்தி, புலர்ஸ் வீதி ஆகிய வீதிகளின் ஊடாக பிரமுகர்கள் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
5ம் திகதி நடைபெறவுள்ள பிரதான வைபவத்திற்கான காலி முகத்திடல் வீதி, லோடஸ் வீதி, லேக் ஹவுஸ் சுற்றுவட்டம், டி. ஆர். விஜேவர்த்தன மாவத்தை, காமினி சுற்றுவட்டம், மருதானை சந்தி, பஞ்சிகாவத்தை வீதி, சங்கராஜ சுற்று வட்டம், ஆமர் வீதி, சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தை ஊடாக சுகததாச உள்ளக அரங்கிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.