வடக்கில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அமைச்சருடன் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் மற்றும் உயரதிகாரிகள் பலரும் இவ்விஜயத்தில் பங்கேற்றதுடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்களுடனும் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.
நேற்றுக் காலை கொழும்பிலிருந்து விசேட ஹெலிகொப்டர் மூலம் வவுனியாவைச் சென்றடைந்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் வவுனியாவில் வவுனியா மாவட்டச் செயலாளரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். அதனை யடுத்து வவுனியா மாவட்டச் செயலாளர் திருமதி சார்ள்ஸ¤டன் நெடுங்கேணிப் பகுதிக்குச் சென்றுள்ள அமைச்சர் நெடுங்கேணிப் பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் ‘என்ரிப்’ திட்டத்தையும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் பார்வையிட்டுள்ளதுடன் ‘என்ரிப்’ திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப் படவுள்ள கமநல சேவைகள் திணைக்கள அலுவலகத்திற்கான அடிக்கல்லையும் நாட்டிவைத்துள்ளார்.
அதனையடுத்து நெடுங்கேணி பகுதியில் மீள் குடியேற்ற நடவடிக்கைகளைப் பார்வையிட்ட அமைச்சர், ‘ரியாப்’ வேலைத்திட்ட அலுவலகத்திற்குச் சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதுடன் நெடுங்கேணி வைத்தியசாலைக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளையும் நேரில் பார்வையிட்டுள்ளார். இதன் போது அங்கு குழுமியிருந்த மக்கள் தமது தேவைகள் குறித்து அமைச்சரின் கவனத்துக்குக்கொண்டு வந்துள்ளனர்.
இதன் பின்னர் முல்லைத்தீவிற்கும் ஒட்டுசுட்டானுக்கும் அமைச்சர் பசில் நேரில் சென்று அங்கு உலக வங்கியின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களைப் பார்வையிட்டார். முல்லைத்தீவு அரச அதிபர் எமல்டா சுகுமாருடன் அம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி மற்றும் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் சம்பந்தமாக அமைச்சர் கலந்துரையாடியுள்ளார். அதன்போது மாவட்டத்திற்கான செயற்திட்ட அறிக்கையொன்றையும் அரச அதிபர் அமைச்சரிடம் கையளித்தார்.
முல்லைத்தீவு கச்சேரியைப் பார்வையிட்ட அமைச்சர் அங்குள்ள அதிகாரிகளுடனும் கலந்துரையாடியுள்ளார். அதனையடுத்து ஒட்டுசுட்டானுக்குச் சென்றுள்ள அமைச்சர் அங்கு இடம்பெறும் மீள் குடியேற்ற நடவடிக்கைகளையும் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களையும் பார்வையிட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள திட்டங்கள் சம்பந்தமாக முல்லைத்தீவு அரசாங்க அதிபருடன் கலந்துரையாடியுள்ளார். அமைச்சருடனான நேற்றைய இவ் வடக்கு விஜயத்தில் பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம், மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிரி, உலக வங்கியின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.