அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

பி.எம்.ஐ.சி.எச் பிரதேசம் நள்ளிரவு முதல் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம

ranjith-gunasekara.jpgஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் நாட்டில் மூன்றாவது தடவையாக நடத்தப்படும் தேசத்திற்கு மகுடம் அபிவிருத்திக் கண்காட்சியை முன்னிட்டு கொழும்பிலும் அதன் சுற்றுப்புறத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் சுதந்திர தினத்துடன் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பிக்கவுள்ள ஐந்து நாள் அபிவிருத்திக் கண்காட்சிக்காக மண்டபம் உள்ளிட்ட அப்பகுதி முழுவதும் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் கிரேஷ்ட பொலிஸ் அத்திய ட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலின் கீழ் பொலிஸ் திணைக்களமும் முப்படையினரும் இணைந்து அதிதீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். கொழும்பில் சேவையாற்றி வரும் பொலிஸாருக்கும் மேலதிகமாக வெளியிடங்களிலிருக்கும் 1500 பொலிஸார் கண்காட்சி முடிவடையும் வரையான காலப்பகுதியில் கொழும்பில் சேவைக்கு அமர்த்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார். தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பார்வையாளர்களை கருத்திற் கொண்டு பொலிஸாரும் முப்படையினரும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே நான்கு கட்டங்களாக பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக கண்காட்சிக்குப் பொறுப்பான பிரதிபொலிஸ் மா அதிபர் இளங்ககோன் தெரிவித்தார். அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் வாகனப் போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கென விநியோகிக்கப்பட்ட விசேட அனுமதி அட்டைகளை கொண்டவர்கள் மட்டுமே இப்பகுதியினூடாக பிரவேசிக்க முடியும்.

அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் பணி புரிவோருக்கு பொலிஸ் போக்குவரத்து பிரிவினூடாகவும் ஏனையோருக்கு கறுவாத் தோட்டப் பொலிஸாரினாலும் இவ்விசேட அனுமதி அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன. பாதுகாப்பை கருத்திற்கொண்டு, கனத்தை சந்தியிலிருந்து புள்ளர்ஸ் வீதி, க்ரேகரி வீதியிலிருந்து க்ரேகரி எவன்யூ, க்ரேகரி வீதியிலிருந்து விஜேராம மாவத்தை, மவுட்லண்ட் வீதியிலிருந்து வித்யாமாவத்தை, பொது நிர்வாக அமைச்சு சந்தியிலிருந்து புள்ளர்ஸ் வீதி, புள்ளர்ஸ் லேனில் இருந்து புள்ளர்ஸ் வீதி, மலலசேக்கர மாவத்தையிலிருந்து சரண வீதி சந்தி, ஜாவத்தை வீதியிலிருந்து புள்ளர்ஸ் வீதி வரையான பகுதிகள் எதிர்வரும் 04ம் திகதி முதல் 08ம் திகதி வரையான காலப் பகுதிக்குள் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என்பதால் பொதுமக்கள் மாற்று வழிகளை உபயோகிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.

பிரவேசத்துக்கான விசேட அனுமதி அட்டைகள் வழங்கப்பட்ட வாகனங்கள் சி. ஆர். மற்றும் எப்.சி. இலங்கை மன்றக் கல்லூரி வளாகம், மெயிட்லண்ட் பிளேஸ் ஆகிய இடங்களில் தமது வாகனங்களைத் தரித்து வைக்க முடியும். வெளியிடங்களிலிருந்து பஸ் மூலம் கண்காட்சியை பார்வையிட வருபவர்கள் தமது பஸ்களை விகாரமாதேவி பூங்காவுக்கு வெளியில் தரித்து வைக்க முடியும். எனையோர் ரஷ்ஷியன் பார்க், சரண மாவத்தை ஆகிய இடங்களில் வாகனங்களை தரிப்பிட முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

புலிகளின் பிடியில் சிக்கியுள்ள மக்களை விடுவிக்கக் கோரி யாழில் ஆர்ப்பாட்டம்

people-jaffna.jpgவன்னியில் புலிகளின் பிடியில் சிக்கியிருக்கும் சிவிலியன்களை உடனடியாக விடுவிக்கக் கோரி யாழ். குடாநாட்டு மக்கள் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்தினர். யாழ். குடாநாட்டின் 05 கல்வி வலயங்களைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டனர்.

யாழ். கச்சேரிக்கருகில் நேற்றுக் காலை 11 மணிக்கு ஆரம்பமான இந்த பேரணியில் அரசாங்க மற்றும் தனியார் ஊழியர்கள், வர்த்தகர், மதகுருமார், பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களென அனைத்து இன மக்களும் கலந்துகொண்டனர். இதன் காரணமாக யாழ்ப்பாணத்தின் இயல்பு வாழ்க்கை நேற்று பாதிப்படையவில்லை. வழமைபோல் கடைகள் யாவும் திறக்கப்பட்டிருந்தன.

ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்ட மக்கள் மூன்று மகஜர்களை கையளித்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்குமாறு கோரி முதலாவது மகஜர் யாழ். அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஊர்வலமாக சென்று மக்கள் ஐ. நா. செயலாளரிடம் கையளிக்குமாறு கோரி சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதியிடம் இரண்டாவது மகஜரை கையளித்தனர். இறுதியாக இந்தியப் பிரதமரிடம் வழங்கப்பட வேண்டுமெனக் கோரி யு. என். டி. எச். ஆர். பிரதிநிதியிடம் மூன்றாவது மகஜர் கையளிக்கப்பட்டது.

பேரணியில் கலந்துகொண்டோர், ‘அப்பாவி சிவிலியன்கள் விடுவிக்கப்பட வேண்டும்’, ‘சிவிலியன்களை விடுவிக்க சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்’ என பல்வேறு கோஷங்களை எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.

4ம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு – தமிழக அரசு இதை சட்டவிரோதம் என அறிவித்துள்ளது

assembly-tamil-nadu.jpgஇலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 4ம் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் வேலை நிறுத்தம் சட்டத்துக்கு புறம்பானது. சட்ட ஒழுங்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் விரைவில் போர் நிறுத்தம் கொண்டு வர, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 4ம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசு இதை சட்டவிரோதம் என அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசிசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு எதிரானது. வேலை நிறுத்தத்தின் போது சட்ட ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும். பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டை மையமாக கொண்ட திரைப்படத்தின் உலகளாவிய வெளியீடு கொழும்பில்

_hindi_victory.jpgகிரிக்கெட் வீரர் ஒருவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ‘விக்டரி’ என்னும் இந்தி திரைப்படத்தின் உலகளாவிய வெளியீடு வெள்ளிகிழமையன்று கொழும்பில் நடைபெற்றது.

ஆஸ்திரேலியா, இந்தியா இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுமார் 60 சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் இந்த திரைப்படத்தில் தோன்றியுள்ளனர். இந்த திரைப்பட வெளியீட்டு நிகழ்ச்சியில் திரைப்படத்தின் கலைஞர்கள் மற்றும் படத்தில் தோன்றிய கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றனர்.

‘கூட்டமைப்பு எம்.பிகள் தலைமறைவாகும் நிலை’- சங்கரி: ‘தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் இனியும் தொடரும்’ – சம்பந்தன்: ஐ. நா. உரிய முறையில் கடமைகளை மேற்கொள்ளவில்லை’ – ஜெயனந்தமூர்த்தி

sangari.jpgதமிழ் தேசியக் கூட்டமைப்பு எம். பி. களுக்கு தமிழ் மக்களிடையே தலைகாட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் வெளிநாடுகளில் தலைமறைவாகும் நிலை உருவாகியுள்ளதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்த சங்கரி தெரிவித்தார்.

புலிகளின் ஏக பிரதிநிதிகள் என்று கூறி தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று தமக்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை என்று கூறுவது நகைப்புக்குரியது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்:- புலிகளுக்கு ஆதரவு திரட்டுவதற்காக வெளிநாடுக ளுக்குச் சுற்றிவந்த இவர்கள் தமது தொகுதிக்குக் கூட சென்றது கிடையாது. புலிகள் படுதோல்வி அடைந்து வரும் நிலையில் எமக்கும் புலிகளுக்கும் தொடர்பு இல்லை என்று கூட கூறத் தலைப்பட்டுள்ளனர். ஆனால் புலிகளின் பிடியில் உள்ள மக்களை விடு விக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்றுவரை சொல்லவில்லை இது தமிழ் மக்களுக்குச் செய்த பெரும் துரோகமாகும்.
அங்கு சிக்கியுள்ள மக்களை விடுவிக்குமாறு சகல தரப்பினரும் புலிகளைக் கோரி வருகின்றனர். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அந்த மக்கள் குறித்து எது வித கவலையும் இல்லை என்றும் அவர் சொன்னார்.

விடுதலைப் புலிகள் தோல்வி அடைந்து விட்டார்களா என்பதற்குக் காலம் தான் பதில் சொல்லும் – இரா.சம்பந்தன்

sampthan.jpg“விடுதலைப்புலிகள் தற்போது தங்கள் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களை இழந்து விட்டார்கள் என்பது உண்மை. ஆனால்,விடுதலைப் புலிகள் தோல்வி அடைந்து விட்டார்களா என்பதற்குக் காலம் தான் பதில் சொல்லும், இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுவின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்’. “லங்காதீப’ பத்திரிகைக்கு என்னைப் பேட்டிகண்ட செய்தியாளர் “விடுதலைப் புலிகள் தோல்வி கண்டுள்ளார்கள். இனி உங்கள் நிலை என்ன’ என்று கேட்டார். அதற்கு இவ்வாறே பதிலளித்தேன் என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்; “நாடு சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் அரசியல் காணி உரிமைகளை வலியுறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. பிரபாகரன் பிறப்பதற்கு முன்பே இலங்கைத் தமிழரின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டம் ஆரம்பமாயிற்று. பிரபாகரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே இலங்கைத் தமிழரின் அரசியல் மற்றும் காணி உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஈடுபட்டுவந்தது. இலங்கைத் தமிழ் மக்களின் இந்த உரிமைப் போராட்டம் இனியும் தொடரும். இதில் மாற்றம் இல்லை’ என்றார்.

பொதுமக்களுக்கு ஆற்றப்பட வேண்டிய கடமைகளை ஐ. நா. அமைப்பு உரிய முறையில் மேற்கொள்ளவில்லை – ஜெயனந்தமூர்த்தி

jeyanathamoorthy.jpgவன்னிப் பிரதேசத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ஆற்றப்பட வேண்டிய கடமைகளை ஐக்கிய நாடுகள் அமைப்பு உரிய முறையில் மேற்கொள்ளவில்லை என தமிழர் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு காணப்படும் சர்வதேச அதிகாரம் மற்றும் பொறுப்புணர்ச்சி உரிய முறையில் வெளியிப்படுத்தப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயனந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட போதிலும் அதனை சர்வதேச சமூகம் தட்டிக் கேட்காத ஓர் போக்கு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனச்சுத்திரிகப்பு அரசாங்கமொன்றின் கைப்பொம்மையாக ஐக்கிய நாடுகள் அமைப்பு செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு அரசாங்கம் திட்டமிட்ட வகையில் வன்னிப் பொதுமக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.  எனினும், முக்கிய சர்வதேச அமைப்பான ஐக்கிய நாடுகள் அமைப்பு தமது தார்மீகப் பொறுப்புக்களிலிருந்து விலகிச் செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  இந்த இனச்சுத்திரிகரிப்பு அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச சமூகம் விரைந்து செயற்பட வேண்டுமென அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேல் மாகாண சபை தேர்தல் மார்ச்சில்

ballot-box.jpgமேல் மாகாண சபை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதி தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவினால் இந்த வாரம் அறிவிக்கப்பட உள்ளதாக தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படும் திகதியிலிருந்து 5 முதல் 7 வாரத்திற்குள் தேர்தல் நடாத்தப்படும்.

மேல் மாகாண சபை தேர்தல் மார்ச் நடுப்பகுதியில் நடத்தப்படும் என தேர்தல் திணைக்கள உயரதிகாரி ஒருவர் கூறினார். மேல் மாகாண சபையின் பதவிக்காலம் ஆகஸ்ட் 4ஆம் திகதி நிறைவடைய உள்ள நிலையில் மாகாண சபை கடந்த வாரம் கலைக்கப்பட்டது.

வவுனியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை செஞ்சிலுவை தொண்டர்கள் பராமரிக்கின்றனர்

redcross-2801.jpgவன்னியில் காயமடைந்து வவுனியா அரசினர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு, வார்ட்டுகளில் உதவி செய்து பராமரிப்பதற்கு உதவியாளர்கள், உறவினர்கள் இல்லாமல் காயமடைந்தவர்கள் பெரும் அவதிக்குள்ளாகிவருவதாக ஆஸ்பத்திரி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக காயமடைந்துள்ள சிறுவர்களே இந்த உதவியாளர்கள் இன்றி பல கஷ்டங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

எனினும் இலங்கை செஞ்சிலுவைச் சங்க வவுனியா கிளை அதன் 29 தொண்டர்களை வவுனியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் காயமடைந்தவர்களுக்கு உதவும் பணிக்கு நியமித்துள்ளது. இத்தொண்டர்கள் இரவு பகலாக 24 மணி நேரமும் காயமடைந்தவர்களை பராமரிக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் காயமடைந்துள்ள சிறுவர்களின் உறவினர்களையாவது அவர்களுடன் ஆஸ்பத்திரியில் தங்கி பராமரிக்க அனுமதிக்குமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சம்பந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இவர்களைப் பராமரிப்பதற்காக வியாழக்கிழமை வந்த உறவினர்கள் நெளுக்குளம் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் சிவசக்தி ஆனந்தன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

“தமிழ் மக்கள் வாழ்வில் அமைதியை உருவாக்க அரசு துரித நடவடிக்கையெடுக்க வேண்டும்’

வன்னியில் அவதியுறும் தமிழ் மக்களின் வாழ்வில் அமைதியான வாழ்க்கையை உருவாக்க அரசாங்கம் துரித நடவடிக்கையெடுக்க வேண்டுமென்று முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் கொழும்பு வடக்கு ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளருமான சீ.பி.வை.ராம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது;

வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல தெற்கிலும் நாட்டின் எந்தப் பகுதியிலும் தமிழ் மக்கள் அச்சமின்றி, சுதந்திரமாக வாழும் சூழலை பாகுபாடின்றி மகிந்த ராஜபக்ஷ, ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

தமிழ் மக்கள் சிங்களவர்களுடன் இணக்கப்பாட்டோடு வாழ்வதற்கான சூழலை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். தமிழ் மக்கள் இன்று இடம்பெயர்ந்து பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றுக் கொள்ள முடியும். விஷேடமாக கொழும்பு உட்பட மேல் மாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள் தொழிலுக்காக தங்கியுள்ளவர்கள் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக வருவோர் தமது தேவைகளை தங்கு தடையின்றி நிறைவேற்றிக் கொள்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும்.

சுதந்திரமாக அச்சமின்றி நடமாடும் உரிமைகளையும் வழங்கி அங்கலாய்ப்பின்றி அமைதியாக வாழும் உரிமைகளுக்கான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ் மக்களும் இலங்கையர்களே என்ற எண்ணம் அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட வேண்டும். விஷேடமாக சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை களைவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இனங்களிடையே நல்லுறவு இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது அரசின் தேவையாகும். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நம்பிக்கையோடு வாழும் நிலைமையை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து இடம் பெயர்ந்த மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டங்களையும் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றார்.

அமெரிக்கா வழங்கிய பொருட்களை வன்னிக்கு அனுப்பமுடியாத நிலை

vanne.jpgவன்னியில் அகதிகளாக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு விநியோகிப்பதற்காக உலக உணவுத்திட்டத்துக்கு அமெரிக்கா வழங்கிய 6.9 மில்லியன் டொலர் பெறுமதியான உணவுப்பொருட்களை அந்த மக்களுக்கு வழங்குவதை காலவரையரையின்றி இடை நிறுத்தியிருப்பதாக ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலய ஊடகப்பேச்சாளர் கோர்டன்வைஸ் தெரிவித்துள்ளார்.

வடக்கில் யுத்தம் நடைபெறும் பிரதேசங்களில் பணிகளில் ஈடுபடமுடியாத நிலையே இதற்கான முக்கிய காரணமாகும் .2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர்களை அப்பிரதேசங்களிலிருந்து வெளியேறுமாறு இலங்கை அரசு உத்தரவிட்டதன் காரணமாக அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வன்னியில் தொடர்ந்தும் மோதல்கள் இடம்பெற்று வருவதால் அங்கு இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கும் கூடதலானோர்போர்முனைப்பகுதியில் சிறையுண்டிருப்பதால் அந்த மக்களுக்கு எந்தவித உணவு நிவாரணங்களையும் பெற்றுக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக கோர்டன் வைஸ் தெரிவித்தார்.

கடந்த 27 ஆம் திகதி அமெரிக்கா வழங்கிய நிவாரணப்பொருட்களும் தம்மிடமுள்ள மனிதாபிமான உதவிகளும் களஞ்சியப்படுத்தப் பட்டிருப்பதாகவும் அரசாங்கத்தின் அனுமதி கிடைத்ததால் மாத்திரமே நிவாரண உதவிகளை அங்கு கொண்டு சென்று விநியோகிக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை படம் எடுக்க ஊடகவியலாளர்களுக்கு தடை

வன்னிப் பகுதியில் இடம்பெற்று வரும் அகோர ஷெல் தாக்குதல் படுகாயங்களுக்கு உள்ளாகி வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்படும் பொதுமக்களை புகைப்படங்கள், வீடியோ படங்கள் எடுப்பதற்கு பொலிஸார் ஊடகவியலாளர்களுக்கு தடைவிதித்துள்ளனர். மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவினால் ஊடகவியலாளர்களுக்கு இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காயமடைந்தவர்கள் தொடர்பான படங்கள், விபரங்கள் வெளியுலகுக்கு தெரியக் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வவுனியா ஆஸ்பத்திரியில் தங்கியுள்ள காயமடைந்த வன்னி மக்களை வவுனியாவில் உள்ள அவர்களின் உறவினர்களும் சந்தித்துப் பேசுவதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன