அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

வன்னியில் பொதுமக்கள் இழப்பு தொடர்ந்து அதிகரிப்பு

artilary13.jpgமுல்லைத்தீவு தேவிபுரம் மற்றும் வள்ளிபுனம் பகுதிகளில் நேற்று முன்தினம் வியாழக் கிழமை இடம்பெற்ற கடும் ஷெல் மற்றும் பீரங்கித் தாக்குதல்களினால் 132 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 358 பேர் காயமடைந்துமுள்ளனர்.  வியாழக்கிழமை அதிகாலை முதல் மாலை வரை தொடர்ச்சியாக நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறித்து “புதினம்’ மற்றும் “தமிழ்நெற்’ இணையத்தளங்கள் கூறுகையில்;

தேவிபுரம் மற்றும் வள்ளிபுனம் பகுதிகளில் ஷெல், பீரங்கி மற்றும் பல்குழல் ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. நாள் முழுவதும் ஆறாயிரம் ஷெல்கள் வரை வீழ்ந்து வெடித்ததில் 132 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 358 பேர் காயமடைந்துமுள்ளனர்.

காயமடைந்தவர்களில் 91 பேர் மாத்தள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் பத்துப்பேர் சிகிச்சை வழங்கப்பட்டுக்கொண்டிருக்கையில் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் பலரது நிலைமை மிகவும் ஆபத்தாயிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இடம் பெயர்ந்தோர் 3 வருடங்கள் தடுத்து வைக்கப்படுவர் என்ற செய்தி உண்மை அல்ல’

risard.jpgவன்னியிலி ருந்து இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்த பொது மக்கள் 3 வருடங்களுக்கு நலன்புரி முகாம்களிலேயே தடுத்து வைக்கப்படுவர் என்ற செய்திகளில் எந்த உண்மையும் கிடையாதென மறுத்திருக்கும் மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வன்னிப் பிரதேசத்தில் சிங்கள, முஸ்லிம் மக்களை குடியேற்றும் நோக்கமெதுவும் அரசாங்கத்துக்குக் கிடையாதென்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், வன்னிப் பகுதியிலிருந்து நேற்று (காலை) வரை மொத்தமாக 34,430 பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டு பிரதேசத்தை வந்தடைந்திருப்பதாகவும் அமைச்சர் இதன்போது கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போதே அமைச்சர் பதியுதீன் இந்த கருத்துகளை வெளியிட்டார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்:

“”வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வரும் பொது மக்கள் 4 கட்டங்களாக உள்வாங்கப்படுகின்றனர். வரும் மக்களுக்கு படையினரால் முதலில் சத்துணவுகள் வழங்கப்பட்டு பின்னர் ஏனைய வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன. இன்று (நேற்று) வரை 34,430 பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்துள்ளனர். இன்னும் சுமார் 65 ஆயிரம் மக்களே அரச கட்டுப்பாடற்ற பகுதியில் எஞ்சியிருக்கின்றனர்.

இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கென அரை நிரந்தர வீடுகள் வழங்கப்படவுள்ளன. இதற்கமைய 10 ஆயிரம் வீடுகள் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

அத்துடன், வவுனியாவில் ராமநாதன், கதிர்காமர், ஆனந்தகுமாரசுவாமி, அருணாசலம் ஆகிய பெயர்களில் 4 நலன்புரி கிராமங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பாடசாலை, வங்கி, சுகாதாரம் என சகல வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதேநேரம், ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய இப்போதே மீள்குடியேற்ற நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டோம். மன்னார்சிலாபத்துறை பிரதேசங்களுக்கு மின்சார விநியோகம் வழங்க ஆரம்பிக்கப் பட்டுவிட்டன. பூநகரிசங்குப்பிட்டி பாலத்தின் புனரமைப்புகள் ஆரம்பமாகிவிட்டன. யாழ்ப்பாணம்மன்னார் “”ஏ32′ வீதியை கூடிய விரைவில் செப்பனிடும் பொருட்டு 12 ஒப்பந்தகாரர்களிடம் அந்தப் பணிகள் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. மாங்குளம் பகுதிக்கும் அடுத்த வாரமளவில் மின்சாரம் வழங்க அரசாங்கம் தயாராக இருக்கிறது.

இடம்பெயர்ந்து வந்தவர்களை கூடிய விரைவில் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம். அதைவிடுத்து நலன்புரி முகாம்களிலேயே மக்கள் 3 வருடங்களுக்கு தடுத்து வைக்கப்பட போவதாக வெளிவரும் செய்திகளில் எந்த உண்மையும் கிடையாது.

அதுமட்டுமல்லாது, வன்னியில் சிங்கள, முஸ்லிம் மக்களை அரசாங்கம் குடியேற்றப் போவதாக சிலர் இப்போதே பிரசாரம் தொடங்கிவிட்டனர். ஆனால் வன்னியில் சிங்கள, முஸ்லிம் மக்களை குடியேற்றும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை. அதற்கான அவசியமும் எமக்கில்லை.

இதேநேரம், இடம்பெயர்ந்து வந்த மக்களுடன் 8, 9 புலி உறுப்பினர்களும் வந்துள்ளனர். சிலர் அவர்களே அதை ஒப்புக் கொண்டனர். அவர்கள் திருந்தி மக்களுடன் வாழ விருப்பம் தெரிவித்துள்ள போதிலும் அவர்களை மக்களுடன் இணைத்து வைத்திருக்க முடியாது.

எனவே, அவர்களை நீதி அமைச்சின் பொறுப்பில் ஒப்படைத்து புனர்வாழ்வளித்து, அத்துடன் தொழிற் பயிற்சிகளையும் வழங்கி, வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளை வழங்க திட்டமிடப் பட்டுள்ளன’ என்றார்.

ஐ.நா. அமைதி காக்கும் குழுவை அனுமதிக்க பான் கீ மூன் இலங்கையை வலியுறுத்த வேண்டியவேளை வந்துவிட்டது

robert-evans.jpgஇலங் கையில் பொது மக்கள் அழிவைத் தவிர்ப்பதற்கு ஐ.நா.அமைதிகாக்கும் படையை அனுப்புமாறு கோருவதற்கான வேளை செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு வந்துள்ளதாக தெற்காசியாவுடனான உறவுகளுக்கான ஐரோப்பிய பாராளுமன்றத் தூதுக் குழுவினர் தலைவர் ரொபேர்ட் இவான்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் தமிழ்மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படவேண்டியது அவசியம் என்ற தலைப்பில் ரொபேர்ட் இவான்ஸ் ஐ.நா.செயலாளர் நாயகத்துக்கு அனுப்பியுள்ள கடிதம் நேற்று வெள்ளிக்கிழமை லண்டன் ரைம்ஸ் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

அதில் ரொபேர்ட் இவான்ஸ் தெரிவித்திருப்பதாவது:

ஐயா! இலங்கையில் இரு தரப்பினராலும் நிபந்தனையற்ற யுத்தநிறுத்தமொன்று உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

எவ்வாறாயினும் பொதுமக்கள் குருதிப்பெருக்கைத் தவிர்ப்பதற்கு நாட்டுக்குள் ஐ.நா. அமைதிகாக்கும் குழுவை அனுமதிக்குமாறு ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்துவதற்கான வேளைவந்துள்ளதாக நான் நம்புகிறேன்.

இலங்கையின் வடக்குப்பகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலிருந்து மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களை வெளியேறுமாறு பணிக்கப்பட்டிருப்பதாக நாட்டிலிருந்து வெளியாகும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தனது பக்கத்திற்கு வருமாறு இலங்கை அரசு தமிழ் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. ஆனால், அவ்வாறு வருவதுதொடர்பான இயற்கையான தயக்கமும் அச்சமும் உள்ளன. இதற்கு சமாந்தரமாக தனது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருக்கும் மக்கள் தப்பிச்செல்ல முயற்சித்தால் புலிகள் அவர்களை சுட்டுவிடுவார்கள் என்பது தொடர்பான செய்திகளும் உள்ளன.

தமிழ் மக்கள் அதிகளவுக்கு இழப்புகளையும் அழிவுகளையும் எதிர்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.இலங்கை படையினர் மற்றும் அவர்களின் முகாம்கள் தொடர்பாக அவர்கள் அச்சமடைந்துள்ளனர். அவர்களின் வித்தியாசமான மொழி குறித்துக் குறிப்பிடத்தேவையில்லை. சர்வதேச சமூகம் உடனடியாக செயற்படாவிடின் சுமார் 2 1/2 இலட்சம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பேரனர்த்தத்தை எதிர்கொள்ள நேரிடும்.

மேலதிகமாக ஐ.நா.வும் சர்வதேச சமூகமும் இந்த மக்களுக்கு மனிதாபிமான உதவி சென்றடைவதற்கு இலங்கை அரசு அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்துமாறு நான் அழைப்பு விடுகின்றேன். அத்துடன் சர்வதேச பத்திரிகையாளர்கள், ஊடகத்துறையினர் செல்வதற்கு முழு அளவில் அனுமதி வழங்கவேண்டும். காலம் கைநழுவிச் சென்று கொண்டிருக்கிறது. முன்னுரிமை கொடுத்து இந்த உதவியை மேற்கொள்ள வேண்டும்.

1600 பேர் வருகை.

mullai-ahathi.jpgபுலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து இன்று அதிகாலை 1657 சிவிலியன்கள் அரச கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு வருகை தந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதில் 1208 பேர் விஸ்வமடு பகுதியில்  படையினரிடம் தஞ்சம் கோரியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவிலியன்கள் பஸ் மீது கைக்குண்டுத் தாக்குதல்: ஒருவர் பலி, 12 பேர் காயம்

udaya_nanayakkara_.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருநது இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு மக்களை ஏற்றி வந்த பஸ் மீது விடுதலைப் புலிகள் நடத்திய கைக்குண்டுத் தாக்குதல் துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக ஒரு சிவிலியன் கொல்லப்பட்டதுடன் 13 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் இன்று  அதிகாலையில் இடம் பெற்றதாக இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

கைக்குண்டுத் தாக்குதலில் வயதான ஐந்து ஆண்கள், இரு சிறுவர்கள், வயதான ஐந்து பெண்கள், இரு பெண்கள் ஆகியோர் அடங்குவர். இந்தச் சம்பவம் புளியங்குளம்-வவுனியா வீதியில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த அனைவரும் இராணுவ பஸ் வண்டிகள் மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவரின் சடலமும் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவிலிருந்து வருகின்றவர்களுக்கு தற்காலிக உறுதியான வீடுகள்!

srilanka_displaced.jpgமுல்லைத் தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வருகின்றவர்களுக்கென தற்காலிக உறுதியான வீடுகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார். இத்திட்டத்தின் கீழ் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் ஐந்து நலன்புரி கிராமங்கள் அமைக்கப்பட்டு அவற்றில் 8ஆயிரம்  வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

புதிய பாதுகாப்பு வலயத்தினுள் பெருந்தொகை மக்கள் வருகை – அமைச்சர் மஹிந்த சமரசிங்க

vanni.jpgமோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் இருந்த பொதுமக்கள் அனைவரும், அரசாங்கம் அறிவித்துள்ள புதிய பாதுகாப்பு வலயத்திற்குள் வந்து சேர்ந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதென்று மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

எனவே, அவர்களை படகுகள் மூலம் இலகுவாக முல்லைத்தீவுக்கு அழைத்து வந்துவிட முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஏற்கனவே, அறிவித்திருந்த பாதுகாப்பு வலயத்தை விடவும், புதிய வலயத்திற்கு சிவிலியன்கள் அதிகம் வருகை தர ஆரம்பித்துள்ளதாகக் கூறிய அமைச்சர் சமரசிங்க அவர்களை அரசாங்கக் கடடுப்பாட்டுப் பகுதிக்குக் கொண்டு வந்து தேவையான நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். மக்களை அழைத்து வருவதில் தொடர்ந்தும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒத்துழைப்பு நாடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை, நேற்றுக் காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் கட்டுப்பாடற்ற வன்னிப் பகுதியிலிருந்து 1613 பேர், அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்துள்ளதாகக் கூறிய அமைச்சர் இது வரை 34 ஆயிரம் பேர் இவ்வாறு வந்துள்ளதாகக் கூறினார். இவர்கள் 30 ஆயிரம் பேர் வவுனியாவிலும், ஏனையோர் யாழ்ப்பாணம், ஓமந்தை மன்னார் ஆகிய இடங்களிலுள்ள இடைத்தாங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இது தவிர நேற்றைய தினம் 225 பேர் கிளிநொச்சிக்கு வந்துசேர்ந்துள்ளதாகக் கூறிய அமைச்சர், அவர்கள் அனைவரையும் ஓமந்தைக்கு அழைத்து வர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

நேற்று முன்தினம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் புதுமாத்தளன் பகுதியிலிருந்து திருகோணமலைக்கு 404 பேர் அழைத்துச் வரப்பட்டுள்ளனர். இவர்களுள் 351 பேர் நோயாளர்கள் என்றும் ஏனைய 53 பேர் அவர்களுடன் உதவிக்கு வந்தவர்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார். நோயாளர்களுள் 137 ஆண்கள், 136 பெண்கள், 43 சிறுவர்கள் 35 சிறுமிகள் ஆகியோர் அடங்குவரெனத் தெரிவித்த அமைச்சர் சமரசிங்க, இரு நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக கண்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கொட்டகைகள், மரநிழல்களில் வகுப்புகளை நடத்துமாறு வவுனியாப் பகுதி அதிபர்களுக்கு பணிப்பு

college1.jpgவன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களால் வவுனியா பாடசாலைகள் நிரம்பி வழிவதால் மாணவர்களுக்கான கல்வியை தற்காலிக கொட்டகைகளிலும் மரநிழல்களிலும் நடத்துமாறு வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. வீ.ஆர்.ஏ. ஒஸ்வேல்ட் பணித்துள்ளார். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்கள் வவுனியாவில் எட்டுப் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால், பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தேசிய மட்டப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள க.பொ.த. உயர்தர, சாதாரண தர மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கி தினமும் வகுப்புகளை நடத்த ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும் அவர் சுற்றறிக்கை மூலம் சகல பாடசாலை அதிபர்களையும் பணித்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்கள் தற்போது வவுனியாவில் தமிழ் மகாவித்தியாலயம், காமினி மகா வித்தியாலயம், முஸ்லிம் மகா வித்தியாலயம், இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி, வவுனியா இந்துக் கல்லூரி, செட்டிகுளம் மகாவித்தியாலயம், பூந்தோட்டம் அ.த.க. பாடசாலை, நெளுக்குளம் கலைமகள் வித்தியசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  

வவுனியா நலன்புரி நிலையங்களுக்கு தாதியர் குழு இன்று விஜயம்

sri-lanka-nurse.jpgவன்னியில் இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள நோயாளர்களைக் கவனிப்பதற்காக தாதியர் குழுவொன்று இன்று வன்னிக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

பொது வைத்திய தாதிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இவர்கள் வன்னியிலுள்ள நலன்புரி நிலையங்களில் பணி புரிவதற்கென தன்னிச்சையாக முன்வந்துள்ளதாக மேற்படி சங்கத்தின் பிரதிநிதியொருவர் தெரிவித்தார். முதற்கட்டமாக இன்று 20 தாதியர் வன்னிக்குச் செல்வதுடன் மேலும் 20 பேர் அடுத்த வாரம் வன்னிக்குச் செல்ல தயாராயுள்ளனரெனவும் அவர் தெரிவித்தார்.

இத்தாதியர் குழுவில் மனோதத்துவ ஆலோசகர்களும் இடம்பெறுவதுடன் தொடர்ச்சியாக மேலும் பல தாதியர்களை வன்னிக்கு அனுப்ப சங்கம் தீர்மானித்துள்ள தாகவும் சங்கத்தின் பிரதிநிதி தெரிவித்தார்.

பொலிஸ் அதிகாரிகள் குழு கிளிநொச்சி விஜயம் – புளியங்குளத்தில் உள்ள பொலிஸாருக்கு மின்சாரத்தை வழங்க நடவடிக்கை

electricitypowerlinesss.jpgசிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவர் தலைமையிலான பொலிஸ் உயர் அதிகாரிகள் குழு நேற்று முன்தினம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்தது. ஏ-9 வீதி வழியாக பயணம் மேற்கொண்ட இந்த குழுவினர் பாதுகாப்பு படையினரால் விடுவிக்கப்பட்ட மாங்குளம் கிளிநொச்சி பிரதேசங்களில் பொலிஸ் நிலையங்களை அமைப்பது தொடர்பாகவே இந்தக் குழு ஆராய்ந்துள்ளதாகத் தெரியவருகிறது.

இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்படுவதற்கு முன்னர் அவர்களுடைய பாதுகாப்பிற்கு பொலிஸ் நிலையங்கள் அவசியமென வலியுறுத்தப்பட்டுள்ளது. வன்னிப் பிரதேசத்தில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பின்னர் மீள்குடியேற்றம் துரிதமாக நடைபெறுமென மீள்குடியேற்ற அமைச்சு தெரிவிக்கின்றது.

இதேவேளை, வவுனியாவிலிருந்து மாங்குளத்திற்கான மின்சார விஸ்தரிப்பு வேலைத்திட்டதை ஆரம்பிக்குமாறு அமைச்சிலிருந்து அனுமதி கிடைத்துள்ளதென வவுனியா மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தற்போது புளியங்குளம் வரையிலான மின் இணைப்புகள் உள்ளது. சேதமடைந்த மின்மாற்றிகள் திருத்தப்பட்டு ஏ-9 வீதியில் புளியங்குளத்தில் உள்ள பொலிஸாருக்கு மின்சாரத்தை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.