தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகவும் செயல்படுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அருட்சல்வன் வி
அருட்சல்வன் வி
இலங்கையில் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்படவேண்டுமெனக் கோரியும் தமிழர்கள் மீதான படுகொலைகளைக் கண்டித்தும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருப்பது வரவேற்கத்தக்கது
என்று தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை தமிழர்களை காப்பாற்ற நடந்த அனைத்து கட்சி கூட்டம், மனித சங்கிலி ஆகியவற்றை புறக்கணித்த ஜெயலலிதா இப்போது அதே பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருப்பது வரவேற்கத்தக்கதுதானே.
ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது இலங்கை பிரச்சினை குறித்து விவாதிக்க அனுமதி மறுத்தவர் இப்போது அதே பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருப்பது வரவேற்கத்தக்கதுதானே என்று தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி மொரீசியஸ் நாட்டில் வாழும் தமிழர்கள் எழுச்சிப் பேரணி நடத்தினர். அவர்கள் அளித்த மனுவை வாங்க இந்தியத் தூதரகம் மறுத்துவிட்டதால், மனுவை எரித்துப் போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழின அழிப்பை நிறுத்த வேண்டும் என்று சிறிலங்க அரசை வலியுறுத்தி மொரீசியஸ் தலைநகர் போர்ட் லூயிஸில் (வெள்ளிக்கிழமை) பிற்பகல் துவங்கிய பேரணியில் 5,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் திரண்டனர். தமிழீழ மக்கள் சந்திக்கும் அவலங்களை வெளிக்காட்டும் வகையிலான பதாகைகளையும் தமிழீழ தேசியக் கொடிகளையும் தாங்கியவாறு கொட்டும் மழைக்கு மத்தியில் எழுச்சி முழக்கங்களை எழுப்பிய வண்ணம் பேரணி புறப்பட்டது.
பேரணியின் நிறைவில், போர்ட் லூயிஸில் உள்ள பூங்காவில் நடந்த பொதுக்கூட்டத்தில் மொரீசியஸ் நாட்டு மூத்த அரசியல் தலைவர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.கா.ஈழவேந்தனும் உரையாற்றினர்.
மொரீசியஸ் நாட்டின் துணைப் பிரதமரும், மூத்த அமைச்சர்களும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி, இந்திய தூதரகத்தில் மனு அளிக்க தமிழர்கள் முயன்றனர். ஆனால், இந்திய தூதரக அதிகாரிகள் மனுவை வாங்க மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த தமிழர்கள், இந்திய தூதரக வளாகத்தின் சுவர் மீது ஏறி, தூதரக அதிகாரிகளின் முன்பு கொடுக்கவிருந்த மனுவை தீயிட்டுக் கொளுத்தினர்.
அறிவு, ஆற்றல்மிக்க சிறந்த சிந்தனைகளைக் கொண்ட சமூகம் ஒன்றி னை உருவாக்குவதன் மூலமே பெண்களுக்கு எதிரான வன் முறைகளை ஒழிக்க முடியுமென பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள சர்வதேச மகளிர் தின செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
“பெண்களுக்கு எதிரான இம்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கு அணி திரளுவோம்” என்ற தொனிப் பொருளின் கீழ் இம்முறை சர்வதேச மகளிர் தினத்தை நினைவுகூருவதற்கு எடுத்துள்ள முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பெளத்த விழுமியங்களை பாதுகாத்துவந்த தாய்மார்களை புத்தர் நிலையில் வைத்து மதிக்கப் பழகியுள்ள எமது பண்டைய சமூக முறையை மீண்டும் உயிர்ப்பிக்க காலம் பிறந்துள்ளது என்பதனை வலியுறுத்த வேண்டிய கடப்பாடு எழுந்துள்ள தற்கான காரணம், பெண்களுக்கு ஏற்படக்கூடிய இம்சைகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளமையாகும்.
பெண்களுக்கு எதிரான இம்சைகளை ஒழிப்பதற்காக ஆண்டுதோறும் சொற் பொழிவுகள் திட்டங்கள் என்பவற்றை மேற்கொண்ட போதிலும், இதுவரையில் பெண்களுக்கு எதிரான அசாதாரணங்களை கட்டு ப்படுத்துவதற் கோ அல்லது பூண்டோடு இல்லாதொழிப்பதற்கோ இயலாது போயுள்ளது.
சட்ட திட்டங்கள், ஒழுங்கு விதிகள் என்பவற்றினூடாக மாத்திரம் இப்பணியினை நிறைவேற்ற முடியாது. அதற்காக மனிதர்களை ஆன் மீக உணர்வுகளின் மூலம் போசித்து அறிவு, ஆற்றல் மிக்க சிறந்த சிந்தனைகளைக் கொண்ட சமூகம் ஒன்றினை உருவாக்குவதன் மூலமே பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க முடியும் என்பதே எனது நம்பிக்கையாகும்.
இங்கு இலங்கைப் பெண்களும் சமூக விழுமியங்களை கடைபிடித்து தமது வாழ்க்கை முறையை சீரமைத்துக்கொள்வதற்கு பழகிக்கொள்ளுதல் வேண்டும். மொத்த சனத்தொகையில் சுமார் 52% வீதமான பெண்கள் நாட்டின் தேசிய வருமானத்திற்கு பெற்றுத்தருகின்ற பாரிய பங்களிப்பினை இங்கு நினைவுகூருவதுடன் பெண்களுக்கு இம்சைகளின்றி உயிர்வாழ்வதற்கான சூழல் ஒன்றினை உருவாக்குவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்.
சர்வதேச மகளிர் தின நினைவு விழாவின் நடவடிக்கைகள் சகல வழிகளிலும் வெற்றியளிக்க வேண்டுமென மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன். இவ்வாறு பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.
பெண்கள் கெளரவமாகவும், மரியாதையுடனும் வாழ்வதற்கான சூழலைத் தோற்றுவிப்பதற்கு அனை வரும் ஒன்றுபட்டுப் பாடுபட வேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள மகளிர் தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையர்கள் என்ற வகையில் புதிய உத்வேகத்துடன் எழுந்து நிற்கும் இந்த வேளையில் சர்வ தேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் வாய்ப்பு நமக்கு ஏற்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியொன்றை விடுக்கக் கிடைத்தமையைப் பெரும் பாக்கியமாகக் கருதுவதாகவும் ஜனாதிபதி தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-“பெண் சமூகத்தின் கெளரவத்தையும், மரியாதையையும் பாதுகாப்பதை உறுதிப்படுத்துவதற்காக இம்முறை பெண்கள் மீதான இம்சைகளை ஒழிப்பதற்கு ஒன்றுபடுவோம்” என்ற தொனிப்பொருளில் மகளிர் தினத்தைக் கொண்டாடுவது முக்கியமானதெனக் கருதுகிறேன்.
சமூக கட்டமைப்புக்கு வலுவூட்டும் குடும்பம் என்ற அங்கத்தின் முதன்மையான இடம் தாய்க்கு உரியதாகும். மஹிந்த சிந்தனையின் மூலம் எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று அவளின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பயங்கரவாதத்தாலும், வறுமையினாலும், மதுபானத்தாலும் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். அரசாங் கம் இதனைப் புரிந்துகொண்டுள்ளது. “மதுவுக்கு முற்றுப் புள்ளி” வைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் நிம்மதி அடையும் பெண்கள் அநேகர்” என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கை யின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டக் களமுனைகளில் வெவ்வேறு இடங்களில் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே வெள்ளியன்று இடம்பெற்ற சண்டைகளில் விடுதலைப்புலிகள் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.
விடுதலைப்புலிகளின் பிரதேசத்தின் உள்ளே தொடர்ந்து முன்னேறிவரும் இராணுவத்தினர், தற்போது விடுதலைப்புலிகளை 45 சதுர கிலோமீட்டர் பிரதேசத்தினுள் முடக்கியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுக்குடியிருப்பு, பழமாத்தளன், தாமரைக்குளம், ஆகிய இடங்களில் இடம்பெற்ற மோதல்களில் விடுதலைப்புலிகளின் 32 சடலங்களை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகவும், ஆயுதத் தளபாடங்கள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
அமெரிக் காவில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிகமாக இருப்பதாக அமெரிக்க அரசாங்கம் வெளியிட்ட புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. கடந்த மாதத்தில் ஆறரை லட்சம் பேர் வேலை இழந்துள்ளார்கள். இதனால் வேலையில்லாதோரின் மொத்த எண்ணிக்கை அரை வீதத்தால் அதிகரித்து 8.1 சதவீதத்தை எட்டியுள்ளது.
சில்லறை விற்பனைத்துறை மற்றும் பொழுதுபோக்குத்துறை ஆகியவை உட்பட பல்வேறுபட்ட தொழிற்துறைகளில் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.
தொழில்சார் நிபுணர்கள் சேவைகள், வணிக சேவைகள், தொழிற்சாலைகள் மற்றும் கட்டிட நிர்மாணத்துறை ஆகியவையே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
முல்லைத் தீவு, புதுமாத்தளன் பகுதியில் பட்டினியினால் பலர் இறந்துள்ளார்களென முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் (RDHS) டொக்டர் வரதராஜா தெரிவித்த கருத்துக்கள் எந்த வகையான விஞ்ஞான ரீதியான அடிப்டையுமற்றதென சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் எச். ஏ. பி. கஹந்தலினகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- டொக்டர் வரதராஜனால் தெரிவித்த கருத்துக்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன. சில தினங்களாக பட்டினியால் பாதிக்கப்பட்டவர்களில் 13 பேர் மரணித்துள்ளனர். இவர்களின் சடலங்கள் புதுமாத்தளன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டிருந்ததாக அவர் கூறியிருக்கிறார்.
முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் வரதராஜாவுடன் தொடர்பு கொண்டு (04/03/2009) வினவினேன். பட்டினிச்சாவு குறித்துதான் முல்லைத்தீவு அரசாங்க அதிபருக்கு கடிதம் எழுதியதாக டொக்டர் வரதராஜா ஒப்புக்கொண்டார்.மேற்படி மரணங்கள் எவ்வித விஞ்ஞான ரீதியான அடிப்படையுமற்றதென ஒப்புக்கொண்ட டொக்டர் வரதராஜா, சடலங்களின் பெளதிக ரீதியான தோற்றத்தின் அடிப்படையிலேயேதான் அந்த முடிவை அறிவித்ததாகவும் ஏற்றுக்கொண்டார்.
எந்தவித உயிரியல் ரீதியான (Autopsy) பரிசோதனையும் இல்லாமல் டொக்டர் வரதராஜா எழுந்தமானமாக அறிக்கை விட்டிருக்கிறாரென்பது ஊர்ஜிதமாகியிருக்கிறது.
புதுமாத்தளன் பகுதியிலுள்ள மக்களை மனிதக் கேடயங்களாகப் புலிகள் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான உணவு, மருந்து வகைகளை அரசாங்கம் போதியளவு அனுப்பி வருகிறதென்பனை சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். நோய்வாய்ப்படுபவர்கள் எவ்வித தாமதமும் இன்றி திருமலைக்கும் வவுனியாவுக்கும் அனுப்பபட்டு வருகிறார்கள்.
எனவே, டொக்டர் வரதராஜனால் வெளியிடப்பட்ட கடிதமும், அது தொடர்பான கருத்துக்களும் புலிகளின் அழுத்தங்களினால் செய்யப்பட்டவையாக இருக்கலாம். இது அரசாங்கத்தையும் அரசாங்கத்துடன் சேர்ந்து பணியாற்றி வரும் ஐ.சி.ஆர்.சிக்கும் ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளுவதற்கான திட்டமிட்ட செயலாகக் கருதவேண்டியுள்ளது.
எப்படியென்றாலும், இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக டொக்டர் எச். ஏ. பி.காஹந்தலியனகே தெரிவித்துள்ளார்.
மதிமுக வின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் சனிக்கிழமை சென்னையில் கைதுசெய்யப்பட்டார். இம்மாதம் முதல் தேதியன்று திருப்பூரில், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், தனித் தமிழ்நாடு உருவாகவேண்டும் என்றும், டெல்லியில் அதன் தூதரகம் அமைய வேண்டும் என்றும், தமிழகத்தில் உள்ள மாணவர்கள் அதற்குப் போராட வேண்டும் என்றும் அவர் பேசியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையிலும் பேசியதாக அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
புதுக் குடியிருப்பு, புதுமாத்தளன் பகுதியிலுள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் நேற்று மாலை புறப்பட்ட விங்டாங் சரக்குக் கப்பல் இன்று முல்லைத்தீவு கடலிலிருந்து 500 மெற்றித் தொன் உணவுப் பொருட்களை புதுமாத்தளன் கரைக்கு இறக்குகிறது. முல்லைக்கடலில் இறங்குதுறை வசதியின்மையால் சிறிய படகுகளை பயன்படுத்தி பொருட்களை இறக்குவதற்காக படகுகளுக்கு 200 லீட்டர் பெற்றோல் மண்ணெண்ணெய்யும் கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அரிசி, சீனி, மா, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 500 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் ஒரே தடவையில் கொண்டுசெல்லப்படுவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண தெரிவித்தார்.
திருகோணமலை துறைமுகத்திலிருந்து நேற்று மாலை 3.00 மணிக்கு 500 மெற்றிக் தொன் பொருட்களுடன் கப்பல் புறப்பட்டுச் சென்றதுடன், இன்று புதுமாத்தளன் பகுதி கடலில் தரித்து நிற்கும் என்று கூறிய அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண இதற்கு முன்னரும் 250 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
அத்துடன் பொருட்களை இறக்கும் சிறிய வள்ளங்கள் பல தடவைகள் கரைக்கும் கப்பலுக்குமாய் செல்ல வேண்டியதால் பெருந்தொகையான எரிபொருட்கள் தேவைப்படுவதாக கூறப்பட்டதையடுத்தே 200 லீட்டர் எரிபொருளும் அனுப்பப்படுவதாகவும் எஸ். பி. திவாரட்ண மேலும் தெரிவித்தார்.