அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

“சிறுவர் படங்களை பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை’

sri-lanka-elections.jpgதேர்தல் பிரசாரத்தின்போது சிறுவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாதென சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பெற்றோர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனவும் அதிகாரசபையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிறுவர்களின் புகைப்படங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது சிறுவர்களின் உரிமைமை மீறும் ஒரு நடவடிக்கையாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதன்படி உரிமையாளர்கள் மீதும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தில் உரிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் புகைப்படங்களை தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்துவதற்கு அனுமதித்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேல்மாகாணசபைத் தேர்தலில் பிரசார சுவரொட்டிகளில் சிறுவர்கள்,முதியோர்களுடன் அரசியல்வாதிகள் நிற்பது தொடர்பான படங்கள் காணப்படுகின்றன. எதிர்காலத்தில் சிறுவர்களின் புகைப்படங்களை அரசியல்வாதிகள் தமது பிரசாரத்துக்கு பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

வவுனியா நலன்புரி நிலையங்களுக்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் பொருட்கள் விநியோகம்

sri-lanka-red-cross.jpgவவுனியா நலன்புரி நிலையங்களில் உள்ள சுமார் 10 ஆயிரம் குடும்பத்தினருக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளதோடு மேலும் பொருட்களை வழங்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம் என இலங்கை செஞ்சிலுவைச்சங்க வவுனியா கிளையின் பொருளாளர் கே. தனபாலசிங்கம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;

பூந்தோட்டம் பாடசாலை, கல்வியியற் கல்லூரி, நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு குடிநீர் விநியோகத்தையும் மேற்கொண்டு வருகின்றோம். அத்துடன், எமது தொண்டர்கள் 50 பேரை பொது அரசினர் வைத்தியசாலையில் 24 மணிநேர மனிதாபிமான பணிகளில் அமர்த்தியுள்ளோம். காயங்களுடன் வந்துள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை எமது தொண்டர்கள் வழங்கிவருகின்றனர்.

சைவப்பிரகாச வித்தியாசாலை, காமினி வித்தியாசாலை நலன்புரி நிலையங்களில் இரவு நேரத்தில் இரண்டு நோயாளர் காவு வண்டிகள் தயார்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவற்றை நோயாளர்கள் அவசர தேவைக்கு பயன்படுத்திகொள்ள முடியும்.

மேலும், இடம்பெயர்ந்த மக்களுக்கு நாம் வழங்கும் மனிதாபிமான பணிகளை அறிந்துகொண்ட திருமலை கிளை 5 இலட்சம் ரூபாவினையும், அம்பாறை மாவட்ட கிளை 3 இலட்சம் ரூபாவினையும், எமக்கு அனுப்பிவைத்துள்ளது. குருநாகல் கிளையினர் 2 ஆயிரம் லீற்றர் கொள்வனவு கொண்ட 20 நீர்த்தாங்கிகளை அனுப்பியுள்ளனர். 3 இலட்சம் ரூபா பணம் கனடிய செஞ்சிலுவைச்சங்கத்தின் ஊடாக எமக்கு கிடைத்துள்ளது. இந்த நிதியானது நலன்புரிநிலைய மக்களுக்கு உலருணவு நிவாரணப் பொருட்களை வழங்க பயன்படுத்தப்படும்.

தலைமை அலுவலகத்திலிருந்து சுமார் 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான 16 ஆயிரம் மற்றும் 7 ஆயிரம் லீற்றர் கொள்வனவு கொண்ட இரண்டு தண்ணீர் பௌசர்கள் கிடைத்துள்ளன. நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு இதன்மூலம் குடிநீர் விநியோகம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது என்றார்.

வன்னியிலிருந்து வெளியேறும் மக்கள் உறவுகளுடன் தொடர்புகொள்ள முடியாத அவலம் -செஞ்சிலுவைச்சங்கம்

trico.gifமோதல் நடைபெறுகின்ற வன்னிப்பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறி வேறு இடங்களுக்கு செல்வதன் காரணமாக அவர்கள் தமது உறவினர்கள் மற்றும் குடும்பங்களைப் பிரிந்து வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீனுடனான சந்திப்பு வெள்ளிக்கிழமை இடம் பெற்ற போது இதனை சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் அவரிடம் சுட்டிக்காட்டியுள்ளது. தமது குடும்பங்களை விட்டு பிரிய வேண்டிய இந்த நிலைமையின் போது நாட்டின் வேறுபகுதிகளில் வாழும் தமது உறவுகளுடனோ அல்லது வெளிநாட்டில் வாழும் உறவினர்களுடனோ எவ்வித தொடர்பையும் அம்மக்கள் மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தனர்.

இம்மக்கள் தமது உறவுகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கும் அவர்களுடன் திரும்பவும் இணைந்து வாழ்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட வேண்டுமெனவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இம்மக்களுக்கான அடிப்படை சுகாதார வசதிகளை மேம்படுத்தவென முதலுதவி சிகிச்சை, நடமாடும் அம்புலன்ஸ் சேவை, உடல் உள விருத்திக்கான சமூக புனர்வாழ்வுத்திட்டங்கள் மற்றும் நடமாடும் சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலின் படி, கடந்த டிசம்பரில் இருந்து 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மோதல் நடைபெறும் பகுதிகளிலிருந்து வெளியேறியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

பாதுகாப்பான சூழலில் இம்மக்கள் வாழ்வதற்கான உரிய ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுவதுடன், போதிய தங்குமிட வசதிகள், சத்துணவு மற்றும் சுகாதார அடிப்படைவசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமெனவும் அத்துடன், அந்த மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கான அனுமதியும் வழங்கப்படவேண்டுமெனவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கேட்டுள்ளது.

அமைச்சர் உடல்நிலை தேறி வருகிறார்

mahinda-wijayaratna.jpg அக்குரஸ்ஸ கொடபிட்டிய தற்கொலை குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த தபால் தந்தித் தொலைத் தொடர்பு அமைச்சர் மஹிந்த விஜேசேகர உடல் நிலை தேறி வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஹெக்டர் வீரசிங்ஹ தெரிவித்தார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அமைச்சருக்கு தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டொக்டர் மேலும் தெரிவித்தார். 

இலங்கை அரசையும், புலிகளையும் சம பங்காளிகளாகக் கருத முடியாது. – த ஹிந்து பத்திரிகை செய்தி

hindu_newspaper.jpg இலங்கையில் ஜனநாயக முறைப்படி சட்ட ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தையும் பயங்கரவாத அமைப்பான எல்.ரீ.ரீ.ஈ. யினரையும் சம பங்காளிகளாகக் கருத முடியாது என இந்தியாவின் த ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கமும் அந்நாட்டின் முப்படையினரும் பல்வேறு உணர்ச்சித் தூண்டல்களுக்கு இடம்கொடுக்காது பொறுப்புடனும் அமைதியாகவும் தமது கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர். எல்.ரீ.ரீ.ஈ. பிடியில் மனிதக் கேடயங்களாக சிக்கியுள்ள பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான கடப்பாட்டைக் கொண்டுள்ள இலங்கை அரசுக்கு இது ஒரு சோதணை மிகுந்த காலப் பகுதியாகும்.

எல்.ரீ.ரீ.ஈ.  யினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் பொதுமக்கள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டு வருவதால் இராணுவ நடவடிக்கைள் சற்று தாமதமாகியுள்ளன. மோதல் இடம்பெறும் பிரதேசங்களிலுள்ள தமிழ் மக்களை முழுமையாகக் காப்பாற்றுவதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள பாரிய ஒரு முயற்சியாக இதனைக் கருத முடியும் என த ஹிந்து  பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளது.

மாணவி வர்ஷாவின் கொடூரக் கொலைக்கு கிழக்கு தமிழ் ஆசிரியர் சங்கம் கண்டனம்

varsa.jpg
திருகோணமலை சென்.மேரிஸ் கல்லூரி தரம் 1 மாணவியான (6 வயது) வர்ஷா யூட் ரெஜினால்ட் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவத்தை கிழக்கு மாகாணத் தமிழ் ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

“இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் திருகோணமலை மாவட்டத்தில் மாத்திரமல்ல எமது நாட்டின் எப்பாகத்திலும் இடம்பெறக்கூடாது என்பதே எமது சங்கத்தின் கோரிக்கையும் பிரார்த்தனையும் ‘ என்று சங்கத்தின் தலைவர் ஆர்.ஜெறோம், பொதுச் செயலாளர் கு.நளினகாந்தன் வெளியிட்ட கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் பாடசாலை மாணவ சமூகத்தில் இடம்பெறாமலிருப்பதை உறுதி செய்யக் கடும் நடவடிக்கைகளை கிழக்கு மாகாண முதலமைச்சர், மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி, பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் போன்ற உயர் அதிகாரிகள் எடுக்க வேண்டும் என எமது சங்கம் கோருகின்றது. 6 வயது மாணவி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு உரப்பையில் வீதியில் போடப்பட்ட சம்பவத்தை சங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன் மாணவியின் இழப்பால் துயருறும் பெற்றோர், குடும்பத்தினர், பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள், மாணவியர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் சங்கம் தெரிவித்துக் கொள்கிறது’  என்றும் சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழருக்காக பா.ம.க. பிரமுகர் தீக்குளிப்பு: நேற்று இடம்பெற்ற சம்பவம்

elam-rajasekar.jpgஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்தும், இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யக் கோரியும் பாமக பிரமுகர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தீக்குளித்தார். அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தை அடுத்த தத்தனூர் கீழ வீதியைச் சேர்ந்த பாமக பிரமுகர் இராஜசேகர். இவருக்கு வயது 30. ஈழத்தில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை டி.வி. மற்றும் செய்தித்தாள்களில் படித்து, கடந்த சில நாட்களாகவே வேதனைப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் இராஜசேகர் தனது வீட்டு வாசலில் முன் உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதனால் அவர் உடல் முழுவதும் எரிந்து கருகியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

1415 சிவிலியன்கள் அரச பகுதிக்கு வருகை – புலிகளின் சூட்டில் 14 பொதுமக்கள் காயம்

Wanni_Warமுல்லைத் தீவிலிருந்து தப்பி 1415 சிவிலியன்கள் நேற்றும் நேற்று முன்தினமும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகை தந்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் முல்லைத்தீவில் அமைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு வலயத்தில் வந்திருந்த 400 சிவிலியன்கள் நேற்றுக் காலை புதுக்குடியிருப்பு அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள உறவினரிடம் வந்து சேர்ந்திருப்பதாக பிரிகேடியர் நாணயக்கார கூறினார். புதுக்குடியிருப்பு மற்றும் புதுமாத்தளன் ஆகிய பகுதிகளிலிருந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை 1015 சிவிலியன்கள் அரச கட்டுப்பாட்டை நோக்கி வந்துள்ளனர்.

புலிகளின் பிடியில் சிக்கியிருந்த சிவிலியன்களுள் ஒரு தொகுதியினரான 592 பேர் நேற்று முன்தினம் புதுக்குடியிருப்பிலிருந்து அரச கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி வந்திருப்பதாக தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையம் குறிப்பிட்டது.

புதுக்குடியிருப்பிலிருந்து சிவிலியன்கள் காட்டு வழியாக தப்பித்து வரும்வழியில் அவர்களை நோக்கி புலிகள் சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் 14 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் அவர்களுள் ஒருவர் ஐ. நா. அமைப்பாளரெனவும் ஊடக நிலையம் சுட்டிக்காட்டியது.

இதேவேளை, புதுமாத்தளனினூடாக முன்னேறி வரும் படையினர் நேற்று அங்கிருந்த 423 சிவிலியன்களை புலிகளிடமிருந்து விடுவித்துள்ளனர். விடுவிக்கப்பட்டுள்ள 423 சிவிலியன்களும் கடற் படையினரின் உதவியுடன் ஐ. சி. ஆர். சி. யின் க்ரீன் ஓசன் எனும் கப்பல் மூலம் நேரடியாக திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் ஊடக நிலையம் தெரிவித்தது.

புதுமாத்தளன் வைத்தியசாலையில் மருந்துவகை இல்லாமையினால் சேவைகள் இடைநிறுத்தம்

medicine.jpgபோதியளவு மருந்துவகைகள் மற்றும் அடிப்படைவசதிகள் எதுவுமில்லாத நிலையில் புதுமாத்தளன் வைத்தியசாலையின் சேவைகளை இடைநிறுத்த வேண்டிய துர்ப்பாக்கியமான நிலைமையேற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வைத்திய அதிகாரி ரி.வரதராஜா தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது; நேற்று அவசர நோயாளர்கள் மற்றும் அவர்களுக்கான பராமரிப்பாளர்களென 425 பேரை கப்பல் மூலம் திருமலைக்கு நாம் அனுப்பியுள்ளோம். இதில் காயப்பட்டவர்களே அதிகமானவர்கள்.

வன்னியில் புதுமாத்தளன் வைத்தியசாலை மாத்திரமேயுள்ளது. இங்கு காயத்துக்கான மருந்து உட்பட ஏனைய மருந்துகள் முடியும் தருவாயிலுள்ளது. இதனால் நாம் காயத்துக்கு மருந்துகளின்றி துணிகளையே கட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இது குறித்து வடமாகாண சுகாதார பணிப்பாளருக்கு கடிதம், பக்ஸ் மற்றும் ஈமெயில் மூலம் தகவல் அனுப்பியுள்ளோம்.

கடந்த மார்ச் 5 ஆம் திகதிக்குப் பின்னர் மருந்துகள் அனுப்பப்படாமையினால் வைத்திய சேவைகளை இடைநிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

புதுமாத்தளன் பகுதிக்கு இன்று உணவுக் கப்பல்

ship.jpgமுல்லைத்தீவு பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களுக்கென 700 மெற்ரிக் தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு எம்.வி. பின்டான் சரக்குக் கப்பல் இன்று திருகோணமலையிலிருந்து புதுமாத்தளன் நோக்கிப் புறப்பட்டுச் செல்கிறது.

கடந்த வாரம் புதுமாத்தளன் பிரதேசத்தில் பொருட்களை இறக்கிக் கொண்டிருக்கும்போது புலிகள் நடத்திய மோட்டார் தாக்குதல்களுக்குப் பின்னர் பின்டான் சரக்குக் கப்பல் போதிய பாதுகாப்புடன் இன்று இரண்டாவது தடவையாக புதுமாத்தளன் நோக்கி புறப்பட்டுச் செல்வதாக கடற்படைப் பேச்சாளர் கப்டன் டி.கே.பி. தஸநாயக்க தினகரனுக்குத் தெரிவித்தார்.

புலிகள் எத்தகைய தடைகளை ஏற்படுத்தி வந்தாலும் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை தேவைக்கேற்ப அவ்வப்போது அனுப்பிவைக்க அரசாங்கமும், பாதுகாப்புப் படையினரும் போதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களுக்கு விநியோகிக்கவென அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலகம் வழங்கிய 500 மெற்றிக் தொன் உணவுப் பொருட்களை கடந்த 7ம் திகதி ஏற்றிச் சென்ற பின்டான் சரக்குக் கப்பல் கடந்த 9ம் திகதி புதுமாத்தளன் கடற்பரப்பில் வைத்து பொருட்களை இறக்கிக் கொண்டிருக்கும்போது புலிகள் மோட்டார் தாக்குதல்களை நடத்தினர்.

500 மெற்றிக் தொன் பொருட்களில் சுமார் 142 மெற்றிக் தொன் பொருட்களை இறக்கிக் கொண்டிருக்கும்போது புலிகள் நடத்திய மோட்டார் தாக்குதலையடுத்து அக்கப்பல் பாதுகாப்பு நிமித்தம் உடனடியாக ஆழ்கடலை நோக்கி எடுத்துச் செல்லப்பட்டது.

பின்னர் திருகோணமலை துறைமுகத்தை நோக்கித் திரும்பிய அக்கப்பல் கடந்த வெள்ளியன்று மீண்டும் புதுமாத்தளன் நோக்கிச் சென்று பொருட்களை இறக்கியது. இதனையடுத்து நேற்று முன்தினம் புதுமாத்தளனிலிருந்து திருமலை நோக்கி திரும்பிய அந்தக் கப்பல் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரின் அலுவலகத்தின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் 700 மெற்றிக் தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஏற்றப்பட்டுள்ளன.

இந்த பின்டான் கப்பல் இன்று கடற்படையினரின் பாதுகாப்புடனும், வழித்துணையுடனும் திருகோணமலை துறைமுகத்திலிருந்து புதுமாத்தளன் நோக்கி புறப்பட்டுச் சென்றது.

புதுமாத்தளன் கடற்பரப்பை சென்றடைந்த பின்னர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரின் உதவியுடன் அந்த 700 மெற்றிக் தொன் அத்தியாவசிய பொருட்களும் பாதுகாப்பான முறையில் இறக்கப்படும் என்று கடற்படைப் பேச்சாளர் தஸநாயக்க தெரிவித்தார்.

அரிசி, சீனி, கோதுமை மா, பருப்பு, மரக்கறி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் என்பவற்றையே இந்தக் கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். கடற்படையினர் பின்டான் கப்பல் மூலம் புலிகளின் பிடியிலுள்ள அப்பாவி மக்களுக்கு பொருட்களை அனுப்பிவைக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ள அதேசமயம், ஐ.சி.ஆர்.சி.யின் உதவியுடன் கிரீன் ஓடின் கப்பல் மூலம் நோய்வாய்ப்பட்ட பொதுமக்களை இதுவரை பத்துத் தடவைகள் பாதுகாப்பான முறையில் கப்பல் மூலம் அழைத்து வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.