புதுமாத்தளன் பகுதிக்கு இன்று உணவுக் கப்பல்

ship.jpgமுல்லைத்தீவு பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களுக்கென 700 மெற்ரிக் தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு எம்.வி. பின்டான் சரக்குக் கப்பல் இன்று திருகோணமலையிலிருந்து புதுமாத்தளன் நோக்கிப் புறப்பட்டுச் செல்கிறது.

கடந்த வாரம் புதுமாத்தளன் பிரதேசத்தில் பொருட்களை இறக்கிக் கொண்டிருக்கும்போது புலிகள் நடத்திய மோட்டார் தாக்குதல்களுக்குப் பின்னர் பின்டான் சரக்குக் கப்பல் போதிய பாதுகாப்புடன் இன்று இரண்டாவது தடவையாக புதுமாத்தளன் நோக்கி புறப்பட்டுச் செல்வதாக கடற்படைப் பேச்சாளர் கப்டன் டி.கே.பி. தஸநாயக்க தினகரனுக்குத் தெரிவித்தார்.

புலிகள் எத்தகைய தடைகளை ஏற்படுத்தி வந்தாலும் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை தேவைக்கேற்ப அவ்வப்போது அனுப்பிவைக்க அரசாங்கமும், பாதுகாப்புப் படையினரும் போதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களுக்கு விநியோகிக்கவென அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலகம் வழங்கிய 500 மெற்றிக் தொன் உணவுப் பொருட்களை கடந்த 7ம் திகதி ஏற்றிச் சென்ற பின்டான் சரக்குக் கப்பல் கடந்த 9ம் திகதி புதுமாத்தளன் கடற்பரப்பில் வைத்து பொருட்களை இறக்கிக் கொண்டிருக்கும்போது புலிகள் மோட்டார் தாக்குதல்களை நடத்தினர்.

500 மெற்றிக் தொன் பொருட்களில் சுமார் 142 மெற்றிக் தொன் பொருட்களை இறக்கிக் கொண்டிருக்கும்போது புலிகள் நடத்திய மோட்டார் தாக்குதலையடுத்து அக்கப்பல் பாதுகாப்பு நிமித்தம் உடனடியாக ஆழ்கடலை நோக்கி எடுத்துச் செல்லப்பட்டது.

பின்னர் திருகோணமலை துறைமுகத்தை நோக்கித் திரும்பிய அக்கப்பல் கடந்த வெள்ளியன்று மீண்டும் புதுமாத்தளன் நோக்கிச் சென்று பொருட்களை இறக்கியது. இதனையடுத்து நேற்று முன்தினம் புதுமாத்தளனிலிருந்து திருமலை நோக்கி திரும்பிய அந்தக் கப்பல் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரின் அலுவலகத்தின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் 700 மெற்றிக் தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஏற்றப்பட்டுள்ளன.

இந்த பின்டான் கப்பல் இன்று கடற்படையினரின் பாதுகாப்புடனும், வழித்துணையுடனும் திருகோணமலை துறைமுகத்திலிருந்து புதுமாத்தளன் நோக்கி புறப்பட்டுச் சென்றது.

புதுமாத்தளன் கடற்பரப்பை சென்றடைந்த பின்னர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரின் உதவியுடன் அந்த 700 மெற்றிக் தொன் அத்தியாவசிய பொருட்களும் பாதுகாப்பான முறையில் இறக்கப்படும் என்று கடற்படைப் பேச்சாளர் தஸநாயக்க தெரிவித்தார்.

அரிசி, சீனி, கோதுமை மா, பருப்பு, மரக்கறி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் என்பவற்றையே இந்தக் கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். கடற்படையினர் பின்டான் கப்பல் மூலம் புலிகளின் பிடியிலுள்ள அப்பாவி மக்களுக்கு பொருட்களை அனுப்பிவைக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ள அதேசமயம், ஐ.சி.ஆர்.சி.யின் உதவியுடன் கிரீன் ஓடின் கப்பல் மூலம் நோய்வாய்ப்பட்ட பொதுமக்களை இதுவரை பத்துத் தடவைகள் பாதுகாப்பான முறையில் கப்பல் மூலம் அழைத்து வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *