அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

அம்பாறையில் சொக்லேட் உண்ட 13 மாணவர்கள் திடீர் சுகவீனம்

t-mala-stu.pngஅம்பாறை காமினி வித்தியாலயத்தில் ஆறாம் ஆண்டு மாணவிகள் 13 பேர் சொக்லேட் உண்டதன் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேற்படி வித்தியாலயத்தின் 6 ஆம் ஆண்டு கல்வி கற்கும் மாணவி தனது பிறந்த தினத்தை முன்னிட்டு சக மாணவிகளுக்கு சொக்லேட் பகிர்த்துள்ளார். சொக்லேட் உண்ட சிறுது நேரத்தில் மாணவிகள் மயக்கமடைந்ததுடன் நோய்வாய்ப்பட்ட நிலையில் காணப்பட்டனர். பாடசாலை அதிபர், மாணவர்களை உடனடியாக அம்பாறை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தார்.

பிறந்த தினத்தை முன்னிட்டு எனக்கு தந்த சொக்லேட்டை நான் உண்டேன். சவர்க்கார மணம் வீசியதுடன் சவர்க்கார சுவையாகவும் இருந்தது. எனக்கு வாந்தி வருவதுபோல் இருந்தது. அவசர அவசரமாக வெளியே ஓடினேன்.

அப்போது ஏனைய மாணவர்களும் வாந்தி எடுத்துக்கொண்டு இருந்தனர் என மாணவன் ஒருவன் தெரிவித்தார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் சிகிச்சை பெற்று வெளியேறினர். சுகாதார பரிசோதகர்கள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் இழப்பு குறித்து சரியான எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியாது கொழும்பிலுள்ள ஐ.நா.பிரதிநிதி கூறியதாக வெளிவிவகார அமைச்சு அறிக்கை

வன்னியில் மோதல்கள் நடைபெறும் பகுதியிலுள்ள பொதுமக்களின் இழப்புகள் குறித்த சரியான எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக இலங்கைக்கான ஐ.நா.வின் வதிவிட இணைப்பாளரும் மனிதநேய இணைப்பாளருமான நெய்ல் புனே தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்திப்பின்போதே நெய்ல் புனே இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, வன்னியில் நடைபெறும் மோதல்களின் இழப்புகள் தொடர்பாக ஐ.நா.வால் மார்ச் மாதம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் 2,683 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 7,241 பேர் காயமடைந்துமுள்ளதாகக் கூறப்பட்டுள்ளமை எதுவித நம்பகத் தன்மையானதோ, சுயாதீனமான தகவல்களைக் கொண்டோ வெளியிடப்படவில்லையென அமைச்சர் ரோஹித போகொல்லாகம சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பொதுமக்களின் இழப்புகளில் மூன்றில் இரண்டு பகுதி அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளமையும் முழுப்பொய்யென அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த 18 ஆம் திகதிவரை 4,120 காயமடைந்த பொதுமக்களும் 1,485 பராமரிப்பாளர்களும் கப்பல் மூலம் ஐ.சி.ஆர்.சி.யின் உதவியுடன் திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனரெனவும் வெளிவிவகார அமைச்சின் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த 17 ஆம் திகதி ஐ.சி.ஆர்.சி.யினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி அன்றைய திகதியில் காயமடைந்திருந்த அனைவரும் கப்பல் மூலம் திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். இந்நிலையில் 7,241 பேர் காயமடைந்துள்ளதாக ஐ.நா.வின் அறிக்கை கூறுவது நம்பத்தகுந்ததல்ல என்ற காரணத்தினாலலேயே அந்த அறிக்கையை அரசு நிராகரித்ததாகவும் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த அறிக்கை, வெளிநாட்டு உதவி அமைப்புகளின் கருத்தின் அடிப்படையிலேயே தனது அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டதாகவும் ஆனால் அதிலுள்ள பொதுமக்களின் இழப்புகள் குறித்த தொகை சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லையெனவும் நெய்ல் புனேதெரிவித்ததாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெலிகந்தயில் புலிகள் சூடு: நான்கு சிவிலியன்கள் பலி

udaya_nanayakkara_brigediars.jpgவெலிகந்த, மெனிக்தெனிய பிரதேசத்திலுள்ள விவசாயிகளை இலக்குவைத்து புலிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு 10.00 மணியளவிலேயே இடம்பெற்றுள்ளது. அறுவடையில் ஈடுபட்டிருந்த அப்பாவி விவசாயிகளை இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்றுக்காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. இராணுவப் பேச்சாளர் இங்கு மேலும் தகவல் தருகையில்:- வெலிகந்தை பூனானை வீதிக்கு தெற்காக அமைந்துள்ள மெனிக்தெனிய என்ற கிராமத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உழவு இயந்திரங்களையும், கனரக வாகனங்களையும் பயன்படுத்தி அறுவடை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் திடீரென அந்தப் பிரதேசத்திற்குள் ஊடுருவிய இனந்தெரியாத ஆயுததாரிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் நான்கு விவசாயிகள் அந்த இடத்திலே உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு விவசாயிகள் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தை அடுத்து இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து பாரிய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை இது போன்ற சம்பவங்களை தவிர்க்கும் வகையில் எல்லைப் புறங்களின் பாதுகாப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

பாமஸிகள் திடீர் முற்றுகை; தரக்குறைவான மருந்துகள் கண்டுபிடிப்பு

நாடெங் கிலுமுள்ள பாமஸிகளின் (மருந்தகங்களின்) தரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் திடீர் சோதனைகளை நடாத்துவதற்கு சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சு தீர்மானித்திருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் கொழும்பு, கொஹுவல மற்றும் பொரல்லஸ்கமுவ பிரதேசங்களிலுள்ள 15 பாமஸிகள் நேற்று முன்தினம் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

*  காலம் கடந்த மருந்துகள்

* பாவனையில் நீக்கப்பட்ட மருந்துகள்
* பதிவு செய்யப்படாத மருந்துகள்
* பெப். 30உடன் காலம் முடிவதாக குறிப்பிட்ட மருந்துகள்

இவற்றில் 14 பாமஸிகள், பாமஸிக்குரிய தரத்தைக் கொண்டிராதது இத்திடீர் சோதனையின் மூலம் கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் உயரதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

இந்த பாமஸிகளில், காலம் கடந்த மருந்துகள், இந்நாட்டின் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட மருந்துகள், அந்நாட்டில் பதிவு செய்யப்படாத மருந்துகள், பெப்ரவரி 30ம் திகதியுடன் காலம் முடிவதாக குறிப்பிடப்பட்ட மருந்துகள் போன்றவாறானவை விற்பனை செய்யப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை இந்த 14 பாமஸிகளில் சில பாமஸியாகளே பதிவு செய்யப்படாதவை என்பதும் தெரிய வந்திருக்கிறது. அத்தோடு சில பாமஸிகளில் உணவுப் பொருட்களுடன் சேர்த்து மருந்துப் பொருட்களும் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாமஸிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட விருக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடெங்கிலுமுள்ள சகல பாமஸிகளிலும் திடீர் சோதனைகள் நடாத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

புலிகள் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை – நெசபி பிரபு

nasabi.jpgபுலிகள் எந்தவொரு பிரிவினரையும் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. குறிப்பாக அவர்கள் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என பிரித்தானியாவின் சர்வகட்சி பாராளுமன்றக்குழுத் தலைவர் நெசபி பிரபு தெரிவித்துள்ளார்.

நெசபி பிரபு அவர்கள் இலங்கையின் நிலவரம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் மேலும் தெரிவித்துள்ளதாவது 10 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்திற்கான ஏ 9 பாதை திறக்கப்பட்டுள்ளது. புலிகள் அப்பாவித் தமிழ் மக்களை பலவந்தமாக தடுத்து அவர்களை மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு சுமார் 2,50,000 பேர்வரை தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என ஐ.நா. கணக்கிட்டுள்ளது. சுமார் ஒரு இலட்சம் பேர்வரையிலேயே அப்பிரதேசங்களில் இருப்பதாக வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அவர்களில் சுமார் 50 ஆயிரம் பேர்வரை புலிகளது கட்டுப்பாடுகளையும் தாக்குதல்களையும் பொருட்படுத்தாது வெளியேறியுள்ளனர்.

இந்த மக்களை விடுவிக்குமாறு ஐ.நா. சபை இணைத்தலைமை நாடுகள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் போன்றன விடுத்துவரும் தொடர்ச்சியான வேண்டுகோள்களை எல்லாம் புலிகள் புறக்கணித்தே வந்துள்ளனர்.

2005 ஆம் ஆண்டு சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டபோது புலிகள் ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சனநாயக வழிமுறைக்கு திரும்ப வேண்டும் அல்லது அவர்கள் அழித்தொழிக்கப் படுவார்கள் எனத் தெரிவித்திருந்தார். எனினும் இந்தியத் தலைவர் ராஜீவ் காந்தி உட்பட பல கொலைகளுக்குக் காரணமான புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்ந்தும் தமது மூடக் கொள்கையிலேயே இருந்து வந்தார்.

இதன் காரணமாக கிழக்கு மாகாணத்தின் கட்டுப்பாட்டை தனக்குக்கீழ் வைத்திருந்த கருணா அம்மான் அவ்வமைப்பிலிருந்து வெளியேறினார். ஈழம் என்பது சாத்தியப்படாததொன்று என்பதை அறிந்த கருணா தனது போராளிகள் சகிதம் அரசாங்கத்தரப்பிற்கு மாறினார். அத்தோடு புலிகளது நடவடிக்கைகள் கிழக்கு மாகாணத்தில் முடிவுக்கு வந்தது.

புலிகள் சரணடைய வேண்டும் அல்லது அழித்தொழிக்கப்பட வேண்டும். புலிகள் ஒருபோதும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த வில்லை. அவர்கள் தோற்கடிக்கப்பட்டால் மட்டுமே அங்கு உண்மையான சமாதானம் ஏற்படும் என்பதோடு அப்பிரதேசம் சர்வதேச சமூகத்தின் உதவிகளோடு மீளக்கட்டியெழுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிகரெட், சாராயத்தின் விலைகள் அதிகரிப்பு

இரண்டு வகையான சிகரெட்டுகள் மற்றும் சாராயத்தின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்தது.

கோல்ட்லீஃப் சிகரட் 2 ரூபாவாலும் பிரிஸ்டல் ஒரு ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள் ளன. சாராயம் ஒரு லீற்றரின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் வன்னி மாவட்ட மாணவரை ஆற்றுப்படுத்த நடவடிக்கை

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களை ஆற்றுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உளப்பாதிப்புக்கு உள்ளாகாத வகையில் சீரான மனநிலையை மாணவர்கள் கொண்டிருப்பதை நோக்காகக்கொண்டு இந்த ஆற்றுப்படுத்தும் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த பல்கலைக்கழக அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அண்மையில் இப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மூன்றாமாண்டு மாணவியொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதை அடுத்து இம்மாணவர்களை ஆற்றுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த மாதத்தில் முல்லைத்தீவைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.அதற்கு முதல் காவலாளியாக பணியாற்றும் ஒருவரும் அவரது அறையில் தற்கொலை செய்துகொண்டார்.

இறுதியாக தற்கொலை செய்துகொண்ட மாணவி தனக்குத்தானே தீமூட்டிக்கொண்டு தற்கொலைசெய்து கொண்டதாகவும் இவரது பெயர் ரவீந்திரன் சுதர்சினி எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வடக்கே மோதல் நடைபெறும் பகுதிகளில் வாழும் தமது உறவுகளின் நிலை குறித்து சரியான தகவல்களை பெறமுடியாத நிலையில் மனப்பாதிப்புக்குள்ளானமை காரணமாக இவ்வாறான தற்கொலை முயற்சிக்கு மாணவர்கள் தள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்தார்.

இந்த நிலையில் பாதிப்புக்குள்ளாகும் இம்மாணவர்களை கவனிப்பதற்கும் தேவையான உளவள ஆலோசனைகளை வழங்குவதற்மென வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மாணவர்களின் விபரங்களை திரட்டுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்கா அதிகாரிகளைக் கேட்டுகொண்டுள்ளார்.

இதேவேளை, வடமாகாணத்தில் இருந்து கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு வந்து கல்விகற்கும் 152 மாணவர்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிக்கடி கவனத்திற்குட்படுத்த வேண்டுமென கிழக்குப்பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் என். பத்மராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

பெரும்பாலான மாணவர்கள் யாழ்ப்பாணக்குடா நாட்டில் இருந்து வந்துள்ளனர். அவர்களிடம் எந்தப்பாதிப்பும் வெளிப்படவில்லை. எனினும் வன்னியின் நிலைமை மிகவும் மோசமானதை அடுத்து கிளிநொச்சி, முல்லைத்தீவைச் சேர்ந்த மாணவர்கள் உளப்பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக துணைவேந்தர் தெரிவித்தார்.

இதேவேளை, கலைப்பீட பரீட்சைகள் தவிர ஏனைய பரீட்சைகள் ஒத்திவைக்கப்படமாட்டாது எனவும் இவ்வாரத்தில் பரீட்சைகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வன்னியிலிருந்து ஒரு வாரத்தில் ஒன்பதாயிரம் பேர் வருகை

_mullai_1.jpg
வன்னியிலிருந்து கடந்த ஒரு வாரத்தில் சுமார் ஒன்பதினாயிரம் பொதுமக்கள் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளதாகவும் இவர்கள் அனைவரும் செட்டிகுளம் நலன்புரிநிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா மாவட்ட செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  தற்போது வரும் மக்கள் எதுவித மாற்றும் உடைகளுமின்றி வருகின்றார்கள். அவர்கள் மாற்றுவதற்கு உடைகளும் வழங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

நீண்ட நாட்களாக போசாக்கு உணவு உண்ணாதபடியால் சோர்வான நிலையில் காயங்களுடனும் பயங்கர கோலத்துடனும் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இவர்கள் வருவதாக இராணுவ தரப்பினர் தெரிவித்தனர்.

தினமும் குறைந்தது ஆயிரம் பொது மக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தை வந்தடைவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அ.தி.மு.க. – பா.ம.க. கூட்டணி : பொதுக் குழுவில் முடிவு

26-ramsoss.jpgமக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது என்று இன்று நடந்த பா.ம.க. பொதுக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சந்திக்கிறார். அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 மக்களவைத் தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும் வழங்கப்படவுள்ளது. பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வர காங்கிரஸ் மேற்கொண்ட இறுதி முயற்சியும் தோல்வியில் முடிந்து விட்டதையடுத்து பாமக இன்று இந்த முடிவை அறிவித்தது.

மட்டக்களப்பில் விசேட அதிரடிப்படை வீரர் தற்கொலை

மட்டக்களப்பு நகரப் பிரதேசத்தில் வீதிக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படைச் சிப்பாயொருவர் இன்று மாலை தனக்குத் தானே வெடி வைத்து தற்கொலை செய்துள்ளார்

ஊறணி விசேட அதிரடிப் படை முகாமில் சேவையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் யு.எஸ்.பி. திசாநாயக்கா ( வயது 25) என்பவரே இவ்வாறு தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தவர் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.