வெலிகந்தயில் புலிகள் சூடு: நான்கு சிவிலியன்கள் பலி

udaya_nanayakkara_brigediars.jpgவெலிகந்த, மெனிக்தெனிய பிரதேசத்திலுள்ள விவசாயிகளை இலக்குவைத்து புலிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு 10.00 மணியளவிலேயே இடம்பெற்றுள்ளது. அறுவடையில் ஈடுபட்டிருந்த அப்பாவி விவசாயிகளை இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்றுக்காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. இராணுவப் பேச்சாளர் இங்கு மேலும் தகவல் தருகையில்:- வெலிகந்தை பூனானை வீதிக்கு தெற்காக அமைந்துள்ள மெனிக்தெனிய என்ற கிராமத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உழவு இயந்திரங்களையும், கனரக வாகனங்களையும் பயன்படுத்தி அறுவடை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் திடீரென அந்தப் பிரதேசத்திற்குள் ஊடுருவிய இனந்தெரியாத ஆயுததாரிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் நான்கு விவசாயிகள் அந்த இடத்திலே உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு விவசாயிகள் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தை அடுத்து இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து பாரிய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை இது போன்ற சம்பவங்களை தவிர்க்கும் வகையில் எல்லைப் புறங்களின் பாதுகாப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *