அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

இன்று ஐரோப்பிய ஆணைக் குழுவின் தூதுவர் ஜனாதிபதி சந்திப்பு

euro_comm_.jpg
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஆணைக் குழுவின் தூதுவர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம,  ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் வெளிவிகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன ஆகியோரும் கலந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானில் பொலிஸ் பயிற்சிக்கல்லூரி மீது துப்பாக்கிச்சூடு – 11 பேர் உயிரிழப்பு 40 க்கும் மேற்பட்டோர் காயம்

pakistan_attack.jpg பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியில் லாகூர் நகருக்கு அண்மித்த பிரதேசத்திலுள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரி ஒன்றின் மீது இனம் தெரியாத ஆயுதம் ஏந்திய குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் 11 பேர் உயிரிழந்ததுடன் 40 க்கும்  மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற இந்தத் தாக்குதலின் போது துப்பாக்கிப் பிரயோகம் சுமார் மூன்று மணி நேரம் நீடித்ததாக பாகிஸ்தான் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்தனர். பயிற்சியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலரை துப்பாக்கி நபர்கள் பணயக் கைதிகளாக எடுத்துச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய எல்லைப்புரத்துக்கு அருகிலுள்ள இந்த மனாவான் பொலிஸ் பயிற்சி நிலையத்தை நோக்கி நாலா புரத்திலிருந்தும் அந்தக்குழுவினர் முதலில் கைக்குண்டுத்  தாக்குதல் நடத்திய பின்னரே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். 

புலிகள் வசம் மற்றொரு விமானம் இருப்பதை விமானப்படை நிராகரிப்பு

விடுதலைப் புலிகள் வசம் மேலுமொரு இலகு ரக விமானம் இருப்பதாக வெளியான செய்திகளை விமானப் படையினர் நிராகரித்துள்ளனர்.  விடுதலைப்புலிகள் வசம் மற்றொரு விமானம் இருப்பது தொடர்பாக தங்களுக்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லையென விமானப் படை பேச்சாளர் விங்கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வன்னியில் புலிகளின் விமானமொன்று குடிசையொன்றில் நிறுத்தப்பட்டிருப்பதாக அங்கிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த மக்கள் தெரிவிப்பதாகக் கூறி சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.  இந்த நிலையிலேயே விடுதலைப்புலிகள் வசம் மற்றொரு இலகு ரக விமானம் இருப்பதான செய்தியை விமானப் படையினர் மறுத்துள்ளனர்.

விமானப் படை பேச்சாளரின் தகவல்படி, கடந்த இரு வருடங்களில் புலிகளின் நான்கு விமானங்கள் படையினரால் அழிக்கப்பட்டுள்ளன. வடக்கில் தற்போது நடைபெறும் படை நடவடிக்கையின் போது புலிகளின் ஏழு விமான ஓடு பாதைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம், தற்போது புலிகள் வசமிருப்பதாகக் கூறப்படும் விமானமானது, அவசர தேவை ஏற்படும் போது புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் செல்வதற்காக பிரத்தியேகமாக வைக்கப்பட்டிருப்பதாகவும் சில சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகப் பிரதிநிதிகளுடன் அரசு பேச்சுவார்த்தை

வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகப் பிரதிநிதிகளோடு காத்திரமானதொரு பேச்சுவார்த்தையை இலங்கை அரசாங்கம் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்து வைத்ததாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக்கட்டும் இராணுவ நடவடிக்கைகளின் காரணமாகவும் புலிகளது பயங்கரவாத நடவடிக்கைளாலும் சிதைவடைந்துள்ள வடமாகாணத்தை மீள் கட்டமைப்பதற்கான பொருளாதாரத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கும் நாட்டிலுள்ள சமூகங்கள் மத்தியில் இன ஒருமைப்பாட்டை கட்டியெழுப்புவதற்கும் வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களது பங்களிப்பைப்  பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இப்பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கத்துடனான இந்த முதலாவது கலந்துரையாடலில் ஐக்கிய இராச்சியம், கனடா, , அவுஸ்திரேலியா, நோர்வே, ஜேர்மனி, சுவிச்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் பங்குபற்றியுள்ளனர்.

இச்சந்திப்பின்போது வட மாகாணத்தின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் மக்களை அரசியல் ரீதியாக வலுப்படுத்தல் போன்ற அம்சங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. புலிகளது பலம் இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும் வலுவிழந்துபோயுள்ள நிலையில், நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக தமது பங்களிப்பை வழங்குவதற்கான சிறந்ததொரு சந்தர்ப்பமாக இதனை அவர்கள் கருதுகின்றார்கள்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முதலாவது அமர்வுக்கு வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அவர்கள் தலைமை தாங்கியதோடு விஞ்ஞான தொழிநுட்ப அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன,  அரசியல்யாப்பு விவகார அமைச்சர் டியூ குணசேக்கர ஜனாதிபதியின் சிரோஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் திரு.லலித் வீரதுங்கா,  வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹனவும் கலந்து கொண்டனர். தமிழ் பிரதிநிதிகள் குழுவின் ஒருங்கிணைப்பாளராக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கலாநிதி நொயெல் நடேசன் பங்குபற்றினார் என அறிவிக்கப்பட்டுள்ளது

சாலை மோதலில் 26 கடற்புலிகள் பலி! தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம்

gunboat.jpgமுல்லைத்தீவு சாலையில் நேற்று கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் கடற்புலித் தலைவர்களுள் ஒருவரான மாறன் உட்பட 26 புலிகள் கொல்லப்பட்டதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சாலை கடற்பிரதேசத்தில் நேற்று இரவு புலிகளின் 4 படகுகளை அவதானித்த கடற்படையினர் அவற்றின் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர். இன்று காலை வரை தொடர்ந்த கடற்படையினரின் தாக்குதல்களால் புலிகளின் 4 படகுகளும் நிர்மூலமாக்கப்பட்டதாக ஊடக நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 

தந்தை செல்வாவின் 111 ஆவது பிறந்த தினம் நாளை வட,கிழக்கில் அஞ்சலி நிகழ்வுகள்

thanthai-selva.jpgதந்தை செல்வாவின் 111 ஆவது பிறந்த தினம் நாளை செவ்வாய்க்கிழமை வடக்கு, கிழக்கு பகுதிகளில் அனுஷ்டிக்கப்படுகிறது. வவுனியா மணிக்கூட்டுச் சந்தியிலுள்ள தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வுகள் அமைதியான முறையில் நடைபெறவுள்ளன.

தந்தை செல்வா நூற்றாண்டு குழுவினர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். ஆலயங்களில் விஷேட பூஜைகளும் நடைபெற தமிழர் விடுதலைக் கூட்டணி வவுனியா மாவட்ட கிளை ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இதேபோல, யாழ்ப்பாணத்திலும் தந்தை செல்வா உருவச்சிலை அருகில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

அகதிகளை ஏற்றிவந்த கப்பல் துப்பாக்கிச் சூட்டில் சிக்குண்டது

green-ocean.jpgமுல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதிக்கு நோயாளர்களை ஏற்றச் சென்ற செஞ்சிலுவைச் சங்க கப்பல் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில் செஞ்சிலுவைச் சங்கத்தின் வன்னிக்கான வதிவிட பிரதிநிதி உட்பட பணியாளர் இருவர் மயிரிழையில் உயிர் தப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவத்தின் பின்னர் அக்கப்பல் மூலம் 512 பேர் புல்மோட்டைக்கு கொண்டுவரப்பட்டனர். இவ்வாறு கொண்டுவரப்பட்ட நோயாளாகளில் மூவர் மரணம் அடைந்துள்ளனர்.

இடைத்தங்கல் முகாம்களில் அளவுக்கு அதிகமான மக்கள் தங்கியிருப்பதாக எகோ அமைப்பு தெரிவிப்பு

இலங்கையில் மோதல் இடம்பெறும் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வரும் பொதுமக்களைத் தங்கவைக்க வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களில் அளவுக்கு அதிகமான மக்கள் தங்கியிருப்பதாக எகோ எனப்படும் ஐரோப்பிய ஆணையகத்தின் மனிதாபிமான உதவி அமைப்பு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் எகோ குழு வவுனியா முகாம்களுக்குச் சென்று பார்வையிட்டுத் திரும்பியுள்ளது. அந்த மக்களுக்கு எகோ சார்பில் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுபற்றி புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய எகோ குழுவின் ஆசிய மற்றும் லத்தீன் அமெரிக்கப் பிரிவுத் தலைவர் எஸ்கோ கென்சின்ஸ்கி , “இலங்கையில் மனிதாபிமான நிலைமை கவலைப்படும் வகையில் இருப்பதாகவும், இதில் சர்வதேச நாடுகளின் பங்களிப்பு இன்னும் அதிகமாக இருக்க வேண்டும் “என்றும் தெரிவித்தார்.

சோதனைச் சாவடிகளில் பொதுமக்களைப் பரிசோதனை செய்யும் நடைமுறைகளில் சர்வதேச அமைப்புக்களையும் அனுமதிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக பிபிசி தமிழோசை தெரிவித்துள்ளது.

வட இலங்கையில் மோதல்கள் கடுமையடைகின்றன

srilanka_army1.jpgவட இலங்கைப் போர்முனைகளில் கடந்த இரண்டு தினங்களில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற கடும் மோதல்களின் பின்னர், பழமாத்தளனுக்கு வடக்கே விடுதலைப்புலிகள் அமைத்திருந்த மண் அரண் பகுதியையும், அதனோடு இணைந்த அகழிப் பகுதியையும் இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

இந்தச் சண்டைகளில் 46 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாக அது தெரிவித்துள்ளது.

இதேவேளை, இரணைப்பாலைக்கு வடக்கே உள்ள முன்னரங்கப் பகுதிகளில் விடுதலைப்புலிகளுடன் சனிக்கிழமையன்று நடந்த கடும் சண்டைகளில் விடுதலைப்புலிகளுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இந்தச் சண்டைகளில் படைத்தரப்பிற்குக் குறைந்த அளவிலான சேதங்களே ஏற்பட்டிருப்பதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

எனினும், தமது முன்னரங்க மண் அரணைத் தகர்த்து ஊடுருவ முயன்ற இராணுவத்தினர் மீது தாங்கள் நடத்திய தாக்குதல்களில் இராணுவத்தினருக்குப் பலத்த சேதங்கள் எற்பட்டிருப்பதாக விடுதலைப்புலிகளும் கூறியிருக்கின்றார்கள்.

மேல் மாகாண தேர்தல் – தற்காலிக அடையாள அட்டைக்கான விண்ணப்பம் ஏப்ரல் மாதம் 17 வரை

 ‘மேல்மாகாண சபைத் தேர்தலையொட்டி அடையாள அட்டையற்ற வாக்காளர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தற்காலிக அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 17 வரை மட்டுமே ஏற்கப்படும் எனவும் தேர்தல் திணைக்களம் நேற்று தெரிவித்தார்.

கிராம உத்தியோகத்தர்களினூடாக தற்காலிக அடையாள அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு ஏப்ரல் 2,3 மற்றும் 4ம் திகதிகளில் தற்காலிக அடையாள அட்டை வழங்கும் பணிகளில் மாத்திரம் கிராம உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிறி கூறினார்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையாளர் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்ட அரச அதிபர்களுக்கு அறிவித்துள்ளார்.மேல் மாகாண சபைத் தேர்தலில் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரிகளுக்கு துரிதமாக அடையாள அட்டை வழங்க ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.