விடுதலைப் புலிகள் வசம் மேலுமொரு இலகு ரக விமானம் இருப்பதாக வெளியான செய்திகளை விமானப் படையினர் நிராகரித்துள்ளனர். விடுதலைப்புலிகள் வசம் மற்றொரு விமானம் இருப்பது தொடர்பாக தங்களுக்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லையென விமானப் படை பேச்சாளர் விங்கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வன்னியில் புலிகளின் விமானமொன்று குடிசையொன்றில் நிறுத்தப்பட்டிருப்பதாக அங்கிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த மக்கள் தெரிவிப்பதாகக் கூறி சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்த நிலையிலேயே விடுதலைப்புலிகள் வசம் மற்றொரு இலகு ரக விமானம் இருப்பதான செய்தியை விமானப் படையினர் மறுத்துள்ளனர்.
விமானப் படை பேச்சாளரின் தகவல்படி, கடந்த இரு வருடங்களில் புலிகளின் நான்கு விமானங்கள் படையினரால் அழிக்கப்பட்டுள்ளன. வடக்கில் தற்போது நடைபெறும் படை நடவடிக்கையின் போது புலிகளின் ஏழு விமான ஓடு பாதைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம், தற்போது புலிகள் வசமிருப்பதாகக் கூறப்படும் விமானமானது, அவசர தேவை ஏற்படும் போது புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் செல்வதற்காக பிரத்தியேகமாக வைக்கப்பட்டிருப்பதாகவும் சில சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.