அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

‘பிரபாவை கைது செய்வதே இலக்கு’ – கோத்தாபய ராஜபக்ஷ

sec-def.jpgபுலிகளின் தலைவர் பிரபாகரனைக் கைது செய்வதே தற்போதைய முக்கிய விடயமாக இருக்கிறதென பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பாதுகாப்புப் படையினர் புதுக்குடியிருப்பை கைப்பற்றியதைத் தொடர்ந்து விசேட உரையொன்றை நிகழ்த்திய அவர் இந்த தகவலை நேற்று வெளியிட்டுள்ளார்.

படையினர் பெற்ற வெற்றி சிறப்பானதாகும் என்றும் அவர் பாராட்டியுள்ளார். ஏசியன் ட்ரிபியூன் இணையத்தளத்திற்கு இந்தக் கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.

புலிப் பயங்கரவாதிகளிடமிருந்த கடைசி நிலப்பரப்பும் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அதேவேளை, தொடர்ந்தும் முன்னேறி வரும் பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றார்கள்.புதுக்குடியிருப்பு பிரதேசத்தை பயங்கரவாதிகளிடமிருந்து விடுவிப்பதற்காக விமானப் படையினர், மற்றும் கடற்படையினர் ஆற்றிய சேவைகளை பாதுகாப்புச் செயலாளர் பாராட்டியுள்ளார்.

எஞ்சிய புலிகள் இயக்க உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைய வேண்டும் – ஜனாதிபதி

mahinda.jpgஎஞ்சியுள்ள புலிகள் இயக்க உறுப்பினர்கள் பாதுகாப்புப் படையினரிடம் உடனடியாக சரணடைய வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வேண்டுகோள் விடுத்தார்.தங்களது பிடியிலுள்ள அப்பாவி பொதுமக்கள் சகலரையும் உடனடியாக விடுவிக்குமாறும், பொது மக்கள் அச்சம் பீதியின்றி வாழ இடமளிக்குமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக் கொண்டார்.

ஐ. ம. சு. முன்னணியின் தெஹிவளை, இரத்மலானை, அவிசாவளை, ஹோமாகம மற்றும் கொலன்னாவை ஆகிய தொகுதிகளின் செயற்பாட்டாளர்களுக்கான கூட்டம் அலரிமாளிகையில் நேற்று மாலை நடைபெற்றது.  இக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில்:-

நாட்டை ஐக்கியப்படுத்தும் பணியில் எமது படைவீரர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்கள்.  இதன் மூலம் பாரிய வெற்றிகளை அடைய முடிந்திருக்கிறது. நாட்டை ஐக்கியப்படுத்தும் மனிதாபிமானப் பணிகள் அடுத்துவரும் சில தினங்களுக்குள் பூர்த்தியாகும்.

பாதுகாப்பு வலயத்தில் தங்கியுள்ள அப்பாவி மக்களைக்கேடயங்களாகப் பயன்படுத்திக் கொண்டு புலிகள் இயக்கத் தலைவர் செயற்படுகிறார். வேலுப்பிள்ளை பிரபாகரனின் பசப்பு வார்த்தைகளை நம்பி ஏமாற்றமடைந்து, வழி தவறி ஆயுதம் ஏந்தியுள்ள எஞ்சியுள்ள புலிகள் இயக்க உறுப்பினர்கள் சகலரும் ஆயுதங்களைக் கைவிட்டு இராணுவத்தினரிடம் உடனடியாகச் சரணடைய வேண்டும். தங்களது பிடியிலுள்ள பொது மக்களை விடுவிக்க வேண்டும். பிரபாகரனும் ஆயுதங்களைக் கைவிட்டு பாதுகாப்புப் படையினரிடம் சரணடைய வேண்டிய காலம் வந்துவிட்டது. பொது மக்கள் அச்சம், பீதியின்றி வாழ இடமளிக்கப்பட வேண்டும்.

மாவிலாற்றைத் திறப்பதற்கு ஆரம்பிக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின் மூலம் கிழக்கு மாகாணம் ஏற்கனவே பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறது. வட பகுதியும் முழுமையாக விடுவிக்கப்பட்டிருக்கும் கட்டத்தை நெருங்கிவிட்டது. பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு வருகின்ற மனிதாபிமான நடவடிக்கையின் மூலம் சிங்கள, முஸ்லிம் மக்கள் மட்டுமல்லாமல், தமிழ் மக்களும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இது தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கை அல்ல.

புலிகளின் பிடியிலிருந்து வடக்கு, கிழக்கையும் அங்கு வாழும் மக்களையும் விடுவிக்கவென நாம் மேற்கொண்டுவரும் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது பலவிதமான அழுத்தங்களை எதிர்கொண்டோம். இருப்பினும் அந்த அழுத்தங்களைக் கண்டு எமது நடவடிக்கைகளை நாம் இடைநிறுத்திவிடவில்லை. எமது தலைமைத்துவத்தின் கீழ் பாதுகாப்புப் படையினர் அடைகின்ற வெற்றிகளைச் சிலரால் சகித்துக் கொள்ள முடியாதுள்ளது. அவர்கள் புலிகள் இயக்கத்தினருக்கு நாட்டை எழுதிக் கொடுத்தவர்கள்.

முன்னாள் ஜனாதிபதி மறைந்த ரணசிங்க பிரேமதாச புலிகளுக்கு ரி. 56 ரகத் துப்பாக்கிகள் 5000 ஐயும், ரிசேர்ட், தொப்பிகள் மற்றும் பெனியன்களையும் வழங்கினார். அவர்கள் பின்னர் புலிகளுக்கு சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுக் கொடுத்தனர். அவர்களது ஆட்சிக்காலங்களில்தான் புலிகள் போஷிக்கப்பட்டு வளர்க்கப்பட்டனர். வடக்கு, கிழக்கை விடுவிக்கின்ற மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் எதுவுமே இடை நிறுத்தப்படவில்லை என்றார்.

புலிகளின் ஏழு சிரேஷ்ட தலைவர்கள் 3 தினங்களில் 420 புலிகளின் சடலங்கள் மீட்பு – பிரிகேடியர் உதய நாணயக்கார

udaya_nanayakkara_brigediars.jpg
புதுக்குடியிருப்பு பிரதேசத்தை புலிகளிடமிருந்து முற்றாக விடுவிக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கையின் போது படையினர் நடத்திய தாக்குதல் களில் புலிகளின் முக்கிய தலைவர்களான தீபன், விதுஷா, துர்கா, நாகேஷ், கடாபி மற்றும் மணி வண்ணன் உட்பட 250ற்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இதேவேளை, புலிகளின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான பானு படையினரின் இந்தத் தாக்குதல்களில் படுகாய மடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பை விடுவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த படையினர் கடந்த மூன்று தினங்கள் மாத்திரம் நடத்திய தாக்குதல்களில் 420 ற்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப் பட்டுள்ளதுடன் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இதேவேளை, கனரக ஆயுதங்கள், துப்பாக்கிகள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான குண்டுகளையும் படையினர் இந்தப் பிரதேசத்திலிருந்து மீட்டெடுத்துள்ளனர்.

படையினரின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஐந்து முக்கிய தலைவர்களில் புலிகளின் பெண்கள் பிரிவின் மாலதி படையணியின் தலைவரான விதுஷாவும், பிரதித் தலைவரான துர்காவும் அடங்குவர், நாகேஷ், கடாபி மற்றும் தீபன் ஆகிய மூன்று முக்கிய தலைவர்களும் புலிகளின் பிராந்திய பொறுப் பாளர்கள் ஆவர்.

கடாபி, பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலருமாவார். மணிவண்ணன் புலிகளின் ஆட்டிலறிப்பிரிவுத் தலைவராவார். புதுக்குடியிருப்பு கிழக்கு பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக இடம்பெற்ற கடும் மோதல்களின் போது புலிகளின் புலனாய்வுத் துறை தலைவர் பொட்டு அம்மான், தீபன் மற்றும் பானு ஆகியோர் களமுனையில் படையினருக்கு எதிரான தாக்குதல் நடவடிக் கையில் பங்கு கொண்டுள்ளனர்.

இவர்களில் பானு நேற்றைய தினம் நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல்களில் படுகாயமடைந்து ள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள் ளதாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார். இராணுவத்தின் 53 வது மற்றும் 58வது படைப்பிரி வினர்களும், எட்டாவது அதிரடிப் படையினரும் இணைந்து புலிகளை பலமுனைகளில் முற்றாக சுற்றிவளைத்து கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதல்களில் 400க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டுள்ளதுடன் இவர்களில் 120 புலிகளின் சடலங்களை 53 வது படைப் பிரிவினரும், 140 சடலங்களை 58வது படைப்பிரிவினரும் கண்டெடுத்துள்ளதாக களமுனை தகவல்கள் தெரிவித்தன.

இதேவேளை இந்தப் பிரதேசத்திலிருந்து 130 மி.மீ.ரக பீரங்கிகள்-03, 85 மி. மீ. ரக பீரங்கிகள்-01, 30 மி. மீ. ரக பெடல் துப்பாக்கி -01, சுமார் 600 தொடக்கம் 700 வரையான சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் உட்பட பெருந்தொகையான 12.7 மி. மீ. ரக ஆயுதங்களையும் படையினர் மீட்டெடுத்துள்ளதாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு முதன் முதலில் முழுமையாக படையினர் வசம் – 420 புலிகள் பலி

puthukku-05-04.jpgமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசம் முழுவதையும் பாதுகாப்புப் படையினர் நேற்று தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புலிகளுடனான கடந்தகால யுத்த வரலாற்றில் புதுக்குடியிருப்பு முழுவதையும் படையினர் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளமை இதுவே முதற் தடவையாகும் என்று தெரிவித்த அவர், வன்னி படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த மற்றுமொரு மாபெரும் வெற்றியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இராணுவத்தின் 53வது, 58 வது படைப்பிரிவினரும், இராணுவத்தின் எட்டாவது அதிரடிப்படையினரும் இணைந்து கடந்த சில தினங்களாக நடத்திய கடும் தாக்குதல்களுக்கு பின்னர் படையினர் நேற்றுக்காலை இந்தப் பிரதேசம் முழுவதையும் முற்றாக விடுவித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்புப் படையினர் பல முனைகள் ஊடாக முன்னெடுத்த வெற்றிகரமான படை நடவடிக்கைகள் மூலம் புலிகளின் சகல செயற்பாடுகளும் 21 சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள் முடக்கப்பட்டிருந்தது. இவற்றில் 20 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் அரசாங்கம் பொது மக்களின் நலனை கருத்திற் கொண்டு அறிவித்திருந்த பாதுகாப்பு வலயமாகும்.

பாதுகாப்புப் படையினர் புலிகள் மீது தாக்குதல் நடத்தி ஒரு சதுர கிலோ மீற்றர் பிரதேசத்தையே கைப்பற்ற வேண்டி இருந்தது. நேற்றைய தினம் நடத்திய இறுதிக் கட்ட கடுமையான தாக்குதல்களுக்குப் பின்னர் அந்தப் பிரதேசத்தையும் கைப்பற்றியுள்ளதன் மூலம் தற்பொழுது புதுக்குடியிருப்பு முழுவதும் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் நேற்றைய தினம் பிரகடனப்படுத்தியுள்ளது என்றும் பிரிகேடியர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இராணுவத்தின் 53வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா, எட்டாவது அதிரடிப்படைப் பிரிவின் கட்டளைத் தளபதி கேர்ணல் ரவிப் பிரிய ஆகியோர் தலைமையிலான படையினர் புலிகளிடம் எஞ்சியுள்ள பிரதேசத்தை முற்றாக விடுவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பாதுகாப்புப் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் புலிகளின் இதயமாக புதுக்குடியிருப்புப் பிரதேசமே கருதப்பட்டது. புலிகளின் பிடியிலிருந்த ஒவ்வொரு கோட்டைகளையும், தலைநகர்களையும் பாதுகாப்புப் படையினர் நடத்திய கடுமையான தாக்குதல்களுக்குப் பின்னர் இழந்த புலிகள் தற்பொழுது தங்களது பிரதான கோட்டையையும் இழந்துள்ளனர் என்றும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

பொது மக்களுக்காக அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலய பிரதேசத்திற்குள் தற்பொழுது ஊடுருவியுள்ள புலிகள் அங்குள்ள பொது மக்களை கேடயங்களாக பயன்படுத்தி கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இருந்த போதிலும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புலிகளின் பிடியிலிருந்து பொது மக்களை விடுவி க்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

வடகொரியாவின் ஏவுகணை செலுத்தலுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்

சக்தி வாய்ந்த ஏவுகணை ஒன்றை வடகொரியா ஏவி இருப்பதற்கு ஐ.நா பாதுகாப்பு சபை பலமான பதில் ஒன்றை கூற வேண்டும் என அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் கூறியுள்ளன.

இந்த ஏவுகணை செலுத்தல் தூண்டும் வகையில் இருப்பதாக கூறியுள்ள அமெரிக்க அதிபர், இருந்த போதிலும் தாங்கள் வடகொரியாவுடன் அணுத்திட்டம் குறித்து சர்வதேச பேச்சுவார்த்தை நடத்துவதில் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தை ஐ.நா பாதுகாப்பு சபை விவாதிக்கவுள்ளது. நிதானமாக செயல்படுமாறு ஏனைய நாடுகளுக்கு சீனாவும் ரஷ்யாவும் கோரிக்கை விடுத்துள்ளன.

தங்களுடைய ஏவுகணை செய்மதி ஒன்றை பாதையில் அமர்த்தியதாக வடகொரியா கூறியுள்ளது. ஆனால் இதனை மறுத்துள்ள அமெரிக்காவும், தென்கொரியாவும், இந்த ஏவுகணை ஏவப்பட்டது அதனுடைய செயற்திறனை சோதனை செய்வதற்காகவே என கூறியுள்ளன.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகைகள் எடுக்க வேண்டும்

sri-lanka-muslim-students.jpgகிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பாடசாலை அதிபர்களுக்கு விடுத்துள்ள அவசர பணிப்புரையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொருத்தமான நடவடிக்கைகைகள் எடுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.

திருகோணமலையில் சென் .மேரிஸ் கல்லூரி மாணவியான ஜூட் ரெஜி வர்ஷா கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்தே இந்த உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.கே.யு.கே. வீரவர்த்தன இது தொடர்பான சுற்றறிக்கையை பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.இதில்,

“முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது பாடசாலை அதிபர்களின் பொறுப்பாகும்.பெற்றோர் அல்லது சட்ட ரீதியான பாதுகாவலர் தவிர்ந்த ஏனையவர்கள் மாணவர்களை அழைத்துச் செல்ல அனுமதிக்க வேண்டாம்.சந்தேகத்திற்குரிய சம்பவங்கள் இடம்பெற்றால் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்க வேண்டும். 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றார்களை அழைத்து அம் மாணவர்களை பாடசாலை முடிந்த பின்பு அழைத்து செல்வது தொடர்பாக பொருத்தமான நடவடிக்கைகைள மேற்கொள்ள வேண்டும் ” என்றும் அந்த உத்தரவில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரண பணிகளில் அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றது -ஐநாவின் பிரதிநிதி

walter_kaelin_.jpgஇலங்கை அரசாங்கம் கஷ்டமான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், இடம்பெயர்ந்து பெரும் எண்ணிக்கையில் வரும் மக்களின் உடனடி நிவாரண தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அரசாங்கத்திற்கு ஐநா சபை உதவிகளைச் செய்து வருவதாக சனியன்று வவுனியாவுக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் பிரதிநிதியாகிய வோல்டர் கேலன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கான ஐநா சபை செயலாளர் நாயகத்தின் பிரதிநிதி வோல்டர் கேலன், செட்டிகுளம் மனிக் பாம் பகுதியில் உள்ள கதிர்காமர் நிவாரண கிராமம், அருணாச்சலம் நிவாரண கிராமம் என்பவற்றிற்குச் சென்று அங்குள்ள மக்களின் நிலைமைகளை நேரில் கண்டறிந்தார்.

அங்குள்ள பலதரப்பினரிடமும் கலந்துரையாடி நிலைமைகளை அவர் கேட்டறிந்து கொண்டார். ஓமந்தையில் உள்ள சோதனைச்சாவடிக்கும் விஜயம் செய்த அவர், வவுனியா செயலகத்தில் வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் தலைமையிலான திணைக்களத் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு இடம்பெயர்ந்துள்ள மக்களின் நிலைமைகள் தேவைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

“இலங்கை அரசாங்கம் கஷ்டமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கின்ற வேளையில் நான் இங்கு வந்திருக்கிறேன். மோதல்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. வன்னிப்பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் சிக்கியிருக்கின்றார்கள். பெரும் எண்ணிக்கையானவர்கள் காயமடைகின்றார்கள். இது எங்களுக்கு கவலையளிக்கின்றது. இதுவிடயத்தில் நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறோம்.

அதேவேளை பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இடம்பெயர்ந்து வந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களை பொறுப்பேற்று நிலைமைகளை மதிப்பீடு செய்து அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டியுள்ளது. அவர்களைப் பராமரிக்க வேண்டியுள்ளது. இது விடயத்தில் பெரும் சவால்கள் இருக்கின்றன. எனவே நிலைமைகளை நேரில் கண்டறிந்து உரிய சிபாரிசுளைச் செய்வதே எனது விஜயத்தின் நோக்கமாகும்.

கொழும்பில் அரசாங்கத்துடன் நான் பேச்சுக்களை நடத்தியுள்ளேன். இங்கு வவுனியாவில் இடம்பெயர்ந்த மக்களின் இடைத்தங்கல் முகாம்கள், இடைத்தங்கல் கிராமங்கள், ஓமந்தையில் உள்ள சோதனைச்சாவடி ஆகிய இடங்களை நான் பார்வையிட்டுள்ளேன். இந்த இடங்களில் அரசாங்கம் முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டிருப்பதை என்னால் காணமுடிந்தது.

அதேவேளை, இங்குள்ள நிலைமையானது (இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்குப்) பொருத்தமானதாக இல்லை. இந்த விடயங்கள் குறித்து அரசாங்கத்துடன் நாங்கள் பேச்சுக்கள் நடத்திக் கொண்டிருக்கின்றோம். இதுவிடயத்தி்ல் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதும், உரிய தீ்ர்மானங்களும் சிபாரிசுகளும் மேற்கொள்ளப்படும். ஐநா மன்றமும் இந்த மக்களின் தேவைகள் குறித்து சுறுசுறுப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இடைத்தங்கல் நிலையங்களில் தங்கியுள்ள மக்களின் அவசர நிவாரண தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அரசாங்கத்திற்கு நாங்கள் உதவி வருகின்றோம்” என வோல்டர் கேலன் தெரிவித்தார்.

வணங்கா மண் பயணத்திற்கான அவசர நிதி சேகரிப்பு

vanangamanship.jpgவணங்கா மண் நடவடிக்கைக்காக பிரான்ஸில் உள்ள லீமோஸ் மாவட்டத்திலும் நிதி சேகரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாயகத்தில் எம் உறவுகளின் நிலைமைகள் யாவரும் அறிந்ததே. பல நெருக்கடிகளுக்கு மத்தியில் தாயகம் நோக்கி வணங்கா மண் கப்பல் பயணமாகிறது.

இந்த சந்தர்ப்பத்தை யாவரும் பயன்படுத்தி தங்களால் முடிந்த அதி உச்ச பங்களிப்பை செய்யும்மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். வன்னியில் உள்ள எம் உறவுகளுக்காக நிதி உதவி செய்ய விரும்புபவர்கள் உங்கள் உதவிகளை வெகு விரைவாக வழங்குங்கள்.

08-04-2009 மதியம்வரை உங்கள் உதவிகளை வழங்கலாம்.

மேலதிக தகவல்களுக்கும் தொடர்புகளுக்கும்.

தொலைபேசி இலக்கம்:05.55.35.80.89 ,06.24.66.22.45

எற்பாட்டுக்குழு:06.34.89.91.03

உதயதேவி கடுகதி ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

udayathevi.gif27 வருடங்களின் பின்பு மட்டக்களப்பிற்கும் கொழும்பிற்கும் இடையிலான உதயதேவி கடுகதி ரயில் சேவை இன்று மீண்டும் ஆரம்பமானது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்த சூழ்நிலை காரணமாக இச் சேவை ஏற்கனவே இடை நிறுத்தப்பட்டிருந்தது கொழும்பு கோட்டையிலிருந்து இன்று முற்பகல் 10.30 ற்க மட்டக்களப்பிற்கான ரயில் தனது முதலாவது சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

மாலை 6.30 ற்கு குறித்த ரயில் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை வந்தடையவிருப்பதாக புகையிரத நிலைய அதிபர் அருணாசலம் சிவனேசராஜா தெரிவிக்கின்றார் நாளை காலை 7.45 ற்கு மட்டக்களப்பிலிருந்து முதலாவது ரயில் கொழும்பு கோட்டையை நோக்கி புறப்டப்டு பிற்பகல் 3.30 ற்கு அங்கு சென்றடையும் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்று வவுனியாவில் வன்னி தளபதிகளுடன் ஆலோசனை

sarath-f-s.jpgவன்னியில் தொடரும் போர் தொடர்பான பிந்திய நிலைமைகளை அறிந்து கொள்வதற்காகவும், களமுனைத் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தி அவர்களுக்கான புதிய உத்தரவுகளை பிறப்பிப்பதற்காகவும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்று சனிக்கிழமை வவுனியா சென்றிருந்தார். வன்னி இராணுவத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியகொழும்பில் இருந்து சென்ற குழுவினரை வரவேற்று வன்னி இராணுவத் தலைமையக மாநாட்டு மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார்.

மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் களமுனையில் இருந்து வந்திருந்த மூத்த தளபதிகளுடன் சரத் பொன்சேகா விரிவான ஆலோசனைகளை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.தற்போதைய கள நிலைமைகளையிட்டு வன்னியில் இருந்து வந்த தளபதிகள் விளக்கிக் கூறிய அதே வேளையில், இந்த நிலையில் கையாள வேண்டிய உபாயங்கள் தொடர்பாக சரத் பொன்சேகா புதிய உத்தரவுகளை அவர்களுக்குப் பிறப்பித்திருப்பதாக கூறப்படுகின்றது.