அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

வெறிப் பேச்சு பேச மாட்டேன். ஜாமீ்ன் கோரும் வருண்

india-varun.jpgஇனிமேல் மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேச மாட்டேன் என்று உச்ச நீதிமன்றத்தில் பாஜக வேட்பாளர் வருண் காந்தி உறுதியளித்து மனு தாக்கல் செய்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதியில் போட்டியிடும் வருண் காந்தி, தனது பிரசாரத்தின்போது முஸ்லிம்களின் கையை வெட்டுவேன், தலையை வெட்டுவேன் என்றார்.

இதையடுத்து அவர் மீது தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி பல நீதிமன்றங்களை அணுகினார் வருண். ஆனால், ஜாமீன் மறுக்கப்பட்டதையடுத்து ஊர்வலமாக வந்து சரணடைந்தார். அந்த ஊர்வலத்தின்போதும் பெரும் கலவரம் நடந்தது. இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தார் உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி.

இதை எதி்ர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் வருண். மேலும் தன்னை இடைக்கால ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பிலிபிட் தொகுதியில் வருண் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்யவும், பிரசாரம் தொடங்கவும் வசதியாக இந்த மனுவை அவசர மனுவாகக் கருதி விசாரிக்க வேண்டும் என்று வருண் காந்தி தரப்பு கோரியது.

அடுத்த மதத்தினரை ஆத்திரமூட்டும் வகையில் பேச மாட்டேன் என்று வருண் காந்தி உறுதியளித்தால் அவரை ஜாமீனில் விடுவிக்க ஆட்சேபம் இல்லை என்று உத்தரப் பிரதேச அரசு வழக்கறிஞரும் தெரிவித்தார்.

இதையடுத்து தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், ஜாமீனில் விடுவித்தால் ஆத்திரமூட்டும் வகையிலோ அல்லது மத உணர்வுகளைத் தூண்டு வகையிலோ பேச மாட்டேன் என வருண் காந்தி உறுதிமொழிப் பத்திரம் வழங்க வேண்டும். அப்போதுதான் அவரை ஜாமீனில் விடுவிக்க முடியும் என்று நிபந்தனை விதித்தார். இந்த நிபந்தனையை ஏற்றுக் கொள்வதாக வருண் காந்தி சார்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை வரும் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி, அன்றைய தினம் வருண் காந்தியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வழங்கப்படும் என்றார்.

ஜெ. சொத்து குவிப்பு வழக்கு: உயிரூட்ட திமுக புது உத்தி!

jayalalitha.jpgமுன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மீது திமுக ஆட்சியில் தொடரப்பட்ட லண்டன் ஹோட்டல் வழக்கை வாபஸ் பெற விரும்புவதாக தமிழக அரசு திடீரென தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் அது மனு செய்துள்ளது. கடந்த கால திமுக ஆட்சியில், ஜெயலலிதா மீது பல வழக்குகள் தொடரப்பட்டன. அதில் முக்கியமானவை முதல்வர் பதவியைப் பயன்படுத்தி லண்டனில் ஹோட்டல் வாங்கியது தொடர்பான வழக்கு மற்றும் வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து குவித்த வழக்கு.

இந்த இரண்டு வழக்குகளும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி பெங்களூர் தனி கோர்ட்டுக்கு கடந்த 2003ம் ஆண்டு மாற்றப்பட்டன. அன்று முதல் இவை நிலுவையில் உள்ளன. இந்த இரண்டு வழக்குகளும் முதலில் தனித் தனியான வழக்குகளாகத்தான் இருந்தன. ஆனால் பின்னர் பெங்களூர் தனி கோர்ட் இவை இரண்டையும் ஒன்றாக்கியது.

இதை எதிர்த்து திமுக சார்பில் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதையடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் கடந்த 2005ம் ஆண்டு இடைக்காலத் தடை விதித்தது. இந் நிலையில், லண்டன் ஹோட்டல் வழக்குக்குப் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அந்த வழக்கை திரும்பப் பெற விரும்புவதாகவும், அதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், லண்டன் ஹோட்டல் வழக்கில் பெங்களூர் கோர்ட்டில் ஆஜராகியுள்ள அரசின் சிறப்பு நீதிபதி பி.வி. ஆச்சார்யா தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், லண்டன் ஹோட்டல் வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை. எனவே இந்த வழக்கை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.

இதுகுறித்து ஆச்சார்யா மேலும் கூறுகையில், லண்டன் ஹோட்டல் வழக்கு கேஸ் டைரியை ஆய்வு செய்தபோது 2001ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி புதிய விசாரணை அதிகாரி சுப்புராமன், சிறப்பு நீதிபதியின் அனுமதியைப் பெற்று மேல் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது அவர் விசாரணை நடத்திய அமலாக்கப் பிரிவு துணை இயக்குநர் சுப்ரமணியன் என்பவர், லண்டன் ஹோட்டல் வழக்கில், ஜெயலலிதாவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளதாக பதிவு செய்துள்ளார் சுப்புராமன்.

லண்டன் ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் சுப்ரமணியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், லண்டனில் ஒரு வேளை ஜெயலலிதா சொத்து வாங்கியிருந்தாலும் (ஹோட்டல்) கூட அதை நிரூபிப்பது மிகவும் கடினமானதாகும்.

எனவே இந்த வழக்கை தொடர்ந்து நடத்துவது என்பது மிகவம் சிரமமானதாகும். போதிய ஆதாரங்கள் இல்லாததால் இதை வெற்றிகரமாக நடத்த முடியும் என நான் நினைக்கவில்லை என்று ஆச்சார்யா கூறியுள்ளார். எனவே இந்த வழக்கை விலக்கிக் கொள்வது குறித்து முடிவெடுக்க சிறப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இருப்பினும் தற்போது இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனவே இந்த வழக்கை விலக்கிக் கொள்ள பெங்களூர் சிறப்பு அரசு வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும். இதுதொடர்பாக பெங்களூர் தனி நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உரிய அறிவுறுத்தல்களைப் பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணையை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ஒத்திவைத்துள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தவிர அவரது தோழி சசிகலா, வி.என்.சுதாகரன், டிடிவி தினகரன், இளவரசி ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் இந்த திடீர் நடவடிக்கை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. நீண்ட காலமாக பெங்களூர் தனி கோர்ட்டில் கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குக்கு உயிர் கொடுத்து அதை விசாரணைக்குக் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசு குறிப்பாக திமுக விரும்புவதாக தெரிகிறது.

அதற்கு இடைக்கால தடை முட்டுக்கட்டையாக உள்ளது. திமுக அரசைப் பொறுத்தவரை லண்டன் ஹோட்டல் வழக்கை விட சொத்துக் குவிப்பு வழக்குதான் முக்கியமானது. எனவே லண்டன் ஹோட்டல் வழக்கை தூக்கிப் போட்டு விட்டு சொத்துக் குவிப்பு வழக்குக்கு உயிர் கொடுக்கும் வகையிலேயே இந்த திடீர் முடிவை திமுக அரசு எடுத்ததாக தெரிகிறது. லண்டன் வழக்கை வாபஸ் பெற்று விட்டால், தானாகவே சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

போர் நிறுத்தம் பற்றி இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டு

dr-palitha.jpgதமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட இரண்டு நாள் மோதல் நிறுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் மக்களைக் கட்டாயப்படுத்தி வேலைவாங்கி, பாதுகாப்பு மண் அரண்களை உருவாக்கிக் கொண்டுள்ளதாக இலங்கை வெளியுறவுத் துறைச் செயலர் டாக்டர் பாலித கொஹன்னா குற்றம் சாட்டினார்.

போர் நிறுத்ததை நீடிப்பது பற்றி பேசுவதை விட, மோதல் நிறுத்த காலத்தில் புலிகள் தமது கட்டுப்பாட்டில் இருந்தவர்கள் வெளியேற அனுமதிக்க மறுத்தது ஏன் என்ற கேள்வி முதலில் எழுப்பப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

அதே நேரத்தில் அரசின் இந்த மோதல் நிறுத்த அறிவிப்பை, கண்துடைப்பு என்றும் ஒரு அரசியல் நாடகம் என்றும் விடுதலைப் புலிகள் விமர்சித்துள்ளனர்.

48 மணி நேர போர் நிறுத்த அறிவிப்புக் காலத்தில் 40 பொதுமக்கள் மட்டுமே அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வருகை

puthukkudi.gifவன்னியில் உள்ள மக்களை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் அறிவிக்கப்பட்ட 48 மணி நேர  போர் நிறுத்த காலத்தில் இன்று 40  பொதுமக்கள் மாத்திரமே படையினரின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இவர்களில்  வடமராட்சி கிழக்கிலிருந்து படகு மூலம் வடமராட்சி, பருத்தித்துறை முனைப் பகுதிக்கு கடல் மார்க்கமாக 26 பேரும், வவுனியாவுக்கு தரை மார்க்கமாக 14 பேரும் வந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தநிலையில் பருத்தித்துறைக்குச் சென்ற 26 பொதுமக்களும்  தென்மராட்சியிலுள்ள நலன்புரி  முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக யாழ். செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இறையாண்மைக்கு எதிராக வைகோ பேசவில்லை: ஜெயலலிதா.

jaya.jpgஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பிரதமர் பதவி மேல் தனக்கு ஆசை இல்லை என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும்,  ‘’அ.தி.மு.க., தமிழகத்தில் இடதுசாரிகள், பா.ம.க., மற்றும் ம.தி.மு.க., வுடன் கூட்டணி வைத்துக் கொண்டிருப்பதாக கூறியவர் மத்தியில் பா.ஜ., காங்., இல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்பதே தனது கூட்டணியின் லட்சியம் எனவும் கூறினார்.

தேர்தலுக்கு பின் வேறு எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு, ஒரு நல்ல அரசியல்வாதி எந்த ஒரு வாய்ப்பையும் நழுவ விடமாட்டார், அ‌தனால் அம்மாதிரியான கூட்டணி தோழமை கட்சிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு அமைக்கப்படலாம். ஆனால் இப்போது அது குறித்து பேசுவது பொறுத்தமாக இருக்காது என்றார்.

வைகோ இலங்கை பிரச்னை குறித்து விடுத்து வரும் அறிக்கைகள் குறித்த கேள்விக்கு,  ‘’இலங்கை பிரச்சனையில் இந்திய ஒற்றுமைக்கு எதிராக வைகோ பேசவில்லை’’ என்று தெரிவித்தார்.

ஈழத்தமிழர்களுக்காக தே.மு.தி.க.வினர் கூட்டு பிரார்த்தனை

vijayakanth1.jpg இலங்கையில், போர் நிறுத்தம் ஏற்பட வேண்டி கூட்டு பிரார்த்தனை நடத்த வேண்டும் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியிருந்தார். அதன்படி தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், குன்றத்தூர், திருப்போரூர், காட்டாங் கொளத்தூர், ஸ்ரீபெரும்புதூர், மாங்காடு, பெருங்குடி, தாமஸ் மலை, சோழிங்கநல்லூர், சிட்லபாக்கம், பீர்க்கங் கரணை, பெருங்களத்தூர், திருநீர்மலை, பம்மல், அனகா புத்தூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் கூட்டு பிரார்த்தனை நடத்தப்பட்டது.
 
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு தமிழ் மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்ற பிரார்த்தனையை தே.மு.தி.க.வினர் செய்தனர்.

எந்தவொரு அழுத்தமும் யுத்தத்தை நிறுத்தாது. பாதுகாப்புச் செயலர்.

sec-def.jpgசர்வதேச மற்றும் உள்நாட்டு அழுத்தங்கள் எதுவும் வன்னியில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற யுத்தத்தில் ஆதிக்கம் செலுத்த முடியாது எனவும் இலங்கையில் பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்படும் வரை படைநடவடிக்கைகள் தொடரும் எனவும் உள்ளுர் ஊடகம் ஒன்றிற்கு பாதுகாப்பமைச்சில் செயலர் தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரம் தொடர்பாக இணைத்தலைமை நாடுகள் தொடர்ந்து பேசி வருகின்றது.

co-chair.gifஇலங் கையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தில் சிக்கியுள்ள மக்களது விடயங்கள் தொடர்பாக இணைத்தலைமை நாடுகள் தொடர்ந்து பேசிவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நேற்றுக்காலை அமெரிக்கா, நோர்வே, ஐரோப்பிய ஒன்றிய மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியுள்ளனர். இக்கருத்தரங்கில் அமெரிக்கா சார்பாக அந்நாட்டின் மத்திய மற்றும் தென்கிழக்காசிய நாட்டு விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் ரிச்சார்ட் பௌசர் கலந்து கொண்டுள்ளார்.

இக்கருத்தரங்கு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ரொபேர்ட் வூட், இலங்கை அரசு புத்தாண்டை முன்னிட்டு யுத்தத்திற்கு கொடுத்திருக்கின்ற 48 மணி நேர ஓய்வை இணைத்தலைமை நாடுகள் வரவேற்பதாகவும் அதே நேரத்தில் இருதரப்பும் அங்கு சிக்கியுள்ள மக்களின் அடிப்படை தேவை விடயங்களில் கவனம் கொண்டு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்து வகைகள் அவர்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்துவதுடன் அங்கு காயமடைந்துள்ள மக்கள் சிகிச்சைக்காக வெளியேற இருதரப்பும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

அத்துடன் வன்னியில் சிக்கியுள்ள மக்களை அவர்கள் விரும்பிய இடங்களுக்குச் செல்ல புலிகள் அனுமதிக்க வேண்டும் என அவர்கள் மீண்டும் கேட்டுள்ளனர் எனவும் இலங்கை விடயங்கள் தொடர்பாக இணைத்தலைமை நாடுகள் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நாடாத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மொனராகலையில் மற்றுமொரு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் : மூவர் கொலை

மொனராகலை மாவட்டத்திலுள்ள கல்டெம் எரா கிராமததில் நேற்றிரவு ஆயுதக் குழுவொன்றினால் மேற் கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளனர். சம்பவத்தில் வெட்டுக் காயங்களுடன் மற்றுமொரு பெண் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிராமவாசிகள் புத்தாண்டுப் பண்டிகைக்குத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் அங்கு நுழைந்த ஆயுதக் குழுவொன்று இவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிசார் கூறுகின்றனர். ஏற்கனவே இந்தப் பகுதியிலுள்ள மஹாகொடயாய என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு இடம் பெற்ற இதே பாணியிலான சம்பவமொன்றில் 9 கிராமவாசிகள் கொல்லப்பட்டும் மற்றுமொருவர் காயமடைதிருந்தும் இருந்தார்

இந்தச் சம்பவம் இடம்பெற்று 48 மணித்தியாலத்திற்குள் நேற்றைய சம்பவம் இடம் பெற்றுள்ளது. இந்த இரண்டு தாக்குதல்களும் விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனப் பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். தற்போது அந்தப் பகுதியில் பாதுகாப்பு தரப்பினர் விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை மேற் கொண்டுள்ளனர்.

புத்தாண்டுக் கொண்டாட்ட விபத்துக்கள் 202 பேர் வைத்தியசாலையில் அனுமதி

புத்தாண்டுப் பிறப்புக் கொண்டாட்டங்களின் போது நடைபெற்ற விபத்துக்களில், 202 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை 6.00 வரையான 24 மணி நேரத்தில் மட்டும் 75 பேர் மேற்படி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.