அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

இலங்கை தமிழர் பிரச்சினை: அன்னிய நாட்டு பிரச்சினை. அன்னிய நாட்டு பிரச்சினையில் இங்குள்ள அரசியல் கட்சியினர் தலையிட முடியாது. – ஐகோர்ட்டில் வழக்கு

india-election.jpgஇலங்கை தமிழர் பிரச்சினையை முன்வைத்து தேர்தல் பிரசாரம் செய்ய அரசியல் கட்சியினருக்கு தடை விதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். மதுரை மாட்டுத்தாவணி செய்தியாளர்நகரை சேர்ந்தவர் வி.கண்ணன். இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். மதுரை ஐகோர்ட்டில் அவர் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவில் ஏராளமான அரசியல் கட்சிகள் உள்ளன. தேர்தலின் போது முக்கிய அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. நிலையான அரசு வேண்டும் என்று தேர்தலின் போது ஓட்டு கேட்கின்றனர். தேர்தல் முடிந்த பின்பு தங்களை எதிர்த்து போட்டியிட்ட அணியுடன் சேர்ந்து கொள்கின்றனர். அரசியல் கட்சியினர் பொதுமக்களுக்கு சேவை செய்வதை விட்டு விட்டு பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் செயல்படுகின்றனர். மக்கள் நலனில் அரசியல் கட்சியினருக்கு அக்கறை இல்லை.

ஆண்டுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட் போடப்படுகிறது. இந்த தொகையை கொண்டு மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று எந்த கட்சிகளும் வாக்குறுதி கொடுப்பது இல்லை. தற்போது அரசியல் கட்சியினர் இலங்கை தமிழர் பிரச்சினையை தேர்தல் பிரசாரத்தின் ஆயுதமாக எடுத்துள்ளனர்.

இலங்கை தமிழர் பிரச்சினையை பொறுத்தமட்டும் அன்னிய நாட்டு பிரச்சினை. அன்னிய நாட்டு பிரச்சினையில் இங்குள்ள அரசியல் கட்சியினர் தலையிட முடியாது. இலங்கை பிரச்சினையில் தங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை அறிந்த அரசியல்வாதிகள் அந்த பிரச்சினையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஓட்டு பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். தமிழ் பெண்கள் சிங்கள ராணுவத்தினரால் கற்பழிக்கப்படுகின்றனர். இதற்காக பலமுறை வக்கீல்களும், தமிழ் அமைப்புகளும் போராட்டம் நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இலங்கை தமிழர் பிரச்சினையை முன்வைத்து தேர்தல் பிரசாரம் செய்ய அரசியல் கட்சியினருக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய, மாநில தேர்தல் கமிஷனுக்கு 11.4.2008 அன்று மனு அனுப்பினேன். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நான் கொடுத்த மனுவை பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.கே.கிருஷ்ணன், டி.ராஜா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் வி.கோபால்சாமி ஆஜராகி வாதாடினார். விசாரணையின் போது நீதிபதிகள், “மனுதாரர் தேர்தல் கமிஷனுக்கு மனு அனுப்பி 6 நாட்கள் தானே ஆகிறது. அந்த மனு தேர்தல் அதிகாரிகளுக்கு இன்னும் கிடைத்து இருக்காதே. அதற்குள் எப்படி தேர்தல் கமிஷனுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியும்” என்றனர். அதன்பின்பு விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

மாலைதீவில் 10 ஆயிரம் வீடுகள் இலங்கையர்களால் நிர்மானிக்கப்படும் – அமைச்சர் ராஜித தகவல்

rajitha.jpg மாலைதீவில் பாரிய வீடமைப்புத் திட்டமொன்று அமைக்கும் பணியை இலங்கைக்குப் பெற்றுக்கொடுக்க அந்நாட்டு அரசாங்கம் முன்வந்துள்ளதாக தேசநிர்மான மற்றும் பொறியியல்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அண்மையில் மாலைதீவுக்கு தான் மேற்கொண்ட விஜயத்தின் பலனாகவே இந்த நன்மை இலங்கைக்குக் கிடைத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

இத்திட்டத்தின்படி மாலைதீவின் தலைநகரில் பாதி சொகுசு வசதிகளுடன் கூடிய 10 ஆயிரம் வீடுகள் நிர்மானிக்கப்படவுள்ளன. இந்த வீடமைப்புத் திட்டத்தை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கைக் கட்டிடக் கலைஞர்களின் உதவியுடன் பூர்த்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்

பாகிஸ்தானுக்கு சர்வதேச நாடுகள் நிதி உதவி

pakis-japan.jpg பாகிஸ் தானின் அபிவிருத்திக்கேன சர்வதேச கொடையாளி நாடுகள் 5 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான உதவியை வழங்க முன்வந்துள்ளார்கள். உலக வங்கி மற்றும் ஜப்பான் ஆகியவற்றினால், டோக்கியோவில் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட இதற்கான மாநாட்டில் 30க்கும் அதிகமான நாடுகள் கலந்துகொண்டன.

இதனைவிட பாகிஸ்தானிய பொருளாதார பிரச்சினையை தவிர்க்க சர்வதேச நாணய நிதியமும் 7 பில்லியன் டாலர்களை கடனாக வழங்க முன்வந்துள்ளது.

அமெரிக்காவும், ஜப்பானும் தலா ஒரு பில்லியன் டாலர்களை வழங்க முன்வந்துள்ளன. உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய திட்டங்களின் மூலம் பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே இந்த உதவிகளின் நோக்கம் என்று கொடையாளிகள் கூறுகின்றனர்.

கிழக்கைப்போல விரைவில் வடக்கிலும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும் – தொழிற் பயிற்சி அமைச்சர் பியசேன கமகே

கிராமிய மக்கள், அரசின் செயற்திட்டங்களை நன்கு உணர்ந்துள்ளனர். மகிந்த சிந்தனை மூலம் கிராமங்களின் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் கிராமப்புற மக்கள் எமது அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பதுடன் அரசை சூழ்ந்தும் நிற்கின்றனர் என்று தொழிற் பயிற்சி தொழில் வழங்கல் அமைச்சர் பியசேன கமகே கூறினார்.  கிங்கங்கைக்குக் குறுக்கே கல்வான என்ற இடத்தில் நிறுவப்பட்டுள்ள பாலத்தை திறந்து வைத்த பின்னர் அங்கு இடம் பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது;

கடந்த காலங்களில் இந்த நாடு சகல துறைகளிலுமே அமைதியற்றுத் தவிர்த்தது கடந்த மூன்று வருடகாலமாக எமது ஜனாதிபதி எடுத்த நடவடிக்கைகளால் இன்று நாட்டிலே அமைதி நிலை ஏற்பட்டுள்ளது. அன்று கிழக்கிலே பயங்கரவாத நிலை ஏற்பட்டபோது அதனை அடியோடு ஒழித்துக்கட்டப்பட்டது இன்று அங்கு அமைதி நிலவுவது மாத்திரமல்ல அபிவிருத்தி வேலைகளும் மிகத் துரிதமாக முன்னெடுக்கப்படுகின்றது அதே போல் வடக்கிலும் மிக விரைவில் அபிவிருத்திச் செயற் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் அதனை நாம் செய்தே தீருவோம்.

ஐக்கிய தேசிய கட்சி என்னதான் கூறினாலும் இன்று மக்கள் அக்கட்சி மீது வைத்துள்ள நம்பிக்கைகளை இழந்து விட்டனர். அக் கட்சியினரும் மக்களை விட்டுத் தூர விலகிக் கொண்டிருக்கிறது. இந் நிகழ்வில் தென் மாகாண சபை உறுப்பினர் நிஷாந்த முத்துஹெமடி சம்லிவிதானாச்சி உட்பட மற்றும் பலரும் உரையாற்றினர்.

ஐக்கிய நாடுகள் சபைக்கு முடியாவிட்டால் யாரால் வன்னி மக்களை காப்பாற்ற முடியும்: தமிழீழ விடுதலைப்புலிகள்

nadesan-10.jpgபொது மக்களின் இழப்புகளை தடுக்கும் ஒரே அமைப்பான ஐக்கிய நாடுகள் சபை, வன்னியில் உள்ள மக்களை காப்பாற்ற முடியாதுவிட்டால் யாரால் அவர்களை காப்பாற்ற முடியும் என தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் கேள்வி எழுப்பினார்.
 
வன்னியில் உள்ள மக்களின் நிலைமையை தெரிந்து கொள்வற்காக இலங்கைக்கு வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி நம்பியாரின் வன்னிக்கான வருகையை இலங்கை அரசாங்கம் தடுக்கக்கூடாது என தமிழீழ விடுதலைப்புலிகள் கோரியுள்ளனர்.

நம்பியார் வன்னிக்கு வந்தால் உண்மை நிலை தெரியவந்து விடும் என்பதற்காகவே இலங்கை அரசாங்கம் அவரின் வன்னி வருகையை தடுத்துள்ளதாக நடேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் யுத்த நிறுத்தக் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ள நிலையிலேயே தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

மக்கள் பிரச்சினைளைக் கண்டறிய ஆனந்தசங்கரி யாழ். விஜயம்

jaffna_a9.jpgகிளிநொச்சி முல்லைத்தீவு பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்து மன்னார், வவுனியா பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரிநிலையங்களில் ஏக்கத்துடன் வாழும் எமது உறவுகளின் உண்மையான நிலைமைகளையும்,  மன்னார் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைபெறுபவர்களையும்,  போரினால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் நேரடியாக பார்வையிட்டு ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் நேற்று (17) தொடக்கம் 23.04.2009 வரை ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள எமது கட்சியின் பணிமனையில் தங்கியிருந்து யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களின் உறவினர்களை சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும்,  அத்துடன் யாழ் மாவட்ட பொதுமக்கள் மற்றும் யாழ்நகர வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் கலந்துரையாடவுள்ளார்

தமிழர் தேசிய இயக்க தொண்டர் தீக்குளித்து சாவு

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டும் என்று கோரியும் சென்னையில் தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் தீக்குளித்து இறந்தார். சிவானந்தன் (46) என்ற அந்தத் தொண்டர் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனின் தீவிரமான ஆதரவாளராவார். சிவானந்தனுக்கு திருமணம் ஆகவில்லை. சென்னை வடபழனியில் தங்கியிருந்து பெயிண்டர் வேலை செய்து வந்ததார்.

ஈழத்துக்கு ரூ10000 கோடி புனரமைப்பு திட்டம்-ஜெயலலிதா

jayalalitha.jpgமத்தியில் அதிமுக உதவியுடன் அமையும் ஆட்சியில், இலங்கைத் தமிழர்களின் மறு புனரமைப்புக்கு ரூ. 10 ஆயிரம் கோடியில் பெரும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்கினார்.

இன்று காலை தனி விமானம் மூலம் தூத்துக்குடிக்கு அவர் சென்றார். பின்னர் அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் நெல்லைக்குப் புறப்பட்டார் பின்னர் நெல்லை டவுன், வாகையடி முனை என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசி தனது பிரசாரத்தை தொடங்கினார்.

அப்போது, இலங்கையில், உள்ள தமிழர்களுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்பில் மறு புனரமைப்புக்கு ஏற்பாடு செய்வோம். தமிழர்களுக்கு முழு சுயாட்சியோ அல்லது சுய நிர்வாகமோ அல்லது தனி ஈழமோ எதுவாக இருந்தாலும் அது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், மத்திய அரசின் மூலமாக தமிழர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வைப்பேன். இந்திய அரசால், இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்ட கச்சத்தீவை மீட்போம் என்றார்.

ஐ.நாவினால் விடுக்கப்பட்ட தற்காலிக போர் நிறுத்த அவகாசம் அதிகரிப்பது தொடர்பான கோரிக்கை அரசினால் நிராகரிப்பு

ஐ.நாவினால் விடுக்கப்பட்ட தற்காலிக போர் நிறுத்த அவகாம் அதிகரிப்பது தொடர்பிலான கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ளது என இலங்கை பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள தற்காலிக போர் நிறுத்த அவகாசத்தை அதிகரிக்குமாறும், மோதல் தவிர்ப்பை மேலும் அதிகரிப்பதன் ஊடாக, பொது மக்களின் நடமாட்ட சுதந்திரத்தை உறுதி செய்து, அவர்களைப் பாதுகாப்பான பிரதேசங்களுக்கு வரவழைக்கலாம் என ஐரோப்பிய ஒன்றிய தலைமையகம் கடந்த வாரம் கோரிக்கை விடுத்திருந்தது.

இதேவேளை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் பிரதிநிதியான விஜய் நம்பியார்யாருடன் அரச அதிகாரிகளின் சந்திப்பை அடுத்து இத்தீர்மானம் அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பி.பி.சி செய்தி தெரிவித்துள்ளது.

மேலும் ஐ. நா செயலாளர் நாயகத்தின் பிரதிநிதியான விஜய் நம்பியார்யாருடன் சந்திப்பின் போது “தற்காலிக போர் நிறுத்தத்தை அதிகரிப்பது தொடர்பில் எவ்வித மாற்றங்களும் இல்லை என தான் தெளிவாக ஐ.நா பிரதிநிதியிடம் தெரிவித்ததாகவும் முன்னார் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தினால் எவ்வித பயனும் ஏற்படவில்லை எனவும் ,சிலியன்களை விடுவிக்குமாறும் சர்வதேசம் விடுதலைப்புலிகளுக்கு விடுத்த கோரிக்கைகளுக்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை எனவும்” இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ பி.பி.சி செய்தி ஸ்தாபனத்திற்கு அளித்த விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார்

பாதுகாப்பு பகுதியில் ராணுவம் தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது – பிரணாப் முகர்ஜி

mugarsjee_piranap.jpg இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று இந்தியா வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார் இது விடயமாக அவர் விடுத்துள்ள  அறிக்கையில்,

இலங்கை தமிழர்களின் நிலைமை குறித்து இந்தியா மிகுந்த கவலை அடைந்துள்ளது. இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போரில் ஏராளமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். இதை இலங்கை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும்.

பாதுகாப்பு பகுதியில் ராணுவம் தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது. பாதுகாப்புப் பகுதியில் உள்ள தமிழர்களின் நிலைமை கவலை அளிப்பதாக உள்ளது. போர் நடைபெறும் பகுதியில் சிக்கிக்கொண்டுள்ள தமிழர்கள் அங்கிருந்து பத்திரமாக வெளியேற இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை அரசு 2 நாட்கள் போர்நிறுத்தம் அறிவித்ததை இந்தியா வரவேற்கிறது. போர் நடைபெறும் பகுதியில் சிக்கிக் கொண்டுள்ள மக்கள் பாதுகாப்புடன் வெளியேறும் வகையில், போர் நிறுத்தத்தை அரசு நீடிக்க வேண்டும். மக்கள் வெளியேற விடுதலைப் புலிகளும் அனுமதிக்க வேண்டும்.

இலங்கை பிரச்சனையில் இந்தியா மத்தியஸ்தில் ஈடுபடாது. இந்த கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். தங்கள் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இனப் பிரச்சனைக்கு இலங்கை அரசு தீர்வு காண வேண்டும்.

இந்தியா அனுப்பி வைத்துள்ள 62 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் புல்மூட்டை என்ற இடத்தில் உள்ள முகாமில் 1,500க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்கு உணவு, மருந்து உள்ளிட்ட பொருட்களை இந்தியா ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ மேலும் 40 ஆயிரம் மூட்டை உதவிப் பொருட்களை விரைவில் இந்தியா அனுப்பி வைக்க இருக்கிறது.

இலங்கை தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு இலங்கை அரசும் சம்பந்தப்பட்ட மற்றவர்களும் இந்தியாவின் கோரிக்கை ஏற்று நடப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறியிருந்தார் பிரணாப்.