அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

இருதரப்பினரும் ஒத்துழைத்திருந்தால் இழப்புக்களைத் தவிர்த்திருக்க முடியும். எரிக்சொல்ஹேம்.

eric-solheim.jpgஇலங்கை நிலைமைகள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள நோர்வே நாட்டின் அமைச்சர் எரிக்சொல்ஹேம் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கையில் யுத்தத்தில் ஈடுபடுகின்ற இருதரப்பினரும் யுத்தத்தின் மூலம் தீர்வொன்றைக் காணமுடியும் என நம்பினர். ஆனால் இருதரப்பினரும் ஒத்துழைத்திருந்தால் இன்று இடம்பெற்றுள்ள இழப்புக்களைத் தவிர்த்திருக்க முடியும்.

மேலும் புலிகள், தமிழ் மக்களுக்காக போராடுவதாக கூறுகின்றனர், அவ்வாறாயின் யுத்த சூனியப் பிதேசத்தில் இருந்து வெளியேற விரும்பும் மக்கள் மீது புலிகள் துப்பாக்கி பிரயோகம் செய்வதை தவிர்த்து அவர்களது விருப்பிற்கேற்ப வெளியேற அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய 20 மில்லியன் நோர்வேஜியன் குரோண்களை இலங்கை அரசிற்கு ஒதுக்கியுள்ளாதாகவும் இருதரப்பினரும் சமாதான மேசைக்குச் சென்று அரசியல் தீர்வொன்றிற்கான வழியைத் திறந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மனோவுக்கு அல்லது விக்ரமபாகுவுக்கே மேல் மாகாணத் தேர்தலில் வாக்களியுங்கள்- கூட்டமைப்பு கோரிக்கை

election.jpgஜனநாயக மக்கள் முன்னணி அல்லது இடதுசாரி ஐக்கிய முன்னணி சார்பான வேட்பாளர்களே மேல் மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்களின் தெரிவாக இருக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி.யான என். ஸ்ரீகாந்தா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

மேல்மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக கருத்து வெளிட்டிருக்கும் ஸ்ரீகாந்தா மேலும் தெரிவித்திருப்பதாவது; எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் தமிழ் வாக்காளர்கள் அனைவரும் தத்தமது வாக்குரிமையை தவறாது பயன்படுத்த வேண்டும். இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் தமிழ் மக்களின் முன்பாக இருக்கும் தெரிவு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதே.

எனவே, ஒன்றில் மனோ கணேசன் எம்.பி.யினால் (ஜனநாயக மக்கள் முன்னணி) நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வரும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவின் தலைமையிலான இடதுசாரி ஐக்கிய முன்னணிக்கே வாக்களிக்க வேண்டும்.

இந்த 2 அணிகளில் எதனை தெரிவு செய்வதென்பது அவரவரைப் பொறுத்தது. இந்த 2 அணிகளுமே தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளோடு இருந்து செயற்பட்டு வந்திருக்கின்றன.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கு உதவி வழங்குமாறு சிவசக்தி ஆனந்தன் எம்.பி அவசர வேண்டுகோள்

cvili.jpgவன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு கடந்த சிலதினங்களில் பெரும் எண்ணிக்கையில் வந்துள்ள மக்களுக்கு உதவி வழங்குமாறு கிராம மட்டத்திலான அமைப்புக்களிடம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரி.எம்.வி.பியிலிருந்து விலகிய இளைஞனை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி பொலிஸில் தஞ்சம் பெற்றிருந்த இளைஞரொருவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பெற்றோரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளார். கருங்காலிச்சோலையைச் செர்ந்த வெற்றிவேல் புஸ்பராஜா ( வயது19 ) என்ற இளைஞரே இவ்வாறு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

கடந்த 13 ஆம் திகதி திருமணம் செய்துள்ள இந்நபர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் தொடர்ந்தும் இருக்க விரும்பவில்லை என்றும் தன்னை விடுவிக்க உதவுமாறும் கோரி கல்குடா பொலிசில் இன்று தஞ்சம் கோரியிருந்தார் .

குறிப்பிட்ட இளைஞரின் கோரிக்கையின் பேரில் அவரது வாக்கு மூலங்களை பதிவு செய்த பொலிஸார் இன்று வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் ஆஜர் படுத்திய போது பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கான உத்தரவை நீதிபதி பிறப்பித்திருந்தார் 

இரண்டாம் கட்ட தேர்தல்: 60 சதவீத ஓட்டுபதிவு

india-election.jpg மக்களவை இரண்டாம் கட்ட தேர்தலில் 60 சதவீத ஓட்டு பதிவாகியுள்ளது. லோக்சபா தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் 12 மாநிலங்களில் 140 தொகுதிகளில் நடைபெற்றது. இதில் சராசரியாக 60 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த அதிமுக தொண்டர் மரணம்

ஈழத்தமிழர்களை காக்கக் கோரி தீக்குளித்த அதிமுக தொண்டர் சுப்பிரமணி இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பண்ருட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 43). அதிமுக தொண்டரான இவர் திருப்பூரில் உள்ள பனியன் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள், மனைவி உள்ளனர்.

இலங்கையில் ஈழத்தமிழர்கள் போரில் சிக்கி தவிப்பதை பற்றி அடிக்கடி தனது குடும்பத்தாரிடமும், நண்பர்களிடம் பேசி வந்த இவர், இன்று திடீரென கொளத்தூர் பாளையம் என்ற இடத்தில் ஈழத்தமிழர்களுக்காக உயிர்விடுகிறேன் என்று தீக்குளித்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் சுப்பிரமணியை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 90 சதவீதத்திற்கு மேல் தீக்காயங்களுடன் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 6 மணிக்கு உயிரிழந்தார். இவர் ஈழத்தமிழர்களுக்காக உயிர்விடுவதை பற்றி தனது டைரியில் எழுதி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இலங்கைக்கு இந்த வாரம் பிரிட்டிஷ் அமைச்சர் வருகிறார் -பிரதமர் கோர்டன் பிரவுண் அறிவிப்பு

uk-parl.jpgஇலங்கைக்கு இந்த வாரம் அமைச்சர் ஒருவரை அனுப்பவுள்ளதாக பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியிருப்பதாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை தெரிவித்தது.  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து பிரிட்டிஷ் எம்.பி.க்களடங்கிய தூதுக்குழுவொன்று இலங்கைக்கு வருகை தர இடமளிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் இங்கு தேவைப்படும் மனிதாபிமான உதவிகளை மதிப்பீடு செய்யவே இத் தூதுக்குழு வருகை தரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று பாராளுமன்றத்தில் வாராந்த கேள்வி, பதில் நேரத்தின்போது இதனை தெரிவித்திருக்கும் பிரவுண், பிரிட்டனைச் சேர்ந்த எம்.பி.க்களடங்கிய தூதுக்குழுவை ஏற்றுக் கொள்ள இப்போது இலங்கை தயாராக இருப்பதாக நம்புவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த வார பிற்பகுதியில் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் இலங்கைக்கு செல்வாரெனவும் அவர் கூறியுள்ளார்.  மனிதாபிமான உதவி தேவை என்று அரசுக்கு வலியுறுத்துவோம். அத்துடன் யுத்த நிறுத்தம் தேவை என்றும் இந்தப் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு அவசியம் என்றும் வலியுறுத்துவோம் என்று கோர்டன் பிரவுண் கூறியுள்ளார்.

பாதுகாப்பு வலயத்திலிருந்து 90 மணித்தியாலங்களில் 103,143 பொதுமக்கள் வருகை

cvili.jpgபுதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை முதல் இன்று காலை வரை 103,143 பொதுமக்கள் இராணுவத்தினரிடம் பாதுகாப்பு கருதி வந்து சேர்ந்துள்ளதாக இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை மாலை 6.00 மணிமுதல் நேற்று இரவு வரை 83,429 பொதுமக்கள் இராணுவத்தின் 58 ஆம் படையணியிடம் வந்து சேர்ந்துள்ளனர். இவர்களுள் 31,017 சிறுவர்களும், 27,990 பெண்களும், 24,422 ஆண்களும் அடங்குவதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இராணுவத்தினர் பொதுமக்களைப் பாதுகாப்பு வலயத்தில் இருந்து மீட்கும் பணிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது

cvili.jpg

பசில் ராஜபக்ஷ நேற்றிரவு இந்தியா விஜயம்

basil-raja.jpg ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ நேற்றிரவு இந்தியா வந்துள்ளதாக இந்திய இணையத் தளம் செய்தி வெளியிட்டிருக்கின்றது. இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழகத்தில் தீவிர எதிர்ப்பலை கிளம்பியுள்ள நிலையில் பசில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மனிதாபிமான நிலவரம் மற்றும் யுத்த சூனிய பிரதேசத்தில் பொதுமக்களது பாதுகாப்பு குறித்து இந்த சந்திப்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட உள்ளதாக அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

பேரவாவி குடியிருப்பாளர்களுக்கு தெமட்டகொடவில் வீடமைப்புத் திட்டம் – முதற்கட்டமாக ஆகஸ்ட்டில் 320 வீடுகள் நிர்மானம்

dinesh_gunawardena.jpgகொழும்பு,  பேரவாவி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்காக தெமட்டகொட பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பூர்த்தியாகவுள்ளது.

1000 வீடுகளைக் கொண்டதாக அமைக்கப்படவுள்ள இந்த வீடமைப்புத் திட்டத்தினன் முதற்கட்டமாக 320 வீடுகளை நிர்மாணிக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகர அபிவிருத்தி,  புனித பிரதேச அபிவிருத்தி அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்றுக் காலை தெமட்டகொட பகுதிக்கு விஜயம் செய்து வீடமைப்புத் திட்டப் பணிகளைப் பார்வையிட்டார்.

இந்த வீடமைப்புத் திட்டத்தில் ஒரு வீட்டை நிர்மாணிக்க 30 இலட்சம் ரூபாவும் வீட்டை நிர்மாணிப்பதற்கான காணிக்கு 15 இலட்சம் ரூபாவும் செலவிடப்படவுள்ளதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.