இலங்கைக்கு இந்த வாரம் அமைச்சர் ஒருவரை அனுப்பவுள்ளதாக பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியிருப்பதாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை தெரிவித்தது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து பிரிட்டிஷ் எம்.பி.க்களடங்கிய தூதுக்குழுவொன்று இலங்கைக்கு வருகை தர இடமளிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் இங்கு தேவைப்படும் மனிதாபிமான உதவிகளை மதிப்பீடு செய்யவே இத் தூதுக்குழு வருகை தரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தில் வாராந்த கேள்வி, பதில் நேரத்தின்போது இதனை தெரிவித்திருக்கும் பிரவுண், பிரிட்டனைச் சேர்ந்த எம்.பி.க்களடங்கிய தூதுக்குழுவை ஏற்றுக் கொள்ள இப்போது இலங்கை தயாராக இருப்பதாக நம்புவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த வார பிற்பகுதியில் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் இலங்கைக்கு செல்வாரெனவும் அவர் கூறியுள்ளார். மனிதாபிமான உதவி தேவை என்று அரசுக்கு வலியுறுத்துவோம். அத்துடன் யுத்த நிறுத்தம் தேவை என்றும் இந்தப் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு அவசியம் என்றும் வலியுறுத்துவோம் என்று கோர்டன் பிரவுண் கூறியுள்ளார்.