அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

யுத்த நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளதான ஊடக செய்திக்கு அரசு மறுப்பு

sri-lanka-flags.jpgயுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியை அரசு மறுத்துள்ளது.

இருப்பினும் கனரக ஆயுதங்களை மற்றும் விமானத்தாக்குதல்களை மோதல் களங்களில் பயன்படுத்த வேண்டாமென அரசாங்கம் இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மோதல் இடம்பெறும் பகுதிகளில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படின் பொதுமக்களுக்கு உயிர்ச்சேதங்கள் அதிகளவில் ஏற்படும் என்பதால் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

லண்டனிலுள்ள இந்தியத் தூதரகத்தினுள் அத்துமீறி நுழைந்து ஆர்ப்பாட்டம்

ind-h-c.jpgஇலங்கை பிரச்சினை குறித்த இந்திய அரசின் நிலைப்பாட்டினைக் கண்டித்து இன்று லண்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகம் முன்பாக ஆர்ப்பாடம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்திய தூதரகத்தின் வீசா வழங்கும் பகுதி கட்டிடத்தினுள் ஆர்ப்பாட்டகாரர்கள் அத்துமீறி நுழைந்து இலங்கையில் இராணுவ நடடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர்.

இடம்பெயர்ந்த சிவிலியன்களின் நலன்பேனும் விசேட குழுவின் பணிகள் ஆரம்பம்!

Wanni_War_Welfare_Campபுலிகளின் பிடியிலிருந்து தப்பி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வரும் மக்களின் நலன்புரி நடவடிக்கைகளைக் கவனிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவினர் தமது பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

அநுராதபுரம்,  பொலன்நறுவை மற்றும் கண்டி ஆகிய 3 மவாட்டங்களின் செயலாளர்களை உள்ளடக்கிய இக்குழுவினர்,  இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள வவுனியா மாவட்ட செயலாளர்களுக்கு உதவி வருகின்றனர். இக்குழுவினர் அரசாங்க நிறுவனங்கள், தொண்டர் அமைப்புக்கள் மற்றும் மாகாண சபைகள் போன்றவற்றின் மூலம் இடம்பெயர்ந்தோருக்கான நிவாரணத் திட்டங்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபாகரன் தப்பிச் செல்வதைத் தடுக்க இந்தியக் கடற்பிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு – இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல்

india.jpgபுலிகளின் தலைவர் பிரபாகரன் இலங்கையிலிருந்து இந்தியாவுக்குத் தப்பியோடலாம் என்று அந்நாட்டின் உளவுத்துறை வழங்கிய தகவலையடுத்து தமிழ் நாட்டின் கரையோரப் பகுதிகளில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
பிரபாகரன் பாக்கு நீரினையூடாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்லலாம் என்ற தகவலையடுத்து சென்னையிலிருந்து இராமேஸ்வரம் வரையான 650 கிலோ மீற்றர் நீளமுடைய கடற்பரப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கரையோர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள கப்பல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக பொலிஸ் அத்தியட்சகர் முகுன் கொட்னிஷ் தலைமையிலான விரைந்து செயற்படும் அதிரடிப் படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இக்கப்பல்கள் சென்னையின் தெற்கில் 300 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள நாகபட்டினம் கரையோர பகுதியிலும் சென்னையில் வலப்பக்கமாக 300 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள ராமேஸ்வரம் கரையோர பகுதியிலும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் இந்தியப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். 

இந்திய அரசு தவறான வெளிநாட்டு கொள்கைகளால் உலக அரங்கில் பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டாம் – சிவாஜிலிங்கம்

sivajilingam0.jpg சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கைத் தமிழ் எம்.பி.சிவாஜிலிங்கம், இலங்கையில் நடைபெற்று வரும் போரில் இந்த ஆண்டில் மட்டும் 9 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; 17 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர்; 35 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். இந்திய உயர்நிலைக் குழு கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) இலங்கை சென்று திரும்பியது. அக்குழு இலங்கை அரசிடம் போர் நிறுத்தம் குறித்து எந்த கோரிக்கையையும் விடுக்கவில்லை. குழு திரும்பி சென்றவுடன் 22 தடவை விமான குண்டு வீச்சுகளும், பீரங்கி தாக்குதல்களும், முப்படைத் தாக்குதல்களும் நடைபெற்றுள்ளன.

அண்மையில் இலங்கைக்குச் சென்று திரும்பிய வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ரவி சங்கர் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவைச் சந்தித்து இனி இலங்கைத் தமிழர்களால் ஒரே நாட்டில் வாழ முடியாது. தமிழ் ஈழம்தான் இதற்கு தீர்வு என்று கூறியுள்ளார். இதனையடுத்து அதிமுக அணி வெற்றி பெற்றால் தனி ஈழம் அமையப் பாடுபடுவேன் என ஜெயலலிதா கூறியதற்கு பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜெயலலிதாவின் இந்த முடிவுக்கு உலகம் முழுதும் உள்ள ஈழத் தமிழர்கள் அனைவரும் கடிதங்கள், மின்னஞ்சல் உள்ளிட்டவை மூலம் நன்றி தெரிவிக்க வேண்டும். ஜெயலலிதாவின் இந்த முடிவு இலங்கை அரசு பேரதிர்ச்சி கொடுக்கும். இந்திய அரசு தவறான வெளிநாட்டு கொள்கைகளால் உலக அரங்கில் பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்றார்.

டயலொக் ஊடாக துரித குறுந்தகவல் சேவை – அரசாங்க தகவல் திணைக்களம் நடவடிக்கை

breaking_news-from-dialog.jpgஅரசாங்க தகவல் திணைக்களம் டயலொக் டெலிகொம் நிறுவனத்துடன் இணைந்து துரித குறுந்தகவல் சேவையொன்றை வழங்கவுள்ளது. இது தொடர்பான அங்குரார்ப்பண வைபவம் நேற்று முன்தினம் அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது இச்சேவை தொடர்பான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.

இவ்வைபவத்தில் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷசன யாப்பா,அமைச்சின் செயலாளர் ஏ. திசாநாயக்க, தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அநுஷ பெல்பிட்ட மற்றும் டயலொக் டெலிகொம் நிறுவனதின் சந்தைப்படுத்தல் பிரிவு தலைமை அதிகாரி நுசாட் பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

டயலொக் தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு எதிர்வரும் ஜுலை மாதம் 14ஆம் திகதி வரை இலவசமாக வழங்கப்படவுள்ள இந்த துரித குறுந்தகவல் சேவையை, இன்போ என ஆங்கிலத்தில் குறிப்பிட்டு 678 எனும் இலக்கத்துக்கு எஸ்.எம்.எஸ். செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைச் சிறார்கள் உட்பட 52 புலி உறுப்பினர்கள் சரண் – பாதுகாப்பு அமைச்சு

Wanni_War_Welfare_Campபடையினரால் கைப்பற்றப்பட்ட பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட வலைஞர்மடம் பகுதியில் வைத்து பாடசாலைச் சிறார்கள் உட்பட 52 புலி உறுப்பினர்கள் நேற்று இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதுபற்றி அமைச்சு மேலும் குறிப்பிடுகையில், சரணடைந்தவர்களுள் யுத்தப் பயிற்சி பெற்றுள்ள 13 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட 23 பேர் அடங்கியுள்ளனர். இதுதவிர புலிகளால் அண்மையில் தமது சிறுவர் படைக்கு பலவந்தமாகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட 29 சிறுவர்களும் இக்குழுவில் காணப்படுகின்றனர்.

இராணுவத்தினர் தம்மைப் பயங்கரவாதப் பிடியிலிருந்து காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையிலேயே தாங்கள் சரணடைந்ததாகவும்,  தமது பெற்றோரைத் தேடித் தருமாறும் சரணடைந்த புலி உறுப்பினர்கள் பாதுகாப்புத் தரப்பினரிடம் கேட்டுள்ளனர். தம்மைப்போல இராணுவத்தினரிடம் சரணடைவதற்கு புலிப்பயங்கரவாதிகளிடம் சிக்கியுள்ள நுற்றுக்கணக்கானோர் விருப்பம்கொண்டுள்ளதாகவும் சரணடைந்தோர் மேலும் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் உள்ள புலிகளின் இறுதி பதுங்கிடமான வெள்ள முள்ளிவாய்க்கலிலிருந்து சுமார் 6 கிலோ மீற்றர் தொலைவிலேயே வலைஞர்மடம் அமைந்துள்ளது. இராணுவத்தின் 58ஆம் படைப் பிரிவினரே இப்பிரதேசத்தை நேற்று முன்தினம் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தனர். வலைஞர்மடம் பிரதேசம் கைப்பற்றப்பட்டதும் அங்கு தமது நிலைகளைப் பலப்படுத்திய படையினர் அன்றைய தினமே அங்கிருந்த 500 சிவிலியன்களை உடனடியாக விடுவித்தனர் என்றும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

எனது தந்தையின் படுகொலையால் நான் கொதிப்படைந்தேன் – பிரியங்கா

23-priyanka.jpgஎனது தந்தை ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டு சில வருடங்கள் வரையில் நான் மிகவும் கொதிப்புடன் இருந்தேன் என்று கூறியுள்ளார் பிரியங்கா காந்தி. இதுதொடர்பாக என்டிடிவிக்கு அவர் அளி்த்துள்ள பேட்டி..

எனது தந்தை கொல்லப்பட்டபோது அதன் பாதிப்பு எனக்குப் புரியவில்லை. ஆனால் அப்போது நான் கோபமடைந்தேன். அந்தக் கோபம் என்னிடம் சில ஆண்டுகள் வரை இருந்தது. நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் கூட கோபமாகவே இருந்தது. நான் இளம் வயதினளாக அப்போது இருந்ததால் அந்தக் கோபம் இருந்திருக்கலாம் என நினைக்கிறன். ஆனால் படிப்படியாக என்னை நான் பக்குவப்படுத்திக் கொண்டேன். கோபமும் படிப்படியாக குறைந்து போனது.

தமிழ் மக்கள் புத்திசாலிகள், கடுமையாக உழைக்கக் கூடியவர்கள். அது என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. தமிழ் தேசியவாதத்தை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் அதற்கான முறை தவறு. ஒரு மனிதராக, இன்னொருவரை கொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனது பாட்டியும், தந்தையும் அரசியல் காரணங்களால் கொல்லப்பட்டனர். அதேபோல எனது தாயும் கொல்லப்படுவாரோ என்று நான் 2004ம் ஆண்டு பயந்தேன்.

அந்த ஆண்டில் நான் அவருடைய அலுவலகத்திற்குப் போனபோது அவரைச் சுற்றிலும் இருந்தவர்கள், பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என வலியுறுத்திக் கொண்டிருந்தேன். அதே வேகத்தில், எனது சகோதரரின் அறைக்குள் புகுந்து, இவரும் கொல்லப்படப் போகிறார் என்று ஆதங்கத்துடன் கூறினேன். இப்போது நான் நிம்மதியாக இருக்கிறேன். எனது தாயாரைப் பற்றியோ, சகோதரரின் பாதுகாப்பு பற்றியோ தினசரி நான் கவலைப்படத் தேவையில்லை என்றார் பிரியங்கா.

வெள்ளமுள்ளி வாய்க்கால் கடற்பரப்பில் இரு தரப்பினருக்கிடையில் கடும் மோதல் கடற்புலிகளின் 3 படகுகள் அழிப்பு; 12 பேர் பலி

navy.jpgமுல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் கடற்புலிகளுக்கும் கடற்படையினருக்கும் இடையில் நேற்று அதிகாலை ஒருமணியளவில் கடும் சமர் இடம்பெற்றது எனப் படைத்தரப்புச் செய்திகள் தெரிவித்தன. முள்ளிவாய்க்கால் கடற்பகுதியூடாக புலிகளின் படகுகள் வருவதை அவதானித்த கடற்படையினர் நடத்திய தாக்குதல் சில மணிநேரம் நீடித்திருந்தது என்றும் படைத் தரப்பில் கூறப்பட்டது.இத்தாக்குலில் கடற்புலிகளின் மூன்று படகுகள் அழிக்கப்பட்டன. அதிலிருந்த கடற்புலிகள் 12 பேர் உயிரிழந்தனர் என்றும் படைத்தரப்புச் செய்திகள் தெரிவித்தன.

எனினும் இந்த மோதல்களில் கடற்படையினருக்கு ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் நேற்று இரவு வரை வெளியிடப்படவில்லை

வன்னிப் நிலைமை குறித்து ஆராய பிரிட்டன், பிரான்ஸ், சுவீடனின் வெளிவிவகார அமைச்சர்கள் ஒரே நாளில் கொழும்பு வருவர்!

British_French_Foreign_Ministers வன்னியில் போர்ப்பகுதியில் சிக்கியுள்ள மக்களின் நிலை குறித்து சர்வதேச சமூகத்தில் கவலை அதிகரித்துள்ள நிலையில், பிரிட்டன், பிரான்ஸ், சுவீடன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிவிவகார அமைச்சர்கள் நாளை மறுதினம் புதன்கிழமை இலங்கைக்கு திடீர்  முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் மில்லி பாண்ட், பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் பேனாட் கொஷ்னர், சுவீடன் வெளிவிவகார அமைச்சர் ஹாம் பில்ட் ஆகியோரே இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர் என பிரிட்டிஷ் பிரதமர் அலுவலகச் செய்திகள் தெரிவித்தன.