அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

‘அடங்காப்பற்று’ மனித சங்கிலி போராட்டம் ஒத்திவைப்பு

adangappattu-2.jpg கனடாவின் ரொறன்ரோ நகரில் இன்று நடைபெறவிருந்த ‘அடங்காப்பற்று’ நிகழ்வும் மனிதச் சங்கிலிப் போராட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருக்கின்றனர்.

இது தொடர்பாக கனடியத் தமிழ் மாணவர்களும் கனடியத் தமிழர் சமூகமும் தெரிவித்திருப்பதாவது:

பல தரப்பினரது அவசர வேண்டுகோள்களுக்கு இணங்க ரொறன்ரோவின் நகரின் மத்தியில் இன்று செவ்வாய்க்கிழமை (05.05.09) நடைபெறவிருந்த ‘அடங்காப்பற்று’ மற்றும் மனிதச்சங்கிலி – 3 ஆகிய நிகழ்வுகள் தற்காலிகமாக பின்போடப்படுகின்றது. எமது தாயக அவலம் தீர்க்கும் வரை என்றும் அடங்காது எமது ‘அடங்காப்பற்று’.

‘அடங்காப்பற்று’ மற்றும் மனிதச்சங்கிலி – 3 ஆகிய நிகழ்வுகளின் மேலதிக விபரங்களை விரைவில் அறியத்தரப்படும். உறுதியும், ஓர்மமும் கொண்ட ஒற்றுமைப்பட்ட சமூகமாக எமது தாயக அவலம் தீரும்வரை தொடர்ந்தும் முன்னெறுவோம் என அதில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது

கனடிய அமைச்சரின் போர்நிறுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரிப்பு

can-srila.jpgகனடிய அமைச்சரினால் விடுக்கப்பட்ட போர்நிறுத்த கோரிக்கையை அரசாங்கம் முற்றாக நிராகரித்து விட்டதாக ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு நேற்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்ட சர்வதேச ஒத்துழைப்புக்கான கனடிய அமைச்சர் பெவர்லி ஜேஒடாவே போர்நிறுத்தக் கோரிக்கையை விடுத்திருந்ததாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஏ.எப்.பி. வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சர்வதேச ஒத்துழைப்புக்கான கனடிய அமைச்சர் பெவர்லி ஒடா வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவை நேற்றுக்காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன்போது கனடிய அமைச்சர் போர்நிறுத்தம் குறித்து விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. கடந்த மாதம் அரச தரப்பில் மேற்கொள்ளப்பட்ட ஒருதலைப்பட்ச மோதல் தவிர்ப்பு தோல்வியில் முடிவடைந்ததாக அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, கனடிய அமைச்சருக்கு தெரிவித்துள்ளார்.

வவுனியாவுக்கு இதுவரை 30 லொறி மருந்துப் பொருட்கள் அனுப்பி வைப்பு

medical_lorry.jpg வவுனியாவுக்கு வந்துள்ள மக்களின் மருத்துவ தேவைகளுக்காக கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரை 30 லொறிகளில் மருந்து வகைகள் அனுப்பிவைக்கப் படடுள்ளதாக சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவுப் பணிப்பாளர் டாக்டர் சரத் வீரபண்டார தெரிவித்தார்.
 
வன்னியில் இருந்து வந்துள்ள மக்களுக்காக நேற்றைய தினமும்  3 லொறிகளில் மருந்து வகைகள், சத்திர சிகிச்சை உபகரணங்கள் என்பன அனுப்பி வைக்கப்பட்டன. இதேவேளை புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களுக்கு இன்று கப்பல்  மூலம் மருந்து வகைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களுக்கு தேவையான மருந்து வகைகள் தொடர்பாக மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் அமைச்சிற்கு அறிவித்திருந்தார். இதன்படி கப்பல் மூலம் புதுமாத்தளனுக்கு மருந்து வகைகள் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம். கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படும் மருந்துகள் கப்பல் மூலம் புதுமாத்தளனுக்கு அனுப்பப்படும் எனவும் அவர் கூறினார். புதுமாத்தளனுக்கு கடந்த மாதத்தில் இரண்டு தடவைகள் மருந்து வகைகள் அனுப்பப்பட்டுள்ளன. 

மக்கள் வயிற்றுப் பசியை விடவும் நாட்டைப் பற்றியே சிந்தித்துள்ளனர் – ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpgமேல் மாகாண சபைக்கான அமைச்சரவை, அலரிமாளிகையில் வைத்து சத்தியப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டதன் பின்னர் நேற்று அங்கு நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றும் போது உறுதிமொழிகளை எதிர்பார்த்திருக்காத மக்கள்,  வயிற்றுப்பசியை விடவும் நாட்டைப் பற்றியே சிந்தித்துள்ளனர் என்று தெரிவித்தார்

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:  ” மக்கள் வயிற்றுப் பசியை விடவும் நாட்டைப் பற்றியே சிந்தித்துள்ளனர். இதன் மூலமாகவே மேல் மாகாண சபைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை வாக்குகளை எம்மால் பெற்றுக்கொள்ள முடிந்தது. மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். மக்கள் வழங்கிய ஆணையை பிரதிநிதிகள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மக்கள் உறுதிமொழிகளை எதிர்பார்க்கவில்லை. பசி, வேலை வாய்ப்பு என்பவற்றுக்கு மேலாக நாட்டை முன்நிறுத்திப் பார்த்துள்ளனர் என்பதனால் மக்கள் பிரதிநிதிகளுக்கு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.

மேற்கு நாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களின் பாதுகாப்பை அதிகரிக்க அரசு தீர்மானம்

sri-lankan-government.jpgமேற்கு நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் பாதுகாப்பை அதிகரிக்க இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. ஐரோப்பிய மற்றும் ஸ்கன்டிநேவிய நாடுகளில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையிலேயே அந்த நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்படவுள்ளது. இது தொடர்பாக அடுத்து வரும் வாரங்களில் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நோர்வே தலைநகர் ஒஸ்லோவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து மேற்கு நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டிருந்தது. இந்த நிலையில் பேர்லின் மற்றும் லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் தாக்குதல்களுக்கிலக்காகின.

இதையடுத்தே மேற்கு நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. இந்த நாடுகளிலுள்ள தூதரக அதிகாரிகளுக்கும் இலங்கை அரசுபல்வேறு அறிவுறுத்தல்களையும் விடுத்துள்ளது.

மலையக மக்களை வழிநடத்துவதற்கு கும்பகோணத்திலிருந்து புதிதாக ஒருவர் இறக்குமதி செய்யப்பட்டுள்ளார்

may-day.jpg
கும்பகோணத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒருவருக்கு உபதலைவர் பதவி வழங்கப்பட்டு மலையக மக்களை வழிநடத்த வேண்டுமென்ற பரிதாபகரமான நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்று இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் உபதலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். பொகவந்தலாவ முத்துலெட்சுமி தோட்டத்தில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் தொழிற்சங்கங்களும் இணைந்து செயற்பட வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகளின் சுவடுகளைப் பிரித்தெடுத்து அதன் மூலம் முதலாளித்துவம் தொழிலாளர்களின் முதுகில் சவாரி செய்து இலாபம் தேட முற்பட்டு வருகிறது. இவ்வாறான நரித்தந்திர நடவடிக்கைகளுக்குத் தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சில தொழிற்சங்கங்களும் துணைபோய்க் கொண்டிருக்கின்றன.

சாதாரண தொழிலாளர்களுக்கு 500 ரூபாவுக்கு குறையாத நாட்சம்பளம் வழங்கப்படுகின்றது. ஆனால், தோட்டத்தொழிலாளர்களுக்கு 200 ரூபா சம்பளம் மட்டுமே வழங்கப்படுகிறது. மேலதிக கொடுப்பனவு என்பது எல்லாம் வெறும் கண்துடைப்பேயாகும்.  மலையகத்தின் இளைஞர்களை வழிநடத்த தகுதிவாய்ந்த இளைஞர்கள் இல்லையா?

கும்பகோணத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு கூட உபதலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இனி இவரையும் தலைவராக ஏற்றுக்கொள்வது மலையக மக்களின் தலைஎழுத்து. இதேபோலத்தான் மலையகத்தில் மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டவர்களைக் கொழும்பில் தெருக்களிலெல்லாம் தேடித்திரிய வேண்டியநிலை தோட்டத்தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

எமது முழுவாழ்க்கையையும் தோட்டத்தொழிலாளர்களினதும் மலையக மக்களினதும் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து கொண்டு சேவை செய்து வருவதை இலட்சியமாகக் கொண்டுள்ளோம்.

“கொடூர ஆயுதங்களைப் பயன்படுத்தி பெற்ற யுத்த வெற்றியை நிரந்தரமானதென்று கருதமுடியாது’

flee0009.jpgஅரசாங்கம் கொடூர ஆயுதங்களைப் பயன்படுத்தி வடக்கின் யுத்தத்தின் மூலம் பெற்றுள்ள வெற்றியை நிரந்தர வெற்றியாகக் கருதிவிட முடியாது. அம்மக்களுக்கு அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் சம உரிமைகளையும் சம அந்தஸ்தையும் வழங்கி அவர்களின் மனதை ஆட்கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ளும் வெற்றியே நிரந்தரமானது, உண்மையுமான வெற்றியாகும். எனவே அரசும் யுத்தத்தில் ஆர்வம் காட்டிவரும் பெரும்பான்மை சமூகத்தினரும் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வழிவகுப்பது அவசியமானதாகும் என மாத்தளை மாநகர சபை உறுப்பினர் எஸ்.பிரகாஷ் கூறினார்.

கடந்த மாத்தளை மாநகர சபையின் மாதாந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறினார். மேற்படி கூட்டம் நகரபிதா முகம்மது ஹில்மி கரீம் தலைமையில் மாத்தளை மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அவர் தெடார்ந்து பேசும் போது குறிப்பிட்டதாவது;

கடந்த 3 தசாப்தங்களாக நிலவிவந்த யுத்தத்திற்கு முடிவுகட்டி வடக்கிலும் நாட்டிலும் அமைதியையும் சமாதானத்தையும் உருவாக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எடுத்த முயற்சி பாராட்டத்தக்கதாகும்.  இருப்பினும் கொடூர ஆயுதங்களைப் பயன்படுத்தி யுத்தத்தின் மூலம் அப்பகுதியை மீட்டெடுத்து அமைதியை நிலைநாட்ட எடுத்த முயற்சியினால் எத்தனை உயிர்கள் பலியாகியுள்ளன, எத்தனை மில்லியன் ரூபா சொத்துக்கள்? அழிக்கப்பட்டுள்ளன? எத்தனை குடும்பப் பெண்கள் விதவையாகியுள்ளனர்? எத்தனை பேர் அங்கவீனர்களாயுள்ளனர்? எத்தனை ஆயிரம் பேர் அகதிகளாகி நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர்.

இதனைப் போரை விரும்பி ரசிக்கும் பெரும்பான்மை சமூகத்தினரும், அரசாங்கமும் உணரவேண்டும். எனவே இந்த யுத்தத்தினால், நிர்க்கதியாகியுள்ள மக்களுக்கு நிரந்தர வசிப்பிடம், அடிப்படைத் தேவை, தொழில் வாய்ப்பு, பொருளாதார மேம்பாட்டுக்கான வழிவகுப்பும், சம உரிமை, சம அந்தஸ்து என்பவற்றைப் பெற்றுக்கொடுத்து அவர்களுக்கு இயல்பு வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் மோதல் பகுதிக்கு போதுமான உணவு அனுப்பப்பட்டதாக உலக உணவுத் திட்டம் கூறுகிறது

menikfarm.gifஇலங் கையில் வடகிழக்கே விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே கடும் மோதல்கள் நடைபெற்று வரும் நிலையில், அப் பகுதிகளில் சிக்கியிருக்கும் பொதுமக்களுக்கான உணவு வழங்கல் நடவடிக்கைகள் சீரான முறையில் இல்லையென்றும், இதன் காரணமாக அங்கு மக்கள் பட்டினியால் அவதியுறுவதாகவும் எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் என்றும் விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இலங்கை அரசு அங்கு உணவுப் பொருட்கள் செல்வதை தடுப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இலங்கை அரசு அவ்வாறான தடை எதையும் விதிக்கவில்லை என்று அதன் பாதுகாப்புச் செயலர் கோட்டபாய ராஜபக்ஷ கடந்த வாரம் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இதை உறுதிப்படுத்தியுள்ள உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான துணை இயக்குநர் அசேப் அஸ்ரத் அம்மையார், கடந்த பிப்ரவரி முதல் தேதி தொடங்கி ஏப்ரல் மாத இறுது வரை மூவாயிரம் மெட்ரிக் டண்களுக்கும் மேலான உணவுப் பொருட்கள் மோதலற்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்.

அந்தப் பகுதிக்கு உணவு எடுத்துச் செல்வதில் தாங்கள் சில சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவிக்கிறார். அங்கு எடுத்துச் செல்லப்படும் பொருட்களை சேமித்து வைப்பதில் பிரச்சினைகள் இருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளதாகவும், தற்போது சிறிய கப்பல்களில் எடுத்துச் செல்லப்படும் உணவுப் பொருட்கள் நடுக்கடலில் சிறிய மீன்பிடி படகுகளில் மாற்றப்பட்டு கடற்கரைப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தேவையான மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறுகிறார்.

திங்கட்கிழமை இரவுகூட 30 மெட்ரிக் டண்கள் அளவுக்கு உணவுப் பொருட்கள் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுவதாகக் கூறும் அசேப் அஸ்ரத், தமது களஞ்சியத்தில் வடபகுதியிலுள்ள மக்களுக்கு வழங்குவதற்கு தேவையான உணவுப் பொருட்கள் கையிருப்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு இந்திய அரசு நூல்கள் அன்பளிப்பு

books.jpgகிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மேலும் முன்னேற்றும் வகையில் இந்திய தூதரகம் பெறுமதிமிக்க நூல்களை பல்கலைக்கழகத்தின் நூலகத்திற்கென அன்பளிப்பாக வழங்கியுள்ளது. அரசியல், பொருளாதாரம், வரலாறு, சர்வதேச உறவாடல், உலகமயமாதல், இலக்கியம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், கலை, கலாசாரம் மற்றும் மகாத்மா காந்தி, பண்டிதர் ஜவஹர்லால் நேரு ஆகியோர்கள் தொடர்பிலான நூல்கள் உட்பட பொதுத்துறை அறிவுசார் நூல்களும் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண உயர் கல்வி அபிவிருத்திக்காகவும், அதன் ஆளணி விருத்திக்காகவும், இந்தியக் குடியரசு வழங்கி வரும் தொடர் நடவடிக்கைகளின் ஓர் அம்சமாகவே கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு நூல்கள் வழங்கப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய தூதரகத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் விக்ரம் மிஸ்ரி நூல்களை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி நூலகர் தீசன் ஜெயராஜிடம் கையளித்தார். நிகழ்வில் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசார நிலையப் பணிப்பாளர் டிங்கர் அஸ்தனா, உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவன நூலகத்திற்கும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

முதியோர்கள் 58 பேர் சமளங்குளம் முதியோர் இல்லத்தில் பராமரிப்பு

20090424063601srilanka4.jpgவன்னி யில் இருந்து இடம்பெயர்ந்து வந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 58 பேர் சமளங்குளம் அரசினர் பாடசாலையில் இயங்கத் தொடங்கியுள்ள வவுனியா கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தின் முதியோர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இங்கு மொத்தமாக 66 பேர் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அவர்களில் 6 பேர் வயோதிபம் காரணமாக மரணமடைந்ததாகவும், இருவர் உறவினர்களின் வேண்டுகோளுக்கமைய அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும், எஞ்சிய 58 பேர் இந்த முதியோர் இல்லத்தில் தற்போது பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் சிலருக்கு உறவினர்கள் எவரும் இல்லையென்றும் பலர் தாமாக இயங்க முடியாதவர்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலய அறங்காவலர் அவையினர் இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும், உணவையும் வழங்கி பராமரித்து வருகின்றார்கள். இந்த ஆலயத்தின் தொண்டர்கள் இவர்களைப் பராமரிக்கும் பணியில் முழுமையாக ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த முதியோர் இல்லத்திற்கு எம்.எஸ்.எப். மற்றும் இன்ரநஷனல் ஹன்டிகப்ட் எனப்படும் வலுவிழந்தோருக்கான சர்வதேச நிறுவனம் ஆகியன தேவையான மெத்தைகள், சக்கர வண்டிகள் போன்றவற்றை வழங்கி உதவியுள்ளன. இந்த இல்லத்திற்குத் தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஒக்ஸ்பாம் நிறுவனம் முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.