அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

நாட்டின் உயர்கல்வித்துறையை மேம்படுத்த 57 கோடி ரூபா ஒதுக்கீடு

visvawarnapala.jpgநாட்டின் உயர்கல்வித்துறையின் தரத்தை மேம்படுத்துவதற்கு 57 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பேராசிரியர் விஸ்வ வர்ணபால தெரிவித்துள்ளார். இலங்கையின் உயர்கல்வித்துறையை மேம்படுத்துவதற்காக சுவீடன்,  அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் உதவியுடன் பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

றுஹ{னு,  பேராதெனிய,  மொரட்டுவை மற்றும் கொழும்பு ஆகிய பல்கலைக் கழகங்களில் தகவல் தொழில்நுட்பத்துக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.  இதற்காக 14 கோடி 40 இலட்சம் ரூபா செலவிடப்படவுள்ளது. இணையத்தள வசதிகளுக்காக 18 கோடி 20 இலட்சம் ரூபா செலவிடப்படவுள்ளது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

கஷ்டப் பிரதேச கிராமங்களுக்கான மின் விநியோகம்

he_president.jpgஈரான் அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் கஷ்டப் பிரதேச கிராமங்களுக்கான மின் விநியோகத் திட்டங்களை மெற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமர்பித்திருந்தார்.

இத்திட்டத்துக்கு ஆகக்குறைந்த வட்டி வீதமான 1.25 வட்டி வீதத்துக்கு  ஈரான் அரசாங்கம் 88.7 மில்லியன் அமெரிக்க டொலரை கடனுதவியாக வழங்குகிறது.

வவுனியாவில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி-தமிழர் விடுதலைக் கூட்டணி தனித்தனியாக வேட்பு மனு தாக்கல்

வவுனியா நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியும், தமிழர் விடுதலைக் கூட்டணியும் இன்று தனித்தனியாக வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

வவுனியாவில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நங்கூரம் சின்னத்தில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, ஈபிஆர்எல்எப் வரதர் அணி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய 3 கட்சிகளும் இணைந்து போட்டியிடுவதாக இணக்கம் காணப்பட்டிருந்தது.எனினும் கடைசிநேரத்தில் ஏற்பட்ட இணக்கமின்மை காரணமாக தமிழர் கூட்டணி தனியாக வேட்பு மனு தாக்கல் செய்ததாக அந்தக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் விநாயகமூர்த்தி சகாயதேவன் தெரிவித்தார்.

யாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைகளுக்கான தேர்தல் ஆகஸ்ட் 8இல் – தேர்தல் செயலகம் அறிவிப்பு

election_ballot_.jpgயாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபை என்பவற்றுக்கான தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் செயலகம் இன்று அறிவித்துள்ளது.

இவ்விரு தேர்தல்களுக்குமான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் கால அவகாசம் இன்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைந்ததையடுத்து தேர்தல் நடைபெறும் தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தல்களுக்கு வேட்புமனுக்கள் ஏற்கும் நடவடிக்கைகள் கடந்த 18ஆம் திகதி ஆரம்பமானது.

இத்தேர்தல்களில் யாழ். மாநகர சபைக்கு 23 உறுப்பினர்களும் வவுனியா நகர சபைக்கு 11 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,  யாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபை ஆகியவற்றுக்கு ஐ.ம.சு.முன்னணி நேற்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தது. முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் வேட்புமனுக்களைக் கையளித்தார். இதன்போது அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் றிஷாத் பதியுதீன் ஆகியோரும் கலந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பெண் ஊடகவியலாளர் கடத்தப்பட்டு விசாரணைகளின் பின் விடுதலை

ஊடகவியலாளர் கிருஷ்ணி இப்ஹாம் வெள்ளை வானில் வந்தவர்களால் நேற்று காலை கடத்தப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டுள்ளார்.

தன்னைக் கடத்தியவர்கள் விசாரணைக்குட்படுத்தியதன் பின்னர் கண்டியில் வைத்து விடுவித்து சென்றுள்ளனர் என கிருஷ்ணி இப்ஹாம் தெரிவித்துள்ளார்.தனக்கு இதற்கு முன்னரும் அச்சுறுத்தல் இருந்த நிலையில், இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இடம்பெயர்ந்தோரின் சுகாதார மேம்பாட்டுக்கு உலக வங்கி 24 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி

world_bank_logo.jpgவடக் கிலிருந்து இடம்பெயர்ந்து தற்போது வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களில் தங்கியிருப்போரின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக உலக வங்கி 24 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கவுள்ளது. சர்வதேச அபிவிருத்தி அமையத்தின் திட்டத்துக்கு அமைய வழங்கப்படவுள்ள இந்நிதி உதவியின் அரைப் பகுதி அண்மைய மோதல்களால் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உருவாகியுள்ள விசேட சுகாதார நெருக்கடிகளைத் தீர்த்து வைக்க பயன்படுத்தப்படவுள்ளதாக உலக வங்கியின் இலங்கைக்கான இயக்குநர் நவோகா இஷி தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உலக வங்கியால் கடந்த 15ஆம் திகதி இலங்கைக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்ட 60 மில்லியன் டொலருக்கு மேலதிகமாகவே இந்த 24 மில்லியன் டொலர் உதவி வழங்கப்படவுள்ளது.

இலங்கையில் மோதல்கள் முடிவடைந்துள்ள நிலையில் மீள்குடியேற்றம்,  புனர்நிர்மாணம் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற விடயங்களில் அரசாங்கம் சவால்களை எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வசிக்கும் மக்களுக்கான சுகாதார சேவைகளை வழங்குவது உடனடித் தேவையாகும்.

ஏதிர்வரும் காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கின் சுகாதார தேவைகளில் முக்கியமான நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளிக்கப்படவுள்ளது. இடம்பெயர்ந்தோர் தங்கியிருக்கும் முகாம்களில் நடமாடும் சிகிச்சை நிலையங்களை அமைத்தல், அங்கவீனமுற்றோருக்கு மறுவாழ்வளித்தல்,  அதிர்ச்சியுற்றுள்ள மக்களுக்கான சிகிச்சைகள் மற்றும் முன்னுரிமை அளிக்க வேண்டிய உடனடித் தேவைகள் என்பன இதில் அடங்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

வசந்தம் ரீ.வி. இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஐ.ரீ.என். தொலைக்காட்சிச் சேவை வழங்கும் தனித் தமிழ் தொலைக் காட்சி அலைவரிசையான  வசந்தம் ரீ.வி. இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு ஏற்ப தமிழ் பேசும் மக்களுக்காக இந்த தொலைக் காட்சிச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8.40 அளவில் உத்தியோகபூர்வமாக இந்தத் தொலைக்காட்சிச் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் ஊடகத் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். அமைச்சர்களான அதாஉல்லாஹ். அமீர் அலி. விநாயகமூர்த்தி முரளீதரன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஐ.ரீ.என். தொலைக்காடசிச் சேவையின் தலைவர் அநுர சிறிவர்தன இதற்கும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் எஸ்.குலேந்திரன் இதன் உதவி முகாமையாளராகவும் எம்.சித்தீக் ஹனீபா செய்தி ஆசிரியராகவும் கடமையாற்றுகின்றனர். வசந்தம் ரீ.வி.யின் ஒலி ஒளிபரப்பு வீ.எச்.எப். 9 அலை வரிசை ஊடாக தற்போது மேல் மாகாணத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் விரைவில் நாடளாவிய ரீதியில் சேவையை இடம்பெறச்செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காலை 6.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை வசந்தம் தொலைக்காட்சிச் சேவை ஊடாக நிகழ்ச்சிகள் ஒலி ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளன. தமிழ் பேசும் இரசிகர்களைக் கவரும் வகையில் பொழுது போக்கு அம்சங்கள்  செய்திகள் அரசியல் விவகாரங்கள் சிறுவர் நிகழ்ச்சிகள் உட்பட பல நிகழ்ச்சிகளை ஒலி ஒளிபரப்புச் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. மதியம் 1.00 மணி மாலை 6.00 மணி இரவு 8.00 மணி என செய்திகள் இதன் ஊடாக ஒலி ஒளிபரப்பப்படுகின்றன.

‘சர்வதேச நாணய நிதியம் சாதகமான நிலைப்பாடு’

ranjith_siyambalapitiya.jpgசர்வதேச நாணய நிதியம், இலங்கை கோரியுள்ள கடனைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தற்போது சாதமாக செயற்பட்டு வருவதாக அரச வருவாய்த் துறை அமைச்சரும், நிதி திட்டமிடல் பிரதியமைச்சருமான ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய நேற்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வாய்மூல விடைக்கான கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போது இதனைத் தெரிவித்த அமைச்சர் சியம்பலாபிட்டிய, பயங்கரவாதப் பிரச்சினை முற்றுப்பெற்றிருக்கும் நிலையில், இலங்கைக்குக் கடன் வழங்குவதில் சர்வதேச நாணய நிதியத்திற்குப் பிரச்சினை இருக்காதென்றும் தெரிவித்தார். ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார இருப்பு அதிகரித்து வருவதாகத் தெரிவித்த அமைச்சர், சர்வதேச நாணய நிதிய த்தின் கடன் கிடைத்ததும், மேலும் நிதி நிலைமை வலுவடையுமெனத் தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியினர் தற்போது பாராளுமன்றத்தில் எழுப்புவதற்குப் பிரச்சினைகள் எதுவும் இல்லாததால், நிர்க்கதியான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சியம்பலாபிட்டிய மேலும் சுட்டிக்காட்டினார்.

வணங்கா மண் நிவாரணப் பொருட்களை ஐ.சி.ஆர்.சி. மூலம் கையேற்க இலங்கை இணக்கம்

ships000.jpgவணங்கா மண் கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்கள் இன்னும் சில தினங்களில் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் எடுத்துச்செல்லப்படும் என இன்று டில்லியில் இலங்கை இந்திய அதிகாரிகளிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியால் 884 மெற்றிக்தொன் எடை கொண்ட உணவுப்பொருட்கள், உயிர்காக்கும் மருந்துப் பொருட்களுடன் கொழும்பு நோக்கி வந்த மேற்படி கப்பல் திருப்பியனுப்பப்பட்டது.

பின்னர் இக்கப்பல் சென்னை கடல் பிரதேசத்தில் நங்கூரமிட்டுள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் கருணாநிதி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவிற்கு கடிதம் மூலம் கப்பலில் உள்ள பொருட்களை இலங்கைக்குக் கொண்டு செல்ல அனுமதிக்க ஆவன செய்யவேண்டும் என தெரிவித்திருந்தார்.

இக்கடிதத்தை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எடுத்துசென்று, வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணாவைச் சந்தித்துக் கையளித்தார். கடிதத்தைப் பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சரும் சாதகமான பதில் கிடைக்க ஆவன செய்வதாக உறுதியளித்திருந்தார். ஆனால், இந்திய கடற்படை அதிகாரிகள், வணங்கா மண் கப்பல் சந்தேகத்திற்குரியது என சென்னை துறைமுகக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்திருந்தனர். இதன் காரணமாக, துறைமுக அதிகாரிகள் கப்பலை சில கடல் மைல் தூரம் நகர்த்தி வைக்குமாறு கட்டளை பிறப்பித்தனர். கப்பலில் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டது. அத்தோடு, பணியாளர் சிலருக்கு உடல்நலக் குறைவும் ஏற்பட்டது. உடனடியாக சென்னை துறைமுகக் கூட்டுத்தாபனம் குடிதண்ணீர் வழங்கியது.

இதைத் தொடர்ந்து, நேற்று டில்லி வந்த இலங்கை உயர்மட்ட அதிகாரிகள் குழுவினருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, வணங்கா மண் கப்பல் பொருட்களை இலங்கைக்கு கொண்டு செல்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து, இலங்கை அதிகாரிகள் குழு சம்மதம் தெரிவித்ததாக தெரியவருகிறது.

இந்தியாவிலிருந்து இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மூலம் பொருட்களை எடுத்துச் செல்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொருட்கள் சென்னையிலோ அல்லது தூத்துக்குடித் துறைமுகத்திலோ இறக்கப்பட்டு, இலங்கைக்கு எடுத்துச்செல்லப்படும். இதேவேளை, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, வணங்கா மண் நிவாரணக் கப்பலை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுமதிப்பதற்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

வடக்கு தொண்டராசிரியர்களுக்கு ஓகஸ்ட் மாதத்தில் நியமனம் – கல்வி அமைச்சர் யாழ்ப்பாணத்தில் உறுதி

11edu-min.jpgஇதுவரை நியமனம் வழங்கப்படாமலுள்ள வட பகுதி தொண்டராசிரியர்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் அல்லது அதற்கு முன்பாக நியமனம் வழங்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நேற்று யாழ்ப்பாணம் சென்ற அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யாழ். பணி மனைக்கு திரண்டு வந்த தொண்டராசிரியர்கள் முன்பாக நேரடியாக உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமது நிரந்தர நியமனம் தொடர்பாக ஏற்கனவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தொண்டராசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தொண்டராசிரியர் நிரந்தர நியமனம் பெற்றுத் தரப்படும் என அச்சமயம் உறுதியளித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இது தொடர்பாக யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த உங்களுக்கு அறிவிப்பார் என தெரிவித்திருந்தமை இங்கு நினைவுகூரத்தக்கது.

மற்றொருபுறம் இன்றைய தினம் வேலையற்ற பட்டதாரிகளும் தமது நியமனம் தொடர்பாக திரண்டுவந்த நிலையில் அவர்களது கோரிக்கை தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டு பட்டதாரி நியமனம் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் உறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.