அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

மட்டு, வவுனியாவில் மூவர் சுட்டுக்கொலை

udaya_nanayakkara_brigediars.jpg வவுனியா பாரதிபுரத்திலும் மட்டக்களப்பு கிரான் குளம் வாவி பகுதியிலும் நேற்று மூவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். வவுனியா பாரதிபுரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த இருவர் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததுடன் மோட்டார் சைக்கிளையும் எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

பாரதிபுரம் வித்தியாலய அதிபரான நடராசா ரமேஷ்கந்தா (வயது 34) என்பவரும், அரிசி ஆலை முகாமையாளரான குணரத்தினம் சிவரூபன் (வயது 31) என்ற நபருமே இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று மாலை சுமார் 3.00 மணியளவில் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் புலி உறுப்பினர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட புலி உறுப்பினரும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார்.

மட்டக்களப்பு, கிரான் வாவியோரப் பகுதியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த படையினர் அவ்வழியே வந்த நபர் ஒருவரை சோதனை செய்யமுற்பட்டுள்ளனர். இச்சமயத்தில் குறித்த நபர் படையினரின் துப்பாக்கியை பறித்து சுட்டுள்ளார். படையினரும் திருப்பிச் சுட்டதில் புலி உறுப்பினரும் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்துள்ள புலி உறுப்பினர் மோகன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்த படைவீரர் அம்பாறையைச் சேர்ந்த சுமனதிஸ்ஸ என்றும் காயமடைந்த படைவீரர்கள் இருவரும் பண்டார, ராஜபக்ஷ என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

முல்லைத்தீவு ஈழம் வங்கி – மீட்கப்பட்ட நகைகளை உரியோரிடம் ஒப்படைக்க இராணுவம் ஏற்பாடு

முல்லைத்தீவு மக்களால் ஈழம் வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகளை நிவாரணக் கிராமங்களில் உரியவர்களிடம் கையளிக்க இராணுவத்தினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு ஈழம் வங்கியில் அடகு வைத்த நகைகளை படையினர் அண்மையில் மீட்டனர். அடகுவைத்தவர்களின் விபரங்களுடன் கூடிய தங்க நகைகள் அடங்கிய 8709 பொதிகளை படையினர் கைப்பற்றியிருந்தனர்.

அடகு வைத்தவர்களுக்கு வழங்கிய பற்றுச்சீட்டின் பிரதிகள் நகையுடன் பொதி செய்யப்பட்டு வங்கியில் வைப்பு செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை, புதுக்குடியிருப்பு பகுதியில் தேடுதல்களை மேற்கொண்ட இராணுவத்தின் எட்டாவது அதிரடிப்படையினர் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1040 தங்க வளையல்களையும் கண்டெடுத்துள்ளனர்.

852 பெரிய தங்க வளையல்களும், 188 சிறிய தங்க வளையல்களும், 45 தங்க வளையல் துண்டுகள், கைச்சங்கிலி என்பவற்றையும் படையினர் மீட்டுள்ளனர்.

தேர்தல் கடமைகளுக்கான பயிற்சிகள் அடுத்த வாரம் ஆரம்பம்

election.gifயாழ்.  மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைகளுக்கான  தேர்தல் கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கான பயற்சி செயலமர்வுகள் அடுத்தவாரம் இடம்பெறவுள்ளதாகவும் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வாக்காளர்கள்  பட்டியல்கள் தயாரிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதுடன் வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கைகள் எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகுமென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகரசபைத் தேர்தலுக்காக இம்முறை 500 அரச உத்தியோகத்தர்களும்  யாழ். மாநகரசபைத் தேர்தலுக்கென இம்முறை ஆயிரம் அரச உத்தியோகத்தர்களும்  கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

தேர்தல் தொடர்பான முன்னோடி நடவடிக்கைகள் எவ்வித தங்கு தடையுமின்றி இடம்பெற்று வருவதாகவும்  உதவித் தேர்தல் ஆணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கூட்டமைப்பினரை ஜனாதிபதி தனியாக சந்திப்பதற்கு தீர்மானம்

sampanthr.jpgதமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான சர்வகட்சி குழுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களிடமே ஜனாதிபதி தனது தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நீண்டநேரம் தனியாகச் சந்தித்து பேசிய ஜனாதிபதி கூட்டமைப்பினரை அடுத்த வாரமளவில் தனியாக சந்தித்துக் கலந்துரையாடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் தீர்மானத்தின் பிரகாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களை அவர் இம்மாதத்திற்குள் சந்திப்பார் என்றும் அதற்கான அழைப்பு ஜனாதிபதியின் செயலாளர் ஊடாக விரைவில் அனுப்பப்படும் என்றும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

கிழக்கு பாடசாலை வெற்றிடங்களை நிரப்ப 332 விஞ்ஞான பட்டதாரிகளுக்கு நியமனம்

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்காக 332 விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கிழக்கு மாகாணத்திலுள்ள பின்தங்கிய மற்றும் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் நிலவும் விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதன் மூலம் சிறந்த கல்வியினை மாணவர்களுக்கு வழங்க முடியும் என கிழக்கு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் உபுல் வீரவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி நியமனம் செய்யப்படவுள்ள 332 விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியர்களுள் 131 பேர் கிழக்கு மாகாணத்திலுள்ள சிங்களமொழிப் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளனர்.

இவ்வாறு நியமிக்கப்படும் ஆசிரியர்கள் நியமனம் பெறும் பாடசாலையில் மூன்று வருடங்களும் மாகாணத்தில் 5 வருடங்களும் கடமையாற்றுவதுடன், எதிர்காலத்தில் மாகாணங்களுக்கிடையிலான இடமாற்றம் இடம்பெறும்போது தாம் விரும்பிய மாகாணப் பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லலாம் என செயலாளர் உபுல் வீரவர்தன மேலும் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து பெருமளவில் தங்க நகைகள் கண்டெடுப்பு

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இராணுவம் வெற்றி பெற்ற பிறகு, புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து 150 கிலோவுக்கும் அதிகமான தங்கமும், 800 க்கும் மேற்பட்ட தங்க வளையல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவிக்கிறது.

இந்த நகைகள் பொதுமக்களால் விடுதலைப் புலிகளிடம் அடமானம் வைக்கப்பட்டதாகவோ அல்லது வெளியேறும் மக்கள் மீண்டும் திரும்பி வருவதற்கான உத்திரவாதமாகவோ கொடுத்திருக்கலாம் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவிக்கின்றார்.

புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள நகைகளை ஆவணப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், அந்தப் பணி முடிந்த பிறகு உரியவர்களை கண்டறிந்து உறுதி செய்யப்பட்டவுடன் நகைகளை அவர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறுகிறார்.

கண்டெடுக்கப்பட்டுள்ள சில நகைகளில் அதன் உரிமையாளர் குறித்த குறிப்புகளும் இருந்தாலும், சிலவற்றில் எந்தவிதமான பதிவுக் குறிப்புகளும் இல்லை என்பதால் அது குறித்து எப்படி நடவடிக்கை எடுப்பது என்பது பற்றிய வழிமுறைகள் ஆராயப்பட்டு வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் கூறுகிறார்.

இந்த நகைகள் குறித்த பதிவுக் குறிப்புகளும் ஆவணங்களும் தயாரானவுடன், வவுனியாப் பகுதியில் இடம் பெயர்ந்த நிலையில் உள்ள மக்களிடையே இந்தச் செய்தி எடுத்துச் செல்லப்பட்டு உரிமையாளர்கள் அதை கோருவதற்கு வழி செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

தற்போது புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட நகைகள் இராணுவத்தின் வசம் பாதுகாப்பாக இருக்கிறது என்றும் தேடுதல் நடவடிக்கைகள் மேலும் தொடர்கின்றன என்றும் அவர் கூறுகிறார்.

மெனிக்பாம் பகுதியில் நிரந்தர கட்டுமானங்கள்?

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்திருக்கும் 3 இலட்சம் பேரில் 80 சதவீதமானோர் வருட இறுதிக்குள் மீளக்குடியமர்த்தப்படுவர் என்று உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ள போதும் இந்த அகதிகளுக்கு நிரந்தர முகாம்களையே வீடுகளாக நிர்மாணித்து வழங்கப்படவுள்ளதாக தோன்றுவதாக லண்டன் ரைம்ஸ் பத்திரிகை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மெனிக்பாம் பகுதியில் நிரந்தரமான கட்டிடங்கள் எழுப்பப்படுவதாக நிவாரணப் பணியாளர்கள் ரைம்ஸுக்கு கூறியுள்ளனர். மெனிக் பாமில் 6 வலயங்களில் 4 வலயங்களுக்கு தங்களால் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடியதாக இருப்பதாகவும் இரு வலயங்களுக்குச் செல்வது தடுக்கப்பட்டுள்ளதாகவும் இதில் சூன்ய வலயமென மர்மமான பெயர் சூட்டப்பட்டுள்ள பகுதியும் அடங்கும் என்றும் நிவாரணப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பகுதிகளில் பணிபுரிய எமக்கு அனுமதியளிக்கப்படவில்லை என்று இலங்கையிலுள்ள “ரிலீவ்’ இன்ர நெஷனல் அமைப்பின் தலைவர் ராஜித ஜயசிங்க தெரிவித்துள்ளார். ஆனால், கட்டிடங்கள் எழுப்பப்படுவதை வெளியிலிருந்து பார்க்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். தலைநகர் கொழும்பிற்குப் பின்னர் இலங்கையின் இரண்டாவது பெரிய நகரமாக இந்தப்பகுதி உருவாகிவருவதாக சில நிவாரணப் பணியாளர்கள் கூறியுள்ளனர். பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள், வங்கிகள் என்று பாரிய நகரமாக உருவாகுவதாக கூறப்படுகிறது. இங்கு வங்கிகளில் அகதிகள் 100 கோடி ரூபாவுக்கும் மேலான பணத்தை வைப்பிலிட்டுள்ளனர்.

இந்த வலயங்களில் அரசாங்கம் நிரந்தர புகலிடங்களுக்கான வேலைகளை மேற்கொள்கின்றது. சீமெந்து தரைகள், மரக்கட்டமைப்புகள், இரும்புக் கூரைகள் என்பன அமைக்கப்படுகின்றன என்று உதவிப் பணியாளர் ஒருவர் கூறியுள்ளார். தன்னை அடையாளங் காட்டவேண்டாமென அவர் கேட்டுக்கொண்டதாக ரைம்ஸ் பத்திரிகை கூறியுள்ளது.

திருமலையில் சித்த வைத்திய போதனா வைத்தியசாலை

trincomalee-district.jpgதிருகோ ணமலையில் சித்த வைத்திய போதனா வைத்தியசாலை ஒன்றை அமைக்க சுதேச வைத்திய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் செல்முறைப் பயிற்சி நடவடிக்கைகளுக்கு உதவும் முகமாகவும் பிரதேச மக்களின் தேகாரோக்கியத்தை கருத்தில் கொண்டும் இந்த சித்த வைத்திய போதனா வைத்தியசாலை அமைக்கப்படுவதாக அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவை சுதேச வைத்திய அமைச்சர் திஸ்ஸ கரலியத்த நாளை 6 ஆம் திகதி  திறந்து வைப்பார் என சுதேச வைத்திய அமைச்சு அறிவித்துள்ளது

தப்பியோடி கைதான படையினருக்கு புனர்வாழ்வு அளிக்க வேண்டும் – ஐ.தே.க. வலியுறுத்தல்

தப்பியோடிய படையினரை கைது செய்து குற்றவாளிகளுடன் சிறையில் வைத்திருப்பது சிறந்தல்லவென ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்ததுடன் அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் வேலைத்திட்டம் அவசியமெனவும் வலியுறுத்தினர்.

புலிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது குறித்து பேசப்படும் நிலையில் தப்பியோடி கைதான படையினருக்கும் அதனை வழங்கி சுமுக வாழ்க்கையை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டுமெனவும் தெரிவித்தார். எதிர்க்கட்சித்தலைவரின் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாகாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில்;  படையிலிருந்து விடுமுறையைப் பெற்று மீண்டும் பணிக்கு திரும்பாத சுமார் 40 ஆயிரம் படையினர் உள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தப்பிச் சென்றுள்ளவர்களில் 4500 பேரளவில் கைது செய்யப்பட்டு குற்றச்செயல் புரிந்தவர்களுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குடும்பப் பிரச்சினை, பணியின் போதான பிரச்சினை போன்ற காரணங்களால் இவர்கள் தவறிழைத்த போதும் படையில் சில வருடங்களாவது பணியாற்றியுள்ளனர். இந் நிலையில் கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயலுடன் தொடர்புடையவர்களுடன் இவர்கள் தடுத்து வைக்கப்படுவதானது சிறந்ததல்ல. அதாவது குற்றச் செயலுடன் தொடர்புடையவர்களுடன் இருந்து வெளியே வரும் போது இவர்களால் பிரச்சினையேற்படுவதற்கு வழிவகுக்கும். யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் அதற்கு பயன்படுத்த முடியாதென்பதால் குற்றம் புரிந்தவர்களுடன் தடுத்து வைக்காது அவர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும். அல்லது தப்பியுள்ளவர்கள் சுமுகமாக வாழ இடமளிக்கப்பட வேண்டும். பொசன் மற்றும் வெசாக் தினங்களில் ஜனாதிபதி விடுதலை வழங்குவது போல் ஜனாதிபதி முப்படைகளின் தளபதியென்ற வகையில் இதனை செய்ய முன்வரவேண்டும். இது தொடர்பில் படைவீரரது குடும்பத்தினர் எம்முடன் கதைத்துள்ளனர்.

புலிகளுக்கு தற்போது பொது மன்னிப்பு குறித்து பேசுகின்ற நிலையில் படையினருக்கும் இதனை வழங்க வேண்டுமென நாம் கேட்கின்றோம்.

இலங்கையின் இன்றைய சமுதாயம் ஆங்கிலத்தில் பேசும் ஆற்றலை இழந்துள்ளது

schoolgirls-sri-lanka.jpgநூறாண் டுகளுக்கு மேலாக ஆங்கில ஆட்சியாளரின் நிர்வாகத்தின் கீழ் இருந்த இலங்கையின் இன்றைய சமுதாயம் ஆங்கிலத்தில் பேசும் திறனை இழந்து நிற்பதாக கிழக்கு மாகாணசபையின் பிரதம செயலாளர் வி.பி.பாலசிங்கம், திருகோணமலை வலயக்கல்வி அலுவலகம் நடத்திய புத்தாக்கக் கண்காட்சியின் முதல் நாள் நிகழ்வினைத் தொடக்கி வைத்துப் பேசும்போது குறிப்பிட்டார்.

ரஷ்யா மற்றும் சீனாவில் உயர் கல்வி பெறுவதற்காக செல்லும் நமது மாணவர்கள் அங்கு ரஷ்ய, சீன மொழிகளில் ஆறு மாதகால பயிற்சி பெற்ற பின்னரே உயர்கல்வியைத் தொடர முடிகின்றது. நமது நாட்டில் இருக்கும் போது ஆங்கில மொழியையும் கற்க ஏன் முன்வருகிறார்களில்லை. ஆங்கில மொழியை ஒவ்வொருவரும் கற்க வேண்டியது அவசியம் என்றும் பிரதம செயலாளர் பாலசிங்கம் கூறினார்.

கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் முதல்வர் என். நகேந்திரகுமார் பேசும்போது;

உயர்கல்வி பெறும் மாணவர்கள் வர்த்தகம், கலை ஆகிய துறைகளில் அக்கறை காட்டுகிறார்களே தவிர, விஞ்ஞானத்துறையில் அக்கறை காட்டுகின்றார்கள் இல்லை. திருமலை வளாகத்தில் விஞ்ஞானத்துறைக் கல்விக்குரிய வசதிகள் அனைத்தும் உள்ளன. மாணவர் எண்ணிக்கைதான் குறைவு என்று கூறினார்.

மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் உபாலி வீரவர்தன பேசும்போது;

ஆசிரியர் பற்றாக்குறை பெரும்பாலும் நீக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங்களைப் போதிக்கும் ஆசிரியர்களுக்குத்தான் பற்றாக்குறை நிலவுகிறது. கணிதபாடம் போதிக்கும் ஆசிரியர்கள் தங்களிடம் கற்கும் மாணவர்களை குறைந்தது அப்பாடத்தில் சாதாரண சித்தி எடுக்கக்கூடியதாக பயிற்றுவிக்க வேண்டும். பாடங்களில் மாணவர்கள் சித்திபெறவில்லை என்ற நிலையை அப்பாடங்களைப் போதிக்கும் ஆசிரியர்கள் மாற்றியமைக்க வேண்டுமென்று கூறினார். வலயக்கல்விப் பணிப்பாளர் அ. விஜயானந்த மூர்த்தி தலைமை வகித்தார்.