மட்டு, வவுனியாவில் மூவர் சுட்டுக்கொலை

udaya_nanayakkara_brigediars.jpg வவுனியா பாரதிபுரத்திலும் மட்டக்களப்பு கிரான் குளம் வாவி பகுதியிலும் நேற்று மூவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். வவுனியா பாரதிபுரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த இருவர் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததுடன் மோட்டார் சைக்கிளையும் எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

பாரதிபுரம் வித்தியாலய அதிபரான நடராசா ரமேஷ்கந்தா (வயது 34) என்பவரும், அரிசி ஆலை முகாமையாளரான குணரத்தினம் சிவரூபன் (வயது 31) என்ற நபருமே இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று மாலை சுமார் 3.00 மணியளவில் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் புலி உறுப்பினர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட புலி உறுப்பினரும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார்.

மட்டக்களப்பு, கிரான் வாவியோரப் பகுதியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த படையினர் அவ்வழியே வந்த நபர் ஒருவரை சோதனை செய்யமுற்பட்டுள்ளனர். இச்சமயத்தில் குறித்த நபர் படையினரின் துப்பாக்கியை பறித்து சுட்டுள்ளார். படையினரும் திருப்பிச் சுட்டதில் புலி உறுப்பினரும் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்துள்ள புலி உறுப்பினர் மோகன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்த படைவீரர் அம்பாறையைச் சேர்ந்த சுமனதிஸ்ஸ என்றும் காயமடைந்த படைவீரர்கள் இருவரும் பண்டார, ராஜபக்ஷ என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *