அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

ரணவக்க எம்.பி. காலமானார்

sarath-ranawaka.jpgகளுத்துறை மாவட்ட ஐ.தே. கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சரத் ரணவக்க நேற்றுக் காலமானார்.  பல மாதகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த இவர் ஸ்ரீ ஜயவர்தனபுர ஆஸ்பத்திரியில் காலமானார்.

புளத்சிங்கள, அகலவத்த தொகுதிகளின் ஐ.தே.கட்சி அமைப்பாளராக பதவி வகித்த சரத் ரணவக்க களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக 15 வருடங்களுக்கு மேல் அங்கம் வகித்தார்.

ஈரான் பயணிகள் விமானம் ஓடுபாதை சுவரில் மோதி விபத்து – 17 பேர் பலி

25-iran-plane-crash.jpgஈரானில் பயணிகள் விமானம் ஒன்று ஓடுபாதையின் சுவற்றில் மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியானார்கள். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 153 பயணிகளுடன் மாஷாத்வந்த விமானம் ஒன்று மாஷாத் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது.

எதிர்பாராவிதமாக ஓடு பாதையின் நடுப்பகுதியில் விமானத்தை விமானி தரை இறக்கியதால் குறைந்த தூரமே உள்ள ஓடுபாதையில் வேகமாக சென்ற அந்த விமானம் சுற்றுச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தின் முன்பகுதி சேதம் அடைந்து தீப்பிடித்தது. அவர்களில் முன்பகுதியில் அமர்ந்திருந்த 17 பேர் விபத்தில் சிக்கி பலியானார்கள். 19 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். விமானத்தில் இருந்த மற்ற பயணிகள் மீட்கப்பட்டு பாதுகாப்புடன் வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர்.

யாழ்.பயணிகளின் போக்குவரத்திற்காக பஸ்ரயில் இணைப்புச் சேவைக்கு கோரிக்கை

bussss.jpgகொழும் பிலிருந்து காங்கேசன்துறை வரை யாழ்தேவி புகையிரத சேவையை ஆரம்பிக்கும் வரை, யாழ்ப்பாணத்திலிருந்து தாண்டிக்குளம் வரை பஸ் போக்குவரத்தையும் தாண்டிக்குளத்திலிருந்து கொழும்புக்கு ரயில் போக்குவரத்தையும் ஏற்பாடு செய்ய வேண்டுமென யாழ்ப்பாணம் மேல் நீதி மன்ற நீதிபதி த. விக்னராஜா ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ். பொது நூலகத்தில் புதன்கிழமை இடம்பெற்ற, வடக்கின் வசந்தம் மீளாய்வு கூட்டத்தின்போதே நீதிபதி த.விக்னராஜா இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் பேசுகையில்;

இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள ஏ9 வீதி ஊடான தரைவழிப் போக்குவரத்து யாழ்ப்பாணத்திலிருந்து மதவாச்சி வரை பஸ் போக்குவரத்தை நடத்தி தாண்டிக்குளத்திற்கு அப்பால் யாழ்தேவி புகையிரதச் சேவை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தப்பொது மக்கள் போக்குவரத்தை இலகுபடுத்துவதற்கு யாழ்ப்பாணத்திலிருந்து தாண்டிக்குளம் வரை அப்பால் யாழ்தேவி புகையிரத சேவையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதுபோல் கொழும்பிலிருந்து யாழ்.வருபவர்கள் தாண்டிக்குளத்திலிருந்து பஸ் போக்குவரத்தை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

தற்பொழுது நடைமுறையில் பயணிகள் அனுமதிப்பத்திரம் பெறும் முறை இலகுபடுத்தப்பட வேண்டும்.  அதற்காக முன்னாள் யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி சந்திரசிறி முன்னர் மேற்கொண்டிருந்த யாழ். மாவட்ட மக்களுக்கான விசேட இராணுவ அடையாள அட்டையைத் தற்பொழுது வழங்கி அதன் மூலம் போக்குவரத்தை இலகு படுத்த வேண்டுமெனத் தெரிவித்தார்.

யாழ். மேல் நீதிமன்றில் சட்டத்தரணிகள் அலுவலகம் ஒன்று அமைக்கவும் நீதி மன்றத்திற்கான கேட்போர் கூடம் சட்டத்தரணிகள் வாகனத்தரிப்பிடம் என்பனவற்றையும் அமைத்துத் தரவேண்டும் என்ற மகஜர் ஒன்றை மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் பசில் ராஜபக்ஷவிடம் நீதிபதி த.விக்னராஜா கையளித்துள்ளார்.

டுபாய் அரசின் புதிய அறிவிப்பால் பலர் வீடு இழக்கும் அபாயம்

dubai_flag.pngஒரே வீட்டை பலர் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்ற புதிய உத்தரவு ஒன்றை டுபாய் அரசு பிறப்பித்துள்ளது. இதனால் அங்கு வாழும் வெளிநாட்டவர்கள் பலர் வீடுகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டுபாயில்,  ஒரே வீட்டில் ஒரு குடும்பத்திற்கும் அதிகமானவர்களோ அல்லது திருமணமாகாத இளைஞர்கள் பலரோ சேர்ந்து தங்கலாம் என, அந்நாட்டு அரசு முன்னர் அனுமதித்திருந்தது. எனினும் தற்போது அந்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி  ஒரு வீட்டில் ஒரு குடும்பத்திற்கு மேல் யாரும் தங்கக் கூடாது என்ற புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டுபாயில்,  விலா என அழைக்கப்படும் வீடுகளின் வாடகை அளவுக்கு அதிகமாக உள்ளது. அதனால்,  ஏராளமான வெளிநாட்டுக்  குடும்பங்கள் மற்றும் திருமணமாகாத இளைஞர்கள் பலர் ஒரே வீட்டில் வசிக்கின்றனர்.  இப்படி சேர்ந்து வசிப்பவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு,  ஒரு வீட்டில் ஒரு குடும்பம் மட்டுமே வசிக்க வேண்டும். இதை மீறும் விலா உரிமையாளர்களுக்கு; அபராதம் விதிக்கப்படும் என,  கடந்தாண்டு மத்தியில் அந்நாட்டு அரசு அறிவித்தது.

இந்த விதிமுறை, அடுத்த மாதம் முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்கு காலநீட்டிப்போ அல்லது விதிவிலக்கோ கிடையாது என துபாய் நகராட்சி அதிகாரி உசேன் நாசர் லூட்டா கூறியுள்ளார்.

கண்டி கட்டுகஸ்தோட்ட பாலம் இன்று ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

mahinda_raajapakse11.jpgகண்டி கட்டுகஸ்தோட்ட பாலம் இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. கடந்த மூன்று வருடங்களாக இரவு பகலாக நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இப் பாலத்தின் திறப்பு விழா இடம்பெறுகின்றது.  இதேவேளை, கண்டி கன்னொருவ வீதி வியாழக்கிழமை ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.

கண்டி கெட்டம்ப பாலத்தின் ஊடாக பேராதனை நகருக்குச் செல்லும் இவ்வீதியூடாகவே இனி கொழும்பு கண்டி போக்குவரத்துகள் இடம்பெறவுள்ளன. இதன் மூலம் பேராதனை பாலத்தின் மேல் காணப்பட்ட வாகன நெரிசல் கட்டுப்படுத்தப்படவுள்ளது. கன்னொருவ வீதி கன்னொருவ விவசாய ஆராய்ச்சித் திணைக்களத்திலிருந்து பேராதனை நகர்வரை 2.8 கிலோமீற்றர் தூரத்தினைக் கொண்டுள்ளது. இது ஆறு வாகனங்கள் ஒரே நேரத்தில் செல்லக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு 680 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா வைபவத்தில் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் டி.பீ.ஏக்கநாயக்க, அமைச்சர் கெஹலிய ரம்புக்வல, மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

நாணய நிதியத்தின் கடனுதவி – வடமாகாண மீள்குடியேற்றம், அபிவிருத்தியை மேலும் விரைவுபடுத்தும்

சர்வதேச நாணய நிதியத்திலிருந்து இலங்கைக்கு கிடைக்கும் நிதியினால் வடக்கின் மீள்குடியேற்றம், அபிவிருத்தி என்பன மேலும் விரைவுபடுத்தப்படும் என நிதி மற்றும் அரச வருவாய்த் துறை அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். அரசாங்கத்தின் பொருளாதார திட்டத்திற்கு கிடைத்த பாரிய வெற்றியாகவே இதனைக் கருதுவதாகவும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியுடன் இலங்கையின் அந்நிய செலாவணி அதிகரிப்பதுடன் கூடுதலான வெளிநாட்டு முதலீடுகளும் வரும் என்றும் தெரிவித்தார்.

கடனுதவியுடன் செல்மதி நிலுவைகள் வெகுவாக குறைவடைவதுடன் அந்நிய செலாவணி அதிகரிப்புடன் நிலையான பொருளாதாரத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதுடன் ரூபாவின் மதிப்பும் அதிகரிக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியுடன் வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவு உள்வாங்கப்படுவதால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் அமைச்சர் ரஞ்ஜித்சியம் பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.

இலங்கை அரசு கோரியதைவிட அதிகளவு கடனுதவியை சர்வதேச நாயண நிதியம் வழங்க முன்வந்தமை இலங்கை அரசின் மீது கொண்டுள்ள நம்பிக்கையையே காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை, இந்தக் கடன் தொகை இலங்கைக்கு கிடைத்த பின்னர் ஐ. தே. கட்சியின் எதிர்பார்ப்புகள் பயனற்றுப் போய்விடும் என அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஐ. தே. கட்சி இலங்கையின் பொருளாதார நிலையை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் அமைச்சர் அமுனுகம தெரிவித்துள்ளார்.

பூகம்பத்தால் நியூஸிலாந்தின் தென்பகுதி அவுஸ்திரேலியா நோக்கி நகர்வு – விஞ்ஞானிகள் தெரிவிப்பு

new-zealand.jpgநியூஸி லாந்தின் தெற்குப் பகுதியிலுள்ள ரிசொல்யூஷன் தீவுக்கருகில் கடலுக்கடியில் கடந்த வாரம் ஏற்பட்ட பூகம்பத்தினால் தெற்கு நியூஸிலாந்து அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதி நோக்கி நகர்ந்துள்ளதாக பூகம்ப ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரிச்டர் அளவு கோலில் 7.8 என்று பதிவான இந்த பூகம்பத்தினால் தெற்குத் தீவு சுமார் 12 அங்குல (அதாவது 30 செ.மீ.) தூரம் மேற்காக நகர்ந்து அவுஸ்திரேலியாவிற்கு அருகில் சென்றுள்ளதாக பூகோள விஞ்ஞானி கென்கிளெட்ஹில் தெரிவித்துள்ளார்.

இந்த புவியியல் மாற்றம் பூமிக்கு அடியில் நிகழ்ந்து வரும் மாற்றங்களை எடுத்துரைப்பதாய் அமைந்துள்ளது என்று கூறியுள்ள கிளெட்ஹில் நியூஸிலாந்து அதனைத் தாக்கும் பெரும்பாறையின் எல்லையில் இருப்பதால் நாட்டின் நிலப்பகுதி அடிக்கடி மாறுதலுக்குள்ளாகிறதெனத் தெரிவித்துள்ளார்.

அதாவது 12 அங்குலம் ஒரு நாடு நகர்ந்திருப்பது என்பது ஏதோ ஆண்டாண்டு காலமாக நிகழவில்லை. ஒரு சில வினாடிகளில் நிகழ்ந்துள்ளது என்பதை நாம் நினைவில் நிறுத்துவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

கடந்த புதனன்று ஏற்பட்ட இந்த பூகம்பம் இந்த ஆண்டின் மிகப்பெரிய பூகம்பம் என்பதும் நியூஸிலாந்தில் கடந்த 80 ஆண்டுகளில் ஏற்பட்டள்ள கடுமையான பூகம்பம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதே அளவில் உலகின் வேறு எந்த நாட்டிலாவது பூகம்பம் ஏற்பட்டிருந்தால் அது ஒரு பேரழிவை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் நியூஸிலாந்தின் தெற்குத் தீவுப் பகுதியில் மக்கள் தொகை அதிகம் இல்லை என்பதால் அழிவு அவ்வளவாக இல்லையென கிளெட்ஹில் கூறியுள்ளார்.

இது குறித்து ஆய்வு மேற்கொண்ட மற்றொரு விஞ்ஞானி மார்டின் ரெய்னர்ஸ், இரண்டு பெரும்பாறைகளுக்கு நடுவே உள்ள “மென் பாறைகளில்’ இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அதன் ஆற்றல் கட்டுப்படுத்தப்பட்டது. இல்லையேல் பெரிய அழிவை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்று கூறியுள்ளார்.

வவுனியா தேர்தல் : த.வி.கூட்டணி – இரு சுயேச்சை குழுக்கள் ஈபிடிபியை ஆதரிக்க முடிவு

வவுனியா நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) அமைப்புடன் முன்னர் கூட்டுச் சேர்ந்திருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் வன்னி/கிளிநொச்சி பிராந்தியக் கிளை, அரசின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கப் போவதாகத் தெரிவித்துள்ளது.

தமிழர் விடுதலைக்கூட்டணியின் வன்னி/கிளிநொச்சி பிராந்தியக் கிளையின் இணைத்தலைவர்கள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், கட்சியின் நிரந்தர உறுப்பினர்கள் கலந்து கொண்ட முக்கிய கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. த.வி.கூ. நிர்வாகச் செயலாளர் ஜீ.வி.சகாதேவன் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

தமிழர் விடுதலைக்கூட்டணி வன்னி/கிளிநொச்சி பிராந்தியக் கிளையின் இந்த முடிவை அறிவிப்பதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டார்.

நடைபெறவுள்ள தேர்தலில் சுய உரிமையை பாதுகாக்கும் வகையில் தமிழ் மக்கள் வாக்கை பயன்படுத்த வேண்டும் – பிரதிக் கல்வியமைச்சர் சச்சிதானந்தன்

election_cast_ballots.jpgநடை பெறவுள்ள ஊவா மாகாண சபைத்தேர்தலில் தமது சுய உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் வாக்கை தமிழ் மக்கள் பயன்படுத்த வேண்டுமென பிரதிக் கல்வியமைச்சர் சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; “நாடு சுதந்திரமடைந்த பின்னர் ஏற்படுத்தப்பட்ட பிரஜாவுரிமைச் சட்டத்தால் மலையக மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன.

அதனையடுத்து, “எடு என்றால் எடுக்கவும் போடு என்றால் போடவுமாக’ இருந்த எமது தமிழினத்தின் நிலை மாறி வரலாற்றில் இடம்பெற்ற அகிம்சை வழிப்போராட்டங்களால் அதாவது மலையகத்தின் தந்தை அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் தாக்கங்களால் எமக்கு பிரஜாவுரிமை, வாக்குரிமை என்பன கிடைத்தது.

இதில் தமிழ் மக்கள் குறிப்பாக வாக்கு எனும் பலத்தை சரியான முறையில் பயன்படுத்துகின்றார்களா? என்றால் அது இல்லை. அதன் விளைவாகவே எமது தமிழினத்தின் சுய உரிமைகளை மற்றவரிடம் கேட்டுப்பெறும் அவசியம் ஏற்பட்டுள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டம் சிறுபான்மையினரின் உரிமைகளை சிறுபான்மையினருக்கே உரித்தாக்குவதற்குத்தான் கொண்டுவரப்பட்டது. இன்று அது விரிவாக்கப்பட்டு நாட்டின் எல்லோருக்கும் உரித்துரிமையாகிவிட்டது.

தமிழ் மக்கள் தொடர்பான முடிவுகளையோ தீர்மானங்களையோ எடுக்கும் அதிகாரம் வேறு எவருக்கும் வழங்காமல் அதனை நம்மிடமே வைத்துக்கொள்ள வேண்டும். இன்று முழு உலகமுமே இலங்கைத் தமிழர் நிலை பற்றி அவதானித்துவரும் நிலையில், எமக்கிடையிலான ஒற்றுமையை இலங்கைக்கும் உலகிற்கும் வெளிப்படுத்துவது சமகால தேவையாகும். அதற்காக நாம் வாக்கினை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

ஏனைய இனத்தவர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்கள் என்றால் அது சாத்தியமற்றது. ஆனால், தமிழ் வாக்காளர்கள் ஏனைய இன வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வதில் ஒருபோதும் பின் நின்றதில்லை. இதுவே உண்மைநிலை.

எனவே, தமிழ் மக்கள் நன்கு சிந்தித்து செயல்பட வேண்டும். அதாவது, தமிழர்களின் சுயஉரிமையை பாதுகாக்கும் ஆயுதமாக தமது வாக்கை எமது மக்கள் பயன்படுத்த வேண்டும். நாம் வாக்களிப்பதன் மூலம் எமது உரிமைகளுக்காக குரல் கொடுக்கக்கூடிய வகையில் தமிழ் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டியதுடன், வழுக்கள் ஏற்படாதவாறு சரியான முறையில் வாக்களிக்க வேண்டியதும் அவசியமாகும்.

இவை அனைத்தும் சுயநல அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து எமது மைந்தர்களே இம்மண்ணை ஆளக்கூடியவாறு ஊவா மாகாணசபைத் தேர்தலில் செயல்பட வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிவாரணக் கிராமங்களில் நாளை அதிபர்களுக்கான நேர்முகப் பரீட்சை

அதிபர்களுக்கான தரம்-1, தரம்-2, தரம்-3 பதவி உயர்வுகளை வழங்குவதற்கான நேர் முகப் பரீட்சைகள் வவுனியா நிவாரணக் கிராமங்களில் நாளை திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறவுள்ளது. வவுனியா மாவட்ட அதிபர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் வவுனியா தெற்கு வலயத்திலும் இடம்பெயர்ந்துள்ள அதிபர்களுக்கு நிவா ரணக் கிராமங்களிலுள்ள பாடசாலைகள் இணைப்பு நிலையங்களில் நடத்தப்படும் என வவுனியா வலய உதவிப் பணிப்பாளர் திருமதி ரன்ஜனி ஒஸ்வர்ல்ட் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் நேர்முகப்பரீட்சைக்குத் தோற்றும் அதிபர்கள் தேவையான சகல ஆவணங்களையும் ஆயத்தமாக கொண்டுவரவேண்டும் என்றும் கேட்கப்படுகிறார்கள்.

அத்துடன் நிவாரணக் கிராமங்களிலுள்ள அதிபர்கள் தம்மிடமுள்ள ஆவணங்களையும் நேர்முகப் பரீட்சைக்கு கொண்டுவரவேண்டும். ஆவணங்கள் எதுவும் இல்லையேல் தேவையான ஆவணங்களின் பிரதிகளை பெற்றுக்கொடுக்க வவுனியா மாவட்ட கல்வி வலயப் பணிப்பாளர் அலுவலகம் அந்தந்த நிவாரணக் கிராமங்களின் இணைப்பு அலுவலகங்களில் ஆயத்த நிலையில் இருக்கும் எனவும் பணிப்பாளர் ரன்ஜனி ஒஸ்வர்ல்ட் தெரிவித்தார்.