அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

இடம்பெயர்ந்தவர்களுக்கு குவைட் நிவாரண உதவி – நேரடியாகச் சென்று கையளிப்பு

rizzada_with.jpgமுசலி பிரதேசததில் மீளக்குடியமர்ந்துள்ள குடும்பங்களுக்கு குவைத் ஒருங்கிணைந்த நிவாரண குழுவின் பிரிதிநிதிகளினால் கொண்டுவரப்பட்ட ஒரு தொகை உலர் உணவு பொதிகள் கையளிக்கப்பட்டன. மன்னார் முசலி பிரதேசத்துக்கான விஜயமொன்றை மேற்கொண்ட குவைத் ஒருங்கிணைந்த நிவாரண குழுவினரால் இந்தப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.;

செரண்டிப் நிவாரண மற்றும் அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் இலங்கை வந்த பிரதி நிதிகள் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் அழைப்பின் பேரில் முசலிக்கு விஜயம் செய்திருந்தனர். குவைத் ஒருங்கிணைந்த நிவாரண குழுவின் இணைப்பாளர்களான பத்ர் ஆஸ் சம்ரூக் மற்றும் பைசல் யகூத்,  சரண்டிப் தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் ஆகியோர்,  அமைச்சர் றிசாட் பதியுதீனுடன் முசலிக்கு சென்று இதனை கையளித்தனர்.

இதே வேளை வவுனியா சாளம்பை புரம் பகுதியில் இருந்து இடம் பெயர்ந்த நிலையில் அநுராதபுரம் இக்கிரிகொள்ளாவ நலன்புரி கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கும் அமைச்சர் றிசாட் பதியுதீன், மற்றும் பிரதி நிதிகள் இந்த நிவாரண பொருட்களை கையளித்தனர். 

அரசின் புனரமைப்புப் பணிகளுக்கு ஒத்துழைப்பு – இலங்கை வந்துள்ள புலம்பெயர் தமிழர் குழு தெரிவிப்பு

அரசாங்கம் மேற்கொண்டுவரும் புனரமைப்புப் பணிகளுக்குப் புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் முன்னெடுப்பம் என இலங்கை வந்துள்ள புலம்பெயர் தமிழர்கள் குழு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இறுதிக் கட்டப் போரின் பின்னரான நிலைமைகளை நேரில் அவதானிக்கவென்றும்,  இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதில் புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்வதைப் பற்றி ஆராயவும்,  அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டொக்டர் நொயல் நடேசன் தலைமையிலான குழுவினர் இலங்கை வந்துள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நிவாரணக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இடம்பெயர் மக்களை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும்  துரித நடவடிக்கைகள் புலம்பெயர் தமிழர்கள் குழு திருப்தி தெரிவித்துள்ளது.

சகலவற்றையும் இழந்து வந்துள்ள மக்களின் வாழ்வாதார ஸ்திரத்தன்மையைக் கருத்திற்கொண்டு நீண்டகால செயற்திட்டங்களின் அடிப்படையில் குடியமர்த்தப்பட வேண்டுமென அவர்கள் தெரிவித்தனர்.

அரசியல் தலைவர்கள்,  அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள்,  அரச அதிகாரிகள்,  இடம்பெயர்ந்த மக்கள்,  உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேசிய இந்தக் குழுவினர்,  தமது அனுபவங்களையும் கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

லண்டனைச் சேர்ந்த எழுத்தாளரும்,  மனித உரிமை ஆர்வலரும்,  சமூக சேவையாளருமான திருமதி ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சமூக சேவையாளர் இராஜரட்ணம் சிவநாதன்,  கனடாவிலிருந்து ஊடகவியலாளரும் அரசியல் சமூக ஆய்வாளருமான எஸ். மனோரஞ்சன், சவூதியிலிருந்து டொக்டர் இராஜசிங்கம் நரேந்திரன் ஆகியோர் டொக்டர் நொயல் நடேசனுடன் கொழும்பு வந்துள்ளனர்

கேட்பாரற்ற நிலையில் கொழும்புத் துறைமுகத்தில் `வணங்கா மண்` நிவாரணப் பொருட்கள்

 ship121212.jpgஇலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவென ஐரோப்பிய வாழ் தமிழர்களால் அனுப்பப்பட்ட பொருட்களை, பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட தாமதத்தையடுத்து இந்தியாவின் கொலராடோ கப்பல் சுமந்து வந்தது. தற்போது அப்பொருட்களை மீட்டு உரிய மக்களைச் சென்றடையச் செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதத்தையடுத்து அவை கொழும்பு துறைமுக விதிமுறைகளின்படி ஏலத்தில் விடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பிய தமிழர்கள் இலங்கை மக்களுக்காக உணவு, உடை, மருந்து என 884 தொன் நிவாரணப் பொருட்களை `வணங்காமண்` கப்பலில் அனுப்பி வைத்தனர். அதை இலங்கை அரசு திருப்பி அனுப்பியது. இதையடுத்து சென்னை துறைமுகத்துக்கு வெளியில் பல நாட்கள் `வணங்கா மண்` கப்பல் தத்தளித்தது. முதல்வர் கருணாநிதியின் நடவடிக்கையை அடுத்து, அக்கப்பலில் கொண்டுவரப்பட்ட பொருட்கள் 27 கொள்கலன்களுக்கு மாற்றப்பட்டு, சென்னை துறைமுகத்தில் உள்ள சி.சி.டி.எல். நிறுவனத்தின் மூலம் `கொலராடோ` என்ற சரக்கு கப்பலுக்கு மாற்றப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்தக் கப்பல் கடந்த 9ஆம் திகதி கொழும்பு துறைமுகம் வந்தடைந்த பின்னரும், நிவாரணப் பொருட்களை இதுவரை செஞ்சிலுவை சங்கத்தினர் பொறுப்பேற்கவில்லை. இதனால் இந்நிவாரணப் பொருட்கள் கொழும்பு துறைமுகத்தில் கடந்த 19 நாட்களாகக் கேட்பாரற்று கிடக்கின்றன. இது குறித்து தமிழகத்தில் உள்ள மனித உரிமை அமைப்பின் செயல் இயக்குநர் மற்றும் லண்டன் `மெர்ஸி மிஷனி`ன் இந்திய தொடர்பு அலுவலர் அக்னி சுப்பிரமணியன் கூறுகையில்,

“நிவாரணப் பொருட்களை எடுத்து விநியோகிக்க இலங்கைப் பணத்தில் ரூ.76 லட்சம் செலவாகும் என்று தமிழகத்தில் உள்ள செஞ்சிலுவை சங்கத்திடம் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து லண்டனில் உள்ள `மெர்ஸி மிஷன்` (கருணை தூதுவன்) அமைப்பிடம் கூறினோம். எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நிவாரணப் பொருட்கள் ஐரோப்பாவில் இருந்து புறப்பட்டு 70 நாட்களுக்கு மேல் ஆகின்றன. நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு கிடைக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

லிற்றில் எய்ட் இன் சின்னச் சின்ன உதவிகள் : வி அருட்சல்வன்

little_aidலிற்றில் எய்ட் என்கின்ற உதவி அமைப்பு பிரித்தானியாவில் பொதுஅமைப்புகளின் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு உதவி நிறுவனம். இவ்வமைப்பு ஆரம்பிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு உள்ளாக 5115 கிலோகிராம் மரக்கறிகள் 160 கிலோகிராம் குழந்தைகளுக்கான பால் மா, புதிய ஆடைகள் மற்றும் உள்ளாடைகள்  என நான்கு தடவைகள் பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளது. இதற்கு 4000 பவுண்களுக்கு சற்று அதிகமான நிதி செலவிடப்பட்டு உள்ளது. அதற்கான நிதியை பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களும் அன்பளிப்புச் செய்துள்ளனர். இதற்கான முழுமையான கணக்கு விபரத்தை http://littleaid.org.uk/accounts.htm அருகில் உள்ள இணைப்பை அழுத்திக் காண முடியும்.

இவற்றுக்கு மேலாக தேசம்நெற் முன்னெடுத்த வன்னி முகாம்களில் புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்கொள்ள இருந்த 4872 மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள் மற்றும் வழிகாட்டி நூல்களை வழங்குவதற்கான நூல் திட்டத்திலும் லிற்றில் எய்ட் பங்களிப்புச் செய்திருந்தது. 15000 பவுண் செலவில் மேற்கொள்ளப்பட்ட நூல் திட்டத்திற்கு லிற்றில் எய்ட் 1000 பவுண்களை வழங்கி இருந்தது.

லிற்றில் எய்ட் அமைப்பின் நீண்ட காலத் திட்டம் மிக முக்கியமானது. குறிப்பாக சிறார்களாக படையணிகளில் சேர்க்கப்பட்டு பின்னர் சரணடைந்தவர்களில் ஒரு பகுதியினர் அம்பேபுச என்ற சிறப்பு முகாமில் வைக்கப்பட்டு உள்ளனர். இது புலிகளின் சிறுவர் படையணியில் இருந்தவர்களுக்கான புனர்வாழ்வு முகாமாக இயங்குகின்றது. தெற்கில் உயர்ந்த மலைப்பிரதேசமான வனப்பகுதியான அம்பேபுச மாவட்டத்தில் இப்புனர்வாழ்வு மையம் இயங்குகிறது. தற்போது இம்முகாமில் ஆண்கள் பெண்களாக 300 பேர் வரை உள்ளனர்.

அம்பேபுச புனர்வாழ்வு மையத்தில் உள்ள முன்னாள் குழுந்தைப் போராளிகளின் வேண்டுகோளுக்கு அமைய அவர்களுக்கு இசைக்கருவிகளை லிற்றில் எய்ட் பெற்றுக் கொடுத்து உள்ளது. அவர்களுக்கு இசைப் பயிற்சி அளிப்பதற்கான ஆசிரியை ஒருவரையும் லிற்றில் எய்ட் பொறுப்பெற்று வழங்க உள்ளது. இது பற்றிய விவரணத்தை http://www.youtube.com/watch?v=JiIAZ8wqQwE  அருகில் உள்ள இணைப்பில் காணலாம்.

இற்றைவரை புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் நூற்றுக் கணக்கான பொது அமைப்புகள் உருவாகி செயற்பட்டு இருந்த போதும் அவற்றில் பலவற்றின் மீதும் சர்ச்சைகள் எழக் காரணமாக இருந்தது அவற்றில் வெளிப்படைத் தன்மை காணப்படாமையே. அந்த வகையில் லிற்றில் எய்ட் நூறுவீத வெளிப்படைத் தன்மையுடன் தனது ஒவ்வொரு நடவடிக்கையையும் இணையத்தில் பிரசுரிக்கின்றது. ஒவ்வொருவரும் அன்பளிப்புச் செய்யும் ஒவ்வொரு சதமும் பிரசுரிக்கப்படுகின்றது. ஒவ்வொரு சதமும் செலவழிக்கப்படும் போது அவையும் பிரசுரிக்கப்படுகின்றது. செலவுக்கான பற்றுச் சீட்டுக்களும் பிரசுரிக்கப்படுகின்றது.

லிற்றில் எய்ட் பொது அமைப்பாக இவ்வளவு செய்திருந்தால் தனிப்பட்ட முறையில் பலரும் பல்வேறு உதவிகளை இலைமறைகாயாகச் செய்து வருகின்றனர். அப்படி இருந்தும் முகாம்களின் உள்ள மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடிவதில்லை. எவ்வளவு பெரும் உதவியை வழங்கினாலும் அது சிறு உதவியே. அதனாலேயே லிற்றில் எய்ட் என்ற பெயரும் தன்னடக்கத்துடன் சூட்டப்பட்டது.

கிளிநொச்சியில் 3050 குடும்பங்கள் ஆகஸ்ட்15 இல் முதற்கட்ட மீள் குடியேற்றம்

north-governor.jpgகிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஏழு கிராம சேவகர் பிரிவுகளில் 3050 குடும்பங்களைச் சேர்ந்த பதினையாயிரம் பேர் (15,000) ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி முதற்கட்டமாக மீளக் குடியமர்த்தப்படுவார்கள் என்று கிளிநொச்சி அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் நேற்றுத் தெரிவித்தார்.

பூநகரி உதவி அரசாங்க அதிபர் பிரிவில் உள்ள முழங்காவில், நாச்சிகுடா கிராம சேவகர் பிரிவுகளில் 1350 குடும்பங்களைச் சேர்ந்த ஐயாயிரம் பேரும், கரச்சி உதவி அரசாங்க அதிபர் பிரிவில் உள்ள ஜெயந்திநகர், புதுமுறிப்பு, கனகபுரம், கிருஷ்ணபுரம், உருத்திரபுரம் கிழக்கு ஆகிய கிராம சேவகர்களில் 2700 குடும்பங்களைச் சேர்ந்த பத்தாயிரம் பேரும் மீளக்குடியமர்த்தப் படவிருப்பதாகவும் அவர் கூறினார்.

இக்கிராமங்களில் மீள்குடியேற்றத்தை மேற்கொள்ளவென உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தலைமையில் நேற்று நடைபெற்ற உயர் மட்ட கூட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் உள்ள 35 கிராமங் களில் ஆகஸ்ட் மாதம் 7ம் திகதி முதற் கட்ட மீள்குடியேற்றத்தை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்திற்கு அமைய வவுனியா உதவி அரசாங்க அதிபர் பிரிவில் 18 கிராமங்களிலும், வெங்கள செட்டிக்குளம் உதவி அரசாங்க அதிபர் பிரிவில் 12 கிராமங்களிலும் வவுனியா தெற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் 5 கிராமங்களிலும் இம் மீள் குடியேற்றம் மேற்கொள்ளப்படவிருப்பதாக வவுனியா கச்சேரி அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

இம்மீள்குடியேற்றத்தின் நிமித்தம் உட்கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்தும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப் பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

‘அயலகத் தமிழறிஞர்கள்” – இலங்கைத் தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாறு

ilnco.jpgஇலங்கைத் தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ள ‘அயலகத் தமிழறிஞர்கள்” என்ற தலைப்பில் தமிழக அறிஞர் முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் எழுதிய இந்த நூல் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் வெளிவர உள்ளது.

இலங்கைத் தமிழறிஞர்கள் தனிநாயகம் அடிகளார், க.சிவத்தம்பி, கா.கைலாசபதி, ஈழத்துப்பூராடனார் (செல்வராசகோபால்),  சி.மௌனகுரு, அ.சண்முகதாசு, எம்.ஏ.நுஃமான், சுப்பிரமணியன், ஆ.வேலுப்பிள்ளை உள்ளிட்டோர் வாழ்க்கை வரலாறு இடம் பெற்றுள்ள அயலகத் தமிழறிஞர்கள் என்னும் தலைப்பிலான நூல் தமிழ்நாட்டில் வெளிவர உள்ளது. 200 பக்கம் அளவில் அயலகத் தமிழறிஞர்கள் என்ற தலைப்பில் முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் இந்த நூலை எழுதியுள்ளார். 

ayalaka.jpgதமிழகத்தில் வெளிவரும் தமிழ் ஓசை நாளிதழில் ஞாயிறுதோறும் வெளிவந்த களஞ்சியம் பதிப்பில் ஆறு மாதங்களாக அயலகத் தமிழறிஞர்கள் என்ற தலைப்பில் ஒரு தொடர் வெளியானது. அதில் 30 அயலகத் தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, தமிழ் இலக்கியப்பணிகள் இடம்பெற்றிருந்தது. கால்டுவெல், போப் அடிகளார், தனிநாயகம் அடிகளார், அ.கி.இராமனுசன்,  கமில் சுவலபில், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, அலெக்சாண்டர் துபியான்சுகி,  தாமசு லேமான், சுப.திண்ணப்பன், ஆ.இரா.சிவகுமாரன், முரசு.நெடுமாறன் உள்ளிட்ட முப்பது தமிழுக்கு உழைத்த அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது.

தமிழகத்தில் இந்தத் தொடர் அறிஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தத் தொடரில் இடம்பெற்ற கட்டுரைகள் இணையத்தில் வெளிவந்ததால் உலக அளவில் இந்தத்தொடருக்கு ஆதரவு இருந்தது. தொடர் நிறைவு பெற்றதும் வயல்வெளிப் பதிப்பகத்தின் சார்பில் இந்த நூல் வெளிவர உள்ளது. தமிழக விலை 200 ரூபாவாகும்.

முனைவர் மு இளங்கோவன் எழுதிய இணையம் கற்போம் என்ற நூலும் அதேநாளில் வெளிவர உள்ளது. இணையத் தமிழறிஞர் பட்டம் பெற்ற முனைவர் மு. இளங்கோவன் தமிழறிஞர்களின் வாழ்க்கை, கலை, இலக்கியம், கல்வெட்டு, சிற்பம் குறித்து தொடர்ந்து இணையத்தில் எழுதி வருபவர். தமிழ் இணையப் பயிலரங்கைத் தமிழகம் முழுவதும் நடத்தி தமிழ் மாணவர்களுக்கு இணையம் குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருபவர். தமிழ்த்தட்டச்சு, மின்னஞ்சல்,  வலைப்பூ உருவாக்கம், விக்கிப்பீடியாவில் எழுதுதல், மின்னிதழ்கள் உள்ளிட்ட துறை பற்றி எழுதிய பதினைந்து கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.112 பக்கம் அளவுள்ள இந்த நூலின் தமிழக விலை 100 ரூபாவாகும். 

நூல் ஆசிரியரிடம் தொடர்புகொள்ள பின்வரும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தலாம்

.muelangovan@gmail.com
 

எலிக்காய்ச்சல் தடுப்பு பக்ரீறியாவை வழங்க கியூபா முன்வருகை

இலங்கையில் டெங்கு நோய் தடுப்புக்கு பி.ரி.ஐ. பக்ரீறியாவை வழங்க உடன்பட்டிருப்பது போல், எலிக் காய்ச்சல் தடுப்புக்கான பக்ரீறியா ஒன்றை வழங்கவும் கியூபா முன்வந்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது. சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, இலங்கையிலுள்ள கியூபா தூதுவர் மூலம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே கியூபா இதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் டபிள்யூ.எம்.டி. வன்னிநாயக்க தெரிவித்தார்.

இதேநேரம், இவ்வருட ஆரம்பம் தொடக்கம் இதுவரை எலிக் காய்ச்சலினால் 70 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன், 1,500 பேர் வரை அக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களென இனங் காணப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். அத்துடன், டெங்கு ஒழிப்புக்கு இலங்கையில் பி.ரி.ஐ. பக்ரீறியாக்களை பயன்படுத்துவதற்கு இருக்கும் சாத்தியக் கூறுகள் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கென அண்மையில் இலங்கை வந்த கியூபா நாட்டு நிபுணர்கள் இருவரும் தற்போது அம்பாந்தோட்டையில் தங்களது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன், நாளை புதன்கிழமை முதல் அவர்கள் கண்டி செல்லவிருப்பதாகவும் வன்னிநாயக்க குறிப்பிட்டார்.

நாட்டின் 13 மாவட்டங்களில் டெங்கு தொற்று அதிகமாக காணப்படுகின்ற போதிலும், முதற்கட்டமாக அம்பாந்தோட்டை மற்றும் கண்டி மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டே பரிசோதனைகள் நடத்தப்படுவதாகவும், பரிசோதனைகளின் இறுதியில் கியூப நாட்டு நிபுணர்களால் சுகாதார அமைச்சுக்கு அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த அறிக்கையின் பிரகாரமே இலங்கையில் டெங்கு ஒழிப்புக்கு பி.ரி.ஐ. பக்ரீறியாவை பயன்படுத்துவது பற்றி இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென்று கூறிய வன்னிநாயக்க, ஜனவரி மாதம் முதல் இதுவரை டெங்கினால் 208 பேர் உயிரிழந்துள்ளதுடன், 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார்.

பஹ்ரேன் பிரதமர் தலைமையில் உயர்மட்ட குழு இலங்கை வருகை – விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பு

kalifa-shik-binsalman.jpgபஹ்ரேன் பிரதமர், பிரதிப் பிரதமர் உட்பட உயர்மட்டக் குழுவினர் நேற்று மாலை இலங்கை வந்தனர். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அந்நாட்டின் பிரதமர் செய்க் கலிபா பின் சல்மான் அல்- கலிபா மற்றும் பிரதிப் பிரதமர் செய்க் மொஹமட் பின் முபாரக் அல்-கலிபா ஆகியோருக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கை வந்திருக்கும் பஹ்ரேன் பிரதமர், பிரதிப் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் நேற்று மாலை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவை சந்தித்து இரு தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினர். பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து நாட்டில் அமைதி நிலைநாட்டியிருப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, இலங்கை வந்திருக்கும் பஹ்ரேன் பிரதமர் வாழ்த்துக்களை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொண்டதாக அமைச்சர் போகொல்லாகம கூறினார்.

சந்திப்பையடுத்து வெளிவிவகார அமைச்சர் செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கையில் கூறியதாவது :- இடம்யெர்ந்துள்ளவர்களை மீளக் குடியமர்த்துவதற்கு பஹ்ரேன் அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை பெற்றுத்தருமென அந்நாட்டின் பிரதமர் உறுதியளித்தார்.

அரசாங்கத்தின் 180 நாள் வேலைத்திட்டம் தொடர்பாக நான் அவர்களிடம் விளக்கிக் கூறினேன். அதனை நன்கு புரிந்துகொண்டதாக கூறிய பஹ்ரேன் பிரதமர், அதனை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கு அனைத்து வளைகுடா நாடுகளினதும் ஒத்துழைப்பை பெற்று தருவதாகவும் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமிடையில் வர்த்தக மற்றும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது குறித்தும் பேச்சுவார்த்தையில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. பெரும் எண்ணிக்கையான இலங்கையர்கள் பஹ்ரேனில் சேவையாற்றி வருகின்றார்கள். எதிர்காலத்தில் அங்கே சேவையாற்றும் இலங்கையர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாகவும் இந்த சந்திப்பின்போது கலந்தாலோசிக்கப்பட்டது என்றும் வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம கூறினார்.

இதேவேளை, பஹ்ரேன் பிரதமர் மற்றும் பிரதிப் பிரதமர் ஆகியோர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதோடு இருதரப்பு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவர்.

ஆகஸ்ட் 31 இற்கு முன்னர் வெலிஓயாவில் மீள்குடியேற்றம் – பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு

basil-raja.jpgவெலிஓயா (மணலாறு) பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றும் நடவடிக்கைகள் ஆகஸ்ட் 31 இற்கு முன்னர் பூர்த்தியடையுமென்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் எம்.பி.யுமான பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இதற்கிணங்க கல்யாணிபுர, மொரவேவ, கஜபாபுர கிராமங்களிலுள்ள இடம்பெயர்ந்த குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்படவிருக்கின்றனர். இந்தப் பகுதிக்கான வீதிக்கட்டமைப்பை நிர்மாணிப்பதற்கு பதவியா பிரதேச சபைக்கு 5 கோடி ரூபா வழங்கப்படும். இதற்கு மேலதிகமாக இந்தக் கிராமங்களிலுள்ள வீதிகள் கமநெகும திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும்.

வெலிஓயாப் பகுதியிலுள்ள சகல கிராமங்களுக்கும் மின்சாரம் , நீர்ப்பாசனம், போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்படும்.  மீள்குடியேற்றம் தொடர்பாக வெலிஓயாவில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விபரங்களை பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அந்தப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிக்கு முழுமையான ஆதரவை இராணுவத்தின் பொறியியல் பிரிவு வழங்கியுள்ளது. கனகபுர, கஜபாபுர, அதாவெ துணுவௌ கிராமங்களில் கண்ணிவெடியகற்றும் பணிகள் இடம்பெறவுள்ளது. அதாவெதுணுவௌ? நெடுங்கேணி வீதியை நிர்மாணித்துத் தருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

இந்திய மாவோயிஸ்ட்டுக்களின் இரகசிய ஆவணத்தில் புலிகள் தொடர்பாக பல குறிப்புகள்

இந்தியாவின் பாதுகாப்புக்குப் பாரிய சவாலாக விளங்குகிறார்களென பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்திருந்த மாவோயிஸ்ட்டுக்கள், ஆயுதப் போராட்டம் மற்றும் நாடளாவிய ரீதியில் எதிரிப் படைகளுக்கு கடுமையான இழப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான துணிச்சலான திட்டத்தைத் தயாரித்துள்ளனர். அதே சமயம், இலங்கையில் விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்டமை தொடர்பாக பாடம் கற்றுக்கொள்ளுமாறு தமது கெரில்லாக்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவோயிஸ்ட்க்கள் கூறியுள்ளதுடன் அளவுக்கு அதிகமாக நம்பிக்கை கொண்டிருக்கவேண்டமெனவும் கூறியுள்ளதாக ஐ.ஏ.என்.எஸ்.செய்திச் சேவையை மேற்கோள்காட்டி “த வீக்’ தெரிவித்திருக்கிறது. மாவோயிஸ்ட்டுக்களின் நிகழ்ச்சித்திட்டமானது 20 பக்க இரகசியக் கொள்கை ஆவணத்தின் பகுதியாக உள்ளது. கடந்த மாதம் மறைவான காட்டுப் பகுதியிலிருந்து மாவோயிஸ்ட்டுக்களின் தலைமைத்துவத்தால் இது தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜூன் 12 ஆம் திகதியிடப்பட்ட அந்த ஆவணத்தின் பிரதியை ஐ.ஏ.என்.எஸ்.வைத்திருக்கிறது.

பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு எதிராக இந்தியா நடத்திய அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் போராட்டத்திலும் பார்க்க இந்திய அரசாங்கத்திற்கு எதிரான புதிய யுத்தமானது “அதிகளவு நீண்டதாகவும் அதிகளவுக்கு கசப்பானதாகவும்’ இருக்கும் என்று மாவோயிஸ்ட்டுக்கள் எச்சரித்துள்ளனர்.

“தேர்தலுக்குப் பின்னரான நிலைவரம், எமது இலக்குகள்’ என்ற இந்த ஆவணம் ஆங்கிலத்தில் உள்ளது. விடுதலைப் புலிகள் அடைந்த பின்னடைவுகளை மனதில் கொண்டு மாற்றம் செய்யப்பட்ட தந்திரோபாயத்துடன் எவ்வாறு, எங்கே தாக்குதல்களை அதிகரிப்பது என்ற திட்டம் மாவோயிஸ்ட்க்களால் வகுக்கப்பட்டுள்ளது.

“உடனடி இலக்குகள்’ என்ற உப தலைப்பின் கீழ் கட்சியும் அதன் ஆயுதக் கிளைகளும் தந்திரோபாயமான பதில்தாக்குதல்களை பல்வேறு வடிவங்களிலான ஆயுத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு எதிர்ச் சக்திகளுக்கு கடுமையான இழப்புகளை ஏற்படுத்த வேண்டிய தேவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

பகைவரின் புதிய யுத்தத்தைத் தோற்கடிக்கவும் மக்கள் யுத்தத்தை தக்கவைக்கவும் நாடளாவிய ரீதியில் மக்கள் எழுச்சியை ஏற்படுத்துவது அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தண்ட காரண்யம், பிகாரி, ஜார்கண்ட், ஒரிசா, ஆந்திர பிரதேசம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஏனைய இடங்களில் போராட்டங்களை மேற்கொள்வது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தண்ட காரண்ய வனமானது சட்டிஸ்கார் மாநிலத்தின் கனியவளம் நிறைந்த பகுதியான பாஸ்தார் பிராந்தியத்தையும் இந்தியாவின் அடர்ந்த காட்டுப்பிரதேசமான அபுஜ்மார் மலைக்குன்று பகுதிகளையும் உள்ளடக்கியதாகும். அங்குதான் மாவோயிஸ்ட்டுக்களின் இராணுவ தலைமையாகமும் தலைவர்களின் மறைவிடங்களும் இருப்பதாக இந்தியப் பொலிஸார் நம்புகின்றனர்.  இந்த ஆவணத்தில் விடுதலைப் புலிகள் பற்றிய பல குறிப்புகள் உள்ளடங்கியிருப்பதாக “த விக்’ தெரிவித்திருக்கிறது.

விடுதலைப்புலிகளின் பின்னடைவானது இந்தியாவிலுள்ள புரட்சிகர இயக்கத்திற்கு எதிர் மறையான விளைவை ஏற்படுத்தியிருப்பதாகவும் அத்துடன் தெற்காசிய மற்றும் முழு உலகுக்குமே எதிர் மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் புலிகளின் தோல்வியால் பெற்ற அனுபவமானது ஆராய்வதற்கும் கற்றுக் கொள்வதற்கும் முக்கியமானதாகும். விடுதலைப்புலிகளின் தவறானது அதன் பகைவரின் தந்திரோபாய மாற்றங்களையும் ஆற்றலையும் ஆய்வு செய்வதிலிருந்த குறைபாட்டையும் எதிராளியை குறைவாக மதிப்பிட்டும் தனது சொந்தப் படையின் ஆற்றலை மிகையாக மதிப்பிட்டிருந்தமையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிரிப்படைகளுக்கு அதிக நெருக்கடிகளை உருவாக்கும் அதேசமயம் கொரில்லாப் போரை புதிய இடங்களுக்கு விரிவுபடுத்தி பரந்தளவிலான பகுதிகளுக்கு எதிரிப்படையை கலைத்து இருக்க செய்தலும் மாவோயிஸ்ட்டுகளின் திட்டத்தில் உள்ளது.

அதேசமயம் தலைமைத் துவத்தை பாதுகாத்து தேவையற்ற உறுப்பினர்களின் இழப்புகளை தவிர்ப்பது தேவையெனவும் அத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் நக்கல் பாரி கிராமத்தில் 1967 இல் மாவோயிஸ்ட் இயக்கம் ஆரம்பமானது. இங்கு ஆரம்பமானதால் அந்த அமைப்பை சேர்ந்தோர் நக்சலைட்டுக்கள் என்று அழைக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான மாவோயிஸ்ட்டுகள் கொல்லபட்டிருக்கின்றபோதும் அவர்கள் பல பகுதிகளில் தொடர்ந்தும் இயங்கிவருகின்றனர்.