அரசாங்கம் மேற்கொண்டுவரும் புனரமைப்புப் பணிகளுக்குப் புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் முன்னெடுப்பம் என இலங்கை வந்துள்ள புலம்பெயர் தமிழர்கள் குழு தெரிவித்துள்ளது.
இலங்கையில் இறுதிக் கட்டப் போரின் பின்னரான நிலைமைகளை நேரில் அவதானிக்கவென்றும், இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதில் புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்வதைப் பற்றி ஆராயவும், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டொக்டர் நொயல் நடேசன் தலைமையிலான குழுவினர் இலங்கை வந்துள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நிவாரணக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இடம்பெயர் மக்களை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் துரித நடவடிக்கைகள் புலம்பெயர் தமிழர்கள் குழு திருப்தி தெரிவித்துள்ளது.
சகலவற்றையும் இழந்து வந்துள்ள மக்களின் வாழ்வாதார ஸ்திரத்தன்மையைக் கருத்திற்கொண்டு நீண்டகால செயற்திட்டங்களின் அடிப்படையில் குடியமர்த்தப்பட வேண்டுமென அவர்கள் தெரிவித்தனர்.
அரசியல் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், இடம்பெயர்ந்த மக்கள், உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேசிய இந்தக் குழுவினர், தமது அனுபவங்களையும் கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
லண்டனைச் சேர்ந்த எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலரும், சமூக சேவையாளருமான திருமதி ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சமூக சேவையாளர் இராஜரட்ணம் சிவநாதன், கனடாவிலிருந்து ஊடகவியலாளரும் அரசியல் சமூக ஆய்வாளருமான எஸ். மனோரஞ்சன், சவூதியிலிருந்து டொக்டர் இராஜசிங்கம் நரேந்திரன் ஆகியோர் டொக்டர் நொயல் நடேசனுடன் கொழும்பு வந்துள்ளனர்