இந்தியாவின் பாதுகாப்புக்குப் பாரிய சவாலாக விளங்குகிறார்களென பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்திருந்த மாவோயிஸ்ட்டுக்கள், ஆயுதப் போராட்டம் மற்றும் நாடளாவிய ரீதியில் எதிரிப் படைகளுக்கு கடுமையான இழப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான துணிச்சலான திட்டத்தைத் தயாரித்துள்ளனர். அதே சமயம், இலங்கையில் விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்டமை தொடர்பாக பாடம் கற்றுக்கொள்ளுமாறு தமது கெரில்லாக்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவோயிஸ்ட்க்கள் கூறியுள்ளதுடன் அளவுக்கு அதிகமாக நம்பிக்கை கொண்டிருக்கவேண்டமெனவும் கூறியுள்ளதாக ஐ.ஏ.என்.எஸ்.செய்திச் சேவையை மேற்கோள்காட்டி “த வீக்’ தெரிவித்திருக்கிறது. மாவோயிஸ்ட்டுக்களின் நிகழ்ச்சித்திட்டமானது 20 பக்க இரகசியக் கொள்கை ஆவணத்தின் பகுதியாக உள்ளது. கடந்த மாதம் மறைவான காட்டுப் பகுதியிலிருந்து மாவோயிஸ்ட்டுக்களின் தலைமைத்துவத்தால் இது தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜூன் 12 ஆம் திகதியிடப்பட்ட அந்த ஆவணத்தின் பிரதியை ஐ.ஏ.என்.எஸ்.வைத்திருக்கிறது.
பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு எதிராக இந்தியா நடத்திய அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் போராட்டத்திலும் பார்க்க இந்திய அரசாங்கத்திற்கு எதிரான புதிய யுத்தமானது “அதிகளவு நீண்டதாகவும் அதிகளவுக்கு கசப்பானதாகவும்’ இருக்கும் என்று மாவோயிஸ்ட்டுக்கள் எச்சரித்துள்ளனர்.
“தேர்தலுக்குப் பின்னரான நிலைவரம், எமது இலக்குகள்’ என்ற இந்த ஆவணம் ஆங்கிலத்தில் உள்ளது. விடுதலைப் புலிகள் அடைந்த பின்னடைவுகளை மனதில் கொண்டு மாற்றம் செய்யப்பட்ட தந்திரோபாயத்துடன் எவ்வாறு, எங்கே தாக்குதல்களை அதிகரிப்பது என்ற திட்டம் மாவோயிஸ்ட்க்களால் வகுக்கப்பட்டுள்ளது.
“உடனடி இலக்குகள்’ என்ற உப தலைப்பின் கீழ் கட்சியும் அதன் ஆயுதக் கிளைகளும் தந்திரோபாயமான பதில்தாக்குதல்களை பல்வேறு வடிவங்களிலான ஆயுத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு எதிர்ச் சக்திகளுக்கு கடுமையான இழப்புகளை ஏற்படுத்த வேண்டிய தேவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
பகைவரின் புதிய யுத்தத்தைத் தோற்கடிக்கவும் மக்கள் யுத்தத்தை தக்கவைக்கவும் நாடளாவிய ரீதியில் மக்கள் எழுச்சியை ஏற்படுத்துவது அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தண்ட காரண்யம், பிகாரி, ஜார்கண்ட், ஒரிசா, ஆந்திர பிரதேசம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஏனைய இடங்களில் போராட்டங்களை மேற்கொள்வது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தண்ட காரண்ய வனமானது சட்டிஸ்கார் மாநிலத்தின் கனியவளம் நிறைந்த பகுதியான பாஸ்தார் பிராந்தியத்தையும் இந்தியாவின் அடர்ந்த காட்டுப்பிரதேசமான அபுஜ்மார் மலைக்குன்று பகுதிகளையும் உள்ளடக்கியதாகும். அங்குதான் மாவோயிஸ்ட்டுக்களின் இராணுவ தலைமையாகமும் தலைவர்களின் மறைவிடங்களும் இருப்பதாக இந்தியப் பொலிஸார் நம்புகின்றனர். இந்த ஆவணத்தில் விடுதலைப் புலிகள் பற்றிய பல குறிப்புகள் உள்ளடங்கியிருப்பதாக “த விக்’ தெரிவித்திருக்கிறது.
விடுதலைப்புலிகளின் பின்னடைவானது இந்தியாவிலுள்ள புரட்சிகர இயக்கத்திற்கு எதிர் மறையான விளைவை ஏற்படுத்தியிருப்பதாகவும் அத்துடன் தெற்காசிய மற்றும் முழு உலகுக்குமே எதிர் மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் புலிகளின் தோல்வியால் பெற்ற அனுபவமானது ஆராய்வதற்கும் கற்றுக் கொள்வதற்கும் முக்கியமானதாகும். விடுதலைப்புலிகளின் தவறானது அதன் பகைவரின் தந்திரோபாய மாற்றங்களையும் ஆற்றலையும் ஆய்வு செய்வதிலிருந்த குறைபாட்டையும் எதிராளியை குறைவாக மதிப்பிட்டும் தனது சொந்தப் படையின் ஆற்றலை மிகையாக மதிப்பிட்டிருந்தமையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிரிப்படைகளுக்கு அதிக நெருக்கடிகளை உருவாக்கும் அதேசமயம் கொரில்லாப் போரை புதிய இடங்களுக்கு விரிவுபடுத்தி பரந்தளவிலான பகுதிகளுக்கு எதிரிப்படையை கலைத்து இருக்க செய்தலும் மாவோயிஸ்ட்டுகளின் திட்டத்தில் உள்ளது.
அதேசமயம் தலைமைத் துவத்தை பாதுகாத்து தேவையற்ற உறுப்பினர்களின் இழப்புகளை தவிர்ப்பது தேவையெனவும் அத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் நக்கல் பாரி கிராமத்தில் 1967 இல் மாவோயிஸ்ட் இயக்கம் ஆரம்பமானது. இங்கு ஆரம்பமானதால் அந்த அமைப்பை சேர்ந்தோர் நக்சலைட்டுக்கள் என்று அழைக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான மாவோயிஸ்ட்டுகள் கொல்லபட்டிருக்கின்றபோதும் அவர்கள் பல பகுதிகளில் தொடர்ந்தும் இயங்கிவருகின்றனர்.