வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபையின் யாழ். மாவட்ட அலுவலகம் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டதாக தொழில் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள தனியார் கட்டிடமொன்றில் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்தை தொழில் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி அமைச்சர் பியசேன கமகே திறந்து வைத்தார். இந்நிகழ்வில் சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் ரெஜினோல்ட் குரே ஆகியோரும் கலந்துகொண்டனர்.
வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் தொழிற்பயிற்சி அதிகார சபை யாழ்ப்பாண இளைஞர் யுவதிகளுக்குத் தொழிற்பயிற்சிகளை அளித்து வருவதுடன் தேசிய தகைமையுடைய சான்றிதழ்களையும் வழங்கி வருகின்றது.
நேற்றைய முன்தின நிகழ்வில் தொழிற்பயிற்சிக் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த 140 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் அவர்களில் திறமை காட்டிய 100 பேர் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்குத் தொழிற் பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.