இரானில் கடந்த மாதம் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலின் முடிவை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களில் பலியானவர்களுக்கான நினைவு நிகழ்வை எதிர்கட்சியினர் நடத்துவதற்கு அந்நாட்டின் அரசாங்கம் அனுமதி வழங்க மறுத்துள்ளது.
இது தொடர்பில் தோல்வியடைந்த வேட்பாளர்களான மிர் ஹுசைன் முசவி மற்றும் மெஹ்டி கரூபி ஆகியோரிடமிருந்து வந்த வேண்டுகோள், தேவையான சட்ட திட்டங்களை பூர்த்தி செய்யவில்லை என்று, உள்துறை அமைச்சகம் ஃபார்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை நடைபெறவுள்ள அந்த நினைவு நிகழ்ச்சியின் போது உரையேதும் நிகழ்த்தப்பட மாட்டாது என்று தோல்வியடைந்துள்ள வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தேர்தலையடுத்து நடைபெற்ற போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாமை மூடும்படி நாட்டின் அதியுயர் மதத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.