லிற்றில் எய்ட் இன் சின்னச் சின்ன உதவிகள் : வி அருட்சல்வன்

little_aidலிற்றில் எய்ட் என்கின்ற உதவி அமைப்பு பிரித்தானியாவில் பொதுஅமைப்புகளின் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு உதவி நிறுவனம். இவ்வமைப்பு ஆரம்பிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு உள்ளாக 5115 கிலோகிராம் மரக்கறிகள் 160 கிலோகிராம் குழந்தைகளுக்கான பால் மா, புதிய ஆடைகள் மற்றும் உள்ளாடைகள்  என நான்கு தடவைகள் பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளது. இதற்கு 4000 பவுண்களுக்கு சற்று அதிகமான நிதி செலவிடப்பட்டு உள்ளது. அதற்கான நிதியை பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களும் அன்பளிப்புச் செய்துள்ளனர். இதற்கான முழுமையான கணக்கு விபரத்தை http://littleaid.org.uk/accounts.htm அருகில் உள்ள இணைப்பை அழுத்திக் காண முடியும்.

இவற்றுக்கு மேலாக தேசம்நெற் முன்னெடுத்த வன்னி முகாம்களில் புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்கொள்ள இருந்த 4872 மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள் மற்றும் வழிகாட்டி நூல்களை வழங்குவதற்கான நூல் திட்டத்திலும் லிற்றில் எய்ட் பங்களிப்புச் செய்திருந்தது. 15000 பவுண் செலவில் மேற்கொள்ளப்பட்ட நூல் திட்டத்திற்கு லிற்றில் எய்ட் 1000 பவுண்களை வழங்கி இருந்தது.

லிற்றில் எய்ட் அமைப்பின் நீண்ட காலத் திட்டம் மிக முக்கியமானது. குறிப்பாக சிறார்களாக படையணிகளில் சேர்க்கப்பட்டு பின்னர் சரணடைந்தவர்களில் ஒரு பகுதியினர் அம்பேபுச என்ற சிறப்பு முகாமில் வைக்கப்பட்டு உள்ளனர். இது புலிகளின் சிறுவர் படையணியில் இருந்தவர்களுக்கான புனர்வாழ்வு முகாமாக இயங்குகின்றது. தெற்கில் உயர்ந்த மலைப்பிரதேசமான வனப்பகுதியான அம்பேபுச மாவட்டத்தில் இப்புனர்வாழ்வு மையம் இயங்குகிறது. தற்போது இம்முகாமில் ஆண்கள் பெண்களாக 300 பேர் வரை உள்ளனர்.

அம்பேபுச புனர்வாழ்வு மையத்தில் உள்ள முன்னாள் குழுந்தைப் போராளிகளின் வேண்டுகோளுக்கு அமைய அவர்களுக்கு இசைக்கருவிகளை லிற்றில் எய்ட் பெற்றுக் கொடுத்து உள்ளது. அவர்களுக்கு இசைப் பயிற்சி அளிப்பதற்கான ஆசிரியை ஒருவரையும் லிற்றில் எய்ட் பொறுப்பெற்று வழங்க உள்ளது. இது பற்றிய விவரணத்தை http://www.youtube.com/watch?v=JiIAZ8wqQwE  அருகில் உள்ள இணைப்பில் காணலாம்.

இற்றைவரை புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் நூற்றுக் கணக்கான பொது அமைப்புகள் உருவாகி செயற்பட்டு இருந்த போதும் அவற்றில் பலவற்றின் மீதும் சர்ச்சைகள் எழக் காரணமாக இருந்தது அவற்றில் வெளிப்படைத் தன்மை காணப்படாமையே. அந்த வகையில் லிற்றில் எய்ட் நூறுவீத வெளிப்படைத் தன்மையுடன் தனது ஒவ்வொரு நடவடிக்கையையும் இணையத்தில் பிரசுரிக்கின்றது. ஒவ்வொருவரும் அன்பளிப்புச் செய்யும் ஒவ்வொரு சதமும் பிரசுரிக்கப்படுகின்றது. ஒவ்வொரு சதமும் செலவழிக்கப்படும் போது அவையும் பிரசுரிக்கப்படுகின்றது. செலவுக்கான பற்றுச் சீட்டுக்களும் பிரசுரிக்கப்படுகின்றது.

லிற்றில் எய்ட் பொது அமைப்பாக இவ்வளவு செய்திருந்தால் தனிப்பட்ட முறையில் பலரும் பல்வேறு உதவிகளை இலைமறைகாயாகச் செய்து வருகின்றனர். அப்படி இருந்தும் முகாம்களின் உள்ள மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடிவதில்லை. எவ்வளவு பெரும் உதவியை வழங்கினாலும் அது சிறு உதவியே. அதனாலேயே லிற்றில் எய்ட் என்ற பெயரும் தன்னடக்கத்துடன் சூட்டப்பட்டது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • chandran.raja
    chandran.raja

    நிமிர்ந்து நில். துணிந்து செல்.
    எல்லோருக்கும் மனங்கள் திறந்து இருக்கிறது. இருப்பை வெளிக்காட்டுவதற்கு போதியளவு வசதிகளும் புலம் பெயர்நாட்டில்லுள்ளது. கடந்த காலங்களில் புனர்வாழ்வு போன்ற அமைப்புகள் துஷ்ரர்களின் சிக்கி- சிக்குபட வைத்து எந்த விதபலனும் கிடையாமல் வெறும் அழிவுகளே எமது மக்களுக்கு தேடிக்கொடுத்தது.

    நினைத்ததுப் பாருங்கள் இவ்வளவு காலமும் “லிற்றில்எய்ட்”சேர்த்த பணம் ஒரு வர்த்தகரிடம் வாங்கப்பட்ட அரைபங்கைக்கூட தாண்டியிருக்காது. ஆயிரக்கான வர்தகர்கள்! லட்சக்கணக்கானமக்கள்!! இதை நான்கு வருடத்திற்கு முன் ஆரம்பித்திருந்தால் துரோகிபட்டமும் கிடைத்து சிலவேளைகளில் தண்டனையும் நிறைவேறியிருக்கும். சரி அது கடந்தகாலமாகவே இருக்கட்டும். அனுதினமும் மாற்றங்கள் நடந்து வரும் போது எமது சமூகத்தின் சிந்தனையில் மட்டும் எப்படி மாற்றம் வராது போகும்?

    இந்த விஷயத்தில் மனச்சுத்தம் பூரணஅர்ப்பணப்பு ஒவ்வாரு சதத்திற்கும் கணக்குகாட்டுகிற-தம்கொடுத்த பணம் எப்படி?பயன்படுத்தப்பட்டது… பார்வையிடுகிற ஒழுங்குமுறை இருக்கும் போது இந்தசின்ன நிறுவனம் அசுர பலத்தை அடையும். இதில்நுரற்று கணக்கான மக்களிலிருந்து ஆயிரம்லட்சமாக தாயகமக்கள் பலன் பெறுவார்கள் என்று சொல்லி எனது ஆசியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

    Reply
  • மாயா
    மாயா

    நல்லதொரு முன்மாதிரி. இது போன்ற சிறு உதவிகள் கூட அங்குள்ள மக்களை ஆறுதல்படுத்தும். பாரராட்டுகள். வாழ்த்துகள்.

    Reply
  • suban
    suban

    கொழும்பில் 75லட்சம் ரூபா கட்டி வெளியில் எடுக்கமுடியாத நிலையில் தங்கிநிற்கும் வணங்காமண் பொருட்களை புலம்பெயர்ந்த அமைப்பொன்று ஏன் வெளியில் எடுத்து உரியவர்களுக்கு போய்சேர ஆவன செய்யக்கூடாது. வணங்கா மண் ஏற்பாட்டாளர்களின் நோக்கம் வேறு. அது எல்லாமே எப்பவோ முடிந்துபோன காரியம். அவர்கள் இனிஅக்கறைப்பட மாட்டார்கள்? நாங்களுமா?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சுபன்
    வணங்காமண் ஏற்பாட்டாளர்கள் கொண்டு சென்ற பொருட்களில் பல இப்பொழுதே பழுதடைந்து விட்டன. இவற்றிற்கு 75 இலட்சம் கொடுத்து மீட்டெடுத்து அவற்றைக் மீண்டும் குப்பையில் சேர்ப்தற்கும் காசு கொடுப்பதை விட, இந்த 75 இலட்சத்திற்கு எவ்வளவோ பொருட்களைப் புதிதாகவே வாங்கி அந்த வன்னி மக்களுக்குக் கொடுத்து விடலாம். லிற்றில் எய்ட் போல் மக்களைப் பற்றியே சிந்தித்துச் செயற்பட்டிருந்தால் வணங்காமண்ணிற்கு சேர்த்ததை முறையாக அந்த மக்களிடம் சேர்த்திருக்கலாம். ஆனால் வணங்காமண் முற்றுமுழுதாக மற்றவர்களுக்கு பிலிம் காட்டவே செயற்பட்டது. இதன் விளைவு தான் இன்றைய நிலை.

    Reply