அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

வவுனியாவில் அமைதியான வாக்களிப்பு

election000.jpgவவுனியா நகரசபைக்கான வாக்களிப்பு மிகவும் அமைதியான முறையில் நடைபெறுவதாகவும், நண்பகல் வரையில் 35 வீதம் வாக்குப்பதிவு இடம்பெற்றதாகவும் வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ.எஸ்.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

காலை முதல் வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு சீராக நடைபெற்றதாகவும் அசம்பாவிதங்கள் எதுவும் வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 எனினும், பட்டாணிச்சூர், புளியங்குளம், தாண்டிக்குளம், கற்குழி உட்பட்ட சில பகுதிகளில் மாற்றுக் கட்சிகளின் ஆதரவாளர்கள், கட்சி உறுப்பினர்களிடையே சிறுசிறு வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன், சில கைகலப்பு சம்பவங்களும் இடம்பெற்றதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறான சம்பவம் ஒன்றில் தமது அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் சிறு காயத்திற்கு உள்ளாகியதாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) தலைவர் ரீ.சித்தார்த்தன் தெரிவித்தார்.

கே.பிக்கு எதிராக சட்ட நடவடிக்கை

pathmanathan.jpgஆசிய நாடொன்றிலிருந்து கைது செய்யப்பட்ட புலிகளின் தற்போதைய தலைவர் என தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் நேற்றுக் காலை கொழும்புக்கு கொண்டுவரப்பட்டதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்றுத் தெரிவித்தார்.

பாதுகாப்புப் பிரிவினரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கே.பி, இலங்கை சட்டத்தின் பிரகாரம் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் அமைச்சர் கெஹலிய கூறினார். கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஊடக மத்திய நிலையத்தில் நேற்று செய்தியாளர் மாநாடொன்று நடந்தது. இந்த மாநாட்டிலேயே அமைச்சர் கெஹலிய மேற்கண்டவாறு கூறினார்.

தன்னைத்தானே தலைவரென உரிமை கோரியிருந்த கே.பி.யின் கைது ஊடாக உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டு பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டாலோ, புலிகளின் தலைவர்தான் தானென கூறிக்கொண்டிருந்தாலோ அவர்களை கைதுசெய்யும் ஆற்றல் இலங்கை பாதுகாப்புப் பிரிவினருக்கு உண்டு என்பதை கே.பி.யின் கைது மூலம் சர்வதேசத்துக்கு உணர்த்தியிருக்கிறோம் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

பிரபாகரன் கொல்லப்பட்டதையடுத்து புலிகளின் அடுத்த தலைவர் நான்தான் என கூறிக் கொண்டு அறிக்கைகளை வெளியிட்டு வந்த கே.பி, சர்வதேச பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த நபர் மட்டுமன்றி, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையுடன் நேரடி தொடர்பு கொண்டவராகவும் தேடப்பட்டு வந்துள்ளார்.

இவரைக் கைது செய்வதற்காக இலங்கைப் புலனாய்வுப் பிரிவும் ஆசிய நாடுகளின் புலனாய்வுப் பிரிவொன்றும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுத்திருந்ததாக அமைச்சர் கெஹலிய தெரிவித்தார்.

கே.பி. எந்த நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்? என செய்தியாளர் ஒருவர் கேட்ட போது:

பலராலும் தேடப்பட்டுவந்த கே.பி, இப் போது கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டும் விட்டார். அவர் ஆசிய பிராந்திய நாடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டார் என்று மட்டுமே கூறமுடியும் என்றார்.

ஆசிய பிராந்தியத்திலுள்ள எமது நட்பு நாடுகளின் புலனாய்வுப் பிரிவும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் கெஹலிய தெரிவித்தார்.

குமரன் பத்மநாதன் அல்லது கே.பி. பல நாடுகளினாலும் தேடப்பட்டு வந்தவர். இந்தியாவும் அவரை கைது செய்யவிருந்தது. இந்த நிலையில் இவ்வாறான நாடுகள் அவரை தம்மிடம் ஒப்படைக்கும் படி கேட்டால் ஒப்படைப்பீர்களா? ஏதாவது ஒரு நாடு இவ்வாறான கோரிக்கையை முன்வைத்திருக்கிறதா? என செய்தியாளர் ஒருவர் கேட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல:

எந்தவொரு நாடும் தனிப்பட்ட விதத்தில் இவ்வாறான கோரிக்கையை இதுவரை விடுக்கவில்லை. எனினும் பொது நலவாய நாடுகளுக்கிடையே இவ்வாறான கைதுகள் பரிமாற்றம் தொடர்பான ஒவ்வொரு விதமான உடன்படிக்கைகள் அமுலில் உள்ளன. இவ்வாறான உடன்படிக்கைகளை நாம் மதிக்கின்றோம். அவற்றின் பிரகாரம் செயற்படவும் நாம் ஆயத்தமாகவும் உள்ளோம் எனவும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் கெஹலியவுடன் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, கடற்படை பேச்சாளர் கப்டன் டி.கே.பி. ரத்நாயக்க, விமானப்படை பேச்சாளர் விங்கமாண்டர் ஜனக நாணயக்கார, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேக்கர, ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல ஆகியோர் கலந்து கொண்டனர்.

1955 ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி காங்கேசன்துறையில் பிறந்த கே.பி.யின் இயற்பெயர் சன்முகம் குமரன் தர்மலிங்கம் ஆகும்.

தமிழ், ஆங்கிலம், பிரெஞ் மற்றும் சிங்கள மொழிகளில் இவர் நல்ல பரிச்சயமிக்கவர். 1983 ஆம் ஆண்டு இவர் இலங்கையை விட்டு வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆபாச இறுவட்டுகள் விற்றவர் கைது

சீதுவையில் ஆபாச இறுவட்டுகளை விற்பனை செய்து வந்த வியாபாரி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  சினிமா படங்களின் பெயரில் இவற்றை இவர் பாடசாலை பிள்ளைகளுக்கு விற்பனை செய்து வந்தார் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. வீட்டில் வைத்து கணினியில் ஆபாசப்படங்களை இறுவட்டுகளில் பதிவு செய்து வந்தார் எனவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இவரிடமிருந்து 500 ஆபாச இறுவட்டுகள், கணினி என்பனவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.  சீதுவை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இவரின் விற்பனை நிலையத்தில் மாணவன் ஒருவன் மூலம் ஒரு இறுவட்டை வாங்கி அதனை கணினியின் மூலம் பார்த்த போது இவரது வியாபார நடவடிக்கை தெரியவந்தது.

தமிழ்நாட்டின் நிவாரணப் பொருட்களுடன் அம்ஸ்டர்டாம் கப்பல் இன்று கொழும்பு வரும்

06-cargo-ship.jpgதமிழக அரசு நான்காவது கட்டமாக வழங்கியுள்ள 15 கோடி ரூபா மதிப்புள்ள நிவாரண பொருட்கள் ஏற்றப்பட்ட “”எம்.சி.பி. அம்ஸ்டர்டாம்’ கப்பல் நேற்று முன்தினம் இலங்கைக்கு புறப்பட்டது. இக்கப்பல் இன்று இலங்கைக்கு வருகைதரும்.

போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தமிழக அரசு சார்பாக மூன்று கட்டமாக நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. முதல் கட்டமாக கடந்த நவம்பர் 13 ஆம் திகதி 10 கோடி, ஏப்ரல் 22 ஆம் திகதி 6.62 கோடி, மூன்றாம் கட்டமாக மே 6 ஆம் திகதி 6.90 கோடி ரூபாய் மதிப்பில் உணவுப் பொருட்கள், துணிகள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டன. தற்போது, நான்காவது கட்டமாக தமிழக அரசு சார்பில், இலங்கை தமிழர்களுக்காக நிவாரணப் பொருட்களை அனுப்புகிறது.

சமையல் பாத்திரங்கள், சமையல் பொருட்கள், துணி வகைகள், பிளாஸ்டிக் பாய், செருப்புகள் உள்ளிட்ட 15 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. இப்பொருட்கள் அனைத்தும், நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் இருந்து லொறிகள் மூலம் சென்னை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டன.

அவையனைத்தும், 100 கொள்கலன்களில் ஏற்றும் பணி புதன்கிழமை முழுவதும் நடந்தது. பின்னர் நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்ட கொள்கலன்கள் அனைத்தும் “எம்.சி.பி. அம்ஸ்டர்டாம்’ கப்பலில் கிரேன் உதவியுடன் ஏற்றப்பட்டன. இக்கப்பல் நேற்று முன்தினம்  காலை இலங்கை நோக்கி புறப்பட்டது. இன்று 8 ஆம் திகதி கொழும்பு நகரைச் சென்றடையும். பின்னர் இந்த நிவாரணப் பொருட்களை இந்திய தூதரகம் பெற்று, ஐக்கிய நாடுகள் சபை மூலம் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.

மடு உற்சவத்தையிட்டு விசேட ரயில் சேவைகள் – 12ம் திகதி முதல் 15ம் திகதி வரை நடத்த ஏற்பாடு

train0000.jpgமடு தேவாலய உற்சவத்தை முன்னிட்டு எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிவரை விசேட ரயில் சேவைகளை கொழும்பு கோட்டை, மொரட்டுவை, மாத்தறை, நீர்கொழும்பு ரயில் நிலையங்களிலிருந்து நடத்த ரயில்வே திணைக்களம் முடிவு செய்துள்ளது.

12 ஆம் திகதி காலை 7.45 க்கு முதலாவது ரயில் நீர்கொழும்பு ரயில் நிலையத்திலிருந்து புறப்படவுள்ளதாக விமான சேவைகள் அமைச்சர் சரத்குமார குணரட்ண தெரிவித்தார்.

போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும, லசந்த அழகியவன்ன, மில்ரோய் பர்னாண்டோ, கொழும்பு மேற்றாணியார் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் சரத்குமார குணரட்ண தெரிவித்தார்.

12 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை தினமும் மதவாச்சி வரையில் செல்லும் ரயில்கள் புறப்படும் நேரங்கள் வருமாறு:- கொழும்பு கோட்டையிலிருந்து காலை 5.45, 6.05, 8.45, பகல் 1.45, மாலை 4.20, இரவு 10.00 மணிக்கு புறப்படும். மாத்தறையிலிருந்து காலை 9.45 க்கு மதவாச்சி நோக்கி மேற்படி 12, 13, 14, 15 ஆம் திகதிகளில் ரயில் புறப்படும்.

13 ஆம் திகதி மொரட்டுவையிலிருந்து தினமும் 7.50 க்கு புறப்படும் ரயில் பகல் 1.43 க்கு மதவாச்சியை சென்றடையும். 12 ஆம் 14 ஆம் திகதிகளில் நீர்கொழும்பிலிருந்து காலை 7.45 க்கு புறப்படும் ரயில் பகல் 1.45 க்கு மதவாச்சியை சென்றடையும். 12, 13, 14, 15 ஆம் திகதிகளிலும் மதவாச்சியிலிருந்து தினமும் காலை 3,52, 7.32, பகல் 12.25, மாலை 4.15, இரவு 10.35 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நோக்கி புறப்படும்.

விசேடமாக 15 ஆம் திகதி மாலை 3.15 க்கு மதவாச்சியிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி மற்றுமொரு ரயிலும் புறப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவிக்கிறது. மதவாச்சி ரயில் நிலையத்திலிருந்து மடு தேவாலயப் பகுதிக்குள் செல்வதற்கு மதவாச்சி ரயில் நிலையத்திலிருந்து மடு தேவாலயம் வரை 50 பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அடியார்கள் குழுக்களாக தமது சொந்த வாகனத்திலும், வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனங்களிலும், தனியார் பஸ் வண்டிகளிலும் செல்ல முடியும். இதற்கென பிரதேச பாதுகாப்பு அனுமதி பெற வேண்டும்.

தனிப்பட்ட தமது சொந்த வாகனத்தில் செல்வோர் தாம் மடு தேவாலய வளவில் கூடாரமிட்டுள்ள பகுதியிலேயே நிறுத்தி வைப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அடியார்கள் மடு தேவாலயப் பகுதியில் 17 ஆம் திகதி வரை தங்கியிருப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சரத்குமார குணரட்ண தெரிவித்தார்.

படகில் நியூஸிலாந்து செல்ல முயற்சித்த 32 பேர் கைது

ranjith-gunasekara.jpgநியூ ஸிலாந்துக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்வதற்கு முயன்ற 32 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  சீதுவ பகுதியிலிருந்து மீன்பிடிப் படகு மூலம் இவர்கள் செல்வதற்கு முயற்சித்த போது புதன் கிழமை பிற்பகல் இவர்கள் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் குணசேகர வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

முகவர் ஒருவருக்கு தலா 3 இலட்ச ரூபாவை இவர்கள் கொடுத்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்த சட்டவிரோதமான பயணத்தை ஏற்பாடு செய்தவர்கள் இன்னமும் கைதாகவில்லை.

கியூபா மருத்துவ நிபுணர்களின் சிபார்சுகள் அடுத்த வாரம்

mosquitfora.jpgடெங்கு காச்சளைப் பரப்பும் நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பி.ரி.ஐ. என்கின்ற பக்ரியா நுண்ணங்கியை பாவிப்பதற்குரிய கியூப மருத்துவ நிபுணர்களின் சிபார்சுகள் அடுத்த வாரம் கிடைக்கப் பெறும் என்று சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்கு துறை அமைச்சின் பொதுச் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹீபால தெரிவித்தார்.

டெங்கு காய்ச்சளைப் பரப்பும் நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு கியூபாவில் பயன்படுத்தப்படும் பி.ரி.ஐ. என்கிற பக்ரியா நுண்ணங்கியைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது.

இந்த நுண்ணங்கியை பயன்படுத்துவதற்குத் தேவையான நிபுணத்துவ சேவையை பெற்றுக் கொடுக்கவும் கியூபா முன்வந்துள்ளதுடன் இரு மருத்துவ நிபுணர்களையும் இலங்கைக்கு அனுப்பி வைத்திருக்கின்றது.

இம்மருத்துவ நிபுணர்கள் இருவரும் ஹம்பாந்தோட்டை, கண்டி, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் பி.ரி.ஐ.யை பாவிப்பது தொடர்பான கள ஆய்வை பூர்த்தி செய்ததும் தங்களது சிபார்சுகளை சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சுக்கு சமர்ப்பிப்பர் என்றும் டாக்டர் மஹீபால கூறினார்.

இம்மருத்துவ நிபுணர்கள் இருவரும் ஹம்பாந்தோடடை மாவட்டத்தின் வெவ்வேறு பிரதேசங்களுக்கும் நேரில் சென்று கள ஆய்வை ஏற்கனவே மேற்கொண்டனர். கண்டி மாவட்டத்தில் தங்கி இருந்து மேற்கொண்ட கள ஆய்வை முடித்துக் கொண்டு இன்று கொழும்புக்கு வருகை தரும் இவர்கள் அடுத்துவரும் ஐந்து நாட்கள் கொழும்பு மாவட்டத்தில் ஆய்வை மேற்கொள்வர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

உள்ளூர் கைத்தொழில் ஊக்குவிப்பு: குறைந்த வட்டியில் வங்கி கடன் வழங்க நடவடிக்கை

உள்ளூர் கைத்தொழில் துறையை ஊக்குவிக்கும் வகையில் அத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு குறைந்த வட்டியில் வங்கிக் கடன்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க வங்கிகளின் உயரதிகாரிகளுடன் தற்போது பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதுடன், நாடளாவிய ரீதியில் கைத்தொழில் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது தொழிலை காத்திரமானதாக முன்னெடுத்துச் செல்ல இது பெரிதும் உதவுமெனவும் அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார். தற்போது லங்கா புத்ர வங்கியின் மூலம் சில பகுதிகளில் குறைந்த வட்டியில் வங்கிக் கடன்களைப் பெறக்கூடியதாகவுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், குறிப்பாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் கைத்தொழில் துறைகளை மீள்கட்டியெழுப்பும் வகையில் விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாண மாவட்டங்களில் கைத்தொழில் பேட்டைகளை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் பன்றி காய்ச்சலுக்கு 1154 பேர் பலி – உலக சுகாதார அமைப்பு தகவல்

ah1n1.jpgஉலகம் முழுவதும் 168 நாடுகளில் பன்றிக் காய்ச்சல் பரவி இருப்பதாகவும், இந்த காய்ச்சலுக்கு இதுவரை 1154 பேர் பலியாகி இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தனது இணையதளத்தில் வெளியிட்ட தகவலில் தெரிவித்து உள்ளது.

வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் மட்டும் பன்றிக் காய்ச்சலுக்கு 1008 பேர் உயிர் இழந்து இருப்பதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு பரிசோதனைக் கூட ஆய்வின் மூலம் மட்டும் உலகம் முழுவதும் 1 இலட்சத்து 62 ஆயிரத்து 380 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்து இருப்பதாகவும் கூறி உள்ளது.

வட கிழக்கு ஆசியாவில் 65 பேரும், மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் 39 பேரும், ஐரோப்பாவில் 41 பேரும் பன்றி காய்ச் சலால் உயிர் இழந்து இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மலேசியாவில் உலக தமிழர் ஒற்றுமை மாநாடு

பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் அமைப்பாளர் வா.மு.சேதுராமன் சென்னையில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறியதாவது, உலக தமிழுறவு மன்றத்தின் சார்பில் 6வது உலக தமிழர் மாநாட்டை உலக தமிழர் ஒற்றுமை மாநாடு என்ற பெயரில் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மலாய் பல்கலைக்கழகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. செப்டெம்பர் 25, 26, 27 ஆகிய 3 நாட்கள் இந்த மாநாடு நடைபெறும்.

ஈழம் மற்றும் தமிழர்கள் வாழும் மற்ற நாடுகளிலும் உள்ள பிரச்சினைகள் குறித்து மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. மேலும் அண்ணா கவி அரங்கம், உலகளவில் சிறந்து விளங்கும் தமிழர்களுக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

முன்னாள் மலேசிய மந்திரி டத்தோ சாமிவேலு மற்றும் மலேசிய மந்திரிகள் உட்பட அனைத்து கட்சி தலைவர்களும் மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். தமிழக துணை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், கவிஞர் கனிமொழி எம்.பி, மத்திய மந்திரிகள் தயாநிதி மாறன், ஆ.ராசா ஆகியோருக்கு இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்துள்ளோம். இவ்வாறு வா.மு. சேதுராமன் கூறினார்.

பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் இயக்குனர் வா.மு.சே. திருவள்ளுவர், காப்பாளர் மாம்பலம் சந்திரசேகர், வழிகாட்டும் குழுவினர் செங்குட்டுவன், முன்னாள் மேயர் சா. கணேசன் உட்பட மன்றத்தின் நிர்வாகிகள் பேட்டியின் போது உடன் இருந்தனர்.