அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

தென்னிந்திய அகதி முகாம்களிலிருந்து 500 தமிழ் குடும்பம் தாயகம் திரும்பின

தென்னிந்தியாவிலுள்ள அகதி முகாம்களிலிருந்து 500 இலங்கைத் தமிழ்க் குடும்பங்கள் தாயகம் திரும்பியிருக்கிறார்களென இலங்கை யின் பிரதி உயர் ஸ்தானிகர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

சென்னையில் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகராக வெள்ளியன்று கடமையை பொறுப்பேற்றுக் கொண்ட அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப் பட்டதன் பின்னர் இலங்கை அரசாங்கம் மக்கள் நலன்சார் பல்வேறு நலன்புரித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.  இலங்கையிலுள்ள சகல மக்கள் மத்தியிலும் அச்ச உணர்வு நீங்கியிருக்கிறது. இன, மத வேறு பாடின்றி சகல மக்களும் நடத்தப்படுகிறார்களென அவர் செய்தியார்களிடம் சுட்டிக் காட்டினார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், முதலீடு செய்வதற்குரிய சாதகமான சூழ்நிலை உருவாகிவிட்டது. வெளிநாடுகள் போட்டி போட்டுக் கொண்டு முதலீடு செய்ய முன் வருகின்றன. கடந்த ஜுலை மாதம் மட்டும் 45.2 வீதமான உல்லாசப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் அகதி முகாம்களிலிருந்த 500 தமிழ்க் குடும் பங்கள் தாயகம் திரும்பியிருக்கிறார்கள். மொத்தத்தில் மக்கள் நிம்மதியாக வாழக் கூடிய சூழ்நிலை இலங்கையில் உருவாகியிருக்கிறதென அவர் கூறினார்.

ஆஃப்கானிய அதிபர் தேர்தலில் அதிபர் ஹமீத் கர்சாய் முன்னிலை

hamid_karzai_president-of-afghanistan.jpgஆஃப்கானிய அதிபர் தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில், ஏனைய வேட்பாளர்களைவிட அதிபர் ஹமீத் கர்சாய் அதிக வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிப்பதாகத் தெரியவந்துள்ளது.

45 சதவீத வாக்குகளை அதிபர் கர்சாய் பெற்றிருக்கிறார் என்றும் அடுத்த இடத்தில் உள்ள முக்கியப் போட்டியாளர் அப்துல்லா அப்துல்லா 31 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார் என்றும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விபரங்கள் தெரிவிக்கின்றன. மிகப் பெரிய அளவிலும் அரசு நிறுவனங்களின் துணையுடனும் தேர்தல் முறைகேடுகள் நடந்திருப்பதாக அப்துல்லா மீண்டும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

கர்சாய்க்கு வாக்களிக்கின்ற போலியான வாக்குச்சீட்டுகள் லட்சக்கணக்கானவை வாக்குப்பெட்டிகளில் திணிக்கப்பட்டிருந்தன என்று அவர் கூறியுள்ளார். வாக்குப்பதிவு நியாயமாக நடந்திருந்தால், இந்நேரம் தான் முன்னணி வகிப்பாரென அவர் கூறியுள்ளார்.

கே.பி.யை விசாரிப்பதற்கு இந்திய மத்திய புலனாய்வுக் குழு அடுத்த மாதம் கொழும்பு வரும்

pathmanathan.jpgஇந்த மாத ஆரம்பத்தில் கைதுசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை தங்களிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசைக் கோரும் நாடுகடத்தல் கோரிக்கை ஒன்றை விடுப்பதென இந்தியா தீர்மானித்துள்ளது. 1991ஆம் வருட ராஜீவ் காந்தி படுகொலையின் பின்னணியில் உள்ள பாரிய சதித்திட்டம் குறித்து அவரை விசாரிப்பதற்காக இந்திய மத்திய புலனாய்வுக் குழு ஒன்று அடுத்த மாதத்தில் கொழும்புக்கு விஜயம் செய்ய இருக்கிறது.

மத்திய புலன்விசாரணை பணியகத்தின் கீழ் இயங்கும் பல் ஒழுக்காற்று கண்காணிப்பு பிரிவு கே.பி.யின் விசாரணை குறித்து கவனம் செலுத்தி அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக ராஜீவ் கொலை தொடர்பான விசாரணைகளுக்கு மேலும் ஒரு வருடகால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ராஜீவ் கொலை விசாரணைக் காலம் கடந்த மே மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடைந்ததை அடுத்து, விசாரணை நீடிப்புக்கான கோரிக்கை இதுவரை பரிசீலனையில் இருந்துள்ளது. எனினும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி கே.பி. கைது செய்யப்பட்ட பின்னர் மேற்படி விசாரணைக் காலத்திற்கு நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியப் புலனாய்வு அதிகாரிகள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் கே.பி.யை இலங்கை அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

1800 அதிபர்களுக்கு பதவியுயர்வு கடிதம் இன்று கையளிப்பு

இலங்கை அதிபர் சேவையின் முதலாம் தரத்திற்கு பதவி உயர்வு பெற்ற 1800 பேருக்கு பதவி உயர்வுக் கடிதங்களை கையளிக்கும் வைபவம் இன்று (30) கொழும்பு டி. எஸ். சேனநாயக்கா கல்லூரியில் இடம்பெறுகிறது.

1992 ஜூன், 1994 ஜூன் மாதங்களில் இலங்கை அதிபர் சேவையின் இரண்டாம் தரம் முதலாம் வகுப்பில் நியமனம் பெற்ற அதிபர்களுக்கு சேவை மூப்பு திறமை அடிப்படையில் சுமார் 17 வருடங்களுக்குப் பின்னர் இந்நியமனங்கள் வழங்கப்படுவதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் கே. முகம்மட் தம்பி தெரிவித்தார்.

இதற்காக, நேர்முகப் பரீட்சை நடாத்தப்பட்ட போது சகல  ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு திருப்தி காணப்பட்டவர்களுக்கே இன்று நியமனம் வழங்கப்படுகிறது. ஏனையவர்களுக்கு குறைபாடுகள் நிவர்த்திக்கப்பட்டதும் நியமனம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை அதிபர் சேவையின் இரண்டாம் வகுப்பின் முதலாம் தரத்திற்கு பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கையினையும் கல்வி அமைச்சு எடுத்து வருகிறது.

வவுனியா அரச அதிபர் இந்தியா, சீனா பயணம்

ga-vavuniya-222.jpgவவுனியா அரசாங்க அதிபர் பீ.எம். எஸ். சார்ள்ஸ் இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்கிறார். புதுடில்லியில் நடைபெறவுள்ள பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்வதற்காக வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் இன்று புதுடில்லி செல்கிறார்.

தெற்காசிய பிராந்திய தரத்திலான அனர்த்த நிவாரண முகாமைத்துவம் பற்றிய பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்வதற்காகவே அவர் புதுடில்லி செல்கிறார்.

புதுடில்லி சென்று திரும்பும் அவர், 6ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை சீனாவில் நடைபெறவுள்ள மாநாடொன்றிலும் கலந்துகொள்ளவுள்ளார். சீன மகளிர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இம் மாநாட்டிற்காகவே அவர் சீனா செல்லவுள்ளார்.

2543 குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் விரைவில் குடியமர்த்த நடவடிக்கை

IDP_Camp_Aug09வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ள யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 2543 குடும்பங்கள் விரைவில் யாழ்ப்பாணத்தில் மீள் குடியமர்த்தப்படவுள்ளதாக யாழ் அரச அதிபர் தெரிவித்துள்ளார். முகாம்களில் உள்ள யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பங்களின் விபரங்கள் வவுனியா அதிகாரிகளினால் திரட்டப்பட்டு, யாழ் மாவட்டத்தி்ன் செயலகத்திற்கும், பிரதேச செயலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்ட 2543 குடும்பங்களே விரைவில் மீள் குடியயேற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது,

வவுனியா அதிகாரிகளினால் அனுப்பி வைக்கப்பட்ட இந்தக் குடும்பங்களின் விபரங்கள் குறித்து யாழ் மாவட்டத்தில் உள்ள சிவில் அதிகாரிகளும், பொலிசாரும் நடத்திய விசாரணைகள் முடிவடைந்து, இந்தக் குடும்பங்கள் தொடர்பான பட்டியல்கள் இப்போது தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குடும்பங்கள் விரைவில் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்தி்ற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து அவர்களின் சொந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைவிட இரண்டாம் கட்டமாக யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 15 ஆயிரத்து 5 ஆயிரத்து 167 குடும்பங்கள் தொடர்பான தகவல்களும் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த 44 ஆயிரத்து 974 பேரின் விபரங்கள் தொடர்பாக சிவில் அதிகாரிகளினாலும், அந்தந்த பிரதேசத்து பொலிசாரினாலும் விசாரணைகளின் ‘மூலம் உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டைப் பாதுகாத்து கட்டியெழுப்ப நிறைவேற்று அதிகாரம் அவசியம் – அமைச்சர் மைத்திரிபால

பயங்கரவாதத் திலிருந்து நாட்டைப் பாதுகாத்ததைப் போல் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கும் இன்னும் சிறிது காலத்திற்கு நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதி முறைமை நீடிக்க வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புலிகளைத் தோற்கடிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட தீர்மானகரமான போராட்டத்தின் வெற்றிக்குக் காரணியாக அமைந்தது. மஹிந்த ராஜபக்ஷ, நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதியாகவும் சேனாதிபதியாகவும் இருந்தமையே என்று தெரிவித்துள்ள அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, உள்ளூர், வெளிநாட்டு அழுத்தங்களைத் தோல்வியுறச் செய்து இறுதிக் கட்டப் போரை வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்குத் தேவையான தீர்மானங்களை மேற்கொள்ளவும், அவற்றை நடைமுறைப்படுத்தவும் ஜனாதிபதியிடமிருந்த அதிகாரங்களே வழிவகுத்தது.

சிலவேளை இந்த அதிகாரம் இல்லாதிருந்தால், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் சிக்கலாகியிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்திடமிருந்து நாட்டை மீட்டெடுத்ததன் பின்னர், நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக வகுக்கப்பட்டுள்ள திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி பதவி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இருக்க வேண்டுமென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதி முறைமைக்கு எதிரான நிலைப்பாட்டை முன்பு தாம் கொண்டிருந்த போதிலும், மாறிவரும் நிலைமைகளுக்கேற்பவும் எதிர்கொள்ளவேண்டிய சவால்களுக்கமை யவும், பழைய கருத்தியலில் தங்கியிருப்பது நடைமுறைச் சாத்தியமான அரசியலாகாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தேயிலையில் கலப்படம் செய்வதைத் தடுக்க நடவடிக்கை

dimujayarathna2222.jpgஇலங் கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையில் கலப்படம் செய்வதைத் தடுப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் டி.எம். ஜயரத்ன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தரம் குறைந்த தேயிலை உற்பத்தியால் சர்வதேச சந்தையில் இலங்கை தேயிலையின் தரத்துக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஏற்றுமதி செய்யப்படுகின்ற தேயிலையில் தரம் குறைந்த தேயிலையை கலப்பதால் சந்தைவாய்ப்பில் தடை ஏற்படுகிறது என்றும் அதனால் தரம் குறைந்த தேயிலை உற்பத்தி தொடர்பான முறையான திட்டம் ஒன்றை வெளியிட வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் அனுமதிப் பத்திரம் பெற்ற 275 தரம் குறைந்த தேயிலை உற்பத்தியாளர்கள் உள்ளனர். இதேவேளை தரம் குறைந்த தேயிலை உற்பத்தியாளர்களுக்கு புதிதாக அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மேலும் அனுமதிப்பத்திரம் இன்றி தரம்குறைந்த தேயிலை உற்பத்தியில் ஈடுபடுகின்றவர்களை சுற்றிவளைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மஹிந்தவைச் சித்திரித்து – திரைப்படம்

filmstrip.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசின் வெற்றிகளைச் சித்திரிக்கும் வகையில் திரைப்படம் ஒன்றைத் தயாரிக்க அரச தொலைக்காட்சிக் கூட்டுத்தா பனத்தின் தலைவர் ஆரியரட்ண ஆதுகல ஏற்பாடு செய்து வருகிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கு முன்னோடியாக இரண்டாம் இராஜசிங்க மன்னனை ஒத்த கதாபாத்திரத்தில் மஹிந்த ராஜபக்ஷவைச் சித்திரித்து இறுவட்டு தயாரிக்கப்படவுள்ளது எனத் தெரியவருகின்றது.

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் புத்தி கீர்த்தி சோ இத்திரைப்படத்தின் தயாரிப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அறியவந்தது.
இத்திரைப்படத்திற்கு 90 கோடி ரூபா செலவிடப்படும் என்றும் மேலும் அறியமுடிகிறது.

லொறிச் சாரதியிடம் இலஞ்சம் பெற்ற இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது

லொறிச் சாரதி ஒருவரிடம் இரண்டாயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளிடம் கையுமெய்யுமாகப் பிடிபட்டுள்ளனர்.

நுகேகொடை – தெல்கந்தை பொலிஸ் காவலரணில் கடமையாற்றிய இரு பொலிஸ் அதிகாரிகளையே இவ்வாறு கைது செய்ததாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சோமவீர லொக்குகே தெரிவித்தார். நேற்று முன்தினம் மாலை 4.45 அளவில் இவர்கள் இருவரையும் கைது செய்ததாக அவர் கூறினார்.

கடந்த வியாழக்கிழமை 27ஆந் திகதி மணல் ஏற்றிக்கொண்டு நுகேகொடை – தெல்கந்தையைக் கடந்து சென்ற லொறியைச் சோதனையிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், சாரதியிடம் தேவையான ஆவணங்கள் இருந்தும், அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அத்துடன் சட்டரீதியான நடவடிக்கை எடுக்காதிருக்க இரண்டாயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரியுள்ளனர். இதற்கு உடன்பட்ட சாரதி, அனுமதிப்பத்திரத்தைப் பொலிஸாரிடமே விட்டுவிட்டு நாளை (நேற்று முன் தினம்) வருவதாகக் கூறிச் சென்றுள்ளார். பின்னர் இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளிடம் சாரதி முறையிட்டிருக்கின்றார்.

அவர் வழங்கிய முறைப்பாட்டையடுத்து, நேற்று முன்தினம் மாலை 4.45 அளவில் குறித்த காவலரணுக்கு அதிகாரிகள் சென்றுள்ளனர். அங்கு பொலிஸார் கோரிய பணத்தில் ஆயிரம் ரூபாவை சாரதி கொடுத்துள்ளார்.

அப்போது உடன் சென்றிருந்த அதிகாரிகள் இரு பொலிஸ் உத்தியோகத்தர்க ளையும் கையு மெய்யுமாகப் பிடித்தாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் சோமவீர லொக்குகே குறிப்பிட்டார். கைதான இரு பொலிஸ் அதிகாரிகளும் மிரிஹான பொலிஸ் நிலையத் தைச் சேர்ந்தவர்களென்றும் அவர் கூறினார்.