அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

அமைச்சர் முரளி பயணித்த வாகனம் கொழும்பில் விபத்து – மயிரிழையில் தப்பினார்; 2 காயம்

karuna000.jpgதேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பயணித்த ஜீப் வாகனம் நேற்று விபத்துக்குள்ளானது. இதில் அமைச்சர் தெய்வாதீனமாக உயிர் தப்பினாரென பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் நிமல் மெத்திவக்க கூறினார்.

கொழும்பு, கறுவாத்தோட்டம் ஃப்ளவர் வீதி ஜே. ஓ. சி. சுற்று வட்டத்துக்கு அருகாமையில் வைத்து நேற்று மாலை 4.45 மணியளவில் இவ்விபத்து நடந்துள்ளது. அமைச்சர் சென்ற ஜீப் வாகனத்துடன் ‘154’ இலக்க தனியார் பயணிகள் பஸ் வண்டி மோதியதிலேயே விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தின் காரணமாக அமைச்சரின் மெய்பாதுகாவலாளியும் வாகனச் சாரதியும் காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருவதாக கூறினார்.

தற்கொலை அங்கிகள், ஆயுதங்கள் மீட்டெடுப்பு

udaya_nanayakkara_brigediars.jpg 35 கிலோ எடையுள்ள அதிசக்திவாய்ந்த சி-4 ரக வெடிமருந்துகள்,  இரண்டு தற்கொலை அங்கிகள், 25 கிலோ எடையுள்ள இரும்பு குண்டுகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளனர். முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் இராணுவத்தினரும், சி. ஐ. டி. யினரும் மேற்கொண்ட பாரிய தேடுதல்களின் போதே இந்த பொருட்கள் மீட்டெடுக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் சுதுமலை பிரதேசத்தில் இராணுவத்தின் 52வது படைப் பிரிவினர் நடத்திய தேடுதல்களில்; 5 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த தற்கொலை அங்கிகள் – 02, குண்டுகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 10 கிலோ எடையுள்ள சிறிய இரும்பு குண்டுகள், 15 கிலோ எடையுள்ள நடுத்தர இரும்பு குண்டுகள், 10 கிலோ எடையுள்ள சி-4 ரக வெடிமருந்துகள், 2 கிலோ எடையுள்ள கிளேமோர் குண்டுகள், ரேடியோ தொலைத் தொடர்பு கருவிகள் – 08, கைக்குண்டுகள் – 08, செய்மதி தொலைபேசிகள் – 02, ரி – 56 ரக துப்பாக்கி ரவைகள் – 155, வெடிக்க வைக்கும் கருவிகள் மற்றும் பெருந்தொகையான பொருட்களை மீட்டெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு, நரகமுல்லை பிரதேசத்தில் சி. ஐ. டி.யினரும், பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட பாரிய தேடுதல்களில் 25 கிலோ எடையுள்ள சி-4 ரக வெடிமருந்துகள், பல்குழல் துப்பாக்கி ரவைகள் – 10, புலிகளால் தயாரிக்கப்பட்ட பல்வேறு குண்டுகளை கண்டெடுத்துள்ளனர்.

இதேவேளை புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இராணுவத்தின் மூன்றாவது அதிரடிப் படையினர் நடத்திய தேடுதல்களில் பிஸ்டல் துப்பாக்கிகள் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் ரவைகள் – 50, 12.7 மி. மி. ரவைகள் – 850, 81 மி.மீ. மோட்டார் குண்டுகள் மற்றும் உபகரணங்களை மீட்டெ டுத்துள்ளனர் என்று பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

750 கிலோ கடல் அட்டைகளுடன் கல்பிட்டியில் இருவர் கைது – இந்தியாவிலிருந்து கடத்தல்

nimal_madiwaka.jpgஇந்தியா விலிருந்து சட்டவிரோத மாக கொண்டுவரப்பட்ட 750 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான கடல் அட்டைகளை கைப்பற்றியுள்ள கல்பிட்டி பொலிஸார் இரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர். சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான கடல் அட்டைகளையே கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

¡ன் ஒன்றில் எடுத்துச் சென்றுகொண்டிருந்த போதே பொலிஸார் இந்த கடல் அட்டைகளை கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது :- 30 ஸ்ரீ 8818 என்ற இலக்கமுடைய வான் கல்பிட்டி, மங்டல துடாவ பிரதேசத்தில் வேகமாக சென்றுள்ளது. அதில் சந்தேகம் ஏற்பட்ட பொலிஸார் அதனை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

அந்த வானில் ஏதோ பொதிகள் இருந்துள்ளதை அவதானித்த பொலிஸார் அதனை முழுமையாக சோதனையிட்டுள்ளனர். இதன்போது 20 பொலித்தீன் பொதிகளில் சுற்றப்பட்ட நிலையில் 750 கிலோ எடையுள்ள கடல் அட்டைகளை மீட்டெடுத்துள்ளனர். இந்த கடல் அட்டைகள் எவ்வாறு கொண்டு வந்துள்ளனர் என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ. டி. எச். பந்துசேன தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பாகிஸ்தானில் புதிய செயற்கை கோள்

210909flag.jpgதகவல் தொடர்பை வலுப்படுத்துவதற்காக பாகிஸ்தான் புதிதாக ஒரு செயற்கை கோளை தயாரிக்கிறது. இதற்கு பக்சாட் – 1 ஆர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை தயாரிக்க சீனா உதவி செய்கிறது.

இதற்கான ஒப்பந்தம் நேற்று முன்தினம் கையெழுத்தானது. இதன்படி சீனா பாகிஸ்தானுக்கு 200 மில்லியன் டாலர் உதவி செய்யும்.

பாகிஸ்தானின் விண்வெளி மையம், மற்றும் சீனாவின் நெடுஞ்சுவர் தொழிற் கூட்டமைப்பும் இணைந்து இந்த செயற்கை கோளை உருவாக்கவும் இந்த ஒப்பந்தம் வகை செய்துள்ளது.

அனைத்துத் தமிழர்களுக்கும் நியாயமான உரிமைகள் கிடைக்கட்டும் : நோன்பு பெருநாள் செய்தியில் சந்திரகாந்தன்

210909pillayan.jpg“தமிழ்ப் பேசும் அனைத்து மக்களுக்கும் நியாயமான அரசியல் உரிமைகளுடன் அதிகாரங்களும் கிடைக்கப் பெற பிரார்த்திப்போம்” என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் விடுத்துள்ள புனித ரம்ழான் பெருநாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அச்செய்தியில்,  “ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் என் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வதில் மிக மகிழ்ச்சி அடைகின்றேன்.

இப்பண்டிகையானது வெறும் சடங்காகவோ கேளிக்கையாகவோ அல்லாமல் பல தத்துவங்களையும் மனிதனின் சுபீட்சமான எழுச்சிக்கான வழிகாட்டுதல்களையும் எடுத்துக் காட்டுவதாக இருப்பதை நான் காண்கின்றேன். முப்பது நாட்கள் ஆகாரமின்றி, ஆன்மாவை ஒருநிலைப்படுத்தி நோன்பிருக்கும் முஸ்லிம் சகோதரர்கள், இதன் மூலம் மிகப்பெரும் யதார்த்தமான தத்துவத்தை எடுத்து இயம்புகின்றனர்.

மனதை ஒருமைப்படுத்துவது இறைவனுக்கு மட்டும் கட்டுப்படுவதாகும். இதன் மூலம் பிறரை மதித்தல், பிறருக்கான உரிமைகளை வழங்குதல், மற்றவர்களுடன் சகோதரத்துவத்துடனும், புரிந்துணர்வுடன் பழகுதல் போன்ற பல நன்மைகள் கிட்டுகின்றன.  இவ்வாறான தத்துவங்களும். குணாதிசயங்களுமே இன்று எல்லோருக்கும் தேவைப்படுகின்றன. மதங்கள் அனைத்துமே மனிதனின் மனங்களை ஒருநிலைப்படுத்தி நல்வாழ்வுக்காக வழிகாட்டுகின்றன.

ஆனால் துரதிஷ்டவசமாக எல்லா மதங்களிலும் மத விழுமியங்களை துறந்து தமது சுகபோகங்களுக்கும் அளவுகடந்த ஆசைகளுக்கும் மற்றவர்களை துன்பப்படுத்தி, காயப்படுத்தி வாழ்பவர்கள் உள்ளனர்.  எமது நாட்டை பொறுத்தளவில் பல்லின பல கலாசார பரம்பரை கொண்டவர்களே வாழ்கின்றனர். இச்சூழலில் நாம் எமது மத விழுமியங்களையும் சகோதர மதங்கள் கூறும் நல்லொழுக்கங்களையும் கடைப்பிடிப்போமானால், பிரச்சினைகள் என்பது எம்மை எள்ளளவும் நெருங்க மாட்டாது.

அண்மையில் நடந்து முடிந்த யுத்தத்தின் காரணமாக சுமார் மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தமது உடைமைகளை, உறவுகளை இழந்து நிர்க்கதியான நிலையில் அகதி முகாம்களில் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.  இம்மக்களின் வாழ்வில், நிம்மதியும் மகிழ்ச்சியும் விரைவில் கிடைக்கப் பெற இந்நன்நாளில் அனைவரும் பிரார்த்திப்போம். எமது நாட்டின் இனப் பிரச்சினைக்கு அடிகோலாகத் திகழும் தமிழ்ப் பேசும் மக்களுக்கான நியாயமான அரசியல் உரிமைகளுடன் அதிகாரங்களும் கிடைக்கப்பெற வழிகள் பிறக்கட்டும் என்றும் பிரார்த்திக்கின்றேன்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

தமிழுக்கு ஒரு தேசம் வேண்டும். அது இந்தியாவிலா? இலங்கையிலா? – சீமான்

seeman-prabhakaran.jpg“நாம் தமிழர்” இயக்கத் தலைவர், இயக்குநர் சீமான். தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார்.  இன்று அவர் புதுக்கோட்டையில் கலந்தாய்வு செய்தார். அப்போது அவர் ஈழப்போராட்டம் குறித்து ஆவேசமாக பேசினார்.

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் தடை என்பதைக்கூட நாலு சுவற்றுக்குள் இருந்துகொண்டுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  காந்தியை கோட்சே சுட்டுக்கொன்றபோது ஆர்.எஸ்.எஸ்.  இயக்கத்திற்கு தடை விதித்தார்கள்.  ஆனால் அந்த இயக்கத்தை ஆதரித்து பேச தடை விதிக்கவில்லை. அந்த தடையையும் 16 மாதற்குள் நீக்கிவிட்டார்கள்.  20 வருடங்களாக தமிழ் சாதிக்கு மட்டும் ஏன் தடை? இதற்காக குரல் கொடுத்தால் நமக்காகத்தான் கட்டப்பட்டிருக்கிறது சிறைச்சாலைகள். நான் சிறையை நிரப்பினால்தான் சிறை பணியாளர்கள் வயிறை நிரப்ப முடியும். 

தமிழ் ஈழம் வேண்டுமா வேண்டாமா என்பதை வாக்கெடுப்பு நடத்தினால் தெரிந்துவிடும்.  ஆனால் இந்திய அரசாங்கம் அதை செய்யாது.  ஏன் தெரியுமா?வாக்கெடுப்பு நடத்தினால் 61\2 கோடி தமிழர்களும் தனி ஈழம்தான் தீர்வு என்று சொல்வார்கள்.  அதனால் வாக்கெடுப்பு நடத்த மாட்டார்கள். ஆனாலும் நாம் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. தமிழுக்கு ஒரு தேசம் வேண்டும்.  அது இந்தியாவிலா? இலங்கையிலா? இந்திய அரசாங்கமே உடனே அறிவித்திடு’’ என்று நாம் தமிழர் இயக்கத் தலைவர், இயக்குநர் சீமான் பேசினார்.

முதல்வர்கள் மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரவும் முடிவு

மாகாண சபைகள் மூலம் மேற்கொள்ளப்படும் கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற துறைகளை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான நிதிகளைப் பெற்றுக் கொள்வதுடன் சில விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க தெரிவித்தார். மாகாண முதலமைச்சர்களின் 26வது மாநாடு நேற்று (19) ஆம் திகதி ஹபரன விலேஜ் ஹோட்டலில் நடைபெற்றது.

இம் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மாநாடு நடைபெற்ற ஹோட்டல் முன்பாக ஏழு மாகாண சபைகளின் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன. மாகாண சபையின் பிரதான செயலாளர்கள், திறைசேரி மற்றும் ஜனாதிபதி செயலக அதிகாரிகள் உட்பட பலரும் இதில் கலந்துகொண்டனர்.

இம்மாநாட்டில் பின்வரும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

விவசாயத்துறை, கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம், போன்ற துறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அவ் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்குத் தேவையான கூடுதலான நிதியைப் பெறுவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

குறிப்பாக 13ஆவது அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக அமைச்சின்அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜனாதிபதியின் “நாம் பயிர் வளர்ப்போம் நாட்டை கட்டியெழுப்புவோம்” தேசிய வேலைத் திட்டம் ஊடாக விவசாயிகளின் பொருளாதார துறையை முன்னேற்றுவதற்கு மாகாண சபைகள் முன்வந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

சமூக சேவைத் திணைக்களத்தின் மூலம் அங்கவீனர்களுக்கு வழங்கப்படும் ஊக்குவிப்பு தொகையை அதிகரிப்பதற்கும் மாகாண சபையின் கீழுள்ள குளங்களை புனரமைப்பு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளன.

மாகாண சபையின் கீழுள்ள வீதிகள் புனரமைப்பில் ஏற்பட்டுள்ள இன்னல்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள வட மத்திய மாகாண சபைக்கு சொந்தமான ஆயுர்வேத மத் திய மருந்தகங்களை மீள வடமத்திய மாகாண சபைக்கு பெற்றுக்கொள்வது தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனோடு பேசியுள்ள தாகவும் முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க தெரிவித்தார். இறுதியாக 27 ஆவது முதலமைச்சர்கள் மாநாட்டை வடமேல் மகாணத்தில் நடத்துவதற்கும் அதன் தலைவர் பொறுப்பை மாகாண முதலமைச்சர் அதுல விஜேசிங்கவுக்கு வழங்கவும் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.

இலங்கை தமிழர்களை காக்க கோரி பல நகரங்களில் கிறிஸ்தவர் ஊர்வலம்

200909.jpgஇலங்கையில் முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களை தங்கள் பூர்வீக இடங்களுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 17 மறை மாவட்ட கத்தோலிக்க ஆயர் பேரவை சார்பில் நேற்று ஊர்வலம் நடத்தப்பட்டது.

13வது திருத்த சட்டத்தில் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் இருந்தபோதும் பல்வேறு தடைகள்

cheif_ministers_meeting.pngஅரசியல மைப்பின் 13வது திருத்த சட்டத் தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு அதி காரங்கள் வழங்கப்பட்டிருந்தபோதிலும் அவற்றை செயற்படுத்தும் போது பல்வேறு தடைகள் ஏற்பட்டு உள்ளன. அவற்றை தீர்ப்பதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும் என வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்ட்டி பிரேமலால் திஸாநாயக்க தெரிவித்தார்.

மாகாண முதலமைச்சர்களின் மாநாடு நேற்று (19 ஆம் திகதி) ஹபரண விலேஜ் ஹோட்டலில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில், மேல், மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமேல், வடமத்திய, கிழக்கு ஆகிய ஏழு மாகாண சபைகளினதும் முதல மைச்சர்கள் மாகாண சபைகளின் பிரதான செயலாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து உரைநிகழ்த்திய மாகாண முதலமைச்சர்: மாகாண சபைகள் மூலம் பாரிய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ஆனாலும் மத்திய அரசாங்கத்தினால் அதற்குத் தேவையான நிதி வழங்கப்படா மையினால் அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்த முடியாமல் உள்ளது. இவ்விடயம் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவின் கவனத்திற்கு கொண்டு செல்ல ப்பட்டுள்ளது. அவற்றைத் தீர்ப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி சம்பந்தமான அதிகாரங்கள் வழங்கப் பட்டுள்ளன. காணி சம்பந்தமான அதிகார ங்களில் சில பிரச்சினைகள் உள்ளன. பொலிஸ் அதிகாரம் பற்றி தற்போது எந்த தீர்மானங்களும் மேற்கொள்ளப்படுவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியா வடக்கு: 28 கிராமங்களில் 1000 குடும்பங்கள் இன்று மீள்குடியமர்வு

101009displacedidps.gifவவுனியாவில் இடம்பெயர்ந்து தங்கியுள்ளவர்களுள் ஆயிரம் குடும்பங்கள் இன்று (20) தமது சொந்தக் கிராமங்களில் மீளக்குடியமர்த்தப்படுகின்றன. இதேவேளை, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் எதிர்வரும் 25ம் திகதி முன்பதாக சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வவுனியா வடக்கு, நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுகளில் மக்களை மீளக் குடியமர்த்துவதற்காக இனங்காணப்பட்ட 35 கிராமங்களில், 28 கிராமங்களுக்கே ஆயிரம் குடும்பங்கள் இன்று அனுப்பிவைக்கப்படுவதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் நாலாயிரம் பேரை சொந்த வாழ்விடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நிகழ்வு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ தலைமையில் வவுனியா நகர சபை கலாசார மண்டபத்தில் நடைபெறுகின்றது. இதில் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்வார்களென அரச அதிபர் தெரிவித்தார்.

வவுனியாவில் பல்வேறு கிராமங்களிலிருந்தும் இடம்பெயர்ந்து உறவினர்களின் இல்லங்களிலும், வேறு இடங்களிலும் தங்கியுள்ளவர்களே இன்று தமது சொந்தக் கிராமங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவதாக அரச அதிபர் திருமதி சார்ன்ஸ் தெரிவித்துள்ளார். சொந்த இடம் திரும்புவோருக்கு, அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம் உலருணவுப் பொதிகளை வழங்குகின்றது. மக்கள் மீளக் குடியமர்வதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய தேவைகளை நிறைவேற்றி வருவதாகவும் அரச அதிபர் குறிப்பிட்டார்.

இது இவ்வாறிருக்க கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகம் நாளை (21) திங்கட்கிழமை திறந்துவைக்கப்படுகின்றது. இதுவரை காலம் வவுனியாவில் இயங்கிய இந்த அலுவலகம் தற்போது உரிய இடத்தில் இயங்கவிருக்கின்றது.

இதற்கான பாதுகாப்பு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. அதேநேரம் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் எதிர்வரும் 25ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது. இதற்கான பாதுகாப்பு அனுமதி நாளை கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் செயலகங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் வவுனியாவிலிருந்து காலை கிளிநொச்சி சென்று மாலையில் திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் ஒரு வார காலத்திற்குள் தங்கியிருந்து பணியாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.