அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

பேலியாகொடையில் 7 கோடி ரூபா கொள்ளை

கொழும்பு, பகுதிகளிலுள்ள தனியார் வங்கியொன்றில் டெலர் இயந்திரங்களுக்கு வைப்பு செய்வதற்காகக் கொண்டுசென்ற ஏழு கோடி ரூபா ஆயுதமுனையில் நேற்று கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

நெஷனல் லொஜிஸ்டிக் செலிவிஷன் லங்கா தனியார் நிறுவனத்தினர் ஏழுகோடி ரூபாவை வாகனமொன்றில் எடுத்துச் செல்கையிலேயே இனந்தெரியாத நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கி முனையில் இக்கொள்ளையை நடத்தியுள்ளனர். பாதுகாப்பு உத்தியோத்தர்களின் துப்பாக்கிகளையும் பறித்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று அதிகாலை 12.30க்கும் 1.30க்கும் இடையே நடைபெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். பேலியாகொடை பொலிஸ் பிரிவிலுள்ள அலுவாகேல்ல, தெகலபொத்த பகுதியில் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்பட வில்லை. கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல தனியார் வங்கியொன்றின் டெலர் இயந்திரத்திற்கு பணத்தை வைப்புச் செய்யும் மேற்படி நிறுவனத்தின் வாகனத்தில் ஏழு கோடி ரூபாவையும் ஏற்றிக் கொண்டுவரும் போது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் துப்பாக்கி முனையில் இந்த கொள்ளையை நடத்தியதாக பேலியா கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் அச்சுறுத்திய கொள்ளையர்கள் வாகனத்தினுள் பெட்டிகளில் அடுக்கி வைத்திருந்த பண நோட்டுக் கட்டுகளை பொதிகளில் அடைத்து எடுத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு ள்ளதுடன், பேலியாகொடை குற்றப் புலனாய்வுப் பிரிவும், கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

இதேவேளை குறித்த தனியார் வங்கி நாட்டிலுள்ள அனைத்து வங்கிகள் மற்றும் பொதுமக்களிடம் வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளது. கொள்ளையிடப்பட்ட பணத்தை வைப்பிலிட வரும் நபர்கள் தொடர்பாக விழிப்பாக இருக்குமாறும், இவ்வாறு சந்தேகத்துக்கிடமான முறையில் எவரேனும் தென்பட்டால் உடனடியாக கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அறிவுக்கு மாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

ஐந்து ஆண்டுகளின் பின் அமெரிக்காவில் மரண தண்டனை

24-teresa-lewis.jpgஅமெரிக்கா வில் 41 வயதுப் பெண்ணுக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் நபர் இவர்தான். விர்ஜீனியாவைச் சேர்ந்த அவரது பெயர் தெரசா லூயிஸ். இவர் தனது கணவரின் இன்சூரன்ஸ் பணத்தை (இரண்டரை லட்சம் டாலர்) பெறுவற்காக அவரையும், வளர்ப்பு மகனையும் கொன்றதாக கைது செய்யப்பட்டார்.

விசாரணைக்குப் பின்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து விஷ ஊசி போட்டு அவருக்குத் தண்டனையை நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் இதற்கு அமெரிக்காவிலும், பிற நாடுகளிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இருப்பினும் இந்த எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் தற்போது தண்டனையை நிறைவேற்றி விட்டனர். உள்ளூர் நேரப்படி, விர்ஜீனியாவில் காலை 9.13 மணிக்கு அவருக்க விஷ ஊசி போட்டு தண்டனையை நிறைவேற்றினர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்போதுதான் முதல் முறையாக ஒருவருக்கு அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேசமயம், விர்ஜீனியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது கடந்த நூறு ஆண்டுகளில் இதுதான் முதல் முறையாகும். கிரீன்ஸ்வில்லி சீர்திருத்த மையத்தில் தெரசாவுக்கு விஷ ஊசி போட்டு கொல்லும் நிகழ்ச்சியை அவரது உறவினர்களும், குடும்பத்தினரும் நேரில் பார்த்தனர்.

தெரசாவைக் காப்பாற்றுவதற்காக கிட்டத்தட்ட 7300 அப்பீல் மனுக்கள் மாகாண ஆளுனருக்குப் அனுப்பப்பட்டன. ஆனால் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

அயோத்தி தீர்ப்பு ஒரு வாரம் ஒத்திவைப்பு

ayodha.jpgஅயோத்தி ராம ஜென்ம பூமி வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்  தீர்ப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் ஒரு வாரம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அடுத்த விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அயோத்தி வழக்கில், தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி ரமேஷ் சந்திர திரிபாதி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், எச்.எல். கோகலே ஆகியோர் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பை வெளியிடுவதற்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு ஒரு வாரம் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரச்னைக்கு சுமுகமாக தீர்வுகாண்பதற்கான வாய்ப்புகளைப் பரிசீலிக்குமாறு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதையடுத்து நாடு முழுவதும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. மத உணர்வுகள் சம்பந்தப்பட்டது என்பதால் கலவரம் ஏற்படலாம் என்று கருதி பதற்றமான இடங்களில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில்தான், இந்தத் தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரி ரமேஷ் சந்திர திரிபாதி உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்தார்.

அயோத்தி தீர்ப்பால் மத நல்லிணக்கம், அமைதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் காமன்வெல்த் போட்டி, காஷ்மீரில் வன்முறை, பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் என முக்கியமான நிகழ்வுகள் நடைபெறும் இந்த நேரத்தில் இந்தத் தீர்ப்பு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று திரிபாதி தனது மனுவில் கூறியுள்ளார்.

இது தொடர்பாக, கடந்த வாரம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் திரிபாதி ஏற்கெனவே தாக்கல் செய்த மனு  தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தார்.

18ஆவது திருத்தம் நேற்று 23.09.2010 முதல் சட்டமாகியுள்ளது – சபாநாயகர்

chamal1.jpgஅரசி யலமைப்புக்கான 18ஆவது திருத்தம் நேற்று (23ம் திகதி) முதல் நாட்டின் சட்டமாகியுள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று சபையில் அறிவித்தார்.

பாராளுமன்றம் சபாநாயகர் தலைமையில் நேற்று பிற்பகல் கூடியது. இச்சமயம் அமர்வின் ஆரம்ப நிகழ்வின் போது சபாநாயகர் மேற்படி அறிவிப்பை சபையில் விடுத்தார். அரசியலமைப்புக்கான 18வது திருத்தம் கடந்த 08ம் திகதி சபையில் மூன்றிலிரண்டுக்கும் மேற்பட்ட பெரும்பான்மையுடன் நிறைவேறியது.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு சபாநாயகர் கையெழுத் திட்டதும் அது நாட்டின் சட்டமாகும். அதற்கு ஏற்ப அரசியலமைப்புக்கான 18வது திருத்தமும் நேற்று முதல் நாட்டின் சட்டமாகியுள்ளது.

கிழக்கு முதலமைச்சருக்கு பொன்னாடை!

pillayan_rajadurai.jpgமட்டக் களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராஜதுரை கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனின்  சேவை நலனைப் பாராட்டி அவருக்கு பொன்னாடை போற்றி கௌரவித்தார்.

கடந்த புதன்கிழமை மட்டக்களப்பில் அவரது வீட்டில் முதலமைச்சர் சநத்திரகாந்தனைச் சந்தித்துப் பேசிய இராஜதுரை- கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற தமிழ் மக்களுக்கான கட்சி என்ற அடிப்படையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பல சேவைகளைப் புரிந்து வருவதாகவும் மக்களின் நலனில் அக்கறை கொள்கின்ற ஓரு கட்சியாகச் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் பல சேவைகளை எமது மக்களுக்காக ஆற்ற வேண்டி இருப்பதால் தொடர்ந்து தமது ஆதரவை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் அலூர்! டிசம்பரில் வெள்ளோட்டம்

ship_.jpgஉலகி லேயே மிகப்பெரிய விரைந்து செல்லக்கூடிய இலகுரக சொகுசு கப்பலான அலூர் வரும் டிசம்பர் மாதம் வெள்ளோட்டத்திற்கு விடப்படவுள்ளது. கப்பல் தயாரிப்புப் பணியினை மேற்கொண்டு வரும் ரோயல் கரிபியன் இன்டர்நேஷனல் எனும் கப்பல் கட்டுமான நிறுவனம் இந்தத் தகவலை  தெரிவித்துள்ளது.

இந்த சொகுசு கப்பல் குறித்து அதன் கேப்டன் ஹெர்மான் ஜினி கூறுகையில் அலூர் கப்பல் கட்டும் பணி கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கியது. 16 அடுக்குகளையும், 360 மீ நீளம் 64மீ அகலமும் கொண்டது.

2 லட்சத்து 25 ஆயிரத்து 282 தொன் எடையினை தாங்கும் திறன் கொண்டது. 2700 அறைகள் 6296 பயணிகளும் 2394 கப்பல் பணியாளர்களும் தங்கும் வகையில் சிறிய நகரம் போன்று வடிவமைக்கப்பட்டள்ளது.

விளையாட்டு மைதானம் பூங்கா கேட்போர் கூடங்கள் உள்பட பல்வேறு அம்சங்களுடன் உள்ள அலூர் கப்பல் கட்டும் பணிகள் தற்போது முடியும் நிலையில் உள்ளன. இந்த கப்பல் வரும் டிசம்பர் மாதம் பயணிகள் போக்குவரத்து விடப்படும் என்றார்

உயிரிழந்த நபர்களுக்கிடையே காதல் தொடர்பு

love-images.jpgசியம்பலா ஆண்டுவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் மீது துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தன்னையும் சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்ட நபர் 2 பிள்ளைகளின் தந்தையார் எனவும் பதுளையில் வசித்தவர் எனவும் பொலிஸ் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

இரணடு நபர்களுக்கிடையே காதல் தொடர்பு இருந்ததாக தெரிய வந்துள்ளது..

மேலதிக வாசிப்புக்கு முன்னைய செய்தி

அருட்சல்வன் வி, செய்திகள்
மொனரா கலை, சியம்பலாண்டுவ பிரதேசத்தில் அமைந்துள்ள சியம்பலாண்டுவ மத்திய மகா வித்தியாலயத்தில் அத்துமீறி, நுழைந்த ஆயுதம் ஏந்திய நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஆசிரியையொருவர் பலத்த காயங்களுக்குட் பட்ட நிலையில் மொனராகலை சிரிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமானார். துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் நேற்று (23) காலை 8.45 மணியளவில் மொனராகலை சியம்பலாண்டுவ மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்த ஆசிரியை குறித்த பாடசாலையில் சேவையாற்றி வந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த ஆசிரியை லக்ஷிகா தமயந்தி (வயது 29) ஆபத்தான நிலையில் இருப்பதால் நேற்று மாலை அவர் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தற்கொலை செய்து கொண்ட நபரின் மரண விசாரணைகள் நேற்று மாலை இடம்பெற இருந்தது. மொனராகலை பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

http://thesamnet.co.uk/?p=22424

இலங்கைக்கு எதிரான சவால்களை இனங்கண்டுள்ளோம். அதில் பாரிய சவாலாக இருப்பது கடந்த காலத்தில் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதாகும். – ஐ. நா. பொதுச்சபையில் ஜனாதிபதி உரை

mainpic.jpgஇலங்கைக்கு எதிரான சவால்களை நாம் இனங்கண்டுள்ளோம். அதில் பாரிய சவாலாக இருப்பது எமது கடந்த காலத்தில் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதாகும். இந்நிலையில் அதற்காக இவ்வருட முற்பகுதியில் கற்றுணர்ந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அது பொறுப்புத் தன்மையுடனான கொள்கைக்கு முற்றிலும் உட்பட்டது என்று ஜனாதி பதி மஹிந்த ராஜாபக்ஷ நேற்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உரையாற்றிய போது கூறினார். ஐ. நா. பொதுசபை கூட்டத் தோடரில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது:-

எனது இரண்டாவது பதவிக் காலம் முதலாவது பதவிக் காலத்தை விட பெரிதும் மாறுபட்டது. 2005 ஆம் ஆண்டு நான் முதலில் தெரிவு செய்யப்பட்ட போது எனது நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து மீட்பதாக வாக்குறுதி வழங்கினேன். அதை நிறைவேற்றியுள்ளேன். சில காலத்துக்கு முன் அங்கு கனவாக மட்டுமே இருந்த சமாதானம் இப்போது அங்கு நனவாகியுள்ளது.

எனது இரண்டாவது பதவிக் காலத்தில் சமாதானம் மற்றும் சபீட்சத்தை ஸ்திரப்படுத்துவதுடன் பயங்கரவாதம் மீண்டும் ஒருமுறை தலைதூக்க இடமளிக்கமாட்டேன் என்ற வாக்குறுதியை எனது மக்களுக்கு வழங்குகிறேன். விரைவிலேயே மறந்துபோன உண்மை என்னவென்றால் மிகவும் கொடூரமான, நன்கு திட்டமிட்டு செயற்பட்ட சிறந்த நிதி உதவியை பெற்று, நன்றாக இயங்கிய ஒரு பயங்கரவாத இயக்கத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்பதாகும். இது ஏனைய நாடுகளிலும் தனது வலையை விரிக்கக் கூடியதாக இருந்தது என்பதை மறந்துவிடக் கூடாது.

மேற்கு நாடுகள் அண்மைக் காலத்தில் அனுபவித்துவரும் பயங்கரவாதத்தின் கொடூரத்தை இலங்கை மக்கள் சுமார் 30 வருடங்கள் அனுபவித்து வந்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் பேர் அதில் உயிரிழந்தனர். அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் இலங்கை ஜனாதிபதி ஒருவரும் முன்னோக்க தரிசனத்துடன் கூடிய ஒரு இந்தியத் தலைவரும் நூற்றுக்கணக்காக புத்திஜீவிகளும் அரசியல்வாதிகளும் அடங்குகின்றனர்.

வழி தவறிப் போன சிலருக்கு நான் சொல்ல வேண்டியது என்னவென்றால் பிரிவினைவாதம், குரோதம், மற்றும் வன்முறைக்கு துணை போகாதீர்கள். அதற்கு மாறாக எம்முடன் கைகோர்த்துக் கொள்ளுங்கள், பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்திய வண்ணம் புதிய பரிமாணங்களை நாம் எட்ட முடியும்.

எமது நாட்டை கட்டியெழுப்புவதற்கும் அதன் காயங்களை ஆற்றுவதற்குமான நடைமுறை எமக்குள்ளேயே உருவாக வேண்டும் என்று நாம் நம்புகிறோம். சரித்திரம் நமக்கு ஒன்றை சொல்லிக் கொடுத்திருக்கிறது. என்றால் அது வெளியில் இருந்து திணிக்கப்பட்ட தீர்வுகள் மனக்கசப்பை தோற்றுவித்து இறுதியில் தோல்வியையே ஏற்படுத்தும் என்பதாகும். அதற்கு மாறான எமது உள்நாட்டு நடைமுறையானது எமது மக்களின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிப்பதாக அமைகிறது.

எமது நாட்டையும் அதன் பொருளாதாரத்தையும் அபிவிருத்தி செய்து வரும் நிலையில் அதற்கு நாம் சர்வதேச சமூகத்தின் ஆதரவினை வரவேற்கிறோம் சர்வதேச வர்த்தகம், முதலீடு மற்றும் பரிமாண வளர்ச்சி மூலம் சர்வதேச சமூகத்துடன் கூட்டாக செயற்பட நாம் தயாராக இருக்கிறோம்.

சமாதானத்தின் பெறுபேறாக எமது பொருளாதாரம் முன்னேற்றப்பாதையில் செல்கிறது. கடந்த காலாண்டு காலத்தில் எமது வளர்ச்சி நிலையாகவும் ஸ்திரமாகவும் உள்ளதுடன், 8 சத வீதத்துக்கு மேற்பட்ட வளர்ச்சி வீதத்தை காட்டி நிற்கிறது. பண வீக்கம் குறைந்த நிலையிலும் வட்டி வீதங்களும் குறைந்து காணப்படுகின்றன. கடந்த 5 வருடங்களில் எமது தனிநபர் வருமானம் இரட்டிப்பாகியுள்ளது. அதனை மேலும் முன்னேற்றச்செய்து 2016 ஆம் ஆண்டளவில் அதனை தற்போது இருப்பதிலும் இரட்டிப்பாக்குவது எமது குறிக்கோளாகும்.

மஹிந்த சிந்தனை, எதிர்கால நோக்கு என்ற எனது தேர்தல் விஞ்ஞாபனம் உறுதியான உட்கட்டமைப்பை கொண்டிருக்கும் எனது எதிர்கால தரிசனத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. தேசிய, மாகாண மற்றும் கிராம மட்டங்களில் இடம்பெறும் இந்த தரிசனம் எமது முழுமையான சமூகத்தின் அபிவிருத்தியை அர்த்தமுள்ளதாக்கும்.

அதேவேளை எனது நாட்டின் பொருளாதார தந்திரோபாயம் புத்தாக்க அபிவிருத்தி இலக்குகளை சுலபமாக நிறைவேற்றக்கூடிய நிலையில் இருப்பதை சொல்லிக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். ஐக்கிய நாடுகளின் காலக்கெடுவுக்கு முன்னரே அதனை இலங்கை நிறைவேற்றும் என்று நம்பலாம்.

ஐக்கிய நாடுகளின் அமைதிப் படைக்கு இலங்கை பங்களிப்பு வழங்கிய 50ஆவது நிறைவு 2010 ஆம் ஆண்டு என்பதை கூறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். எமது படையினரும் பொலிஸாரும் இன்று சிறப்பான யுத்தப் பயிற்சியுடன் எந்தச் சவாலான நிலையிலும் கடமையாற்றக் கூடிய திறனுடன் உள்ளனர். ஐக்கிய நாடுகளின் அமைதிப் படையின் செயற்பாடுகளுக்கு தொடர்ந்து உதவும் எமது விருப்பத்தை நான் மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்.

எமது பிராந்தியத்தில் அண்மையில் இடம்பெற்ற இயற்கை அழிவுகள் முறையான செயற்பாட்டின் தேவையை கோடிட்டுக் காட்டுகின்றன. இதற்கு கூட்டான பங்களிப்பு தேவைப்படுகிறது. அதன் மூலமே மனித வேதனையைக் குறைக்க முடியும். சுவாத்திய மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் ஆகியவை இன்று அனைத்து நாடுகளினதும் அவதானத்தை ஈர்க்கும் விடயமாகியுள்ளதை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டுவரும் அரசியல் விவகாரங்களில் பலஸ்தீன மக்களின் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படும் விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டும். இந்த விடயம் தாமதமின்றி தீர்க்கப்பட்டு அடுத்த வருட பொதுச்சபை கூட்டத்தில் பலஸ்தீனம் பூரண அங்கத்துவ நாடாக கலந்து கொள்ளும் என்று நாம் நம்புகிறோம். உலகளாவிய ரீதியில் இன்று ஒவ்வொரு நாடும் ஒன்றையொன்று சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. எனவே நாம் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும். தேவையான வேளையில் நாம் ஒருவரையொருவரின் ஆலோசனையுடன் செயற்பட முடியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ. நா. பொதுச்சபையில் குறிப்பிட்டார்.

சம்பந்தன் எம்.பி.க்கு மூன்று மாத விடுமுறை

rsambanthan.jpgதமிழரசுக் கட்சியின் திருமலை மாவட்ட எம். பி. இரா. சம்பந்தன் மூன்று மாத காலத்திற்கு சபைக்கு சமுகமளிக்காதிருப்பதற்கான விடுமுறை பிரேரணைக்கு பாராளும ன்றம் நேற்று அங்கீகாரம் வழங்கி யது. தமிழரசுக் கட்சியின் பாராளு மன்ற உறுப்பினரான எம். ஏ. சுமந்திரன் சபாநாயகரின் அனுமதியைப் பெற்று இப்பிரேரணையை சபைக்குக் கொண்டு வந்தார். இச் சமயமே பாராளுமன்றம் இப்பிரேரணைக்கு அனுமதி வழங்கியது.

பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் 1.00 மணிக்குக் கூடியது. சபை அமர்வின் வழமையான ஆரம்ப நிகழ்வைத் தொடர்ந்து சுமந்திரன் எம். பி. இப்பிரேரணையை சபையின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

5 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் முதன்மைச்சித்தி பெற்றவர்கள்!

subatha.jpg2010 ஆம் ஆண்டு 5 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபெறுகள் நேற்று வெளியாகியுள்ளன. இதில் திருக்கோவில் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தின் மாணவி மாளவன் சுபதா 193 புள்ளிகளை பெற்று தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடம்பெற்றுள்ளார்.

இவர், தம்பிலுவில் அம்மன் கோவில் முன் வீதியில் வசித்துவரும் மாளவன் உமையாள் தம்பதிகளின் புதல்வியாவார்.

sabeer.jpg இதில் இரண்டாம் இடத்தை கண்டி கல்வி வலயத்தைச் சேர்ந்த கலகா நகரில் இயங்கும் ஸ்ரீ கிராமகிருஷ்ணன் மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் மாணவன் சுக்ரி மொஹமட் சபீர் பெற்றுள்ளார். இவர் 192 புள்ளிகளைப் பெற்று இப்பாடசாலைக்குப் பெருமை தேடித் தந்துள்ளதாகப் பாடசாலை அதிபர் எம். பி. சந்திரசேகரன் தெரிவித்தார்.

இம்மாணவன் கலகாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்பொழுது இவர் தந்தை மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் புரிந்து வருகின்றார். தாயுடன் வசித்துவருகிறார்.

இவரது சகோதரியும் இதே பாடசாலையில் கல்வி பயின்று வருவதுடன், அவரும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

nesan.jpgதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் 190 புள்ளிகளைப் பெற்ற வவுனியா விபுலானந்தா வித்தியாலய மாணவனான யோகேஸ்வரன் பிரியநேசன் 3 ஆம் இடத்தை பெற்றுள்ளார்.

சமயபுரத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் சிரானிதமயந்தி தம்பதிகளின் இரண்டாவது மகன். இவருக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர். இவரின் தந்தையார் முச்சக்கரவண்டி சாரதி, நடுத்தர வருமானத்தைக் கொண்ட குடும்பம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையைச் சேர்ந்த ஜெனிஸ் ஜீட் விதுசன் பிஃகுராடோ 190 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.