2010 ஆம் ஆண்டு 5 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபெறுகள் நேற்று வெளியாகியுள்ளன. இதில் திருக்கோவில் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தின் மாணவி மாளவன் சுபதா 193 புள்ளிகளை பெற்று தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடம்பெற்றுள்ளார்.
இவர், தம்பிலுவில் அம்மன் கோவில் முன் வீதியில் வசித்துவரும் மாளவன் உமையாள் தம்பதிகளின் புதல்வியாவார்.
இதில் இரண்டாம் இடத்தை கண்டி கல்வி வலயத்தைச் சேர்ந்த கலகா நகரில் இயங்கும் ஸ்ரீ கிராமகிருஷ்ணன் மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் மாணவன் சுக்ரி மொஹமட் சபீர் பெற்றுள்ளார். இவர் 192 புள்ளிகளைப் பெற்று இப்பாடசாலைக்குப் பெருமை தேடித் தந்துள்ளதாகப் பாடசாலை அதிபர் எம். பி. சந்திரசேகரன் தெரிவித்தார்.
இம்மாணவன் கலகாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்பொழுது இவர் தந்தை மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் புரிந்து வருகின்றார். தாயுடன் வசித்துவருகிறார்.
இவரது சகோதரியும் இதே பாடசாலையில் கல்வி பயின்று வருவதுடன், அவரும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் 190 புள்ளிகளைப் பெற்ற வவுனியா விபுலானந்தா வித்தியாலய மாணவனான யோகேஸ்வரன் பிரியநேசன் 3 ஆம் இடத்தை பெற்றுள்ளார்.
சமயபுரத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் சிரானிதமயந்தி தம்பதிகளின் இரண்டாவது மகன். இவருக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர். இவரின் தந்தையார் முச்சக்கரவண்டி சாரதி, நடுத்தர வருமானத்தைக் கொண்ட குடும்பம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையைச் சேர்ந்த ஜெனிஸ் ஜீட் விதுசன் பிஃகுராடோ 190 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.