அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

யுத்த வெற்றிக்கு வழிகாட்டிய தலைமைக்கு சவால் விடமுடியாது – கோத்தாபய ராஜபக்ஷ

gotabaya-rajapaksha.jpgமுப்படை யினருக்கு தேவையான தலைமைத்துவத்தை வழங்கி, உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளுக்கு சிறப்பாக முகம் கொடுத்து யுத்தத்தை வெற்றிகொள்ள வழிகாட்டிய ஜனாதிபதியின் தலைமைத்துவத்துக்கு எவரும் சவால்விட முடியாது என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். தாய் நாட்டுக்காக உயிர் நீத்த சிங்க ரெஜிமன்ட்டைச் சேர்ந்த படைவீரர்களை கெளரவிக்கும் 21 வது நினைவுதின வைபவம் அம்பேபுஸ்ஸவில் உள்ள சிங்க ரெஜிமன்ட் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் விசேட செய்தியை இராணுவத் தளபதி வாசித்தார். அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டுக்காகவும், இறைமைக்காகவும் உயிரை பணயம் வைத்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து சமாதானத்தின் கதவுகளை திறப்பதற்காக பங்களிப்பு செய்த படைவீரர்களை கெளரவிப்பதில் மகிழ்ச்சிய டைகின்றோம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவம், மற்றும் வழிகாட்டலின் மூலம் முப்படையினர், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரின் பலம், தைரியம், அர்ப்பணிப்பு காரணமாக 30 வருட காலம் நிலவிய பயங்கரவாத யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவர முடிந்தது.

முப்படையினர் மற்றும் பொலிஸாரை பலப்படுத்தி 80 ஆயிரமாக இருந்த இராணுவத்தின் ஆளணி பலத்தை முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி கடந்த மூன்று வருட காலத்திற்குள் 2 இலட்சத்து 20 ஆயிரமாக அதிகரித்ததுடன் களமுனையிலுள்ள தளபதிகளுக்குத் தேவையான ஆளணியையும் பெற்றுக்கொடுத்தார்.

படையினருக்கும், களமுனைக்கும் தேவையான நவீன ஆயுதங்கள், உபகரணங்கள் மற்றும் வளங்களை பெற்றுக் கொடுத்து எந்தவித வெளிநாட்டு சக்திகளுக்கும் தலைசாய்க்காது செயற்பட்ட ஜனாதிபதியின் உன்னதமான தலைமைத் துவத்தை கெளரவத்துடன் நினைவுகூர வேண்டும்.

இந்த யுத்தத்தை வெற்றிபெற முடியாது என்பதே வெளிநாட்டு நிபுணர்களினதும், தலைவர்களினதும் கருத்தாக இருந்தது. யுத்தக்கள வெற்றிகளை அவமதித்தவர்களும், இந்த நாட்டில் இருந்தனர். இதனையும் பொருட்படுத்தாது மனோ லிமையுடன் தலைமைத்துவத்தையும் கட்டளையிடும் தளபதிகளுக்கு தேவையான சகல ஒத்துழைப்புக்களையும், உறுதியையும் ஜனாதிபதி வழங்கினார்.

1987 ஆம் ஆண்டு ஜுன் மாதம் நடைபெற்ற வடமராட்சி யுத்தத்தை இந்த இடத்தில் நினைவுகூர கடமைப்பட்டுள்ளேன். யுத்தவெற்றிகள் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருந்த போதிலும் சரியான அரசியல் தலைமைத்துவம் இல்லாமலும், வெளிநாட்டு அழுத்தங்கள் காரணமாகவும் யுத்தம் இடையில் நிறுத்தப்பட்டது.

ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு வெளிநாடுகளில் பேச்சுவார்த்தை நடத்தி பிரபாகரனுக்கு தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அன்றிருந்த அரசியல் தலைமைத்துவம் நடவடிக்கை எடுத்ததை எவரும் மறக்கவில்லை. ஆனால் உயிரை பணயம் வைத்து முன்னோக்கிச் சென்ற உங்களது பிள்ளைகள், கணவன்மார்கள், தந்தையர்கள் தமது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யோசிக்கவில்லை.முப்படையினரின் நலன்கள், மோதலுக்கு தேவையான வளங்கள் தலைமைத்துவம் இல்லாமையே இந்த யுத்தம் இதுவரை காலம் நீடிப்பதற்குக் காரணமாக இருந்தது.

தரைவழி பாதுகாப்பை இராணுவத்தினரும், வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்படும் ஆயுதங்கள் புலிகளின் கரங்களை சென்றடையாமல் அவற்றை அழித்தொழிக்கும் பணியை கடற்படையினரும், நவீன விமானங்களை பயன்படுத்தி எதிரிகளின் தளங்களை விமானப்படையினர் அழித்தும் சிறப்பாக ஒத்துழைப்பை வழங்கினர் என்றார்.

தற்காலிக அடையாள அட்டை வழங்கல்: – ஜனவரி 21 வரை விண்ணப்பம் ஏற்கப்படும்

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக இடம்பெயர்ந்த மக்களுக்கும் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள மக்களுக்கும் தற்காலிக அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனவரி 21ம் திகதி வரை தற்காலிக அடையாள அட்டை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

ஊடகங்களில் வெளிவந்த தகவல்களை மறுத்த தேர்தல் திணைக்களம் சகல தரப்பினருக்கும் வாக்களிக்கத் தேவையான ஒழுங்குகளை தேர்தல் திணைக்களம் முன்னெடுத்துள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ.பி.சுமணசிறி கூறினார்.

சுமார் 88 வீதமான மக்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதோடு, எஞ்சியவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கவும் தற்காலிக அடையாள அட்டை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கிராம சேவகர்களினூடாக தற்காலிக அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கும் ஏனைய பிரதேசங்களில் உள்ள வாக்காளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதம மந்திரியாக ஆட்சிசெய்ய எண்ணியுள்ளேன்: – ரணில்

ranil.jpgஅடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் தாம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமமந்திரியாக செயற்பட எண்ணம் கொண்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதும் இதற்கு வாய்ப்பு ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சரத் பொன்சேகா ஜனாதிபதியாக தெரிவானால் மூன்று விடயங்களை நிறைவேற்றுவது குறித்து முன்னுரிமை கொடுக்கப்படும் என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகத்தை நிலைநாட்டுவது, நாடாளுமன்ற அரசாங்க முறை, மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதம மந்திரிமுறை என்பன அதில் உள்ளடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

‘இலங்கை மீனவர்கள் குறித்து இதுவரை தகவல் இல்லை’

இந்திய கடல் எல்லைக்குள் காணாமற்போன இரண்டு இலங்கை மீனவர்கள் குறித்தும் இதுவரை எவ்விதத் தகவல்களும் கிடைக்கவில்லையென கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் அத்துல செனரத் நேற்றுத் தெரிவித்தார்.

கடந்த இரு தினங்களாக கடலில் ஏற்பட்ட வழமைக்கு மாறான கொந்தளிப்பின் காரணமாக இந்திய கடல் எல்லைக்குள் நின்றிருந்த இலங்கை மீனவர்கள் படகுடன் காணாமற் போயுள்ளனர். இவர்களைத் தேடும் பணி அந்நாட்டின் கடற் படையினரின் ஒத்துழைப்புடன் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

அலிஸாஹிர் மெளலானா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பு

ali.jpgஐ.தே.க.வின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மெளலானா நேற்று நண்பகல் அலரிமாளிகை சென்று  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து உரையாடினார்.. ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க அலிஸாஹிர் மெளலானா தீர்மானித்துள்ளார்.

தேர்தல் காலத்தில் விசேட வீதிச் சோதனைகள்

தேர்தல் காலத்தில் விசேட வீதிச் சோதனைகளை முன்னெடுப்பதற்கு பொலிஸ் திணைக்களம் தீர்மானித்திருப்பதாக தேர்தல் நடவடிகைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காமினி நவரட்ண நேற்றுத் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் இதற்கென அமைக்கப்பட விருக்கும் விசேட சோதனைச் சாவடிகளினூடாக போக்குவரத்திலீடுபடும் வாகனங்கள் சோதனைக்குட் படுத்தப்படுமெனவும் அவர் கூறினார்.

தேர்தல் வேட்பாளர்களுக்கோ கட்சிகளுக்கோ அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலான சட்டத்துக்கு முரணான போஸ்டர்கள், கட்அவுட்கள் கொண்டு செல்லல், பிரசாரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையிலான குண்டர்களின் செயற்பாடுகள், ஆயுதங்கள் கடத்தல் போன்றவற்றை தடுக்கும் முகமாகவே வீதிச் சோதனைகள் முன்னெடுக்கப்பட விருப்பதாகவும் கூறினார்,

காலநிலை சீர்கேடால் சுரங்கப்பாதை ரயில் சேவைகள் இடை நிறுத்தம் – லண்டன், பிரான்ஸ், பெல்ஜிய பயணிகள் அவதி

காலநிலை சீர்கேடு காரணமாக சுரங்கப்பாதையினூடான ரெயில் சேவைகள் சீர்குலைந்தன. இதனால் சுமார் இரண்டாயிரம் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாக நேர்ந்தது. குறித்த நேரத்துக்கு தங்கள் இடங்களைச் சென்றடைய முடியாது போனதால் ரெயில் நிலையங்களில் இரவைக் கழிக்க நேர்ந்தது. லண்டன், பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய இடங்களுக்கான சுரங்கப்பாதை ரெயில் சேவை கடும் குளிர் காரணமாக சென்ற சனிக்கிழமை சீர்குலைந்தன.

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை ஐந்து ரெயில்கள் இயங்க முடியாத நிலைக்கு வந்தன. இதனால் லண்டன், பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நகரங்களுக்கான சுரங்கப் பாதை ரெயில் சேவைகள் சீர்குலைந்தன.

பயணிகள் இரவை ரெயில் நிலையங்களில் தொலைக்காட்சிகளைப் பார்த்துக் கழிக்க வேண்டியேற்பட்டது. சில இடங்களில் ஆங்கில ஒளிபரப்புகள் இடம்பெறவில்லையென பயணிகள் புகார் தெரிவித்தனர்.

கிறிஸ்மஸ் பண்டிகைக் காலமாகையால் லண்டன், பிரான்ஸ், பெல்ஜிய ரெயில் சேவைகள் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகின்றன. கடும் குளிரான கால நிலையால் ரெயில் சேவைகள் சில ரத்துச் செய்யப்பட்டன.

பிரதான சேவையில் ஈடுபட்ட ரெயில்களில் ஐந்து இயங்க முடியாதளவுக்குப் பழுதடைந்தன. இது மாத்திரமன்றி விமான சேவைகளும் மோசமான பனிப் பொழிவால் தடைப்பட்டன. படகுகள் போக்குவரத்தும் வெள்ளிக்கிழமை தடைப்பட்டன.

தற்போது ரெயில், விமான சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடங்கலுக்கு வருந்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் நஷ்டஈடும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சண்டே லீடரிடமிருந்து ரூ. 100 கோடி நஷ்டஈடு கோருகிறார் பாதுகாப்பு செயலாளர்

sarath1_koththapaja.jpgபாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, சன்டே லீடர் பத்திரிகைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். குறித்த பத்திரிகை பாதுகாப்புச் செயலாளருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டதால், அதற்கு நட்ட ஈடாக நூறு கோடி ரூபாவை வழங்க வேண்டுமென்று பாதுகாப்புச் செயலாளரின் சட்டத்தரணி சனத் விஜேவர்தன, சண்டே லீடர் வெளியீட்டாளருக்கும் அதன் பிரதம ஆசிரியருக்கும் கோரிக்கைக் கடிதம் (வக்கீல் நோட்டிஸ்) அனுப்பி வைத்துள்ளார். நட்டஈட்டை வழங்க மறுக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கல்கிஸை நீதிமன்றத்தில் பத்திரிகை நிறுவனத்தினர் அளித்த வாக்குறுதியை மீறி செய்தி வெளியிட்டமை தொடர்பாகவும் வழக்குத் தாக்கச் செய்யப்படவுள்ளது. கடந்த டிசம்பர் ஆறாம் திகதியும் 13ஆம் திகதியும் சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்திகள், பாதுகாப்புச் செயலாளருக்கு அபகீர்த்தியை ஏற் படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக அவதூறான செய்திகளை வெளியிடக்கூடாதென கல்கிஸை நீதிமன்றத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தும், அவ்வாறான செய்திகளை வெளியிட்டிருப்பதாக சண்டே லீடர் பத்திரிகையின் வெளியீட்டாளர் லால் விக்கிரமதுங்க மற்றும் அதன் பிரதம ஆசிரியர் ஆகியோருக்கு எதிராகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய ஐக்கியத்தை சிதைக்காமல் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவோம்: – மனோ

ஆட்சி மாற்றத்தை கொண்டுவரும் அரசியல் செயற்பாட்டை தமிழ் இனத்தின் தேசிய ஐக்கியத்தை சிதைத்து சின்னப்பின்னப்படுத்தாமல் நம்மால் கொண்டுவரமுடியும் என எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மீண்டும் விடுத்துள்ள தமது பகிரங்க அழைப்பில் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கையில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவர வேண்டியது காலத்தின் கட்டாயம். இன்றைய நெருக்கடி மிகுந்த காலகட்டத்திலே இந்த காலத்தின் கட்டாயத்தை புரிந்துகொண்டு நாம் செயற்படாவிட்டால் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும். ஆட்சி மாற்றத்தை கொண்டுவரும் அரசியல் செயற்பாட்டை தமிழ் இனத்தின் தேசிய ஐக்கியத்தை சிதைத்து சின்னாபின்னப்படுத்தாமல் நம்மால் கொண்டுவரமுடியும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணி ஜனாதிபதியை ஆதரிக்க தீர்மானம்?

மலையக மக்கள் முன்னணி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளது. இன்று ஹட்டனில் நடை பெறும் பேராளர் மாநாட்டில் இந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேக ரன் இதனை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார். இதில் அர சாங்க தரப்பிலும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொள்வார்கள் என தெரியவருகிறது.