அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

ஆசிரிய நியமனத்தில் முறைகேடு: 4 கல்விப் பணிப்பாளர்கள் சப்ரகமுவயில் பணி நீக்கம்

மலையக ஆசிரிய நியமனத்தின் போது சப்ரகமுவ மாகாணத்தில் முறைகேடுகளில் சம்பந்தப்பட்ட தாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு கல்விப் பணிப்பாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சப்ரகமுவ மாகாணத்தின் மேலதிகக் கல்விப் பணிப்பாளர் ஒரு மாதத்திற்கு முன்பு பணிநீக்கம் செய்யப்பட்டதுடன் ஒரு பிரதிப் பணிப்பாளரும், இரண்டு வலய உதவிப் பணிப்பாளர்களும் சில தினங்களுக்கு முன்னர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாகாண கல்வித் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

பாப்பரசரை மோதிய பெண்

25122009.jpgகிறிஸ்தவர் களின் தலைமை பீடமான வத்திக்கானில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி போப் ஆண்டவர் சிறப்பு பிரார்த்தனை வந்த நேரத்தில் யாரும் எதிர்பாராத வகையில் இளம் பெண் ஒருவர் தடுப்பு கம்பியை தாண்டி குதித்தார். பிறகு அதேவேகத்தில் போப் ஆண்டவர் மீதி மோதி அவர் அணிந்திருந்த அங்கியை பிடித்துக் கொண்டார். இதில் போப் ஆண்டவர் பெனடிக்ட் நிலை குலைந்து கீழே விழுந்தார்.

கண் இமைக்கும் நேரத்துக்குள் நடந்து விட்ட இந்த சம்பவத்தால் புனிதபீட்டர் ஆலயத்துக்குள் பரபரப்பு எற்பட்டது. பாதுகாவலர்கள் ஓடி வந்து அந்த பெண்ணை பிடித்துச் சென்றனர். கீழே விழுந்து கிடந்த போப் ஆண்டவரை தூக்கி விட்டனர். அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. சம்பவம் நடந்த சில மணிநேரங்களில், பாப்பரசர் தமது வருடாந்த கிறிஸ்துமஸ் செய்தியை வழமை போல் வாசித்தார். போப் ஆண்டவர் மீது மோதிய பெண் சிவப்பு நிற மேலாடை அணிந்திருந்தார். அவரிடம் வத்திக்கான் சிட்டி பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பெண் யார் என்ற விவரம் உடனடியாக வெளியிடப்படவில்லை. தற்போது அந்த பெண்மணியின் மனநலம் குறித்து மருத்துவ ஆய்வுகள் செய்யப்படுகின்றன.

2005 இல் எடுத்த முடிவே இன்றைய தமிழரின் மோசமான நிலைக்கு காரணம் என்கிறார் இரா. சம்பந்தன்

Sambanthan_R இலங்கையில் 2005 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்களின் சார்பில் விடுதலைப் புலிகளால் எடுக்கப்பட்ட முடிவுதான் இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற மோசமான நிலைமைகளுக்கும், இன்றைய அழிவுகளுக்கும் காரணம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் BBC க்கு வழங்கிய செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக தான் விடுதலைப்புலிகளிடம் நீண்ட நேரம் வாதிட்டதாகக் கூறும் இரா. சம்பந்தன், அந்த முடிவு எடுக்கப் பட்டிருக்காவிட்டால், நிச்சயமாக தமிழ் மக்கள் ஒரு அரசியல் தீர்வை நோக்கிச் சென்றிருக்கலாம் என்றும், மக்களின் வாழ்விலும் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

இந்த தடவை ஜனாதிபதி தேர்தல் குறித்த முடிவுகளை எடுக்கின்ற போது இந்த விடயத்தை எல்லாரும் மனதில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலின் முக்கிய வேட்பாளர்களைச் சந்தித்து பல விடயங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக கூறிய இரா. சம்பந்தன் அவர்கள், யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து தாம் இன்னமும் முடிவு எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். 

அம்பாறை, மட்டு. மாவட்டங்களில் தொடர்ந்தும் மழை; வெள்ள நிலை

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழையால் பல பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால், மேற்படி இரு மாவட்டங்களிலும் இயல்பு வாழ்க்கை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான கணக்கெடுப்புக்கள் நடத்தப்பட்டு வருவதாக பிரதேச செயலகங்கள் தெரிவிக்கின்றன. நிவாரணப் பணிகள் துரிதமாக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நலகிரிக்குளத்தின் வான் கதவும் திறந்து விடப்பட்டுள்ளது. இருந்த போதும், முகத்துவாரம் வெட்டப் பட்டுள்ளதால், ஆற்றுநீர் முகத்துவாரம், கல்லாறு வாவிகள் ஊடாக கடலில் சங்கமமாகின்றது. கிராமங்கள், வீதிகளில் வடிகான்கள் இன்மையால் வெள்ள நீர் தாழ் நிலங்களில் தேங்கிக் கிடப்பதால், பல வீதிகளின் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

போரதீவுப்பற்று, மண்முனை, தென் எருவில்பற்று, பட்டிப்பளை, காத்தான்குடி, மண்முனைப்பற்று, ஏறாவூர் பிரதேச செயலகப் பிரிவுகள் வெகுவாகப் பாதிக்கப் பட்டுள்ளன. களுவாஞ்சிக்குடி, பழம்தோட்டம், எருவில, மகிளூர், மகிளூர்முனை, நாகபுரம், குறுமண்வெளி, பட்டிருப்பு, களுதாவளை, போரதீவு, முனைத்தீவு, வெல்லாவெளி, அம்பலாந்துறை, வேத்துச்சேனை, ஆணை கட்டியவெளி, ராணமடு, சின்னவத்தை, பலாச்சோலை, இருதயபுரம், மஞ்சந் தொடுவாய், காத்தான்குடி, ஆரையம்பதி, புதூர், கல்லடி மற்றும் செங்கலடி போன்ற கிராமங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தின் காரணமாக, வேத்துச் சேனை, காக்காச்சிவட்டை கிராமங்களில் ஐவர் விசப்பாம்புகளின் கடிக்கு இலக்காகினர். வெள்ளத்தின் காரணமாக களுவா ஞ்சிக்குடியில் துவிச்சக்கரவண்டி பழுது பார்க்கும் கடை ஒன்றும், வேத்துச் சேனைக் கிராமத்தில் நான்கு வீடுகளும் விழுந்துள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றுக் காலை 8.30 மணி தொடக்கம் பகல் 11.30 மணி வரை ஆகக் கூடுதலான 18.7 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பாளர் தெரிவித்தார். நேற்று முன்தினம் காலை 8.30 மணி தொடக்கம் நேற்றுக் காலை 8.30 மணி வரை 20.7 மில்லி மீற்றர் மழை மட்டக் களப்பு மாவட்டத்தில் பெய்துள்ளதுடன் டிசம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் நேற்று வரை 794.8 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கல்முனை, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ளத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட சுமார் 500 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கு வதற்கான உடனடி ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அம்பாறை அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கரா தெரிவித்தார்.

கல்முனை, சாய்ந்தமருது பிரதேச செயலாளர்களே நேற்று வரை அறிக்கை செய்தனர். இதற்கேற்ற உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் இடம் பெயரும் சந்தர்ப்பங்களில் பிரதேச செயலாளர்களின் தகவல்களை அடிப் படையாகக் கொண்டு நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் 16 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், 5016 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கென 100 கூடாரங்களை சர்வோதய நிறுவனம் வழங்கியுள்ளதாகவும் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எம். கோபாலரெத்தினம் தெரிவித்தார்.

இதேவேளை நேற்று முன்தினம் வீசிய சுழல் காற்றின் காரணமாக சென்றல் கேம்ப் பிரதேசத்திலுள்ள அரிசி ஆலை, கடை என்பவற்றின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன. சவளக்கடை கமநல சேவை கேந்திர நிலையத்தின் கீழுள்ள 1000 ற்கு மேற்பட்ட ஏக்கர் வயல் நிலங்கள் பாதிப்படைந்துள்ளன.

வெள்ளம் காரணமாக சேதமடைந்துள்ள கல்முனை – சென்றல்கேம்ப் பிரதான வீதியிலுள்ள கிட்டங்கி தாம்போதியில் ஏற்பட்டுள்ள சிதைவுகளை கல்முனை வீதி அபிவிருத்தி அதிகார சபை செப்பனிட்டு வருகின்றது.

சுனாமி இலங்கையை தாக்கி இன்றுடன் ஐந்தாண்டு பூர்த்தி

tsunami.jpgசுனாமி பேரலை இலங்கையைத் தாக்கி இன்றோடு ஐந்தாண்டுகள் நிறைவடைகின்றன.

இந்தப் பேரலைகள் இலங்கையின் 11 கரையோர மாவட்டங்களில் வாழ்ந்த சுமார் 39 ஆயிரம் பேர்களின் உயிர்களைக் காவு கொண்டதுடன், கோடிக் கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்களையும் அழித்தன.

இந்தப் பேரழிவை வருடா வருடம் நினைவு கூரும் வகையில் இத்தினத்தை தேசியப் பாதுகாப்பு தினமாக அரசாங்கம் பிரகடனப் படுத்தியுள்ளது.

அந்த வகையில் இவ்வருட தேசிய பாதுகாப்பு தினத்தின் பிரதான வைபவம் குருநாகல் நகரில் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா தலைமையில் நடைபெறுகின்றது. இதேவேளை சுனாமி அனர்த்தம் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டம் உட்பட சுனாமி பேரலை அனர்த்தத்திற்கு முகம் கொடுத்த சகல மாவட்டங்களிலும் இன்று மத வழிபாடுகளும், ஆராதனைகளும் விசேட பிரார்த்தனைகளும் நடைபெறுகின்றன. அன்னதானங்களும் வழங்கப்பட ஏற்பாடாகியுள்ளன.

இதேநேரம் சுனாமி பேரலை அனர்த்தம் உட்பட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 9.25 மணி முதல் காலை 9.27 வரையும் மெளனமாக இருக்குமாறு அரசாங்கம் நாட்டு மக்களைக் கேட்டுள்ளது.

முல்லைத்தீவில் மீள்குடியேறிய மாணவர்களுக்கு சைக்கிள்கள் கையளிப்பு

முல்லைத்தீவு கரச்சி மற்றும் மல்லாவி பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதி மாணவர்களுக்கு 150 சைக்கிள்களையும், முல்லைத்தீவு வலய கல்வி அலுவலக அலுவலர்களுக்கு 5 மோட்டார் சைக்கிள்களையும் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி வழங்கினார்.

முல்லைத்தீவு கரச்சி பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டடத்தில் நடைபெற்ற வைபவத்தின் போது மாணவ மாணவிகளுக்கு 75 சைக்கிள்களையும் மூன்று மோட்டார் சைக்கிள்களையும் வழங்கினார். முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரியில் நடைபெற்ற மற்றுமொரு நிகழ்வின்போது அங்குள்ள மாணவ, மாணவிகளுக்கு 75 சைக்கிள்களையும், 2 மோட்டார் சைக்கிள்களையும் ஆளுநர் வழங்கினார்.

‘பொன்சேகாவின் பொறுப்பற்ற கூற்றுக்கு அரசே பதிலளிக்கும் நிலை’ – யாப்பா

anura-priya.jpgசரத் பொன்சேகா படை வீரர்கள் தொடர்பாக பொறுப்பற்ற கூற்றை கூறினாலும் அதற்கு பதில் கொடுக்க வேண்டிய நிலை அரசுக்கே ஏற்பட்டுள்ளது. எனவே, பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் உரிய பதில் கொடுக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும், தகவல், ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அது தவறாக கூறப்பட்டவை என்று பொன்சேகா கூறினாலும் ஐ. நா. சபை இது தொடர்பில் அரசிடமே விளக்கம் கோரியுள்ளது. எனவே, தகுந்த ஆதாரங்களுடன் உரிய பதில் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது. அமைச்சர் யாப்பா இங்கு கருத்துத் தெரிவிக்கையில்;

ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கியுள்ள சரத் பொன்சேகாவின் கூற்றில் நம்பகத்தன்மை இல்லை. ஏனெனில், ஒரே கூற்று தொடர்பாக மூன்று சந்தர்ப்பங்களில் முன்னுக்குப் பின் முரணான வெவ்வேறு கருத்துக்களை கூறியுள்ளார். நாட்டை காட்டிக்கொடுக்கும் வகையில் ஒன்றுக்கு ஒன்று முரணான சரத் பொன்சேகாவின் கூற்றுக்கு அரசாங்கம் பாராளுமன்ற அமர்வில் விளக்கம் கோரவேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்குச் சென்ற சமயம் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். இதன் மூலம், இதன் பின்னணி என்னவென்பது தெளிவாக தெரிகின்றது.

குறுகிய அரசியல் இலாபத்துக்காக இதுபோன்ற கீழ் தரமான செயற்பாடுகளை செய்யவேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லை. அவ்வாறான செயலை அரசாங்கம் ஒருபோதும் செய்யப்போவ தில்லை என்றும் அமைச்சர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

பொன்சேகா சன்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியை சி. என். என். பி.பி.சி, தமிழ் நெட், இன்டசிட்டி எக்ஸ்பிரஸ் போன்ற சர்வதேச ஊடகங்கள் முக்கிய செய்தியாக வெளியிட்டுள்ளன. இதனால், சர்வதேச நாடுகளில் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பொன்சேகாவே பதில் கூறவேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். தான் அவ்வாறு கூறவில்லை என்று பொன்சேகா இதுவரைக் கூறவில்லை. தான் கூறிய கருத்துக்கள் தவறாக கூறப்பட்டுள்ளது என்றே கூறியுள்ளார்.

அதே சமயம், இராணுவத் தளபதி பதவியிலிருந்து தான் விலகியமைக்கான காரணத்தை அவர் மூன்று ஊடகங் களில் ஒன்றுக் கொன்று முரணான விதங்களிலேயே கூறியுள்ளார் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். சரத் பொன்சேகாவின் ஒழுக்கம் தொடர்பாக அமைச்சர் இந்த மாநாட்டின்போது கேள்வி எழுப்பினார்.

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாக இருந்த பொன்சேகாவை அமெரிக்கா அழைத்தபோது இப்பொழுது நான் என்ன செய்வது என்று ஜே. வி.பி. பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவிடம் பொன்சேகா கேட்டார் என்று ரின்வின் கூட்டம் ஒன்றில் கூறியதை பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது. ரில்வியின் அந்த கூற்றுக்கு பொன்சேகா எந்தவித மறுப்பையும் விடுக்கவில்லை. பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி என்ற பதவிலிருக்கும் ஒருவர் மூன்றாம் நபரிடம் இது தொடர்பில் கேட்க முடியும் என்றும். இதுவா பொன்சேகாவின் ஒழுக்கம் என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

புரிந்துணர்வையும் சகிப்புத் தன்மையையும் கட்டியெழுப்புவோம்

mahinda0.jpgநமது நாட்டில் அமைதியையும் சுபீட்சத்தையும் நிலைநாட்டும் வகையில் சமூகங்களுக்கு மத்தியில் புரிந்துணர்வையும் சகிப்புத் தன்மையையும் கட்டியெழுப்புவோ மென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள நத்தார் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, சமாதானத்தின் இளவரசரான இயேசு நாதரின் பிறந்த நாளை முழு உலகமும் பேருவகையுடன் கொண்டாடும் இவ்வேளையில், பயங்கரவாத அச்சுறுத்தலை விட்டும் நீங்கிய ஒரு நாட்டில் இவ்வருட நத்தார் பண்டிகையை கொண்டாடக் கிடைத்தமை இலங்கை வாழ் கிறிஸ்தவ மக்களின் மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணமாய் அமைகின்றது.

நத்தார் பண்டிகையின் உண்மையான அர்த்தம் அன்பு, கருணை, கொடை என்பதாகும், இது கிறிஸ்தவ சமயத்தின் அடிப்படை அம்சமான அன்பு பற்றிய போதனையை தன்னுடன் கொண்டுவந்த இயேசுநாதரின் பிறப்பு பற்றிய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்கு குடும்பங்களையும் சமூகங்களையும் ஒன்று சேர்க்கின்றது.

மூன்று தசாப்த காலமாக பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்த எமது மக்களின் சிதைந்துபோன வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்பி, எமது நாட்டில் அமைதியையும் சுபீட்சத்தையும் நிலைநாட்டும் வகையில் சமூகங்களுக்கு மத்தியில் புரிந்து ணர்வு, சகிப்புத்தன்மை என்ற புதிய பாலங்களைக் கட்டியெழுப்பும் இந்த அன்பையும் கருணையையும் இலங்கை மக்கள் பெரிதும் வேண்டி நிற்கின்றனர்.

பெத்லஹேமில் சிறியதொரு மாட்டுத் தொழுவத்தில் இடம்பெற்ற இயேசு நாதரின் பிறப்பு, அன்பு என்பது எல்லாத் தடைகளையும் தாண்டி வாழ்க்கையில் தாழ் நிலையிலுள்ள மக்கள் முதல் இப்பூவுலகில் எம்முடன் ஒன்றாக வாழும் உயிரினங்கள், எம் எல்லோருக்கும் வளம் சேர்க்கும் இயற்கை ஆகிய எல்லாவற்றையும் தழுவிச் செல்ல வேண்டும் என்பதையே அடையாளப்படுத்தி நிற்கின்றது.

நத்தார் பண்டிகையின் நாதஒலி நல் உள்ளம் படைத்த எல்லோருக்கும் புதியதோர் சமாதான யுகத்திற்கான விடியலை அறிவிப்புச் செய்து நத்தார் பண்டிகையின் மகிழ்ச்சியை பரப்புகின்றது.

பொன்சேகாவை கண்டித்து நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்

colombo.jpgசரத் பொன்சேகா வார இறுதிப் பத்திரிகையொன்றுக்கு வெளியிட்ட கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொழிற் சங்க தலைவர்களும்- அரசியல்வாதிகளும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் நேற்று கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

அன்று யுத்தத்துக்கு எதிராக பல்வேறு பொய்யான பிரசாரங்களை வெளியிட்ட குறிப்பிட்ட ஊடகம், பொன்சேகாவின் கூற்றுக்கு அதனைவிட அதிக அளவிலான பிரசாரத்தை தமது வெப்தளத்திலும் வேறு ஊடகங்களிலும் பெற்றுக் கொடுத்துள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் கவனமும் திரும்பியுள்ளதால் இலங்கையில் புலிகளுக்கு எதிராக இடம்பெற்ற யுத்தத்தின் இறுதி நாட்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பொன்சேகா வெளியிட்ட கூற்றை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா. செயற்பட்டுள்ளது.

இவ்வாறான கூற்றை வெளியிட்ட பொன்சேகா தொடர்பாக தீர்மானமொன்றை எடுக்குமாறு அரசை நிர்ப்பந்திக்கவும், ஐ.நா. அமைப்பின் அழுத்தங்களுக்கு எதிராகவும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதாக தொழிற்சங்கத் தலைவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சரத் பொன்சேகாவுக்கு எதிரான பல்வேறு கோஷங்களை எழுப்பியதை காண முடிந்தது.

வடக்கு கிழக்கின் ஏழு மாவட்டங்களில் 34 ஆயிரம் கண்ணிவெடிகள் வெடிபொருட்கள், மீட்பு

வடக்கு, கிழக்கு பிரதேசத்திலுள்ள ஏழு மாவட்டங்களில் இராணுவத்தினர் மாத்திரம் இதுவரை 45 கோடி 4 இலட்சத்து 2 ஆயிரத்து 744 சதுர மீற்றர் (450,402,744) நிலப்பரப்பிலிருந்து கண்ணிவெடிகள் மற்றும் வெடிபொருட் களை அகற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து படையினர் இதுவரை 34 ஆயிரத்து 336 கண்ணிவெடிகள் மற்றும் வெடிபொருட்களை மீட்டெடுத்து ள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டத்தின் தற்போதைய நிலையை நேரில் பார்ப்பற்கு தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் கொழும்பிலிருந்து ஊடகவியலாளர்கள் குழுவொன்று நேற்றுமுன்தினம் அங்கு அழைத்துச் செல்லப்பட்டது.

பிரதேசத்தின் பாதுகாப்பு நிலைமைகள், நிவாரணக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கம் செய்து கொடுத்துள்ள வசதிகள் மற்றும் துரித மீள்குடியேற்றத்திற்காக படையினர் மற்றும் ஏனைய அமைப்புகளால் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை ஊடகவியலாளர் குழுவினர் காண முடிந்தது.

பரிய தம்பனை, பெரிய பண்டிவிரிச்சான் ஆகிய பிரதேசங்களில் எப்.எஸ்.டி.யினால் மேற்கொள்ளும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை காண முடிந்தது. இதன் போது அங்கு கூடியிருந்த ஊடகவியலாளரு க்கு கருத்து தெரிவித்த பிரிகேடியர் மேலும் தகவல் தருகையில்,

மக்களை மீளக்குடியமர்த்தும் நோக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை அரசாங்கத்தின் வேண்கோளுக்கிணங்க படையினரும், பல்வேறு வெளிநாட்டு நிபுணத்துவ அமைப்புகளும் மேற்கொண்டு வருகின்றன.

2002ம் ஆண்டு முதல் இதுவரை 34 ஆயிரத்து 336 கண்ணிவெடிகள் மற்றும் வெடிபொருட்களை இராணுவத்தின் மீட்டெடுத்துள்ளனர். 17,323 கண்ணிவெடிகள், 19 யுத்த தாங்கி ஒழிப்பு கண்ணிகள் 16,994 வெடிபொருட்கள் இவற்றில் அடங்கும் என்றார்.

சுவிஸர்லாந்தை தளமாகக் கொண்ட (பெடரே ஷன் சுவிஸ் டீமைனில்) எப்.எஸ்.டி. என்ற அமைப்பு பெரிய தம்பணை, பெரிய பண்டிவிரிச்சான் பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

இப் பிரதேசத்தில் 2 கோடி 2 இலட்சத்து 74 ஆயிரத்து 571 சதுர மீற்றர் (20,274,571) நிலப்பரப்பிலிருந்து பெருந்தொகையாக கண்ணிவெடிகளையும் பல்வேறு வெடிபொருட்களையும் மீட்டெடுத்துள்ளதாக எப்.எஸ்.டி.அமைப்பின் பிரதிநிதியான இந்திய நாட்டைச் சேர்ந்த மேஜர் ராஜு தெரிவித்தார்.

அடர்ந்த காடுகளும், பாலடைந்த பிரதேசங்களாகும். இருப்பதால் பல்வேறு நவீன இயந்திரங்கள், உத்திகள் இதற்கு பயன்படுத்தப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். கண்ணிவெடி அகற்றும் இராணுவ படைப்பிரிவின் பொறுப்பாளர் கேர்ணல் பிரசந்த விமலசிறி உட்பட உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.