அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது எவ்வாறு?

sri-lankan-election-01jpg.jpgஜனாதி பதித் தேர்தலில் வாக்களிப்பது எவ்வாறு என்பது தொடர்பாக தேர்தல்கள் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.

தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் தங்களுக்குரியவரை புள்ளடியிட்டு வாக்களிப்பதா? அல்லது ஒன்று, இரண்டு, மூன்று என இலக்கமிட்டு வாக்களிப்பதா? என்பது குறித்து வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகின்றது. இது தொடர்பான விபரம் வருமாறு:

* வாக்காளர்கள் தனியொருவருக்குத் தமது வாக்கை அளிக்கலாம். அல்லது மூன்று வேட்பாளருக்குத் தமது விருப்பத் தெரிவின் ஒழுங்கில் வாக்களிக்க முடியும்.

* ஒரேயொரு வேட்பாளருக்கு மட்டும் தமது வாக்கை அளிக்க விரும்பும் வாக்காளர் தமது வாக்குச் சீட்டில் தான் விரும்பும் வேட்பாளரின் பெயருக்கும் சின்னத்துக்கும் அருகில் உள்ள கூட்டில் ‘X’ அடையாளத்தையிடலாம். அல்லது ‘1’ என்ற அடையாளத்தையோ இடுவதன் மூலம் தமது வாக்கை அளிக்க முடியும்.

* ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று வேட்பாளர்களுக்கு தமது விருப்புத் தெரிவின் அடிப்படையில் வாக்களிக்க விரும்பும் வாக்காளர்கள் தமது வாக்குச் சீட்டில் அந்த விருப்பத் தெரிவின் ஒழுங்குப்படி சம்பந்தப்பட்ட வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்களுக்கு எதிரே உள்ள கூட்டில் ‘1’, ‘2’, ‘3’ என்ற இலக்கங்களை வரிசைப்படி இடவேண்டும்.

அந்த வாக்காளர் ‘1’ என்ற இலக்கத்தைக் குறிப்பிடும் வேட்பாளர் அவரின் (அந்த வாக்காளரின்) முதல் தெரிவாகவும், ‘2’ என்ற இலக்கத்தைக் குறிப்பிடும் வேட்பாளர் அவரின் இரண்டாவது தெரிவாகவும், ‘3’ என்ற இலக்கத்தைக் குறிப்பிடும் வாக்காளர் மூன்றாவது தெரிவாகவும் கருதப்படுவர்.

இதைவிட, முதலாவது தெரிவை ‘1’ எனக் குறிப்பிடாது விட்டுவிட்டு, ‘2’ மற்றும் ‘3’ தெரிவுகளை மட்டும் வாக்குச் சீட்டில் குறிப்பிட்டால் அந்த வாக்கு செல்லுபடியற்றதாகிவிடும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அதேசமயம், ஒரு வாக்காளர் தமது முதலாவது மற்றும் இரண்டாவது தெரிவைக் குறிப்பிட்டுவிட்டு, மூன்றாவது தெரிவைக் குறிப்பிடாமல் விட முடியும். அத்தகைய சந்தர்ப்பத்தில் வாக்கு எண்ணிக்கையில் அந்த வாக்கு சேர்த்துக்கொள்ளப்படும்.

பின்வரும் சந்தர்ப்பங்களில் வாக்கு செல்லுபடியற்றதாகும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

* வாக்குச் சீட்டில் வேட்பாளர் எவருக்கும் வாக்களியாது விட்டால்.

* முதலாம் தெரிவைக் குறிப்பிடாது இரண்டாம், மூன்றாம் தெரிவைக் குறிப்பிட்டிருந்தால், இவ்வாறு தேர்தல் திணைக்களம் விளக்கமளித்துள்ளது.

விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வாங்க முயற்சித்தவர்களுக்கு சிறை

விடுதலைப் புலிகளுக்காக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் இதர இராணுவ உபகரணங்களை வாங்க முயற்சித்தமைக்காக இருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் மிக நீண்டகால சிறைத்தண்டனைகளை விதித்துள்ளது. சதாஜன் சரசந்திரன் மற்றும் யோகராசா நடராசா ஆகிய இருவருக்கும் முறையே 26 மற்றும் 14 ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  2006 ஆம் ஆண்டு ஆயுதங்கள் வாங்க முயற்சித்த போது அமெரிக்காவின் எஃப் பி ஐ புலனாய்வு அமைப்பு வைத்த பொறியில் நான்கு பேர் சிக்கி கைதானார்கள்.

திருக்கேதீஸ்வரம் ஆலயப் பிரதேசம் புனரமைப்பு

aalayam.jpgபாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரம் ஆலயப் பகுதி புனித பிரதேசமாக 270 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு வருகிறது.

மாசி மாதம் நடைபெறவுள்ள சிவராத்திரி தினத்துக்கு முன்னதாக ஆலயம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் முதற்கட்ட வேலைகள் யாவற்றையும் பூர்த்தி செய்யுமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி பணிப்புரை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பிற்கமைய ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ இப்பகுதிக்கு

விஜயம் செய்து மக்கள் சுதந்திரமாக ஆல யத்திற்குச் சென்று வழிபாடு செய்வதற்கான வசதிகளை செய்துகொடுக்குமாறும் கேட்டுக்கொண்டார். 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆலயப்பகுதிக்கு மக்கள் சென்று வரமுடியாத நிலை ஏற்பட்டது. சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து மறுநாள் காலை பாலாவி கடல் நீரேரியில் தீர்த்த மாடுவதற்கு ஏதுவாக புனரமைப்பும் செய்யப்படுகிறது.

நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு 69,000 பொலிஸார், முப்படைகள் கடமையில்

sri-lanka.jpgஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் முடிவுற்ற நிலையில் நாடுமுழுவதிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

இதற்கமைய இம்முறை தேர்தல் பாதுகாப்பு கடமையில் 68,800 பொலிஸாரும், பொலிஸாருக்கு உதவியாக முப்படையின ரும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று மாலை பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.

தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன, குற்றப் புலனாய்வு பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிசிர மென்டிஸ், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம். கருணாரட்ன கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிடுகை யில்:-

அமைதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்குத் தேவையான சகல பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பொலிஸ் திணைக்களம் திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுத்துள்ளது.

27 வருடங்களுக்கு பின்னர் நாடு முழு வதிலும் ஒரே நாளில் தேர்தல் இடம்பெறு வது இதுவே முதற்தடவையாகும். இம்முறை நாடு முழுவதிலும் 11 ஆயிரத்து 155 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு கடமையில் 68,800 பொலிஸாரும், முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் 413 பொலிஸ் நிலையங்களும், 40 பொலிஸ் பிரிவுகளும் தயார் நிலையில் வைக்கப்ப ட்டுள்ளன.

வடக்கு, கிழக்கு உட்பட நாடுமுழு வதிலும் 2,523 நடமாடும் பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த ஒவ்வொரு பொலிஸ் குழுவிலும் பொலிஸ் அதிகாரி ஒருவர், இரண்டு பொலிஸார், முப்படை வீரர்கள் இருவர் என்ற அடிப்படையில் ஐவர் இருப்பர்.

ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திற்கும் இரண்டு அல்லது மூன்று பொலிஸார் ஆயுதங்களுடன் கடமையில் ஈடுபடுவார்கள்.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலும் தெற்கின் சில பிரதேசங்களிலும் தேவைப் படும் சில வாக்களிப்பு நிலையங்களிலும் பொலிஸாருடன், முப்படையினருடனான பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, பூநகரி ஆகிய பிரதேசங்களிலேயே இம்முறை முதற் தடவையாக தேர்தல் நடத்தப்படுகின்றது. வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள வீதிகளின் வீதிச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

இதேவேளை இம்முறை தேர்தல் முடிவுற்ற பிறகும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதா கவும் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

ஏதாவது வன்முறைச் சம்பவங்கள் ஒரு பிரதேசத்தில் இடம்பெறும் பட்சத்தில் 119 என்ற அவசர இலக்கத்திற்கு பொது மக்கள் உடனடியாகத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொண்ட பொலிஸ் மா அதிபர், அவ்வாறு அறிவிக்கும் பட்சத்தில் அந்தப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரினதும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினதும் வழிகாட்டலில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை சில பிரதேசங்களில் அடையாள அட்டைகள் பலாத்காரமாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்று உறுதியான தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்த பொலிஸ் மா அதிபர், இந்தக் காலகட்டத்தில் பொது மக்கள் எக்காரணத் தைக் கொண்டும் அடையாள அட்டைகளை எவருக்கும் கொடுக்க வேண்டாம் என்றும் தங்களது அடையாள அட்டைகளை தாங்கள் பாதுகாத்து தங்களது வாக்குரி மைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எவர் செயற்பட்டாலும் கட்சி பேதமின்றி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

பிரசாரம் நேற்று நள்ளிரவுடன் முடிவு

election-commisone.jpg2010 ஜனவரி 26 ஆம் திகதி நடைபெறவு ள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நடைபெற்று வந்த அனைத்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தன.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 22 வேட்பாளர்களும் தமது பிரதான கட்சி அலுவலகத்தைத் தவிர ஏனைய பிரசார அலுவலகங்கள் அனைத்தையும் மூடிவிட வேண்டும் என்பதுடன் பிரசார கூட்டங்கள் நடத்துவதோ, சுவரொட்டிகள் ஒட்டுவதோ கட்டவுட்டுகள், பெனர்கள் போன்றவற்றை காட்சிக்கு வைப்பதோ தடை செய்யப்படுகிறது என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். 26ஆம் திகதி தேர்தல் நடைபெறும் வரை வீடு, வீடாகச் சென்று பிரசாரங்களை செய்வதும் அச்சுறுத்தல் விடுப்பதும் சட்டவிரோதமானது என்றும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பு நிலையத்திலிருந்து 500 மீட்டர் தூரம் பாதுகாப்பு வலயமாக கருதப்படுகிறது. இப்பாதுகாப்பு வலயத்தினுள் எந்தக் கட்சி நடவடிக்கைகளுக்கும் இடமளிக்கப்பட மாட்டாது.

குழப்பம் விளைவிக்க முற்படுவோர் கைது செய்யப்படுவார்கள்.

குழப்பம் விளைவிக்கும் வாக்குச் சாவடிகளின் வாக்களிப்புகள் ரத்துச் செய்யப்படுவதுடன் முடிவுகள் வெளியிடப்படும் பணி ஒருவார காலத்துக்கு பின் போடப்படும் என்றும் தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

நீதியானதும் நேர்மையானதுமான தேர்தலை நடத்த சகலரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேர்தல் முறைகேடுகள் நடப்பின் 011-2877629, 011-2877630, 011-2877631 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தருமாறும் தேர்தல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது. இதேவேளை தமது அனைத்து கட்சி அலுவலகங்களையும் சமாதான அலுவலகமாக செயற்படுத்துமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

விளையாட்டு வீரர்களை அரசியல் விளம்பரங்களுக்காக பயன்படுத்தும் துர்ப்பாக்கிய நிலை மாற்றப்படல் வேண்டும் அர்ஜுன ரணதுங்க

arjuna-ranatunga.jpgகொழும்புக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் விளையாட்டுத்துறையைக் கிராம மற்றும் தோட்டப் பகுதிகளுக்கும் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான பி.திகாம்பரம் தலைமையில் நுவரெலியா சினிசிட்டா அரங்கில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில் இந்த நாட்டு விளையாட்டுத்துறை இன்று அரசியல் மயப்பட்டுள்ளது. திறமை அடிப்படையில் அல்லாது அரசியல் செல்வாக்கினால் வீரர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். தேசிய சொத்துகளான விளையாட்டு வீரர்களை அரசியல் நலன்கருதி அரசியல் விளம்பரங்களுக்கு பயன்படுத்தும் துர்ப்பாக்கிய நிலைமை மாற்றப்படல் வேண்டும். கொழும்புக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ள கிரிக்கெட் உட்பட பல விளையாட்டுகளை எமது நாட்டின் கிராமங்களுக்கும் தோட்டங்களுக்கும் கொண்டு வருவதே எனது இலக்காகும்.

அவுஸ்திரேலியாவில் முரளிதரனுக்கு அநீதி ஏற்பட்டபோது முழு அணியையும் மைதானத்தில் இருந்து திருப்பி எடுத்தவன் நான். ஆனால், இன்று அவரது செயற்பாடுகள் கவலையளிக்கின்றன. நான் உலகக்கிண்ணத்தை ஏந்திவந்த காலத்தில் இந்த நாட்டில் தேர்தல்கள் நடந்தன. நான் அரசியல் குடும்பத்தில் வந்தவன். ஆனால், எனது கிரிக்கெட் பிரபலத்தை எனது தந்தையின் அரசியலுக்கோ அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா அவர்களுக்காகவோ நான் விற்கவில்லை. கிரிக்கெட்டை அரசியலாக்கவில்லை. ஆனால், இன்று நடப்பதென்ன என்பதை நீங்கள் ஊடகங்களில் பார்க்கிறீர்கள். நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னரே அரசியலுக்கு வந்தேன். அதுவும் யாருக்காகவும் வாக்குக் கேட்கும் விளம்பரக்காரனாக இல்லை. மக்களுக்கு தலைமை கொடுக்கும் தலைவனாகவே செயற்படுகிறேன்.

கிரிக்கெட் சபை நிர்வாகம் கிரிக்கெட் தெரியாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அங்கு ஊழல் இடம்பெறுவதற்கு எதிராக நீதிமன்றம் சென்று நீதியை வென்றெடுத்தேன். ஆனாலும், அரசாங்கம் கிரிக்கெட் சபையை அரசியல் ரீதியாகவே நடத்துகின்றன.

அரசியலில் எப்போதும் சுயமாக முடிவெடுக்கவேண்டும். அடுத்தவர் கயிற்றை விழுங்கக்கூடாது. நான் இன்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்காரர். எனது தந்தை தனது வாழ்நாள் முழுவதையும் சுதந்திரக் கட்சிக்காக அர்ப்பணித்தவர். ஆனால், இன்று அந்தக் கட்சி ஊழல்களின் கூடாரமாகிவிட்டது. அதனால்தான் நான் எதிர்க்கட்சி பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிக்கின்றேன். ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலேயே தொடர்ந்திருப்பேன். அந்தப்பலம் பெரும் கட்சியை மீளக்கட்டியெழுப்ப வேண்டிய தேவை எமக்குள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

மண்டைதீவு இராயப்பர் தேவாலயம் நிர்வாகத்தினரிடம் ஒப்படைப்பு

images1.jpgயாழ். மண்டைதீவு புனித இராயப்பர் தேவாலயம் நேற்று மாலை ஆலய நிர்வாகத்தினரிடம் கடற்படையினரால் கையளிக்கப்பட் டது.  அதிஉயர் பாதுகாப்பு வலயப் பகுதியாக இதுவரை காலமும் கருதப்பட்ட மண்டைதீவு புனித இராயப்பர் தேவாலயப்பகுதி வழிபாடுகளுக்காக விசேட அனுமதி பெற்றே அடியார்கள் செல்ல வேண்டியிருந்தது.

இப்பகுதியின் அதி உயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்படுவதுடன் மக்கள் சுதந்திரமாக சென்று வழிபாடுகளில் கலந்து கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்படுகிறது. நேற்று மாலை 3.30 மணியளவில் புனித இராயப்பர் தேவாலயம் கையளிக்கப்பட்டதுடன் ஆசிர்வாத பூஜையும் நடைபெற்றது.

யாழ். மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய தோமஸ் செளந்தரநாயகம் அடிகளாரும் இந்த ஆசிர்வாத பூஜையில் கலந்து கொண்டார். யுத்தம் காரணமாகவும், அண்மையில் குடாநாட்டை ஊடறுத்துச் சென்ற புயல் காற்றினால் சேதமடைந்திருந்த மேற்படி ஆலயத்தின் திருத்த வேலைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வருடந்தோறும் வரும் ஆனி 29 இல் ஆலய மகோற்ஸவமும் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.

”தேர்தல் தினத்தின் மறுநாள் காலைப் பொழுதுக்குள் இறுதி முடிவுகள் வெளியாகும்” – தேர்தல்கள் ஆணையாளர்

election-commisone.jpgஜனாதிபதி தேர்தலுக்கான சகல முன்னேற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவிக்கின்றார். மாவட்ட மட்டடங்களில் தேர்தல் அத்தாட்சி அலுவலர்களும் நாடாளாவிய ரீதியில் தனது உதவி ஆணையாளர்களும் தேர்தல் பணிகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தயானந்த திஸாநாயக்க அறிவித்தார்.

வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்காளர்களின் பாதுகாப்புக்காக பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்தகால போரினால் இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களில் தங்கியுள்ள மக்களுக்காக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு,புத்தளம் கொழும்பு,களுத்துறை,கம்பஹா, குருணாகல்,அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் கொத்தணி வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தினத்தின் மறுநாள் காலைப் பொழுதுக்குள் இறுதி முடிவுகள் வெளியாகும் எனவும் தயானந்த திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்

எதிர்க்கட்சி ஆதரவாளர் டிரான் அலஸ் வீட்டின் மீது கிரனேட் தாக்குதல்

dilaan_allas.jpgஎதிர்க் கட்சி ஆதரவாளர் டிரான் அலஸின் நாவலவில் உள்ள வீட்டின் மீது வெள்ளிக்கிழமை காலை இனந்தெரியாத ஆயுததாரிகள் கிரனேட் குண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். எனினும் இதன் போது டிரான் அலஸுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாத போதும் அவரது வீடு மற்றும் கார் போன்றவை முற்றாகச் சேதமடைந்துள்ளன

தேர்தல் பிரசாரம் இன்று நள்ளிரவுடன் பூர்த்தி

election_box.jpgஇன்று நள்ளிரவுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் யாவும் பூர்த்தியாகின்றன. தேர்தல் பிரசார அலுவலகங்கள், மற்றும் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், கட்டவுட்டுக்களை இன்று நள்ளிரவுடன் அகற்றுமாறு பொலிஸ் மா அதிபர் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளும் இறுதி பிரசார கூட்டங்களும் இன்று நடைபெறவுள்ளன.

இன்று காலை 10.00 மணிக்கு தெபரவெவ பகுதியிலும், மாலை 3.00 மணிக்கு ஹினிதுமவிலும், மாலை 5.00 மணிக்கு கெஸ்பாவ பகுதியிலும் நடைபெறவுள்ளன.