அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

எமிரேட்ஸில் மீண்டும் கண் வைக்கிறது அரசு

air-lanka.jpgடுபாயைத் தளமாகக் கொண்ட அரபுலகத்தின் பாரிய விமான சேவை நிறுவனமான எமிரேட்ஸ் ஏயார் லைன்ஸ் நிறுவனமானது இலங்கை அரச கட்டுப்பாட்டிலுள்ள ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸின் பங்குகளைக் கொள்வனவு செய்வதற்கு விரும்புகின்றதா? என்பது தொடர்பாக கொழும்பு அந்த நிறுவனத்தை அணுகியுள்ளதாக எமிரேட்ஸ் தலைவர் நேற்று புதன்கிழமை தெரிவித்திருக்கிறார்.

நாங்கள் ஆர்வம் காட்டுகின்றோமா என்பது பற்றி அவர்கள் (இலங்கை அரசு) பார்க்க விரும்புவதாக தென்படுகிறது என்று எமிரேட்ஸ் தலைவர் ரிம் கிளார்க் ராய்ட்டர் செய்திச் சேவைக்கு தெரிவித்திருக்கிறார். ஏயார் லைனுக்கான முகாமைத்துவ ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதில்லை எனத் தெரிவிக்கப்பட்ட பின் ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸில் இருந்த தனது 43.6 சதவீத பங்குகளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ விற்கப்போவதாக 2008 இல் எமிரேட்ஸ் கூறியிருந்தது.

தற்போதைய பேச்சுகள் இன்னரும் முன்னேற்றகரமான கட்டத்தில் இல்லையெனவும் ஆனால், விலை சரியானதாக இருந்தால் எமிரேட்ஸ் இந்த விடயத்தை கையாளும் எனவும் ரிம் கிளார்க் கூறியுள்ளார்.55 பில்லியன் டொலர் எயார் பஸ், போயிங் விமானங்களை எமிரேட்ஸ் விமான நிறுவனம் கொண்டுள்ளது.  11 விமானங்களை விநியோகிக்கவுள்ளதாக இம்மாத முற்பகுதியில் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான நிதியை செலவிடுதல் ஒரு பிரச்சினையாக இல்லையெனவும் அது தெரிவித்திருந்தது.

நல்லூரில் ஞாயிறு சந்தை ஆரம்பிக்கத் திட்டம்

யாழ். நல்லூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை களில் மட்டும் கூடும் சந்தையை யாழ். மாநகர சபை ஆரம்பிக்கவுள்ளது. இச்சந்தையில் வியாபாரம் செய்ய விரும்பும் வர்த்தகர்கள் முன்கூட்டியே தமது பெயர் விபரங்களை மாநகர சபையின் நானாவித இறைவரிப் பகுதியில் பதிவு செய்து கொள்ளுமாறு யாழ். மாநகர முதல்வர் திருமதி யோ. பற்குணராசா அறிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் அதிகளவு விலை கொடுத்து கொள்வனவு செய்யப்பட்ட பல விதமான வீட்டுப் பாவனைப் பொருட்கள் ஏ-9 பாதை திறக்கப்பட்டதன் பின்னர் தென் பகுதியிலிருந்து யாழ். நகருக்குக் கொண்டு வரப்பட்டு மிகவும் மலிவான விலையில் நகரின் பல பாகங்களிலும் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வ்வாறான வியாபாரத்தை மையப்படுத்தி மக்கள் தமக்குத் தேவையான சகல பொருட்களையும் ஓரிடத்தில் பெற்றுக் கொள்ளுவதற்காகவும் யாழ். நகரின் மத்தியில் தற்போது அதிகரித்துவரும் போக்குவரத்து நெருக்கடிகளைக் குறைப்பதற்காகவும் நல்லூரில் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் கூடும் விடுமுறைச் சந்தையை விரைவில் ஆரம்பிப்பதற்கு மாநகர சபை முன்வந்துள்ளது.

மாநகர சபையின் நல்லூர் இந்து விடுதிக் கட்டித்தின் பின்புறமுள்ள கடைகளுக்குப் புறமுள்ளதும், பிராமணக் கட்டுக் குளத்தின் அருகாமையிலுள்ளதுமான பரந்த வெற்றுக் காணியில் ஞாயிறு சந்தை விரைவில் உருவாக்கப்படவுள்ளது. நாளாவட்டத்தில் இவ்விடத்தில் இட நெருக்கடி ஏற்படுமிடத்து இவ்விடுமுறைச் சந்தையை நல்லூர் சூழலிலுள்ள வேறு இடங்களுக்கு விஸ்தரிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் மாநகர முதல்வர் தெரிவித்தார்.

மகா சங்கத்திற்கு வாய்ப் பூட்டு போட அரசு முயற்சி : பிரபாகரன் கூட செய்யத் துணியா முயற்சி என்கிறார் ரணில்

ranil.jpgஅரசியல் வாதிகள் மீது சேறு பூசிவந்த அரசாங்கம் இன்று மல்வத்தை, அஸ்கிரிய பீடாதிபதிகள் மீதும் சேறுபூசும் கலாசாரத்தைத் தோற்றுவித்திருப்பதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க புத்தசாசனத்துக்கு களங்கமேற்படுத்த யாராவது முனைந்தால் அதனை முறியடிக்க எந்தச் சவாலையும் எதிர் கொள்ளத்தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

நீதிக்காக குரல் கொடுக்க முன்வந்த அதி உயர் மகாசங்க உயர் பீடங்களை அச்சுறுத்தி வாய்களுக்கு பூட்டுப் போடும் கைங்கரியத்தை ஆளும் தரப்பு மேற்கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டு மக்களை பிளவு படுத்தி அரசியல் நடத்தியவர்கள் இன்று படையினரையும், மகா சங்கத்தினரையும் பிரிவு படுத்தி நாட்டை அராஜகத்தின்பால் கொண்டு செல்லத் தொடங்கியுள்ளதாகவும் எதிர்க்கட்சித்தலைவர் சாடினார்.

எதிரணிகளின் பொது முன்னணியின் ஏற்பாட்டில் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு செய்யப்பட்டமை அநீதியானதெனவும் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும் ஜனாதிபதியை வலியுறுத்தும் மக்கள் மனு கையெழுத்திடும் வைபவத்தில் உரையாற்றுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிரணிகளின் பொது முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும், அரசியல்வாதிகளும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் அமைப்புகளின் பிரதிநிதிகளும், பொது மக்களும் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்ட இவ்வைபவம் ஜே.ஆர்.ஜயவர்தன கேந்திர நிலையத்தில் நடைபெற்றது. இவ்வைபவத்தில் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாவது; ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கான பல போராட்டங்களை நாம் சமகாலத்தில் முன்னெடுத்துவருகின்றோம். இந்த போராட்டங்களில் நாடு முழுவதுமுள்ள மக்கள் ஒன்று பட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவு எதுவுமின்றி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாமல் அவர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றார். எமது நாடு இன்னொரு மியன்மாராக மாறியுள்ளது. ஒரு ஜனநாயக நாட்டில் இவ்வாறு நடப்பது உலகிலேயே இதுதான் முதற்தடவையாகும். நாட்டில் சர்வாதிகார ஆட்சி தலை தூக்கியிருப்பதற்கு இது ஒன்றே போதுமான சாட்சியாகும்.

ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்ததோடு அது முற்றுப்பெறவில்லை. அவரது மருமகனையும் கை விலங்கு மாட்டத்தேடிக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமன்றி மருமகனின் தாயாரையும் இரகசியப் பொலிஸார் விசாரணைக்குட்படுத்தி நீதிமன்றில் ஆஜர் செய்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அடுத்து அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை பொன்சேகாவின் மரணித்த குடும்பத்தினரின் புதைகுழிகளை தோண்டி அந்த உடல்கள் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்படலாம்.இந்த மக்கள் மனு நாடுமுழுவதும் எடுத்துச் செல்லப்பட்டு மக்களின் கையொப்பங்கள் திரட்டப்படும். மனுவின் பிரதிகள் தேவைப்படுவோர், ஐ.தே.க., ஜே.வி.பி. தலைமையகங்களிலிருந்தும் பெற்றுக் கொள்ள முடியும்.

அதிகார வெறிபிடித்த கூட்டம் முதலில் பெரும்பான்மை சிறுபான்மை என்று பிளவுபடுத்தினர். இப்போது சிங்கள மக்களையே இரண்டாகப் பிளவுபடுத்தியுள்ளது. அத்துடன் படைத்தரப்பிலும் பிளவேற்படுத்தப்பட்டது. இறுதியாக இப்போது பௌத்த மகாசங்கத்தையும் பிளவுபடுத்திவிட்டது.

மல்வத்தை, அஸ்கிரிய பீடாதிபதிகள் உட்பட நான்கு பீடங்கள் மீதும் களங்கமேற்படுத்தியுள்ளனர். அரசியல்வாதிகள் மீது சேறு பூசியவர்கள் பௌத்த மகாசங்கத்தினர் மீதும் அதனைச் செய்ய முற்பட்டுள்ளனர். பிரபாகரனால் செய்ய முடியாததை செய்யமுற்படாததை அரசு செய்து காட்டிவிட்டது. பௌத்த சாசனத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை சிங்கள பௌத்த மக்கள் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. மகாசங்கம் அவமதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. இதற்கெதிராக சிங்கள மக்கள் ஒன்றுபட முன்வர வேண்டும் எனவும் ரணில் அழைப்பு விடுத்தார்.

நிரந்தர நண்பர்களோ பகைவர்களோ அரசியலில் இல்லை! அலரி மாளிகையில் ஜனாதிபதி

he_the_president.jpgஅரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை. நிரந்தர பகைவர்களும் இல்லை. காலத்தின் தேவையை அடையாளம் கண்டு அதற்காகச் செயற்படுவதே பொறுப்புணர்வுள்ள ஒரு நல்ல அரசியல்வாதியின் முக்கிய கடமையாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

நுஆ கட்சியின் தலைவியும், அமைச்சருமான பேரியல் அஷ்ரப் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில்இணைந்துகொண்ட வைபவம் இன்று முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். இங்கு அவர் தொடர்;ந்தும் உரையாற்றுகையில்

தமது விழுமியங்களைப் பாதுகாத்துக்கொண்டு ஏனைய சமூகத்தவருக்கும் மதிப்பளித்து நல்லிணக்கத்தோடு வாழ இலங்கை மக்கள் இப்போது ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொள்ள நுஆ எடுத்த தீhமானம் நாட்டின் தேசிய ஒற்றுமைக்கு மேலும் வலுவூட்டுவதாக அமைந்துள்ளது என்றும் கூறினார்.

அமைச்சர் பேரியல் அஷ்ரப் இங்கு உரை நிகழ்த்துகையில்,

உலகத்திலேயே மிகவும் பலம்கொண்டிருந்த பயங்கரவாதிகளைத் தோற்கடித்து நாட்டுக்கு உண்மையான சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுக்க தலைமை தாங்கிய  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எமது முழு ஆதரவையும் வழங்கும் முகமாகவே இந்த முடிவுக்கு நாம் வந்தோம்.

நாட்டை மேலும் அபிவிருத்திப்பணிகளை முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பம் அளிக்கும் வகையில் அவர் தலைமை வகிக்கும்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்தவேண்டியது நாட்டை நேசிக்கும் ஒவ்வொரு குடிமகனினதும் கடமையாகும் என்றும் கூறினார்.

அமைச்சர்; பேரியல் அஷ்ரபும் அவரது கட்சி உறுப்பினர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து கட்சி அங்கத்துவ உரிமை அட்டை பெற்றுக்கொண்டனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவும் இவ்வைபவத்தில் கலந்துகொண்டார். 

ஜீ.எஸ்.பி. குறித்து வீண் அச்சம் கொள்ளாதீர்! முழுப் பொறுப்பை அரசு ஏற்கும்!

gl_pereis.jpgஆடை உற்பத்தித்துறைக்கு ஐரோப்பிய யூனியன் வழங்கும் வரிச்சலுகை நிறுத்தப்படுவதனால் அத்துறையில் கடமை புரியும் ஊழியர்களுக்கும் முதலீட்டார்களுக்கும் பாரிய பாதிப்புக்கள் ஏற்படும் என எவரும் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும்  அதற்கான முழுப் பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் எனவும் ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்றபோது அங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை தற்காலிகமாக நிறுத்தப் போவதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளதையடுத்து அதனை ஒரு பெரும் பிரச்சினையாக உருவாக்க எதிhக்கட்சிகள் முயன்று வருகின்றன. அவர்கள் அச்சுறுத்துவது போல் அதில் இலங்கைக்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை. முதலீட்டாளர்களும் இதனால் பாதிக்கப்படமாட்டார்கள். இந்தப்பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் முயற்சியாக ஐரோப்பிய யூனியனுடன் அரசாங்கம் தொடர்ந்தும் பேச்சுவர்த்தை நடத்தி வருகின்றது. அந்த வரிச் சலுகையை நாம் மீண்டும் பெற்றுக்கொள்வோம் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

பேரியல் அஷ்ரப் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைவு

ferail_asrof.jpgநுஆ கட்சியின் தலைவியும், அமைச்சருமான பேரியல் அஷ்ரப் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இன்று இணைந்துகொண்டார். இன்று முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்ற வைபமொன்றில் பேரியல் அஷ்ரபும் அவரது கட்சி உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து அங்கத்துவ உரிமை பெற்றுக்கொண்டனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவும் இவ்வைபவத்தில் கலந்துகொண்டார். 

சட்டம் எவரின் தராதரத்தையும் அந்தஸ்தையும் கருத்திற்கொண்டு செயற்படுவதில்லை

rohitha.jpgஇலங்கை யில் நடைமுறையிலுள்ள சட்டம் அனைவருக்கும் பொதுவானது. அது எவருடைய தராதரத்தையும், அந்தஸ்தையும் கருத்திற்கொண்டு செயற்படுவதில்லை. அத்துடன் அரசாங்கம் எவரையும் அரசியல் பழிவாங்கும் எண்ணத்தில் செயற்படவும் இல்லை என வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். சுயாதீனமாக இயங்கும் சிவில் நீதிமன்ற நடைமுறையும் இராணுவ நீதிமன்ற நடைமுறையும் எமது சட்டவாக்கத்துள் இருக்கிறது என்றும் அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள கொன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பிரிட்டனின் நிழல் பாதுகாப்பு அமைச்சரான லியாம் பொக்ஸ் வெளிவிவகார அமைச்சரை நேற்று மாலை அமைச்சு அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய லியாம் பொக்ஸ் கைது செய்யப் பட்டுள்ள ஜெனரல் சரத்பொன்சேகா சிவில் நீதிமன்றம் ஊடாகவே விசாரிக்கப்பட வேண்டும் என்றும், அவரது விசாரணை வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதற்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் போகொல்லாகம மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரிட்டனுக்கும் இலங்கைக்கும் இடையே உறவுகள் குறித்தும் பேசிய இருவரும், இரண்டாவது முறையாகவும் 58 வீத வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரிட்டன் சார்பிலும், கொன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

வேட்புமனுத் தாக்கல் நாளை ஆரம்பம்

srilanka_parliament_02.jpgவேட்பாளர் நியமனப்பத்திரங்களைத் தயாரிக்கும் பரபரப்புக்கு மத்தியிலும், தேர்தலில் போட்டியிடும் சின்னத்தைத் தெரிவு செய்வதில் சிறு அரசியல் கட்சிகள் இன்னமும் முடிவெடுக்க முடியாத நிலையில் இறுதி நேர பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளன.

பெரிய அரசியல் கட்சிகள் வேட்பாளர் நியமனப் பத்திரங்களைத் தயாரிக்கும் இறுதிக்கட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. அதேநேரம் சிறிய கட்சிகளுக்கு ஆசனங்களை ஒதுக்கிக் கொடுப்பதில் முனைப்புக் காட்டியுள்ளன.

இந்த நிலையில் பெரிய கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்திருக்கும் சில அரசியல் கட்சிகள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது இணைந்தே போட்டியிடுவதா என்பதில் இன்னமும் தெளிவான முடிவை எடுக்க முடியாத நிலையில் உள்ளன.

யாழ்ப்பாணத்தில் தனித்துப் போட்டியிடுவதெனவும் அதேநேரம் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் நட்புறவுடன் செயற்படுவதெனவும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) தீர்மானித்திருக்கிறது. எனினும், அரச தரப்புடன் நேற்றைய தினமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கட்சியின் பேச்சாளரொருவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

அரசாங்க ஆதரவு கட்சியாகத் தேர்தலில் களமிறங்குவதுடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து போட்டியிடுவதனை விடவும், தனித்து வீணைச் சின்னத்தில் போட்டியிடுவது சாதகமானது என ஈ.பி.டி.பி. நம்புகிறது.

இதேபோன்று ஆளுந்தரப்பில் உள்ள மலையக மக்கள் முன்னணி நுவரெலியா, பதுளை மாவட்டங்களில் தனித்து கட்சியின் மண்வெட்டிச் சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன. அமரர் பெ. சந்திரசேகரனின் பாரியார் சாந்தினி சந்திரசேகரனின் தலைமையில் நுவரெலியா மாவட்டத்திலும், மாகாண சபை உறுப்பினர் எஸ். அரவிந்த்குமார் தலைமையில் பதுளை மாவட்டத்திலும் மலையக மக்கள் முன்னணி களமிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இறுதிக் கட்டத்திலும் அரச தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேற்றும் கூடி ஆராய்ந்துள்ளது. இம்முறை கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் பலருக்குப் போட்டியிட வாய்ப்பளிக்காதிருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக எம்.கே. சிவாஜிலிங்கம், என்.ஸ்ரீகாந்தா ஆகியோருக்கு வாய்ப்பளிக்கக் கூடாதெனக் கூட்டமைப்பின் பெரும்பாலானோர் கூறியுள்ளனர்.

இந்நிலையில், சிவாஜிலிங்கமும், ஸ்ரீகாந்தாவும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தலைமையிலான புதிய இடதுசாரி விடுதலை முன்னணி கட்சியில் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் முடிவுக்கு எதிரான உச்சமன்ற மனு: கணனி மூலம் திரிபு படுத்தப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை மனுவில் சேர்க்காதது ஏன்?

laxman.jpgஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் கணனி மூலம் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சிகள், உச்ச நீதிமன்றத்திற்கு தாக்கல்செய்துள்ள தேர்தல் முடிவுகளுக்கு எதிரான மனுவில் அதனைக் குறிப்பிடாததேன் என ஊடகத் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கேள்வியெழுப்பினார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் இது குறித்து தெரிவித்த அமைச்சர், நாட்டு மக்களும் சர்வதேசமும் நீதியானதென ஏற்றுக் கொண்ட தேர்தலை மோசடி என்று கூறுபவர்கள் பொதுத் தேர்தலில் இதைவிட மோசமான படுதோல்வியைச் சந்திப்பது நிச்சயமெனவும் குறிப்பிட்டார்.  தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

நடந்து முடிந்த தேர்தல் நீதியானதென ஐரோப்பிய ஆணைக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. அதற்கான சான்றிதழையும் வழங்கியுள்ளது. தேர்தல் வாக்களிப்பு முடிவடைந்த அன்றைய தினம் 4.00 மணிக்கு அத்தேர்தல் நீதியானதும் அமைதியுமானதுமெனக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தமது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.

எனினும், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அவருடன் இணைந்திருந்த ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க கணனி மோசடியொன்று இடம்பெற்றதாகக் குறிப்பிட்டார். நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுவில் அரச வளங்கள் உபயோகப்படுத்தப்பட்டதாகவும் மேலும் சில குற்றச்சாட்டுக்களையும் குறிப்பிட்டுள்ளவர்கள் ஏன் கணனி மோசடி என் பதைக் குறிப்பிடவில்லை. இதன் மூலம் இவர்கள் அடுத்துவரும் தேர்தலுக்கான சூழ்ச்சிகளை இப்போதிருந்தே ஆரம்பித்துள்ளமையே தெளிவாகிறது.

வீண் பிரசாரங்களை விட்டுவிட்டு நியாயமான அத்தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளுமாறு நாம் கேட்டுக் கொள்கிறோம்.

பொதுநலவாய அமைப்பின் கூற்று தேர்தல் ஜனநாயக ரீதியில் நடைபெறவில்லை எனத் தெரிவிக்கின்றதே என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், ஐரோப்பிய ஆணைக் குழு போன்ற பிரசித்திபெற்ற அமைப்புக்கள் நியாயமான தேர்தல் என குறிப்பிடும் போது சில அமைப்புக்கள் சில சக்திகளுக்கு சார்பாக அதற்கெதிரான கூற்றுக்களைத் தெரிவிப்பதை நாம் பெரிதுபடுத்த முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் 150 ஆசனங்களைப் பெற்று அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வந்து நல்லாட்சி யொன்றை அமைக்க முற்படும் அரசாங் கத்துக்கு மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்

10 இலட்சம் கையெழுத்துக்கள் திரட்டும் நடவடிக்கை நேற்று ஆரம்பம்

ranil.jpgஇராணுவப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி நாடு முழுவதிலும் 10 இலட்சம் கையெழுத்துக்களைத் திரட்டும் நடவடிக்கை நேற்று ஆரம்பமானது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்வின் தலைமையில் இந்நிகழ்வு கேம்பிட்ஜ் ரெரஸில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. , ஸ்ரீ லங்க முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு, இடதுசாரி முன்னணி, ஐக்கிய சோஷலிசக் கட்சி, புதிய சிஹல உறுமய, மற்றும் பெருந்தோட்டத் துறையை பிரதிநிதித்துவப்படுத்துகிற தொழிற்சங்கங்கள், புத்திஜீவிகள் அமைப்பு, ஜனநாயகக் குழுக்கள் ஆகிய அமைப்புகள் ஊடாக இந்த கையெழுத்து திரட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.