ஆடை உற்பத்தித்துறைக்கு ஐரோப்பிய யூனியன் வழங்கும் வரிச்சலுகை நிறுத்தப்படுவதனால் அத்துறையில் கடமை புரியும் ஊழியர்களுக்கும் முதலீட்டார்களுக்கும் பாரிய பாதிப்புக்கள் ஏற்படும் என எவரும் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அதற்கான முழுப் பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் எனவும் ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்றபோது அங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை தற்காலிகமாக நிறுத்தப் போவதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளதையடுத்து அதனை ஒரு பெரும் பிரச்சினையாக உருவாக்க எதிhக்கட்சிகள் முயன்று வருகின்றன. அவர்கள் அச்சுறுத்துவது போல் அதில் இலங்கைக்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை. முதலீட்டாளர்களும் இதனால் பாதிக்கப்படமாட்டார்கள். இந்தப்பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் முயற்சியாக ஐரோப்பிய யூனியனுடன் அரசாங்கம் தொடர்ந்தும் பேச்சுவர்த்தை நடத்தி வருகின்றது. அந்த வரிச் சலுகையை நாம் மீண்டும் பெற்றுக்கொள்வோம் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.