வட மாகாண அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று 19 ஆம் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ளது. வவுனியாவிலுள்ள வன்னி பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தலைமையகத்தில் நடைபெறவுள்ள இந்த மீளாய்வுக் கூட்டத்தில் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், வட மாகாண ஆளுநர், மாகாண பிரதம செயலாளர், மாவட்டச் செயலாளர்கள் உட்பட உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வட மாகாணத்தில் நடைபெறும் முதலாவது அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் இதுவாகும். யுத்தத்திற்குப் பின்னர் வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களிலும், முன்னெடுக் கப்பட்டுவரும் பல்வேறு பாரிய அபி விருத்தித் திட்டங்கள், மீள்குடியேற்ற செயற்பாடுகள் தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
வடக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள், வடக்கின் வசந்தத்தின் மூலம் முன் னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக விரிவாக ஆராயப்படவுள்ளன.
October 18 2010
”வடமாகாண அபிவிருத்திக் கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பில்லை” ததேகூ பிரேமச்சந்திரன் – ”முரண்பாடுகளை ஏற்படுத்தி மக்களுக்குரிய தேவைகளை பூர்த்தி செய்யவிடமாட்டார்கள். அதனால் அழைப்பில்லை” அமைச்சர் பதியுதீன்
![]()
ஜனாதிபதி தலைமையில் நாளை செவ்வாய் கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ள வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு அனுமதி வழங்கப்படவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ள தாங்கள் அழைக்கப்படாமைக்கு கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். அரசாங்கம் தமக்கு அழைப்பு விடுக்காதது தமிழ் மக்களை புறக்கணிப்பதற்கு ஒப்பானது என அவர் தெரிவித்துள்ளார்.
வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டம் நாளை செவ்வாய் கிழமை வவுனியா கூட்டுப்படைத் தலைமையகத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது. வடமாகாணத்தின் சகல மாவட்டங்களையும் சேர்ந்த அரசாங்க அதிபர்கள், வடமாகாண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேசச் செயலர்கள் மற்றும் அதிகாரிகள் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் கலந்து கொள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை அழைப்பு அனுப்பப்படவில்லை என தெரியவருகின்றது. இந்தக் கூட்டம் வவனியாவில் நடைபெற்ற போதும் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அழைப்பு அனுப்பும் பொறுப்பு தமக்கில்லை எனவும், அந்தப் பொறுப்பு ஜனாதிபதி செயலகத்திற்கு மட்டுமே உள்ளது எனவும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவ்வாறான கூட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்க் கருத்துக்களைக் கூறி முரண்பாடுகளை ஏற்படுத்துவார்கள். இதனால் மக்களுக்குரிய தேவைகள் பூர்த்தி செய்யப்படமாட்டாது என்பதாலேயே அபிவிருத்தி தொடர்பான இவ்வாறான கூட்டங்களுக்கு அவர்களை அழைப்பதில்லை என வர்த்தக மற்றும். கைத்தொழில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் உதவிகளின்றி அரசாங்கம் தமிழ் மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று ஞாயிற்றுக் கிழமை வவுனியா மாவட்டத்திற்கான இணைப்புக்கூட்டம் வவுனியா செயலகத்தில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அபிவிருத்தி தொடர்பான கூட்டங்களுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் அழைக்கப்படாமை குறித்து எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
October 17 2010
வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் ஜனாதிபதி உட்பட 800 பேர் வவுனியாவில் கூடுகின்றனர்
எதிர்வரும் செவ்வாய் கிழமை வவுனியாவில் நடைபெறவிருக்கும் வடமாகாண அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருடன் வட மாகாண ஆளுநர், மாவட்ட அரசாங்க அதிபர்கள், அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேசச் செயலர்கள் அதிகாரிகள் என 800 பேர் கலந்து கொள்ளவுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நடைபெறவுள்ள வடமாகாண அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் தொடர்பான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள வடமாகாண அபிவிருத்தி மீளாய்வு தொடர்பான கூட்டத்தில் வடமாகாணத்தின் அபிவிருத்தி, மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விடயங்கள், உயர்பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீள்குடியேற்றுதல் முதலான விடயங்கள் ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.