அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

யாழ். பல்கலைக்கழக 25வது பட்டமளிப்பு விழா – 3972 பேர் பட்டம் பெற்றனர்

5 வருட இடைவெளிக்குப்பின் யாழ். பல்கலைக்கழக 25 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று கைலாசபதி மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. 2005, 2006, 2007 ஆம் வருடங்களில் கற்கை நெறியை பூர்த்தி செய்த 3972 பேர் தமக்கான பட்டங்களைப் பெறுகின்றனர்.

இம்முறை பட்டமளிப்பு விழா மூன்று தினங்களில் ஐந்து அமர்வுகளில் நடைபெறும். தினமும் 1324 பட்டதாரிகள் தமது பட்டத்தை ஐந்து அமர்வுகளில் பெறுவர்.

சந்தேகத்தின்பேரில் பெண் ஒருவர் கைது; கிணற்றுநீரை ஆராயும் பணியில் சுகாதார குழு

மட்டக்களப்பு வவுணதீவு இருட்டுச் சோலை மடு விஷ்ணு வித்தியாலயத்தில் 118 மாணவர்கள் திடீர் சுகவீனமுற்றது தொடர்பில் வவுணதீவுப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

சிவராசா கோதையம்மா (42) என்ற பெண்ணே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். வியாழக்கிழமையன்று பாடசாலையில் மதிய உணவு உட்கொண்ட பின்னர் பாடசாலையின் கிணற்று நீரை அருந்திய மாணவர்கள் திடீர் மயக்கம், வாந்தி, வயிற்று நோவு என்பனவற்றால் பாதிக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 118 மாணவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டு மாணவர்களுக்கான உடனடி சிகிச்சை வழங்கப்பட்டது. மாணவர்களில் 115 மாணவர்கள் குணமடைந்து நேற்றுக் காலை அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மூன்று மாணவர்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் டாக்டர் முருகானந்தம் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் தங்கியிருக்கும் மூன்று மாணவர்களுக்கும் தொடர்ச்சியான சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். இதே நேரம் இப்பாடசாலைக்குச் சென்ற பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழுவொன்று அப்பாடசாலையின் கிணற்று நீர் மற்றும் சுற்றுப்புற சூழல் என்பனவற்றை பரிசோதித்துள்ளனர். இப்பாடசாலையின் கிணற்று நீர் பரிசோதனைக்காக கொழும்பு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இப்பாடசாலை நேற்று வெள்ளிக்கிழமை மூடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரெஞ்சு தூதுவர் யாழ். விஜயம்

இலங்கை யிலுள்ள பிரெஞ்சு தூதுவர் கிறிஸ்டின் ரொபிசொன் நேற்று முன்தினம் (25) யாழ். குடாநாட்டுக்கு விஜயம் செய்தார். யாழ். அரச அதிபர் கே. கணேஸை பிரெஞ்சு தூதுவர் யாழ். செயலகத்தில் வைத்து முதலில் சந்தித்து பேசினார். அதனையடுத்து திருநெல்வேலியில் உள்ள பிரெஞ்சு நட்புறவு கலாசார கேந்திரத்துக்கு சென்ற அவர் அதன் நடவடிக்கைகளை நேரில் கண்டறிந்தார்.

யாழ். குடாநாட்டில் இயல்பு நிலை திரும்பியுள்ளதா என்பதைப் பற்றி அரச அதிபரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதில் பிரெஞ்சு தூதுவர் அதிக அக்கறை காட்டியதாக செயலக வட்டாரங்கள் கூறின.

பௌத்தத்திலிருந்து இஸ்லாமுக்கு மதம் மாறிய பெண் கைது : நாட்டுக்குத் துரோகம் பண்ணியதாகப் புகார்

பௌத்த சமயத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறிய இலங்கைப் பெண்ணொருவர் நாட்டுக்கு எதிராகச் செயற்பட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பி.பி.சி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.  பாஹ்ரேனில் வசித்துவரும் இப்பெண்மணி அவரது மதமாற்றம் குறித்து இரு புத்தங்களைச் சிங்களத்தில் எழுதியுள்ளார். விடுமுறையில் இலங்கை வந்திருந்த அவர், தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக அச்செய்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பெண் நாட்டுக்கு அல்லது அரசுக்கு எதிராகச் செயற்பட்டமை தொடர்பில் சந்தேகிக்கப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பி.பி.சி. செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.  குற்றச்சாட்டுகள் குறித்துப் போதுமான விளக்கம் தராத பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிங்களப் பெயருடைய அப்பெண் முஸ்லிம்களைப் போல் உடை அணிவதாகத் தெரிவித்தார்.

இது குறித்து பாஹ்ரேனில் வெளியாகும் ‘கல்ப் டெய்லி நியூஸ்’ ,  “தடுத்து வைக்கப்பட்டுள்ள சாரா மலனி பெரேரா என்றழைக்கப்படும் பெண் அவரது இள வயதிலிருந்து, அதாவது 1980 களின் மத்திய காலப்பகுதியிலிருந்து பாஹ்ரேனில் வசித்து வருகிறார்” எனத் தெரிவித்துள்ளது. அத்துடன் இவர் 1999 ஆம் ஆண்டு இஸ்லாமிய மதத்தைத் தழுவிக்கொண்டுள்ளதுடன் அவரது பெற்றோர் சகோதரிகளும் மதம் மாறியுள்ளனர்.

கே. கே. எஸ். துறைமுகம் ரூ. 100 மில். புனரமைப்பு – முழுமையான பணியில் கடற்படை

போர்ச் சூழல் காரணமாக சேதமடைந்து பல வருடங்களாக அபிவிருத்தி செய்யப்படாத காங்கேசன்துறை துறைமுகம் நூறு மில்லியன் ரூபா செலவில் மீளமைக்கப்பட்டு வருவதாக துறமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

துறைமுகத்தை மீளமைக்கும் பணிகளை கடற்படை மேற்கொண்டு வருவதாகவும் இதனூடாக வடபகுதியில் மேற்கொள்ளப்படும் பாரிய உற்பத்திகளை தெற்கிற்கு அனுப்புவதற்கு வாய்ப்பு ஏற்படும் எனவும் கூறினார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,

காங்கேசன்துறை துறைமுகம் மீளமைக்கப்படுவதோடு வடபகுதி மேலும் அபிவிருத்தி அடையும். வடபகுதி மக்களின் நலன்களை மேம்படுத்துவதற்கு ஏற்றவாறு இந்தத் துறைமுகம் முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை மற்றும் ஒலுவில் துறைமுகங்கள் உள்நாட்டு வர்த்தக்கத்துறை மற்றும் மீன்பிடித்துறை முன்னேற்றத்துக்கு ஏற்றவாறு அபிவிருத்தி செய்யப்படுவதோடு வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும். காங்கேசன்துறை துறைமுக பணிகள் ஒரு வருட காலத்தில் பூர்த்தி செய்யப்படும்.

திருகோணமலை துறைமுகமும் முதலீட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை முன்னேற்றத்துக்கு ஏற்றவாறு அபிவிருத்தி செய்யப்படுகிறது.

இந்த துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்படுவதோடு பெருமளவானோருக்கு தொழில் வாய்ப்பும் கிடைக்க உள்ளது என்றார்.

தபால் மூல வாக்களிப்பு சுமுகம்

election_cast_ballots.jpgபொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நேற்று (25) சுமுகமாக நடைபெற்றதாக தேர்தல் திணைக்களம் கூறியது. இன்றும் (26) வாக்களிப்பு நடைபெற உள்ளது.

பொதுத் தேர்தலை முன்னிட்டு முப்படையினர், பொலிஸார் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அரச ஊழியர்கள் 4 இலட்சத்து 15 ஆயிரத்து 430 பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்திருந்தனர். நேற்று பெரும்பாலானவர்கள் வாக்களித்ததாக வும் எதுவித அசம்பாவிதங்களோ முறை கேடுகளோ இடம்பெறவில்லை எனவும் தேர்தல் திணைக்களம் கூறியது. வாக்களிப்பை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

நான் வெறும் வாய்ச்சொல் வீரனல்ல; சொன்னதை செய்து காட்டும் செயல் வீரன் – ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

president.jpgவெறும் வார்த்தைகளுக்குள் மட்டும் அடங்கிவிடும் ஜனாதிபதியாக இருக்க நான் விரும்பவில்லை. நாட்டை ஒன்றிணைப்பதாக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியதைப் போன்று அபிவிருத்தி அடையும் தேச மொன்றை கட்டியெழுப்பும் திட்ட த்தையும் வெற்றிகரமாக முடிக்கவிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் (23) கம்பஹா மாவட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளையும் மற்றும் பல்வேறு தொழில் சார்ந்தோரையும் அலரிமாளிகையில் சந்தித்தார். சுமார் ஆறாயிரம் பேர் வரை இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். அங்கு பேசியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

நாட்டின் எதிர்கால பரம்பரைக்காக அதனை கட்டியெழுப்பும் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு தான் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும், எந்தவொரு நிபந்தனைக்கும் அடிபணியாது பாரிய அபிவிருத்தி திட்டங்களை நாடு முழுவதும் நடைமுறை ப்படுத்தியது இக்காரணமாகத்தான். நல்லதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவை அனைத்தையும் வெற்றிகரமாக முடிப்பதே தனது நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர் அங்கு மேலும் கூறியதாவது,

யுத்தத்தில் வெற்றிபெறுவோம் என்பதை நான் அறிந்திருந்தேன். அதற்கான அனைத்து சவால்களுக்கும் நாம் வெற்றிகரமாக முகம் கொடுத்து அவற்றை வெற்றி கண்டோம். இந்த வெற்றிகளை யடுத்து நாட்டின் மற்றொரு பிரச்சினையை வெற்றிகரமாக எதிர்கொள்ள நாம் தயாரானோம்.

மின்சார பிரச்சினைக்கு முகங்கொடுக்க நாம் பாரிய மின்சார திட்டங்களை ஆரம்பித்தோம். வாக்குகள் கிடைக்காமற் போகும் என்ற அச்சத்தால் நுரைச்சோலை மற்றும் மேல் கொத்மலை ஆகிய திட்டங்களை அன்று ஆரம்பிக்காமல் இருந்தனர். ஆனால் வாக்குகளுக்காக நாட்டின் அபிவிருத்தியை பணயம் வைப்பதா இல்லை இவை இரண்டையும் பாதுகாத்துக்கொண்டு நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதா என்பதை தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

வாக்குகளை விட எதிர்கால பரம்பரைக்காக நாம் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். அவ்வாறு நடைபெறாவிட்டால், நாம் வெறும் வார்த்தைகளுக்குள் அடங்கிப் போன ஜனாதிபதியாக இருக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்படி நான் இருக்க மாட்டேன் நான் இந்த நாட்டுக்காக செயலாற்ற வேண்டும்.

நெடுஞ்சாலைகள் இன்றி, மின்சாரம் இன்றி, நாட்டில் அபிவிருத்தி இன்றி வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாது. இவை இருந்தால்தான் முதலீட் டாளர்கள் வருவார்கள். இவை அனைத் தையும் சேர்த்துதான் நாட்டைக் கட்டி யெழுப்ப வேண்டும்.

எமது அடிப்படை நோக்கம் நாட்டின் அபிவிருத்தியேயாகும். அது உங்களுக்கு இல்லை. உங்கள் குழந்தைகளுக்கான உங்கள் கடமை. இந்தப் பின்னணியை என்னால் தனித்து செய்ய முடியாது. மஹிந்த சிந்தனையில் நாம் அனைத்து பிரிவுகள் பற்றியும் கூறியுள்ளோம். கலைகள், அபிவிருத்தி, சரித்திரம் இவை அனைத் தைப் பற்றியும் கூறியுள்ளோம்.

நாட்டின் சரித்திரம் தெரியாமல் நாம் எதைப்பற்றி பேசுவது? இன்று சிலருக்கு நாட்டின் சரித்திரம் பற்றிய அறிவு இல்லை. சரித்திரம் பற்றி தெரியாமல் எதிர்காலத்துக்கு முகம் கொடுப்பது எப்படி? என்று ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

உலக பொருளாதாரத்துடன் கூட்டுறவை கட்டியெழுப்புவதன் மூலம் இந்த நாட்டின் பொருளாதாரத்தை சக்திமிக்க தாக்கும் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லவிருப்பதாகவும் அதே நேரம் இந்த நாட்டை அடிமைப்படுத்த எவருக்கும் இடமளிக்க தான் தயாராக இல்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜெனரலின் பேட்டி ஊடகங்களுக்கு கசிந்து சென்றது எவ்வாறு? விசாரணையை ஆரம்பித்தது அரசு

sarath_fonseka-02.jpgஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு சார்பான பேட்டிகள் எவ்வாறு ஊடகங்களுக்குக் கசிந்து சென்றன என்பது தொடர்பான முழு அளவிலான விசாரணையை அரசாங்கம் ஆரம்பித்திருக்கிறது. கடற்படைத் தலைமையகத்தில் கடுமையான பாதுகாப்பில் இராணுவத்தால் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் பொன்சேகாவின் பேட்டிகள் எவ்வாறு ஊடகங்களைச் சென்றடைந்தன என்பது தொடர்பாக முழுமையான விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் சனல்4 தொலைக்காட்சிக்கு பொன்சேகாவின் கடிதங்கள் கடத்திச் செல்லப்பட்டதாகக் கடந்தவாரம் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இராணுவ நீதிமன்றத்தில் தான் எதிர்கொண்டுள்ள குற்றச்சாட்டுகள் போலியானவை என்று பொன்சேகா தெரிவித்ததாகப் பத்திரிகை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

“எந்தக் குற்றச்சாட்டுகளும் உண்மையற்றவை. அவரிலும் பார்க்க நான் அதிக வாக்குகளைப் பெற்றிருப்பதால் அவர் என்மீது பொறாமை கொண்டுள்ளார். அவர் மோசடி செய்தது தொடர்பாக நாம் அவருக்குச் சவால் விடுக்க முடியும் என்பது அவருக்குத் தெரியும்’ என்று ஜெனரல் கூறியிருந்தார். நான் சட்டவிரோதமான முறையில் வைக்கப்பட்டிருப்பதாக நம்புவதாகவும் தமது வாழ்வுக்கு ஆபத்து என்றும் அவர் மேலும் கூறியிருந்தார்.

இந்தப் பேட்டிகள் தொடர்பாக டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவித்துள்ள தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் குளுகல்ல பேட்டிகள் எவ்வாறு கசிந்து சென்றது தொடர்பாக அரசாங்கம் விசாரணை நடத்தும் என்று தெரிவித்ததுடன், விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

இதேவேளை, சனல் 4 க்கு ஜெனரலின் கடிதத்தைக் கசிய விட்டதற்கு எதிரணியே பொறுப்பு என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன், ஜெனரல் பொன்சேகாவின் கடிதத்தை பிரிட்டனின் சனல்4 க்கு வழங்கியது ஜே.வி.பி.யின் வேலையென்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும கடந்தவாரம் சாடியிருந்தார்.

தனுனவை கைது செய்ய உதவுங்கள்; 10 இலட்சம் ரூபா சன்மானம்

danu.jpgகோட்டை மாஜிஸ்திரேட் நீதவானால் கி 60 / 2010 என்ற வழக்கின் கீழ் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்துவரும் தனுன திலகரட்னவை கைதுசெய்வதற்கு உரிய தகவல்களை வழங்குபவருக்கு 10 இலட்ச ரூபாவை சன்மானமாக வழங்கப்படும் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள சுவரொட்டியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மேலே உள்ள படத்தில் காணப்படும், 2/12, மங்கள வீதி, மெனிங் டவுன் மாடி வீடு, கொழும்பு – 08 என்ற விலாசத்தில் வசிக்கும் தனுன திலகரட்ன என்ற நபரை கைதுசெய்வதற்கு உரிய தகவலை வழங்குபவருக்கு 10 இல ட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும். தகவல் வழங்க விரும்பு பவர்கள் பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் -011– 2328138, பணிப்பாளர்-011– 2447319, பொலிஸ் அதிகாரி –011– 2324994, (24 மணி நேரம்), உதவி பொலிஸ் அதிகாரி – 011 – 2440157, கட்டுப் பாட்டு அறை-011-2422176, பெக்ஸ் –011-2380381, பொது எண் –011–2320141-5 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம். அனைத்து தகவல்களும் ரகசியமாக வைக்கப்படும் என்று அந்த சுவரொட்டியில் கூறப்பட் டுள்ளது.

வவுனியாவில் ஜென்ஷிலா மஜீத்துக்கு இன்று பாராட்டு

majeed.jpgதுணிச்சல் மிக்க பெண்ணுக்கான விருதினை அமெரிக்காவில் பெற்றுக்கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஜென்ஷிலா மஜீதை பாராட்டி கெளரவிக்கும் வைபவம் இன்று, வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு வவுனியா நகர சபை கலாசார மண்டபத்தில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தலைமையில் நடைபெறும்.