அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

சட்ட விரோத ஆட்கடத்தலை தடுக்க அவுஸ்திரேலியாவில் கடும் சட்டம்

australias.jpgதமது நாட்டுக்கு ஆட்களைக் கடத்தி வருவதைத் தடுப்பதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.  இதற்கென ‘ஆட்களைக் கடத்துவதற்கு எதிரான சட்டமூலம் 2010’ அறிமுகப் படுத்தப்படுகிறது. இதன்மூலம், ஆட்களைக் கடத்தும் சம்பவங்களைப் பல்வேறு அணுகுமுறைகள் மூலம் கையாள்வதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு வழி வகுக்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய சட்ட மா அதிபர் றொபர்ட் மெக்கலண்ட் எம்.பி, குடிவரவு மற்றும் பிரஜாவுரிமை விவகாரங்களுக்கான அமைச்சர் செனட்டர் கிறிஸ் ஈவன்ஸ், உள்துறை அமைச்சர் பிரண்டன் ஓ ‘ கொனர் எம்.பி. ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் ஆட்கடத்தலைக் கட்டுப்படுத்து வதற்கான சட்ட மூலத்தை விபரித்துள்ளனர்.

புதிய சட்ட மூலத்தின் பிரகாரம், அவுஸ்திரேலிய பாதுகாப்புப் புலனாய்வுத் துறையினருக்கு, ஆட்கடத்தல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள முடியும்.  தவிரவும், ஆட்கடத்தலுக்கு நிதியுதவி அளிப்பது ஆதரவளிப்பதும் பாரதூரமான குற்றமாகக் கருதப்படும்.

அவ்வாறு உதவிபுரிந்து குற்றவாளியாகக் காணப் படுபவருக்கு 10 ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனையோ அல்லது 110,000 டொலர் அபராதமோ அல்லது இரண்டு தண்டனையுமோ விதிக்கப்படும்.

கடத்தலில் ஈடுபடுவதுடன் அவர்களிடம் பணம் பரித்தல் உயிராபத்தை ஏற்படுத்தல் அல்லது கடுமையான பாதிப்புகளை உண்டுபண்ணுவோருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனையோ அல்லது 2,20,000 டொலர் அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும்.

வெள்ளத்தில் மூழ்கிய தலைநகர் – இயல்பு நிலை ஸ்தம்பிதம்

9colombo.jpgகொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் நேற்று (14) இரவு முதல் தொடர்ச்சியாக பெய்த கடும் மழையின் காரணமாகவும் பலத்த காற்றின் காரணமாகவும் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மேல் மாகாணத்திலும் தென் மாகாணத்திலும் கூடுதலான பாதிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இடி, மின்னல் காரணமாகவும் பலத்த காற்றின் காரணமாகவும் வீடுகளும் இதர கட்டடங்களும் சேதமாகியுள்ளன. அதில் ஒருவர் உயிரிழந்து பலர் காயமுற்றுள்ளனர். வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததனாலும் வெள்ளப் பெருக்கினாலும் போக்குவரத்துகள் ஸ்தம்பிதமடைந்தன.

கொழும்பு நகரின் பல வீதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அன்றாட அலுவல்கள் ஸ்தம்பிதமடைந்தன. வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டு பல மணிநேரம் போக்குவரத்துகள் முடங்கின. பொதுமக்கள் பெரும் அசெளகரியத்திற்கு உள்ளானதோடு, அரச, தனியார் அலுவலகப் பணியாளர்கள் கடமைகளுக்குச் செல்ல முடியாமல் அவதியுற்றதைக் காண முடிந்தது.

சனப்புழக்கம் கூடுதலாக உள்ள கேந்திர முக்கியத்துவமான வியாபார வீதிகளில் வர்த்தக நிலையங்கள் பல மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. கடைகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், பொருள் சேதமும் ஏற்பட்டிருந்ததையும் காண முடிந்தது. சில பாடசாலைகள் மூடப்பட்டதுடன், இயங்கிய பாடசாலைகளில் மாணவர்கள் வரவு குறைவாகக் காணப்பட்டது. நேற்றுப் பிற்பகல் வரை கொழும்பு நகரில் இந்த ஸ்தம்பித நிலை நீடித்தது.

கொழும்பில், கொட்டாஞ்சேனை, ஜோர்ஜ் ஆர். டி. மாவத்தை, ஆமர் வீதி, ஹெட்டியாவத்தை, புலுமெண்டல் வீதி, ஜம்பட்டா வீதி, கிராண்ட்பாஸ், தெமட்டகொட பேஸ் லைன் வீதி, தர்மராஜ வீதி, கிருலப்பனை பொலிஸ் நிலையம் முன்பாக உள்ள பகுதி, கறுவாத்தோட்ட பகுதியில் பல்கலைக்கழக வீதி, தேஸ்டன் கல்லூரி வீதி, பிளவர் வீதி, ஹோர்டன் வீதி, உட்பட பல வீதிகள் நீரில் மூழ்கியிருந்தன. இதனால் காலை வேளையில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

களுத்துறை பகுதியில் கொழும்பு- மத்துகம வீதி, வெலிபென், ஹொரன, பன்னல, அளுத்கம- மதுகம வீதிகள் நீரில் மூழ்கின. கம்பஹா, காலி ஆகிய பகுதிகளிலும் பல வீதிகள் நீரில் முழ்கியதால் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன. மாலபே- கண்டி வீதி பியகம வீதி என்பனவும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டன.

மேல் மாகாணத்தில் ஓரிரு தினங்கள் தொடர்ந்து காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்ப்பதாகவும் நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை வேளைகளில் மழையை எதிர்பார்ப்பதாகவும் காலநிலை அவதான நிலையம் கூறியது. இதேவேளை மின்னல் தாக்கியதில் கொழும்பு பெரியாஸ்பத்திரியின் ஒரு பகுதி கூரை சேதமாகியுள்ளது.

9colombo.jpg

இந்தியாவில் புலிகள் இயக்கம் மீதான தடை மேலும் 2 ஆண்டுகள் நீடிப்பு

எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் மீதான தடையை இந்திய அரசாங்கம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்துள்ளது. புலிகள் இயக்கத்தினர் தமிழ்நாட்டில் தங்களது செயற்பாட்டை மீளமைக்க முயல்வது தொடர்பாக புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த தகவல்களை யடுத்து இந்த நீடிப்புச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1992ம் ஆண்டு முதல் இந்தியாவில் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைத் தளமாகக் கொண்டு புலிகள் இயக்கம் மீண்டும் செயற்படத் தொடங்குவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக இந்திய உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையிலிருந்து 2800 பேருக்கு ஹஜ் அனுமதி வழங்க உறுதியளிப்பு – 8000 பேர் அனுமதி குறித்து சவூதி ஆலோசனை

hajj.jpgஹஜ் முன்னேற்பாடுகளை கவனிப்பதற்காக சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்த அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி தலைமையிலான குழு சவூதி அரேபிய ஹஜ் விவகார அமைச்சர் பவுட் பின் அப்துல் சலாம் அல் பாஸியை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளது.

இதன் போது இலங்கையிலிருந்து 2800 பேருக்கு ஹஜ் கடமையை நிறைவேற்ற ஹஜ் கோட்டா வழங்குவதாக சவூதி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

ஆனால் இலங்கையில் இருந்து 8 ஆயிரம் பேரை ஹஜ் கடமையை நிறைவேற்ற அனுமதிக்குமாறு அமைச்சர் பெளஸி கோரியுள்ளார். இது குறித்து உயர் மட்டத்துடன் கலந்துரையாடி அறிவிப்பதாக சவூதி அமைச்சர் உறுதியளித்துள்ளார். இதேவேளை அமைச்சர் பெளஸி சவூதி அமைச்சருடன் ஒப்பந்தமொன்றிலும் கைச்சாத்திடவுள்ளார்.

நுவரெலியா தோட்டத்தில் ரோனடோ சூறாவளி – ஒருவர் பலி, வீடுகள் சேதம்

lightning-01.jpgநுவரெலியா நெஸ்லி தோட்டத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட ரோனடோ சூறாவளியினால் ஆறு வீடுகள் சேதமடைந்ததோடு ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 36 வயதுடைய உதயகுமார் என அடையாளங் காணப்பட்டுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று இலேசான மழை பெய்து கொண்டிருந்தது. நண்பகல் இரண்டு மணியளவில் திடீரென ரொனடோ சுழல்காற்று ஏற்பட்டது. இதில் வீடுகள் தூக்கி வீசப்பட்டதோடு மின்கம்பங்களும் பாதிக்கப்பட்டன. இந்த வேளையில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த உதயகுமார் மீது வீட்டுச் சிதைவுகள் மோதி வெட்டியதிலேயே உயிரிழந்தாரென பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

நுவரெலியா மாவட்ட எம்.பி. வே. இராதாகிருஷ்ணன் ஸ்தலத்திற்கு விரைந்து நிலைமைகளை ஆராய்ந்ததோடு பாதிக்கப்பட்டோருக்கு உலர் உணவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தார்.

அமைச்சரவை பேச்சாளராக அமைச்சர் கெஹலிய

kahiliya.jpgஅரசாங் கத்தின் புதிய அமைச்சரவைப் பேச்சாளராக தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் ஆரியரட்ன எதுகல நேற்று (13) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் ஆரம்பத்தில் அறிவித்தார்.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் முதலாவது செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (13) நடைபெற்றது. இதில் அமைச்சர் ரம்புக்வெல்ல முதன் முதலாகக் கலந்துகொண்டு அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 5000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

house.jpgகிளிநொச்சி மாவட்டத்தில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளவர்களில் 5,000 குடும்பங்களுக்கு இவ்வருட இறுதிக்குள் நிரந்தர வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் உலக வங்கி, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகராலயம், செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் நிதியுதவியுடன் இவ்வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. உலக வங்கியின் நிதியுதவியுடன் 3640 வீடுகளும் செஞ்சிலுவைச் சங்கத்தினால் 100 வீடுகளும் புதிதாக நிர்மாணிக் கப்படுவதுடன் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகராலயத்தினால் 1600 வீடுகள் புனரமைக்கப்படவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேற்படி வீடுகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வருட இறுதிக்குள் நிர்மாணப்பணிகள் நிறைவுபெறுமெனவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை; யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்போரில் 1200 பேரை இவ்வாரத்தில் மீள் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் 540 பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளதுடன் இவ்வாரத் தில் கிளிநொச்சி மாவட்டத்தின் கண் டாவளை மற்றும் கரச்சி உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் மேற்படி குடும்பங்கள் மீள் குடியமர்த்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து மீள்குடியேற்றப்படும் குடும்பங்களுக்குத் தற்காலிக வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டு வருவ தாகத் தெரிவித்த அவர்,

படிப்படியாக அனைவருக்கும் நிரந்தர வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார். அத்துடன் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

மக்களின் சிறப்புரிமைகளை பெற்றுக்கொடுக்க அமைச்சர்களின் அர்ப்பணிப்பு அவசியம்

president.jpgஅமைச்சர்கள் தமது சிறப்புரிமைகளைப் பெற்றுக் கொள்வதிலேயே குறிக்கோளாக இருக்காமல் மக்களின் சிறப்புரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் செயற்படுவது அவசியமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதேபோன்று அரசாங்கத்தின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக தம்மிடம் வரும் பொதுமக்களின் கண்ணீரைத் துடைப்பதில் அரச அதிகாரிகள் அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் செயற்படுவது அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். காலி மலிகஸ்பே சுபத்ராராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடி தர்மசாலைக் கட்டிடத்தை உத்தியோகபூர்மாக அங்குரார்ப்பணம் செய்துவைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் பொலிஸ் சேவைக்கு 500 பேர் சேர்ப்பு; 367 பேருக்கு களுத்துறையில் பயிற்சி

யாழ். மாவட்டத்தில் பொலிஸ் சேவைக்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட 500 பேரில் 367 பேர் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது.

சுமார் மூன்று தசாப்தங்களின் பின்னர் முதல் முறையாக யாழ். நகரிலிருந்து பொலிஸ் சேவைக்கு ஆட்கள் சேர்த்துக்கொள்ளப் பட்டுள்ளனர்.  யாழ். மாவட்டத்திலிருந்து தகுதிவாய்ந்த இளைஞர்களை பொலிஸ் சேவைக்கு சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கடந்தாண்டு கோரப்பட்டிருந்தன.

இதன்படி சுமார் 6000 விண்ணப்பங்கள் பொலிஸ் திணைக்களத்திற்கு கிடைத்திருந்தன. குறிப்பிடப்பட்ட வயதெல்லையையும் விஞ்சிய வயதையுடையவர்களும், விவாகமானவர்களும் விண்ணப்பித்திருந்தனர். 6000 விண்ணப்பங்களுள் தகுதிவாய்ந்தவர்கள் எனக் கருதப்பட்ட 1500 பேர் மட்டுமே நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டி ருந்தனர்.

2009ஆம் ஆண்டு 6ஆம் மாதம் 26ஆம் திகதி நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையின் பயனாக 500 பேர் மட்டுமே பொலிஸ் சேவைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டு ள்ளனரென பொலிஸ் தலைமையக ஆட்சேர்ப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்.

சேர்த்துக்கொள்ளப்பட்ட 500 பேருள் 367 பேர் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் எஞ்சியவர்கள் 133 பேர் இரண்டாவது கட்டமாக களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பப்படவுள்ளனர். பயிற்சி கள் முடிவடையும் பட்சத்தில் இவர்கள் யாழ். மாவட்டத்தில் குறிப்பாக வடமாகாண பொலிஸ் நிலையங்களில் வேலைக்கு அமர்த்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது.

ஓமந்தை, மாங்குளத்தில் 800 ஏக்கர் நிலப்பரப்பில் பொருளாதார வலயங்கள்

யுத்தம் முடிவுக்கு வந்துள்ளதால் கூடுதலான நாடுகள் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் முதலீடு செய்வதற்கு முன்வந்துள்ளன.  வடக்கு, கிழக்கு பிரதேச அபிவிருத்தியை துரிதப்படுத்தும் நோக்குடன் அப்பகுதியில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு விசேட சலுகைகள் வழங்கவுள்ளதாக இலங்கை முதலீட்டு சபை பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஏ. எம். சி. குலசேகர கூறினார்.

ஓமந்தை, மாங்குளம் ஆகிய பகுதிகளில் தலா 400 ஏக்கர் நிலப்பரப்பில் இரு பொருளாதார வலயங்களை அமைப்பதற்கான முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு, திருகோணமலை பகுதிகளிலும் பொருளாதார வலயங்கள் அமைப்பதற்கான காணிகள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:-கடந்த காலங்களில் நாட்டின் 2/3 பகுதியில் மீன்பிடித்துறையில் ஈடுபட முடியாத நிலை காணப்பட்டது. ஆனால், இன்று முழு நாட்டிலும் மீன்பிடிக்கவும் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கவும், சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் விவசாயத்துறையும் அபிவிருத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் அதிகமான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வடக்கு, கிழக்கில் முதலீடு செய்ய முன்வந்துள்ளனர். இப் பகுதியில் முதலீடு செய்பவர்களுக்கு 15 முதல் 20 வருட வரி விலக்கு வழங்கப்படுவதோடு தீர்வையற்ற முறையில் தேவையான உபகரணங்கள் மற்றும் பொருட்களை தருவிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் முதலீடு செய்வதற்கு பல முதலீட்டாளர்களுக்கு இதுவரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மஹிந்த சிந்தனையின் கீழ் 12 பொருளாதார வலயங்கள் நாடு பூராவும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பொருளாதார வலயங்களில் பல்வேறு கைத்தொழில்கள் ஆரம்பிக்கப்படும் என்றார்.