வெள்ளத்தில் மூழ்கிய தலைநகர் – இயல்பு நிலை ஸ்தம்பிதம்

9colombo.jpgகொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் நேற்று (14) இரவு முதல் தொடர்ச்சியாக பெய்த கடும் மழையின் காரணமாகவும் பலத்த காற்றின் காரணமாகவும் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மேல் மாகாணத்திலும் தென் மாகாணத்திலும் கூடுதலான பாதிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இடி, மின்னல் காரணமாகவும் பலத்த காற்றின் காரணமாகவும் வீடுகளும் இதர கட்டடங்களும் சேதமாகியுள்ளன. அதில் ஒருவர் உயிரிழந்து பலர் காயமுற்றுள்ளனர். வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததனாலும் வெள்ளப் பெருக்கினாலும் போக்குவரத்துகள் ஸ்தம்பிதமடைந்தன.

கொழும்பு நகரின் பல வீதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அன்றாட அலுவல்கள் ஸ்தம்பிதமடைந்தன. வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டு பல மணிநேரம் போக்குவரத்துகள் முடங்கின. பொதுமக்கள் பெரும் அசெளகரியத்திற்கு உள்ளானதோடு, அரச, தனியார் அலுவலகப் பணியாளர்கள் கடமைகளுக்குச் செல்ல முடியாமல் அவதியுற்றதைக் காண முடிந்தது.

சனப்புழக்கம் கூடுதலாக உள்ள கேந்திர முக்கியத்துவமான வியாபார வீதிகளில் வர்த்தக நிலையங்கள் பல மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. கடைகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், பொருள் சேதமும் ஏற்பட்டிருந்ததையும் காண முடிந்தது. சில பாடசாலைகள் மூடப்பட்டதுடன், இயங்கிய பாடசாலைகளில் மாணவர்கள் வரவு குறைவாகக் காணப்பட்டது. நேற்றுப் பிற்பகல் வரை கொழும்பு நகரில் இந்த ஸ்தம்பித நிலை நீடித்தது.

கொழும்பில், கொட்டாஞ்சேனை, ஜோர்ஜ் ஆர். டி. மாவத்தை, ஆமர் வீதி, ஹெட்டியாவத்தை, புலுமெண்டல் வீதி, ஜம்பட்டா வீதி, கிராண்ட்பாஸ், தெமட்டகொட பேஸ் லைன் வீதி, தர்மராஜ வீதி, கிருலப்பனை பொலிஸ் நிலையம் முன்பாக உள்ள பகுதி, கறுவாத்தோட்ட பகுதியில் பல்கலைக்கழக வீதி, தேஸ்டன் கல்லூரி வீதி, பிளவர் வீதி, ஹோர்டன் வீதி, உட்பட பல வீதிகள் நீரில் மூழ்கியிருந்தன. இதனால் காலை வேளையில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

களுத்துறை பகுதியில் கொழும்பு- மத்துகம வீதி, வெலிபென், ஹொரன, பன்னல, அளுத்கம- மதுகம வீதிகள் நீரில் மூழ்கின. கம்பஹா, காலி ஆகிய பகுதிகளிலும் பல வீதிகள் நீரில் முழ்கியதால் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன. மாலபே- கண்டி வீதி பியகம வீதி என்பனவும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டன.

மேல் மாகாணத்தில் ஓரிரு தினங்கள் தொடர்ந்து காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்ப்பதாகவும் நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை வேளைகளில் மழையை எதிர்பார்ப்பதாகவும் காலநிலை அவதான நிலையம் கூறியது. இதேவேளை மின்னல் தாக்கியதில் கொழும்பு பெரியாஸ்பத்திரியின் ஒரு பகுதி கூரை சேதமாகியுள்ளது.

9colombo.jpg

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *