அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

முன்னாள் புலி உறுப்பினர்களில் 20 ஜோடிகளுக்கு திருமணம்

முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் சிலருக்கு திருமணம் செய்துவைக்க திட்டமிடுவதாக அவர்களின் புனர்வாழ்வுக்குப் பொறுப்பாக இருக்கும் இராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜூன் நடுப்பகுதியில் சுமார் 20 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க பி.பி.சி.க்கு தெரிவித்திருக்கிறார்.

அவர்களுடைய உறவுகள் யுத்தம் முடிவடைவதற்கு முன்னரே ஏற்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். அவர்கள் வாய் மூல உறுதிமொழி மூலம் திருமணம் செய்திருந்ததாகவும் ஆனால், உத்தியோகபூர்வமாக திருமணம் செய்திருக்கவில்லையெனவும் அவர் கூறியுள்ளார். அவர்கள் அநேகமானோர் தமது ஜோடிகளை திருமணம் செய்ய விரும்புவதாகவும் ஆயினும் இருதரப்பினரதும் பெற்றோர்களினதும் இணக்கத்தை அதிகாரிகள் பெற்றுக்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆயினும், சில ஜோடிகளின் நிலைமை மாற்றமடைந்திருக்கலாமெனவும் பெண்ணொருவர் இனிமேலும் அந்த மனிதரை நான் விரும்பவில்லையெனக் கூறக்கூடுமெனவும் அவர் கூறியுள்ளார். அதேபோல், ஆண்களும் அவ்வாறு கூறக்கூடுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் முடிவில் சுமார் 10 ஆயிரம் முன்னாள் போராளிகள் முகாம்கள் அல்லது புனர்வாழ்வு நிலையங்களில் வைக்கப்பட்டனர். ஜோடிகள் பிரித்து வைக்கப்பட்டிருந்தனர். ஆயினும் கிழமைக்கு ஒருதடவை ஒருவரையொருவர் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக பிரிகேடியர் ரணசிங்க கூறியுள்ளார். அவர்கள் சட்டரீதியாகத் திருமணம் செய்த பின் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து குடும்பங்கள் தங்கியிருக்கும் இடங்களுக்குச் செல்ல முடியும். அவர்களில் சிலருக்குப் பிள்ளைகள் உள்ளனர். சிறியளவு தொகையினரே தற்போது வழக்கு விசாரணைக்காக வைக்கப்படுவார்களெனவும் அநேகமானோர் ஒருவருடத்தின் பின் விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சபையில் இன்று விசேட அறிக்கை

parliament2.jpgதொடர்ச் சியான மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் இன்று சபையில் விசேட அறிக்கையொன்று வெளியிடப்படுமென ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ச்சியான மழை வெள்ளம் காரணமாக பெரும்பாதிப்புகளை நாடு எதிர்நோக்கியுள்ளது. இதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன என்பதை சபையில் தெரிவிக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.

அதன் போது அவர் தமது கூற்றை நீட்டிச் செல்ல முற்பட்ட போது, இதனை ஒரு விவாதமாக்கிக் கொள்ள வேண்டாமென சபாநாயகர் சமல் ராஜபக்ஷ கேட்டுக் கொண்டார். இதன் போது குறிப்பிட்ட அமைச்சர் தினேஷ் குணவர்தன, இன்று அது தொடர்பில் அரசாங்கத்தின் கூற்று வெளியிடப்படுமெனவும் தெரிவித்தார்.

‘லைலா’ இன்று ஆந்திராவை தாக்கும் அபாயம்

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு அருகில் நிலை கொண்டிருந்த ‘லைலா’ புயல் சின்னம் இந்தியாவின் தெற்குக் கரையை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை அவதான நிலையம் அறிவித்தது.

இந்தியாவை நோக்கி நகரும் இந்தப் புயல் இன்று அதிகாலை ஆந்திராவைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இலங்கையிலும் இந்தியாவிலும் கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து சுமார் 600 கி. மீற்றர் தொலைவிலும் சென்னை நகருக்குக் கிழக்கே 185 கிலோ மீற்றர் தொலைவிலும் ‘லைலா’ நிலை கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முசலி மினி சூறாவளியால் 87 குடும்பங்கள் பாதிப்பு – 2 பாடசாலைகள் தரைமட்டம்

rain.jpgமன்னார் முசலி பிரதேசத்தில் நேற்றிரவு வீசிய மினி சூறாவ ளியால் 87 தற்காலிக கூடாரங்கள் முற்றாக சேதமானதோடு, இரண்டு பாடசாலைகளின் கொட்டில்களும் தரைமட்டமாகியுள்ளன.

கூடாரங்களில் வசித்த 87 குடும்பங்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும், வன்னி மாவட்ட எம்.பி.பாரூக் ஹுனைஸ் எடுத்துக் கொண்ட துரித முயற்சியால் மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்க ப்பட்டுள்ளன. பொற்கேணி மற்றும் வேப்பங்குளம் வித்தி யாலயங்களே மினி சூறாவளி யால் தரை மட்டமாகியுள்ளன.

முசலி பிரதேச செயலாளர் மற்றும் மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி பாதிக்கப்பட்டவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஹுனைஸ் எம்.பி. செய்து கொடுத்துள்ளார்.

கோழிக்கூட்டு கூடாரத்தில் வன்னி மக்கள், யுத்த நாயகன் பொன்சேகா சிறைக்கூண்டில் – ரணில்

ranil.jpgயுத்த வெற்றியின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு பெரும் செலவில் தேசிய வைபவம் நடைபெறவுள்ள நிலையில், வன்னியிலுள்ள மக்கள் வீடுகளின்றி கோழிக் கூடுகளிலும், யுத்த வெற்றிக்கு பொறுப்புக் கூற வேண்டிய ஜெனரல் சரத் பொன்சேகா சிறைக் கூண்டிலும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசேட வியாபார பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகளை அங்கீகரிப்பதற்கான விவாதத்தில் பேசும்போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;

அரசாங்கம் மக்களின் வாழ்க்கைச் செலவை அதிகரித்தது. மக்களின் சுதந்திரத்தை குறைத்து வருகிறது. பாராளுமன்ற அனுமதி இல்லாமல் எப்படி செலவினங்களை அரசாங்கத்தால் குறைக்க முடியுமென்பதே எமது கேள்வியாக இருக்கிறது. மக்களின் உரிமைகளை முடக்கியே இவற்றை செய்கின்றனர்.

இதேநேரம், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது பற்றி எதிர்க்கட்சியினருடன் பேசினார் என்று குற்றஞ்சுமத்தியே ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்தனர். எனினும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஓய்வு பெற்றுச் செல்ல ஜனாதிபதியே அவருக்கு அனுமதி வழங்கியிருந்தார். இவ்வாறான நிலையில் எப்படி இராணுவ நீதிமன்றத்தினால் சரத் பொன்சேகாவை கைது செய்ய முடியும்?

வாக்களிப்பதற்கும் வாக்கு கேட்பதற்கும் அரசியலமைப்பில் ஒருவருக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமை சரத் பொன்சேகாவின் இந்த கைதின் மூலம் மீறப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனத்தை மீறுவதாகவும் இந்த செயற்பாடு அமைந்திருக்கிறது.

இதேநேரம், யுத்த வெற்றியின் ஒரு வருட நிறைவை முன்னிட்டு படை அணிவகுப்பு நிகழ்வை பெரும் செலவில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. படையினருக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியம். எனினும், பெருந் தொகை செலவில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் யுத்த வெற்றிக்கு பொறுப்பு கூற வேண்டிய சரத் பொன்சேகா ஏன் அங்கு இல்லை. எதற்காக அவரை சிறையில் வைத்திருக்கிறீர்கள் என்பதே எமது கேள்வியாக இருக்கிறது.

யுத்தத்தை வென்றவரை சிறையில் வைத்து கொண்டு பெருந்தொகையை செலவிடுகிறீர்கள். இயற்கையும் அதனுடன் இணைந்து விட்டது. யுத்தம் முடிவடைந்த ஒரு வருடம் பூர்த்தியடைந்து விட்ட போதிலும் வன்னியில் மக்களுக்கு வீடுகள் இல்லை. கோழி கூடுகள் போன்ற சிறு கூடாரங்களிலேயே இருக்கின்றனர். யுத்தத்தை வென்ற சரத் பொன்சேகா சிறை கூண்டிலும் வன்னி மக்கள் கோழி கூடுகளிலும் வைக்கப்படுகின்றனர்.

அது மட்டுமல்லாது கொழும்பு கொம்பனி வீதி பகுதியில் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசாவினால் நிரந்தர உறுதி பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட வீடுகள் இடித்தழிக்கப்பட்டுள்ளன. இது சட்ட விரோதமாகும். ஏனெனில், இந்த வீடுகளை அகற்ற வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டிருக்க வேண்டும். நட்டஈடு வழங்கப்பட வேண்டும். எனினும், இதில் எதுவும் அங்கு நடக்கவில்லை. வீடமைப்பு அமைச்சருக்கு கூட என்ன நடந்ததென தெரியாது. எதற்காக இந்த வீடுகள் உடைக்கப்பட்டன என்பது எமக்கு தெரியும். அந்த இடத்தில் 15 மாடிகள் கொண்ட சொகுசு மாடி கட்டிடங்களை நிர்மாணித்து 4,5 கோடிகளுக்கு விற்பதற்கு பேசியுள்ளனர்.

இதேநேரம், கடந்த இரு நாட்களாக கொழும்பு மாநகரின் பல பிரதேசங்களும் வெள்ளத்தில் மூழ்கி பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து நகர அபிவிருத்தி அதிகாரசபை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

அடைமழை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும்; தாழமுக்கம் நகர்வு; மீனவர்களுக்கு எச்சரிக்கை

lightning.jpgவங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் யாழ்ப்பாணத்திற்கு 600 கிலோ மீற்றர் வடகிழக்காக நகர்ந்து கொண்டிருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பாளர் ஜயசிங்க ஆராய்ச்சி நேற்றுத் தெரிவித்தார்.

இத்தாழமுக்கம் இந்தியாவின் ஒரிஸா மாநிலப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் இலங்கைக்கு நேரடிப் பாதிப்பு ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருந்த போதிலும் தற்போதைய மழை காலநிலை அடுத்துவரும் இரண்டொரு நாட்களுக்கு நீடிக்கும் என்றும் அவர் கூறினார். தற்போது இந்தத் தாழமுக்கம் நாளுக்கு நூறு கிலோ மீற்றர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அதேவேளை தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக நாட்டைச் சூழவுள்ள கடலில் கொந்தளிப்பு நிலைமை காணப்படுகின்றது. அதனால் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தற்போது கடலில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 40-60 கிலோ மீற்றர்களாகக் காணப்பட்டா லும் அது சில வேளைகளில் 90 கிலோ மீற்றர்கள் வரையும் அதிகரி க்க முடியும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

இதேநேரம் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணித்தியால மழை வீழ்ச்சிப் பதிவுப்படி அதிக மழை வீழ்ச்சி காலி மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளது. இம்மழை வீழ்ச்சி பதிவுப்படி காலியில் 283.8 மி.மீ., களுத்துறையில் 278.6 மி.மீ., இரத்மலானை 177.1 மி.மீ., கொழும்பில் 133.1 மி.மீ., புறக்கோட்டையில் 147.3 மி.மீ., மாலிம்பொடவில் 106.8 மி.மீ. என்ற படி அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்றார்.

பாராளுமன்ற அமர்வுகள் நேற்று மழை காரணமாக இடைநிறுத்தம்

parliament2.jpgஸ்ரீஜய வர்த்தனபுர கோட்டே பகுதி உட்பட கொழும்பில் பெய்த கடும் மழை காரணமாக பாராளுமன்ற அமர்வுகள் நேற்று இடைநடுவில் நிறுத்தப்பட்டன. வழமையாக பாராளுமன்றத்தினுள் செல்லும் பிரதான நுழைவாயில் பகுதி வீதி முழுமையாக நீரில் மூழ்கிக் காணப்பட்டது. மாற்று வழியாக பத்தரமுல்ல பகுதியிலிருந்து நுழைவு வீதி பயன்படுத்தப்பட்டது. தியவன்னா ஓயாவை ஊடறுத்து பாராளுமன்றம் நோக்கிச் செல்லும் வீதியும் சிறிதளவு நீரில் மூழ்கியிருந்தது.

வழமைபோன்று பாராளுமன்ற அமர்வுகள் நேற்றுக்காலை 9.30க்கு ஆரம்பமானது. இச்சமயத்திலிருந்து கடும் மழையும் இடைவிடாது பெய்து கொண்டிருந்தது. மதிய உணவு வேளைக்கு பின்னரும் சபை அமர்வுகள் ஆரம்பமாகின. பிற்பகல் 2.00 மணியளவில் அமைச்சர் டிலான் பெரேரா ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பினார்.

எமக்கு தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி இடைவிடாது பெய்துவரும் கடும் மழை காரணமாக பல வீதிகள் நீரில் மூழ்கிவருவதாக தெரியவருகிறது.

பாராளுமன்றத்தின் முன்னாலுள்ள வீதியும் நீரில் மூழ்கி வருகிறது. பாராளுமன்றத்தில் தொழில் புரியும் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்குச் செல்ல வேண்டும். நேரம் ஆக ஆக நிலைமை மேலும் மோசமடையலாம். எனவே சபை நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதா? இல்லை இடைநிறுத்துவதா? என சபை முடிவெடுக்க வேண்டும் என்றார்.

இதனை ஆமோதித்த அமைச்சர் விமல் வீரவன்ச “கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் இது குறித்து பேசப்பட்டது. சபை இதற்கு முடிவு எடுக்க வேண்டும்” என்றார். சபாநாயகரின் ஆலோசனையை பெற்று சபையை இன்று காலை 9.30 மணிவரை ஒத்திவைப்பதாக உதவி சபாநாயகர் பிரியங்கர ஜயரட்ண தெரிவித்தார். சபை நடவடிக்கைகள் நேற்று இரண்டு மணிக்கு முடிவடைந்த வேளையிலும் மழை குறைவடைந்ததாக தெரியவில்லை.

எம். பீக்களுக்கு சபாநாயகர் விடுத்த அறிவுறுத்தல்…

sp.jpgபாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் படியே பாராளு மன்ற உறுப்பினர்கள் செயற்பட வேண்டுமெனவும் சபையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்கவும் வேண்டுமென ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சியினருக்கு சபாநாயகர் நேற்று அறிவுறுத்தல் வழங்கினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் எழுந்த சர்ச்சை யொன்றையடுத்தே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.

வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் அம்பாந்தோட்டை மாவட்ட ஐ.தே.க எம்.பி சஜித் பிரேமதாச, சுற்றாடல் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவிடம் கேள்வியொன்றை எழுப்பினார். இதன்போது அதற்குப் பொருத்த மில்லாத வகையில் ஐ.தே.க. எம்.பிக்களான ரவி கருணாநாயக்க, தயாசிரி ஜயசேகர, ஜயலத் ஜயவர்தன, ஜோன் அமரதுங்க ஆகியோர் கூச்சலிட்டனர். இதன்போதே இரு தரப்பு உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் இவ் அறிவுறுத்தலை வழங்கினார்.

ஜீ- 15 நாடுகளின் குரல் சர்வதேச ரீதியில் பலமாக ஒலிக்க வழிவகை செய்வேன் – ஜனாதிபதி

mahinda-raja_1.jpgபாரிய அபிவிருத்திகள் தொடர்பான ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையினை ஊக்குவிக்கும் வகையில் ஜீ-15 அமைப்பானது ஜீ-08 அமைப்புடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டுள்ளது. இப்பேச்சுவார்த்தையினை உண்மையானதாகவும் யதார்த்தமுள்ளதாகவும் ஆக்குவதற்கு தெளிவான முறையொன்று தேவையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற ஜீ-15 அமைப்பின் அங்கத்துவம் பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் மத்தியில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்கள் எதிர்பார்க்கின்ற அபிவிருத்தி செயற்பாட்டை தோற்றுவிப்பதற்காக பொருளாதாரம், நிதி, விஞ்ஞானம் மற்றும் கலாசாரம் ஆகிய அனைத்து துறைகளிலும் நெருங்கிய தொடர்புகளை கட்டியெழுப்புவதற்கும் தனியார் மற்றும் அரச நிறுவனங்களிலுள்ள திறமைசாலிகள் மற்றும் தனிப்பட்ட அனுபவசாலிகளைக் கொண்ட செயற்பாட்டு படையொன்றை நியமிப்பது பொருத்தமானதெனவும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஈரான் இஸ்லாமிய குடிய ரசுக்குப் பின் ஜீ-15 அமைப்பின் தலைமையை இலங்கை பொறுப்பேற்பது மிகவும் மகிழ்ச்சியுடனேயேயாகும். அடுத்த ஆண்டு இந்த அமைப்பின் அரச தலைவர்களின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு நாம் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் உள்ளோம். கடந்த காலங்களில் இந்த அமைப்புக்கு மிகவும் திறமையாக வழிகாட்டி வந்த கலாநிதி, மஹ்மூத் அஹ்மட் நெஜாட்டுக்கு எனது பாராட்டுக்களை தெரிவிக்கின்றேன்.

தெற்கின் ஒத்துழைப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட ஜீ-15 அமைப்பு மற்றும் அந்தத் துறையின் சம்பிரதாயங்களை தொடர்ந்து மேற்கொள்வ தற்கு வழிகாட்டிய உங்களுடைய அர்ப்பணிப் பான சேவைக்கு நாம் மதிப்பளிக்கிறோம்.

எவ்வாறாயினும் எமது இந்த அமைப்புக்கு புனர்வாழ்வளித்து அதனைத் தொடர்ந்து முன்நோக்கி கொண்டு வருவதற்குரிய சூழ்நிலை இருப்பதாக நான் நம்புகிறேன். நாம் இப்போது ஒரு சுற்றுவட்டத்தை முடித்துக் கொண்டுள்ளோம். எங்களது அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது சர்வதேச பொருளாதார மற்றும் அரசியலில் மாற்றம் ஏற்பட்ட ஒரு யுகத்திலாகும். நாங்கள் இன்று 20 வருடத்தை பூர்த்தி செய்வது இந்த பூகோளமயம் மாற்றமடைகின்ற சந்தர்ப்பத்திலாகும்.

சவால்களைக் கொண்ட சூழ்நிலை, நீண்ட எதிர்காலத்துக்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது. நாங்கள் முதன்மை வழங்கக் கூடிய துறைகள் அநேகமானவை. பிணக்கு முடிவடைந்தாலும் எங்களால் கட்டியெழுப்பப்பட வேண்டியவை இன்னமும் முடிவடையவில்லை.

உலகெங்கும் நடைபெறுகின்ற இயற்கை அழிவுகளை சுட்டிக் காட்டுவது காலநிலை விபரீதங்களை நிர்வகிப்பதற்கு பூகோள ரீதியாக நடவடிக்கை எடுப்பது அத்தியாவசியமாகும். அதற்கிடையில் நாங்கள் எதிர்நோக்குகின்ற அபிவிருத்தி சவால்கள் ஏராளமானவை. அவை வறுமையொழிப்பு, பட்டினியொழிப்பு, அனைவருக்கும் கல்வி, சுகாதார சேவையை பெற்றுக் கொடுத்தல் மக்களுக்கு சிறந்த வாழ்க்கை தரத்தை ஏற்படுத்திக் கொடுத்தல் என்பனவாகும். நான் கூறிக் கொள்வதென்னவென்றால் இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் எங்கள் அமைப்புக்குள் தீர்வுகள் இருப்பதாக நான் நம்பவில்லை. எனினும் செல்வச் செழிப்பு மிக்க மிக ஒற்றுமையான எங்கள் அமைப்புக்கூடாக நீண்டகால நோக்கங்களை நிறைவேற்றுவதற்குரிய விசேட நடவடிக்கை எடுக்கலாமென்பது எனது நம்பிக்கையாகும்.

தலைமைப் பொறுப்பை கையேற்ற இந்த சந்தர்ப்பத்தில் ஜீ-15 நாடுகளின் குரல் சர்வதேச ரீதியில் பலமாக ஒலிப்பதற்கு வழிவகை செய்வேன் என அவர் உறுதியளித்தார்.  இச் செயற்பாடுகளின் மூலம் இலங்கைக்கு அங்கத்துவ நாடுகளின் பூரண ஒத்துழைப்பு கிட்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதியினால் ஏழு பேர் நியமனம்

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக பல்துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்ட ஏழு அங்கத்தினர் ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

சகல இனங்களையும் பல்கலாசாரத்தையும் பிரதிபலிப்பதான இக்குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணியும் ஓய்வுபெற்ற சட்ட மா அதிபருமான சித்தரஞ்சன் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆணைக்குழுவின் ஏனைய அங்கத்தினர்களாக கலாநிதி ரொஹான் பெரேரா, எச். எம். ஜி. எஸ். பலிகக்கார, பேராசிரியர் எம். ரீ. எம். ஜிப்ரி, சி. சண்முகம், திருமதி மனோராமநாதன், மெக்ஸ்வெல் பரனகம ஆகியோரும் நியமிக்கப்பட் டுள்ளனர்.

நாட்டின் சகல சமூகங்களினதும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தைக் கருத்திற்கொண்டதாகச் செயற்படும் இவ்வாணைக்குழுவானது அது தொடர்பான விடயங்களை விசாரணை செய்து அதன் அறிக்கையையும் விதப்புரைகளையும் ஆறு மாத காலத்திற்குள் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கவுள்ளது.

சகல அரசாங்க ஊழியர்களும் நபர்களும் தேவையான தகவல்களையும் ஒத்துழைப்பினையும் இதற்கு வழங்க வேண்டுமென ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். ஆணைக்குழுக்கள் விசாரணைச் சட்டத்தின் 14ம் பிரிவின் 393ம் அத்தியாயத்தின் கீழான விதிகளுக்கிணங்க இவ்வாணைக்குழு இயங்கும்.

இவ்வாணைக்குழுவில் அங்கத்தவரான டாக்டர் ரொஹான் பெரேரா வெளி விவகார அமைச்சின் சட்ட ஆலோசகரும் சர்வதேச சட்ட ஆணைக்குழுவுக்கு ஆசிய பிராந்தியத்திற்காக ஒதுக்கப்பட்ட ஏழு ஆசனங்களில் ஒரு ஆசனத்துக்காக ஐ. நா. பொதுச்சபையினால் வேட்பாளராக நியமிக்கப்பட்டவராவார்.

எச். எம். ஜீ. எஸ். பலிகக்கார ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான முன்னாள் வதிவிடப் பிரதிநிதியாகப் பணிபுரிந்தவராவார்.

பேராசிரியர் எம். ரீ. எம். ஜிப்ரி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் பிரதித் தலைவராவார்.

சி. சண்முகம் முன்னாள் திறைசேரியின் செயலாளராவார்.

திருமதி மனோ இராமநாதன் முன்னாள் நீதியரசர் பி. ராமநாதனின் மனைவியும் பிரதி சட்ட வரைஞராகப் பணியாற்றுபவருமாவார். மெக்ஸ்வெல் பரணகம முன்னாள் மேல் நீதிமன்ற நீதியரசர்.